(கு. ப. ரா.வின் 'கனகாம்பரம் முதலிய கதைகள்' தொகுப்பின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்ற முன்னுரை) கலைஞர்கள் இருவர். அவர்களை நான் இரட்டையர்கள் என்று கூப்பிடுவேன். அந்த இரட்டையர்கள் ‘மணிக்கொடி’க் காரியாலயத்தில் , 1934 ஆம் வருஷம் துவக்கத்தில் , எனக்குத் தரிசனம் தந்தார்கள். அன்று முதல் அவர்களிடம் எனக்கு அலாதியான பிரேமையும் மதிப்பும் ஏற்பட்டன. அவர்கள்தான் கு.ப.ராஜகோபாலன் , பிச்சமூர்த்தி என்று சொல்லவும் வேண்டுமா ? நண்பர் ராஜகோபாலன் மறைந்துபோனார். என்ன கொடுமை! எவ்வளவு பொறுக்க முடியாத துக்கம்! ஆனால் ராஜகோபாலன் , பத்து வருஷங்களுக்குள் , தமிழ் இலக்கியத்துக்குச் செய்துவந்த தொண்டைப் பற்றி நினைத்தால் அது என்னைப் பிரமிக்கும்படி செய்கிறது. சாதாரணமாக ராஜகோபாலன் ‘பேசாமடந்தை’யைப் போல இருப்பார். தனது கஷ்ட நிஷ்டூரங்களை யாரிடத்தும் வெளிப்படையாகச் சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு , அவ்வளவு மௌனத்தோடு அவர் இருப்பார். ஹிந்து சமாஜத்தில் காலத்தின் கொடுமையால் குவிந்து கிடக்கும் ஊழல்களையும் ந