பாதித்த என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பற்றி நேற்று சிறிது விவாதம் நடந்தது. பிடித்த , ரஸித்த , பிடிக்காத , வெறுத்த , மனசைச் சிறிது தொட்ட , வாழ்க்கைப் போக்கையே மாற்றிய , அதிகமாக மாற்றாத என்றெல்லாம் அர்த்தம் சொல்லப்பட்டது. பாதிப்பு என்பதை Influence என்கிற ஆங்கில வார்த்தையின் மொழிபெயர்ப்பாக , ஓர் இலக்கிய விமர்சனக் குறியீடாக ஏற்றுக்கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. பாதிப்பு என்றால் கையைக் காலை உடைத்திருக்க வேண்டும் என்றோ , கண்களைக் குருடாக்கி யி ருக்க வேண்டும் என்றோ , உள்ளத்தைத் திரித்திருக்க வேண்டும் என்றோ அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும் இன்றைய அதிக பாதிப்பு நாளை தேய்ந்து மங்கிவிடலாம் ; அதனால் இன்று பாதிப்பு இல்லாது போய்விட்டது என்று ஏற்படாது. நேற்று கட்டுரை படித்த என் மதிப்புக்குரிய நண்பர் ஆர். ஷண்முகசுந்தரம் தன்னை ஒரு நூலும் பாதித்ததில்லை என்று கூறினார். பாதிப்பு என்கிற வார்த்தைக்கு இலக்கிய விமர்சனக் குறியீடாக அல்லாமல் , வேறு அர்த்தம் பண்ணிக்கொண்டதனால் , அவர் அப்படிக் கூறினார் என்று எனக்குத் தோன்றுகிறது. எந்த நிமிஷமுமே நமது வா