Skip to main content

படித்திருக்கிறீர்களா? - 1 | காஞ்சனை

 

இரண்டொரு வருஷங்களுக்கு முன் அயல்நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார். இந்திய பாஷை இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை. இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல், அவர் அவசரப்படாமல் நிதானமாக நின்று ஆர்வத்துடன் பல விஷயங்களை விசாரித்து அறிந்துகொள்ள முயன்றார். வசதியும் தகுதியும் உள்ளவராக இருந்தார் அவர்.

பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார். “பொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால், பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக்கூடாது; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக்கூடாது, இன்றைய இலக்கியத்தில் பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும். ஆனால், அதுவே புதுமைக்கு அனுசரணையாகவும் இருக்கவேண்டும். பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?

“உண்டு” என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான். பிறகு சொன்னேன். “ராமாயணக் கதை உங்களுக்குக்கூட ஓரளவு தெரிந்திருக்கும். விசுவாமித்திரருடன் அயோத்தியை விட்டுக் கிளம்பிய ராமன். மிதிலை போகும் வழியிலே ஒரு கல்லை மிதிக்கிறான். அக் கல், கௌதமனின் சாபம் பெற்ற அகல்யை. ராமன் பாத தூளியினால் அகல்யை சாப விமோசனம் அடைகிறாள். ராமனுக்குக் கல்யாணமாகிறது. அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடுகளுக்கு மத்தியிலே, ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் காட்டுக்குப் போகிறார்கள். ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான். போர் புரிந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், உலக அபவாதத்துக்குப் பயந்து, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்கிறான். பிறகு அயோத்தி திரும்பி முடிசூட்டிக்கொண்டான். ஒருநாள் ராமனும், சீதையும் கௌதமரின் ஆசிரமத்துக்குக் கிளம்பினார்கள். அங்கே கல்லாயிருந்து பெண்ணான அகல்யை, சீதையின் வாயைக் கிண்டுகிறாள். வனவாச அனுபவம், லங்கா வாசம் முதலியன பற்றிக் கேட்டறிந்துகொள்கிறாள் அகல்யை. கடைசியாகத் தன்னை ராமன் அக்கினிப் பரீட்சை செய்ததையும் சொன்னாள் சீதை. ‘உன்னையா? ராமனா? என்று கேட்ட அகல்யை மீண்டும் கல்லானாள் என்று எங்களுடைய இன்றையக் கதாசிரியர்களில் ஒருவர் கதை எழுதியிருக்கிறார். நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதில் இருக்கிறது” என்றேன்.

கதையை மனசில் வாங்கித் தெரிந்துகொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது. பிறகு அவர் சொன்னார்: “இந்தப் பிரச்சினையை மஹாகவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும். தன் மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லட்சிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்.” பிறகு கேட்டார்: “அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன? என்று.

“புதுமைப்பித்தன் என்று புனைபெயர் வைத்துக்கொண்ட ஒருவர். அவர் இயற்பெயர் விருத்தாசலம்” என்றேன் நான். தொடர்ந்து சொன்னேன்: “இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கிவிடுவதில்லை. ஆதி கவி அப்படி எழுதவில்லை; இந்தப் புதுமைப்பித்தன் யார், சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்துவிடுகிறார்கள். ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமை பற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்”

புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய ‘சாப விமோசனம்’. அற்புதமான கதை; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது. இந்தத் தலைமுறையின் சிறந்த சிறுகதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம். அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன். படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது. இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?

புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார்: எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்ல முடியாது எனினும் ஒரு முப்பதுக்கு மேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

‘காஞ்சனை’ என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம். இது வேறு ஒரு தினுசான கதை.

“வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்டபோது சென்னைக்கு மின்சார ரயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்” என்று தொடங்குகிறது கதை. பவழக்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளில் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது. தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கமும் பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும் சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப்போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை. மின்சார ரயில் அவர் வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. அவர் தாம்பரத்தில் குடியேறினார். தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று. .....விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பான் வெள்ளி வீபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டாம் சில்லரை" இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்கும் கிளம்புவார். இரவு கடை வண்டியில் காலித் தூக்குச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டணாச் சில்லறை” இவற்றுடன் பவழக்காரத் தெருவுக்குக் கிளம்புவார். “இரவு கடைசி வண்டியில் காலித்தூக்குச்சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லறை, பசி, கவலை—இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்”.

சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது. மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி. சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்த்துகொண்டாள். “மாணவி, வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் லாங் செய்னுடன் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் அலங்காரத்துக்காகத் தொங்கிற்று. இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன் கூடிய ஒரு புடவை. அதற்கு அமைவான ஜாகெட், செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள். நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துத் தினவு தீர்த்துக்கொண்டார் சுப்பையா பிள்ளை. கண்களைக் கசக்கிக்கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க்கட்டையைத் தடவிக்கொடுத்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப் பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார். பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது... ‘பெத்துப் போட்டால் போதுமா? என்று தன் பெண்ணைப்பற்றி நினைத்தார்... ஷாக் அடித்தது போலப் பிள்ளையவர்கள் காலைப் பின்னுக்கு இழுத்தார். அவளது செருப்புக்காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது. பிள்ளையவர்கள் கால், உடல், சகலத்தையும் உள்ளுக்கிழுத்துத்கொண்டார்... அவர் மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது. வீரபாண்டியன் பட்டணத்துக் கருக்கு மாப்பிள்ளை—மேளதாளக் குரவைகளுடன் வீட்டில் குடி புகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக்கோணிய உருவம். பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையும் தூக்கிச் சென்ற நாள் சங்கிலிகள். குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்...” எதிரில் இருந்த பெண் பார்க்கில் இறங்கிவிட்டாள். அதை அவர் கவனிக்கவேயில்லை.

இது ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள்’ என்னும் கதை.

கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன். இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு. எதையும் முயற்சி செய்து லாகவமாக உருவாக்கிவிடுவதில் சமர்த்தர். சித்த வைத்திய தீபிகையின் ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார், அவர் கதைகளில் ஒன்றில். பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக்கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்‌ஷாவில்தான்) வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார் கந்தசாமிப் பிள்ளை. “...யார் ஜீவியம்!” என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண் குழந்தை அவர்களை வரவேற்கிறது. “எனக்கு என்னா கொண்டாந்தே? என்று கேட்டாள் குழந்தை. “என்னைக் கொண்டாந்தேன்” என்றார் பிள்ளை. “என்னப்பா! தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரிகடலையாவது கொண்டாரப் படாது? என்று சிணுங்கியது குழந்தை. “பொரிகடலை உடம்புக்காகாது, இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார். குழந்தையின் பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை. கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுத்தொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது. “சற்றுத் தயங்கினார்: ‘இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல்தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை’ என்று சிரித்தார் கடவுள். ‘ஆசைக்கு என்று காலந்தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து’ என்றார் கந்தசாமிப் பிள்ளை... ‘வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே!’ என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை. ‘எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை; வள்ளி. அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா! நான் என்ன அப்படியா? என்று கேட்டது. அது பதிலை எதிர்பார்க்கவில்லை.” புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள். இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்கமுடியாத சிருஷ்டிகள்.

‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில். ‘கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டுதான் அவரை விட்டார் கந்தசாமிப் பிள்ளை!’ என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.

‘காஞ்சனை’ தொகுதியிலே முதல் கதையான ‘காஞ்சனை’யே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது. பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப்பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில்—‘கட்டிலைவிட்டிறங்காக் கதை’ என்று பெயர் அதற்கு. ‘மகாமசானம்’ என்று ஒரு கதை. அதில் தெரு ஓரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான். ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக்கொள்கிறது. ‘செல்லம்மாள்’ என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள். அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான்.

இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றி இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு. சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்... இன்னும் பல விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன். அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம். (ஒன்று) அவர் அவசியம் என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள் அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம். (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை. சில சமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு. ஆனால், அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன. திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாவே கையாண்டிருக்கிறார்.

வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறுகதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்துவிட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்லவேண்டும்.

(க. நா. சு.வின் 'படித்திருக்கிறீர்களா?' நூலிலிருந்து)

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப