2016 -ஆம் ஆண்டு வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். நான் கலந்து கொள்ளும் முதற்பெரும் இலக்கிய விழா. ஒளிர்நிழலில் முதல் சில அத்தியாயங்களை அப்போது எழுதியிருந்தேன். இரண்டு நாட்களில் நான் அதிகமாக யாருடனும் பேசவில்லை எனினும் jeyamohan.in தளத்தில் வெளியாகி இருந்த என்னுடைய சில கட்டுரைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் அறிமுகம் செய்து கொண்டனர். விழாவின் முதல் நாள் மாலை ஒரு "இலக்கிய வினாடி வினா" நிகழ்ந்தது. பெரும்பாலும் மிகக் கடினமான வினாக்கள். எனக்கு பதில் தெரிந்தது ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே. அந்த நிகழ்வு முடிந்த பிறகு மனதில் ஒரு சோர்வும் சோர்வுக்கு பின்னர் வரக்கூடிய தீவிரமும் கூடியிருந்தது. என்னுடைய வாசிப்பு எந்தப் புள்ளியில் நிற்கிறது என்று பரிசோதித்துக் கொள்ள அப்போது எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு வடிவமளிக்கும் வகையில் அடுத்த சில வாரங்களில் jeyamohan.in-ல் எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்த ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதன் விதிமுறைகள் சற்று சிக்கலானவை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் நீட்சியாக அமைய வே