காஃப்கா என்கிற பெயரை முதல் முதலாக நான் புதுமைப்பித்தன் மூலமாகத்தான் கேள்விப்பட்டேன் என்று எண்ணுகிறேன். 1937 மத்தியில் இருக்கலாம். Dorothy Norman என்பவருடைய Twice A Year Press வெளியீடாக வந்த அமெரிக்கப் பதிப்பு ஒன்று எப்படியோ Second Hand work ஆக நண்பர் புதுமைப்பித்தனுக்குக் கிடைத்தது. அதில் ஒன்றிரண்டு கதைகளையும் அவர் மொழிபெயர்க்க உத்தேசித்து மொழிபெயர்த்தார் என்று எண்ணுகிறேன். A Franz Kafka Miscellaneous என்கிற பெயருடன் வெளிவந்த அந்த நூலில் , காஃப்காவிலிருந்து பல பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன ; காஃப்காவைப் பற்றியும் ஒருசில கட்டுரைகளும் இருந்தன. ஒருநாள் அந்த நூலை என்னிடம் தந்து அதை ஒரே நாளில் படித்துவிட்டுத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் கொடுத்தார் புதுமைப்பித்தன். காஃப்காவைப் பற்றிய கட்டுரைகளை நான் படிக்கவில்லை ; எனக்கு விமர்சனத்தில் அன்றும் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது ; இன்றும் கிடையாது. ஆனால் அந்த நூலில் இருந்த காஃப்கா மொழிபெயர்ப்புகளையெல்லாம் உடகார்ந்து இரவோடு இரவாகப் படித்துவிட்டேன். இரவு எப்போது தூங்கினேன் என்கிற நினைவில்லை. ஆனால் காஃப்காவைப் ...