Skip to main content

நாகம்மாள்: முன்னுரை


முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன்.
இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள்.
கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுபடி உயிர்பெற வேண்டுமென்கிறோம். அவற்றிற்கெல்லாம் முன்பு கிராம வாழ்வே புத்துயிர் பெற வேண்டும்; அதாவது குடியான வாழ்வின் அழகிய அம்சங்கள் மக்கள் மனதைக் கவரும்படியான முறையில் சித்திரங்கள் உற்பத்தியாக வேண்டும். கிராம பாஷையின் மூர்ச்சனை ஸ்தானங்கள் எல்லாம் எல்லோருக்கும் அறிமுகமாக வேண்டும். ஹார்டியினுடைய வெஸ்ஸெக்ஸ் நாவல்களைப் போன்ற அழியாத எழுத்துக்கள் தமிழ்நாடெங்கும் தோன்றி கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம் பிடிக்க வேண்டுமென்று எனக்கு வெகுநாளைய அவா.
ஷண்முகசுந்தரத்தின் நவீனம் அந்த வகையில் முதல் நூல் என்றே சொல்லவேண்டும். வெங்கமேடு ஹார்டியின் எக்டன் பொட்டலை நினைப்பூட்டுகிறது.
பெரியவருக்கு உற்சாகம் அதிகரித்தது. ஒருதரம் கனைத்துக் கொண்டு, “கேளடா ராஜா, மலைபோலே மண்டிக் கிடந்த கள்ளிகளெல்லாம் மாயமாய் மறஞ்சது பாத்தாயா? நாம் எத்தனை நாள் கத்தியிலும் அரிவாளிலும் வெட்டித் தள்ளியும் வெட்டவெட்டக் கொழுத்தது? எப்படிப் பூண்டற்றுப் போச்சுது, பாத்தாயா? கள்ளியை நாசம் பண்ணின வெள்ளைப்பூச்சியையும் பார்த்திருப்பாய்... இண்ணைக்கு ஒரு ஆனையைக்கூட தூக்கியடிக்கலாமென்று உனக்குத் தோணுது... ஆனா இந்த நல்ல ரத்தம் நொடியிலே மறைஞ்சுடுமப்பா!...'
இதில் ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடையிலுள்ள மேன்மையும் குறையும் நன்றாகத் தெரிகிறது. குடியானப் பேச்சை வெகு நுட்பமாக கிரகித்திருக்கிறார்; ஆனால் நடுவில் சில இலக்கணப் பதங்கள் சேர்ந்து கொச்சையின் வேகத்தைக் குறைக்கின்றன.
ஆனால் முதல் முதலாக எழுதிய நூலில் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் கொச்சை இலக்கணத் தொல்லையை இவ்வளவுதூரம் சமாளித்திருப்பதே பெரிய விஷயம்.
இன்னும் சில குறைகள் இருக்கலாம், இருக்கின்றன. ஆனால் என்ன? இந்தமாதிரி குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இதுதான்.
ஆசிரியர் இளைஞர்; கவியுள்ளத்துடன் குடியான வாழ்க்கையை அனுபவித்து நுட்பமாகக் கவனித்து மனதில் பதித்துக்கொண்டவர். தெளிவாக எழுதும் சக்தியும் பெற்றிருக்கிறார். அவர் மேலும் குடியான வாழ்க்கையை இன்னும் பல சித்திரங்களில் நமக்கு அளிக்கவேண்டும்.
ஏனெனில் அந்த வாழ்க்கையில்தான் எளிமையும் நம் குணமும் இருக்கிறது; அதில்தான் சிக்கனமும் பெருந்தன்மையும் இருக்கிறது; அதில்தான் பரோபகாரமும் ஆத்மீகப் பற்றும் இருக்கிறது. அதுதான் உயர்விற்கு ஆதாரம்; அது புனருத்தாரமானால் கிராமப் புனருத்தாரணம் நிறைவேறும்.
கு. ப. ராஜகோபாலன்
கும்பகோணம்
1.6.42


Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...