இரண்டொரு வருஷங்களுக்கு முன் அயல்நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்திய பாஷை இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை. இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல், அவர் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆர்வத்துடன் பல விஷயங்களை விசாரித்து அறிந்துகொள்ள முயன்றார். வசதியும் தகுதியும் உள்ளவராக இருந்தார் அவர். பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார். “பொதுவாக இந்தியா பூராவிலுமே , சிறப்பாகத் தமிழில் , பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால் , பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக்கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக்கூடாது , இன்றைய இலக்கியத்தில் பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும். ஆனால் , அதுவே புதுமைக்கு அனுசரணையாகவும் இருக்கவேண்டும். பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா ? ” “உண்டு” என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான். பிறகு சொன்னேன். “ராமாயணக் கதை உங்களுக்குக்கூட ஓரளவு தெரிந்திருக்கு