ஆஸ்பத்திரியில் மிகவும் ஒழுங்காக காந்தி நடந்துகொண்டார். இது டாக்டருக்கு மகிழ்ச்சி அளித்தது ; நர்ஸுக்குப் பிரியமாயிருந்தது. எல்லாரும் காந்தியிடம் அன்பு கொண்டார்கள். ஒரு நர்ஸ் இங்கிலீஷ்காரி. இங்கிலாந்து , ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரிந்தவள் ; நீண்ட கால அனுபவம் உடையவள். மிகவும் கண்டிப்பாய் நடப்பவள். " நோயாளிகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படாதே. அதற்கு ஒரு நாளும் முயற்சி செய்யாதே" இப்படித்தான் அவளுடைய டாக்டர்கள் சொல்வார்களாம். காந்திக்கு இதை எல்லாம் அவள்தான் சொன்னாள். மூன்று நாள்கள் சென்றன. காந்தி மீது அவள் பற்று கொண்டாள். காந்தியின் அறையை அலங்காரம் செய்தாள். பூக்களைக் கொண்டுவந்தாள் ; அழகழகாய் ஜோடித்து வைத்தாள். " எப்படி இருக்கிறது அறை ? என் கைவேலையைப் பார்த்தீர்களா ?" என்று காந்தியைக் கேட்டாள். அங்கு இன்னொரு நர்ஸ் இருந்தாள். அவள் மிக இளம் பெண். "என் மனத்துக்கு இசைந்த முதல் நோயாளி இவர்தாம். காந்திக்குப் பணிவிடை செய்வதே ஓர் இன்பம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம் ” என்றாள். அவள் காந்தி பற்றி நல்ல அறிக்கை எழுதினாள் ; அதில் அவர...