Skip to main content

இவைகள் நவரத்தினங்கள் | வ. ரா.

(கு. ப. ரா.வின் 'கனகாம்பரம் முதலிய கதைகள்' தொகுப்பின் இரண்டாம் பதிப்பில் இடம்பெற்ற முன்னுரை)

கலைஞர்கள் இருவர். அவர்களை நான் இரட்டையர்கள் என்று கூப்பிடுவேன். அந்த இரட்டையர்கள் ‘மணிக்கொடி’க் காரியாலயத்தில், 1934ஆம் வருஷம் துவக்கத்தில், எனக்குத் தரிசனம் தந்தார்கள். அன்று முதல் அவர்களிடம் எனக்கு அலாதியான பிரேமையும் மதிப்பும் ஏற்பட்டன. அவர்கள்தான் கு.ப.ராஜகோபாலன், பிச்சமூர்த்தி என்று சொல்லவும் வேண்டுமா? நண்பர் ராஜகோபாலன் மறைந்துபோனார். என்ன கொடுமை! எவ்வளவு பொறுக்க முடியாத துக்கம்! ஆனால் ராஜகோபாலன், பத்து வருஷங்களுக்குள், தமிழ் இலக்கியத்துக்குச் செய்துவந்த தொண்டைப் பற்றி நினைத்தால் அது என்னைப் பிரமிக்கும்படி செய்கிறது.

சாதாரணமாக ராஜகோபாலன் ‘பேசாமடந்தை’யைப் போல இருப்பார். தனது கஷ்ட நிஷ்டூரங்களை யாரிடத்தும் வெளிப்படையாகச் சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததே இல்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பற்றி அவர் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதபடிக்கு, அவ்வளவு மௌனத்தோடு அவர் இருப்பார். ஹிந்து சமாஜத்தில் காலத்தின் கொடுமையால் குவிந்து கிடக்கும் ஊழல்களையும் நவீன காலத்தில் மனித வர்க்கத்தில் நிறைந்து நிற்கும் அசுரத்தன்மைகளையும் பற்றி நான் அடிக்கடி நீண்ட காலம் அவருடன் பேசுவதுண்டு. பேச்சு முடிந்ததும் அவர் நீண்டதொரு பெருமூச்சு விடுவதைத்தான் நான் கண்டிருக்கிறேன். நான் சொன்னதை எவ்வளவு வரையில் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதே எனக்குத் தெரியாது.

ஆனால் இப்பொழுது தெரிகிறது. அப்பொழுதே சிறிதளவு தெரிந்தது என்று சொல்லுவேன். பேச்சை அதிகமாக விரும்பாத ராஜகோபாலன் வெகுதுரிதமாக எழுதத் துவங்கினார். அவர் எத்தனையோ பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறார். அவைகள் யாவற்றையும் அப்பொழுது படிக்க, எனக்கு வசதி இல்லாமல் போய்விட்டது. சிறுகதைகளை நூல் வடிவமாக அல்லயன்ஸ் கம்பெனியார் ஆக்கிய பின்னர் அவைகளைப் படிக்கும் பாக்கியம் பெற்றேன். திடுக்கிட்டுப் போனேன். இவைகள் நவரத்தினங்கள் என்ற முடிவு, தானாகவே என் மனத்தில் வந்து பதிந்துவிட்டது.

ஒரே மூச்சிலே இந்தக் கதைகளைப் படித்தேன். கொஞ்சமாவது அலுப்புத் தட்டவேண்டுமே, இல்லை. ஒரு கதையைப் படிக்கத் துவங்கியதும், மனம் குதூகலமடையும். எடுப்பு அவ்வளவு பிரம்மானந்தமாக இருக்கும். முடியும்பொழுது, கதை முடிந்துவிட்டதே என்று மனம் சங்கடப்படும். கதைகள் மொத்தம் இருபத்தொன்று. அவைகளில் எதை உயர்த்தி, எதைத் தாழ்த்தி என்று சொல்லுவது? எல்லாம் முதல் தரமான வார்ப்பட வேலைகளாக அமைந்திருக்கின்றன. சொத்தை, சோடை இல்லாமல் எழுதக்கூடிய ராஜகோபாலன் கலை நிபுணன் என்பதில் சந்தேகம் இல்லை. உள்ளத்துடிப்பை இரண்டொரு சொற்களால், இரண்டொரு வாக்கியங்களால் சித்திரித்துக் காண்பிக்கக் கூடிய இணையில்லாத கலைஞன் ராஜகோபாலனைப் பற்றிச் சிறப்பாக இன்னதுதான் சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை. தமிழில் சிறுகதை எழுதியவர்களுள் ராஜகோபாலன்தான் தலைமை ஸ்தானம் வகிப்பார், நீண்ட காலம் வகிப்பார். இதுதான் என் மனத்தில் வெகு உறுதியாகத் தங்கி நிற்கிறது.

இந்தச் சிறுகதைகளுக்குள் ‘நூருன்னிஸா,’ ‘பண்ணைச் செங்கான்’, ‘தாய்’, ‘வீரம்மாளின் காளை’, ‘மின்னக்கலை’, ‘காதலே சாதல்’ - இவைகள் என்னைப் பிரமிக்க வைத்துவிட்டன. ராஜகோபாலன் எந்தப் போனாவால் இவைகளை எழுதினாரோ என்று ஆச்சரியப்பட்டேன். மிருதுவான பாஷையில், கம்பீரமான உணர்ச்சியை வளர்ப்பதில் ராஜகோபாலன் தனிப்பட்ட கலைஞன் என்று என்னையே நான் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

அல்லயன்ஸ் கம்பெனியின் சொந்தக்காரர் ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயர் நீண்டகாலம் வாழ்ந்து, ராஜகோபாலன் போன்ற மேதாவிகளின் நூல்களைத் தமிழ் நாட்டாருக்குப் பயன்படுமாறு அடிக்கடி வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

வ. ரா.

கிண்டிலில் வாங்க

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...