முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...