Skip to main content

காந்திஜி குடும்ப மூதாதையர் வரலாறு

[மகாத்மா காந்தி தமது 'சுயசரிதை'யில் தம் குடும்ப வரலாற்றைச் சொல்லும்போது, தமது பாட்டனாரைப் பற்றி மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால், காந்தி குடும்பத்தைப் பற்றிய முந்திய வரலாற்றையும் அறிய விரும்புவோருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும் என்பதற்காக அக்குடும்ப வரலாற்றைக் குறித்து, ஸ்ரீ பிரபுதாஸ் காந்தி எழுதியிருக்கும் "காந்தியுடன் என் குழந்தைப் பருவம்'' என்ற நூலிலிருந்து....]

நான் சேகரிக்க முடிந்த தகவல்களிலிருந்து, எங்கள் குடும்ப சரித்திரத்தில் லால்ஜி காந்தியின் பெயர்தான் முதல் முதல் தெரிகிறது. லால்ஜி காந்தி குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாகப் பிறந்தவரான உத்தம சந்திர காந்தியே, காந்தி குடும்பப் பெயருக்குக் கௌரவத்தையும் கீர்த்தியையும் தேடித் தந்தார். ஏழாவது தலைமுறையில் பிறந்தவரே, மகாத்மா காந்தி.
லால்ஜி காந்தியின் குமாரர் ராம்ஜி காந்தி. இவர் தப்தாரியாக வேலை பார்த்தார். ஆகவே, போர்பந்தர் சமஸ்தான திவானுக்கு வலக்கரம்போல் இருந்தார். இப்பொழுது மந்திரி சபையில் உள்நாட்டு மந்திரிக்கு என்ன பொறுப்புக்கள் உண்டோ அவையே தப்தாரியின் பொறுப்புக்களாகும்.
ராம்ஜி காந்தியின் மகன் ரகிதாஸ் காந்தியும் போர்பந்தரில் தப்தாரியாக இருந்தார் எனத் தெரிகிறது. இவருக்கு ஜுனாகட் நவாப், ஜுனாகட்டில் கொஞ்சம் நிலத்தை இனாமாகக் கொடுத்திருந்தார். இன்றும் அந்த நிலம் காந்தி குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்துவருகிறது. குடியானாவிலும் போர்பந்தரிலும் இருந்த குடும்பத்தின் வீடுகளை விற்றுவிட்டுச் சொத்துக்களைச் சகோதரர்கள் பிரித்துக்கொண்டுவிட்டனர். என்றாலும், இந்த நிலம் மாத்திரம் இன்றும் குடும்பத்தின் பொதுச் சொத்தாக இருந்துவருகிறது. இதிலிருந்து வரும் வருமானம், குடும்பக் கோயிலின் பராமரிப்புக்கு உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலம் இரண்டு ஏக்கருக்குமேல் இல்லை; ஆயினும் இன்றும் இருந்துவரும் காந்தி குடும்பத்தின் பூர்வீகச் சொத்து இது ஒன்றுதான்.
ரகிதாஸ் காந்திக்கு ஹரிஜீவன், தாமன் என இரு குமாரர்கள் இருந்தனர். ஹரிஜீவன் காந்தியின் குமாரரே உத்தம சந்திர காந்தி. ஹரிஜீவன் காந்தியும் போர்பந்தரில் தப்தாரியே. பிறகு அவருடைய தம்பி தாமன் காந்தி, அப்பதவிக்கு வந்தார். மகாத்மா காந்தியின் பாட்டனாரான உத்தம சந்திர காந்தி, எங்கே படித்தார், என்ன படித்திருந்தார் என்பன பற்றி எதுவும் தெரியவில்லை. எழுதப்படிக்கத் தெரிந்து, கணக்குப் போடவும் கணக்குகள் எழுதவும் தெரிந்தால், ஒரு வியாபாரியின் மகனுக்கு அதுவே போதும் என்று அக்காலத்தில் கருதப்பட்டு வந்தது.
ஆரம்பக் கல்வியைப் பெற்றதும் உத்தம சந்திர காந்தி, தாம் என்ன தொழிலை மேற்கொள்ளுவது என்று சிந்தித்தார். தமது தந்தையும் சிற்றப்பாவும் வகிக்கும் பதவிகளினின்றும் வேறான ஒன்றையே தாம் மேற்கொள்ளுவது என்று எண்ணினார். தமது தந்தை செய்துவந்த தொழிலில் அவருக்குப் பிரியமில்லை. அவருடைய சிற்றப்பா தாமன் காந்தியாலும் இவருக்கு ஏற்ற உத்தியோகத்தைத் தேடித்தர முடியவில்லை. மன்னரிடம் இதைக் குறித்துக் கேட்டுக் கொள்ளுவது சரியல்ல என்று தாமன் காந்தி எண்ணியிருக்கக்கூடும். அதனாலேயே வாலிப உத்தம சந்திரருக்கு அவர் ஒரு சுயேச்சையான வேலையைத் தேடிக் கொடுத்தார். போர்பந்தர் துறைமுகத்தில் சுங்க வசூல் கன்டிராக்டராக இருப்பதே அந்த வேலை.
சுங்கத் தீர்வை வசூலிக்கப்படும் இடத்திற்கு மிதி மாந்தவி என்று சொல்லுவார்கள். அக்காலத்தில்கூட போர்பந்தரில் இறக்குமதி ஏற்றுமதி அதிகம். அப்பொழுது ரெயில் இல்லாததனால் துவாரகைக்கும் சோமநாதத்திற்கும் யாத்திரை வருகிறவர்கள் கடல் மார்க்கமாகவே வருவார்கள். சுங்கத் தீர்வையைப் பிரயாணிகளிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் வசூலிப்பதென்பது, சமாளித்துவிடக்கூடிய சுலபமான காரியமல்ல. அவர்களிடம் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும்; அதே சமயத்தில் தீர்வை வசூல் பொறுப்பில் இருப்பவர், சமஸ்தானத்திற்கு வருமானம் இல்லாது போய்விடாதபடியும் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொறுப்பை உத்தம சந்திர காந்தி ஏற்றுக் கொண்டபோது அவருக்கு இருபது வயதே இருக்கும். என்றாலும், மிகுந்த திறமையுடன் அவ்வேலையை நிர்வகித்தார். அதே சமயத்தில் தமது எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்திலும் அவர் அசட்டையாக இருந்துவிடவில்லை. ஓய்வு இருக்கும் நேரங்களில் தாமன் காந்தியின் காரியாலயத்திற்குப்போய் அங்கே ஒழுங்காகப் பயிற்சியையும் பெற்றுவந்தார். சீக்கிரத்தில் தாமன் காந்திக்கு உதவி செய்யும் ஆற்றலைப் பெற்றுவிட்டார். அப்பொழுது தாமன் காந்திக்கும் ஓய்வு தேவையாக இருந்ததால், சில வேலைகளை உத்தம சந்திரரைச் செய்யச் சொல்லுவார்.
உத்தம சந்திரர் பிரபலமானார். ஊரிலும் அரண்மனையிலும் இருந்த பெரியவர்கள், அவரை ஓதா அல்லது ஓதா காந்தி என்று அழைப்பார்கள். மற்றவர்கள் ஓதா பாபா என்று அழைப்பர். காந்தி குடும்பத்தில் திவான் பதவிக்கு முதல் முதல் நியமிக்கப்பட்டவர் இவரே. தாமே கஷ்டப்பட்டு உழைத்ததன் மூலம் அப்பதவியை அவர் பெற்றார்.
போர்பந்தர் மன்னரான ராணா கிமாஜி, ஒரு முக்கியமான பிரச்னையைச் சமாளிக்க வேண்டித் தாமன் காந்தியைக் கூப்பிட்டனுப்பினார். ஆள் வந்த சமயம் சிறிய தகப்பனாரின் காரியாலயத்தில் உத்தம சந்திர காந்தி மாத்திரமே இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்த் தாமன் காந்தியைத் தேடி அலைந்துகொண்டிருக்காமல், உத்தம சந்திரர் தாமே ராணாவிடம் நேரில் சென்றார். தமது சிறிய தகப்பனார் இல்லாததால், இடும் கட்டளையைத் தாமே செய்வதாகவும் கூறினார். இளைஞர் காட்டிய நம்பிக்கையில் ராணாவுக்குத் திருப்தி உண்டாயிற்று. சாதாரணமாக, அனுபவமுள்ள அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டிய அந்த வேலையை ராணா, இவரிடம் ஒப்படைத்தார். அவ்வேலையைத் திறம்பட நிறைவேற்றி ராணாவின் நம்பிக்கைக்கு அவர் பாத்திரமானார்
மறுநாளே ராணா, உத்தம சந்திரரை அழைத்து, ஒரு கஷ்டமான வேலையை மேற்கொள்ளத் தயாராயிருக்கிறாரா என்று கேட்டார். ராணாவின் ஆசீர்வாதமிருந்தால், செய்துமுடிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று உடனே உத்தம சந்திரர் பதில் சொன்னார். வேலை இன்னது என்பதை ராணா பிறகு விளக்கிக் கூறினார். சுங்கத் தீர்வையை வசூலிப்பதற்காக மாதவப்பூரில் நியமிக்கப்பட்டிருந்த கன்டிராக்டர், வசூலித்ததைச் சரியாகச் செலுத்துவதில்லை. இம்மன்னரின் ஆட்சி பலவீனமானது என்று அந்தக் கன்டிராக்டர் எண்ணிவிட்டதால், அரசாங்க உத்தரவுகளுக்கும் உடன்பட்டு நடப்பதில்லை. இந்தக் கன்டிராக்டரை வழிக்குக் கொண்டுவர வேண்டும். மாதவப்பூருக்குப் போக உத்தம சந்திரர் உடனே ஒப்புக்கொண்டார்.
செளராஷ்டிரத்திற்குள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட பிரிட்டிஷார் முற்பட்ட சமயம் அது. ஒரு மத்திய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் அது வந்து விடவில்லை. அதிகப் பலமுள்ள சமஸ்தானங்களான ஜுனாகட்டும், ஜாம்நகரும் பலவீனமான தமது பக்கத்துச் சமஸ்தானங்களின் பகுதிகளை விழுங்கிக்கொண்டிருந்தன. போர்பந்தர் மன்னரின் ஆட்சி எல்லையெல்லாம் சில கிராமங்களில்தான். இந்தச் சமஸ்தானப் பகுதிகளைப் பல இடங்களிலும் ஜுனாகட் பறித்துக்கொண்டுவிட்டது. போர்பந்தர் மன்னர் சில இடங்களில் மாத்திரமே நிலத்தீர்வை வசூலித்துக்கொள்ள முடியும்.
போர்பந்தருக்குச் சொந்தமான மாதவப்பூர் முக்கியமான வியாபார ஸ்தலம். ஆனால், அங்கே சுங்கத் தீர்வையை வசூலிக்கும் உரிமையை அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே போர்பந்தர் மன்னர் விடாமல் வைத்திருந்தார். ஜூனாகட்டின் ஆதரவின் பேரில் கன்டிராக்டர், போர்பந்தருக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தாமல் ஏமாற்றிக்கொண்டிருந்தார். உத்தம சந்திர காந்தி மாதவப்பூருக்கு வந்ததும், கன்டிராக்டர் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவதற்குப் பதிலாகப் பிரச்னையை அதன் பேரிலேயே சமாளிக்க முற்பட்டார். ஜுனாகட்டிற்குள்ளிருந்த போர்பந்தரின் பகுதிகள் எவையெவை என்பதைக் கணக்கு எடுத்தார். அப்பகுதிகளைக் குறித்து ஜுனாகட் பிரதிநிதிகளுடன் சமரசப் பேச்சை நடத்தினார். மாதவப்பூரிலிருந்து போர்பந்தர் வரையிலுள்ள கடலோரப் பகுதிகளின் மீது எந்த உரிமையும் கொண்டாடுவதில்லை என்று ஜுனாகட் ஒப்புக்கொண்டால், ஜுனாகட்டிற்குள் திட்டுத்திட்டாக இருக்கும் போர்ப்பந்தர் பகுதிகளின் உரிமையை, அங்கே வரி வசூலிக்கும் உரிமை உட்பட, விட்டுக் கொடுத்துவிடுவதாகப் பேரம் பேசினார். இவருடைய யோசனை ஒப்புக்கொள்ளப்பட்டது. கரையோரப் பகுதிகளின் உரிமைகளைப் போர்பந்தருக்கு அளித்துவிடுவது என்று ஜுனாகட் ஓர் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.
இப்பகுதி அச்சமயம் மணல் பாங்கான தரிசு நிலம். ஆனால், அப்பகுதியை நன்றாக அபிவிருத்தி செய்துவிட முடியும் என்ற தீர்க்கதரிசனம் உத்தம சந்திர காந்திக்கு இருந்தது. ஜுனாகட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் குறித்து அவர் எழுதிய போது, பாதார் நதிக்கு ஓர் அணை கட்டிவிட்டால், அப்பகுதி முழுவதையும் நல்ல செழிப்பான இடம் ஆக்கிவிடலாம் என்றும், அதனால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் எழுதினார்.
அவர் எண்ணியது அப்படியே உண்மையாகிவிட்டது. இந்தப் பகுதியில் நான் ஒரு சமயம் நடந்தே போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் பேசிக்கொண்டிருந்த வயதான விவசாயிகள், பாதார் அணையைக் கட்டியதால் அங்கே விளையும் விவசாயப் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.1,000-லிருந்து ரூ.72,000-க்கு உயர்ந்து விட்டது என்று கூறினர். அப்பொழுது, முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார மந்த சமயம். அங்கே விளையும் பொருள்களின் மதிப்பு இப்பொழுது அநேக மடங்கு அதிகமாக இருக்கும்.
உத்தம சந்திர காந்தியின் முயற்சியினால் ஏற்பட்ட மாதவப்பூர் ஒப்பந்தம் காரணமாக 3,600 சதுர மைல்கள் விஸ்தீரணமே உள்ளதான சிறு சமஸ்தானமாகிய போர்பந்தர், பிரிட்டிஷார் சௌராஷ்டிர சமஸ்தானங்களைத் தர வாரியாகப் பிரித்தபோது, முதல்தர சமஸ்தானங்களில் ஒன்றெனச் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தினால் தொடர்ந்தாற்போல் இருந்த பகுதி அந்தச் சமஸ்தானத்திற்கு எல்லா உரிமைகளுடனும் கிடைத்தது. ஆண்டுகளுக்குச் சில ஆயிரமே என்று இருந்த வருமானம் ஆண்டுக்குப் பல லட்சங்களாயின.
உத்தம சந்திரர் மாதவப்பூரில் அடைந்த வெற்றியினால் அவர் உடனே போர்பந்தரின் திவானாக நியமிக்கப்பட்டார். அவர் கிழவராகும் வரையில் அப்பதவியை வகித்து வந்தார். அவர் திவானாக இருந்த காலத்தில் போர்பந்தர் சமஸ்தானத்திற்கும் நல்ல மதிப்பு உண்டாயிற்று. தமது சந்ததியினர் பின்பற்றுவதற்கு வழிகாட்டியவராகவும் இருந்தார்.
போர்பந்தர் தனது பகுதிகளை இழந்துவிட்டதைப்போன்றே அதன் செல்வ நிலையும் மோசமாக இருந்தது. ஒரு கட்ச் வியாபார ஸ்தாபனம், போர்பந்தர் ராஜாக்களுக்குக் கடன் கொடுத்துக்கொண்டிருந்தது. சுந்தர்ஜியின் ஸ்தாபனம் என்பது அதன்  பெயர். நாளாவட்டத்தில் இக்கடன் பெருகிக்கொண்டேபோய், சமஸ்தானம் முழுவதுமே அடமானம் ஆகிவிட்டது. இதனால் சமஸ்தானத்தின் வருமானத்தையெல்லாம் அந்த வர்த்தக ஸ்தாபனம் எடுத்துக்கொண்டு அத்தியாவசியமான செலவுகளுக்கு மாத்திரம் போதுமானதை சமஸ்தானத்திற்குக் கொடுத்து வந்தது.
உத்தம சந்திர காந்தி திவானான சமயம், சமஸ்தானம் இத்தகைய மோசமான நிலைமையில் இருப்பதைக் கண்டார். அந்த ஸ்தாபனம் கொடுத்திருந்த கடனைப் பற்றிய தஸ்தாவேஜுகளையெல்லாம் நன்றாகப் பரிசீலனை செய்தார். அடமானப் பத்திரத்தில் சமஸ்தானத்திற்கு உதவியான ஒரு விதியும் இருப்பதைப் பார்த்தார். அப்பத்திரத்தின் இறுதியில், 'கடன் கொடுத்தவர், நிலவரி, சுங்கத் தீர்வை ஆகிய முக்கியமான வருமானங்களிலிருந்தே கடனுக்கு ஈடு செய்யக்கேட்கலாம்' என்று இருந்தது. ஆகையால், ஸ்டாம்ப் கட்டணம், நிலம், சொத்து விற்பனை மீது விதிக்கும் வரி ஆகியவைகளின் மீது வரும் வருமானத்தைக் கடன்காரர் தம் கடனுக்கு ஈடுசெய்யக் கேட்கக்கூடாது என்றே பத்திரம் கூறுகிறது என்று வாதித்தார். அப்பொழுதிலிருந்து இந்த இனங்களிலிருந்து வந்த வருமானம் சமஸ்தான கஜானாவுக்கே வந்தது. அதைக் கொண்டு கடனையும் மெள்ளத் தீர்த்துவிட்டார். இவ்வாறு அந்தச் சமஸ்தானம் ஓட்டாண்டி ஆகிவிடாதபடி உத்தம சந்திர காந்தி காப்பாற்றி விட்டார்.
ராணி ஆண்டபோது, அவருக்கு ஏற்பட்ட கோபத்தைப் பற்றிய வரலாறு மிகப் பிரபலமானது. மகாத்மா காந்தியும் இதைப் பற்றித் தமது 'சுயசரிதை'யின் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் விவரம் இதுதான்:
சமஸ்தானத்தின் கஜானாக்காரராக இருந்த கிமா கோத்தாரி என்பவரே பண்டகசாலையின் அதிகாரியும் ஆவார். அவர் கண்டிப்பானவர்; கடமை உணர்ச்சியுள்ளவர். தக்க உத்தரவு இருந்தாலன்றி அவர் யாருக்கும் எப்பொருளையும் கொடுக்க மாட்டார். இதனால், ராணியின் வேலைக்காரர்களுக்கு அவரைப் பிடிக்காது. தாங்கள் கேட்பதெல்லாம் பண்டகசாலையிலிருந்து கிடைப்பதில்லையாகையால், அவர் மீது ராணியிடம் இல்லாதது பொல்லாததை எல்லாம் அவ்வேலைக்காரிகள் சொல்லி வந்தனர். ஒருநாள் கோத்தாரிமீது பெரும் புகார் ஒன்றை அவர்கள் கூறிவிடவே ராணிக்குக் கோபம் வந்துவிட்டது. கோத்தாரியைக் கைது செய்து தம் முன்பு கொண்டுவருமாறு உத்தரவு போட்டுவிட்டார்.
ராணியின் கோபத்தைக் குறித்துக் கோத்தாரி அறிந்ததும் உத்தம சந்திர காந்தியிடம்போய்த் தம்மைப் பாதுகாத்து நீதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். இதை ராணி கேள்விப்பட்டதும், உத்தம சந்திரரைக் கூப்பிட்டு அனுப்பி, கோத்தாரியைத் தம் முன்பு கொண்டுவந்து நிறுத்தும்படி கூறினார். ஆனால், உத்தம சந்திரரோ கோத்தாரியைக் கொண்டுவந்து ஒப்படைக்க மறுத்துவிட்டார். இதில் சரியாக விசாரித்து அறியவேண்டும் என்றும், கோத்தாரி தவறு செய்திருந்தால் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் கூறினார். ராணிக்குப் பிரமாதமாகக் கோபம் வந்துவிட்டது. தாம் முடிவு செய்வதே நீதி என்றார். கோத்தாரியைத் தண்டித்தே ஆக வேண்டும் என்றும் அவரைத் தம்மிடம் ஒப்படைத்தாக வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
உத்தம சந்திரர் ராணிக்கு நியாயத்தை எடுத்துக்கூற முயன்றார். ஆனால், அதற்கெல்லாம் செவிகொடுத்துக் கேட்க ராணி தயாராக இல்லை. கோத்தாரியைத் தம்மிடம் ஒப்படைக்காது போனால் உத்தம சந்திரர் அடிக்கப்படுவார் என்றும் பயமுறுத்தினார். ஆனால், அதற்கெல்லாம் பயந்துவிடுகிறவர் அன்று உத்தம சந்திரர். அவர் தம் முடிவில் உறுதியுடன் இருந்துவிட்டார். ராணியோ பயமுறுத்திச் செய்திகளை அனுப்பிக்கொண்டே இருந்தார். சில நாட்கள் கழித்து ஒருநாள், கோத்தாரியைப் பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு வருமாறு ராணுவப் படை ஒன்றை உத்தம சந்திரரின் வீட்டிற்கு ராணி அனுப்பினார். அவர் குடியிருந்த வீடு கருங்கற்களால் கட்டப்பட்டது; வெளிக் கதவும் அதிகப் பலமானது. ஆகவே உள்ளே பிரவேசிக்கச் சிப்பாய்களால் முடியவில்லை என்பதை அறிந்த ராணி, அவ்வீட்டின் வெளிச்சுவர்களைத் தகர்த்துவிட ஒரு பீரங்கியையே அங்கே அனுப்பினார்.
உத்தம சந்திர காந்தியின் வீட்டுக்கு முன்னால் காவலுக்கு இருந்த அரபுக் காவற்காரர்கள் கடைசி வரையில் வீரத்துடன் நின்று பாதுகாத்தனர். எதேச்சாதிகாரிகளாக இஷ்டம் போலெல்லாம் நடப்பவர்கள், அந்தக் கால ராஜாக்கள். ஆகையால், அவர்களிடம் உத்தியோகத்தில் இருப்பது என்றுமே ஆபத்தானதுதான். திவான்களாக நியமிக்கப்படுகிறவர்கள், ராஜாவின் விரோதம் வந்தாலும் தம்மைக் காத்துக்கொள்ளுவதற்காக யாரையாவது பாதுகாப்பாளராக நியமித்துக்கொள்ளுவார்கள். உத்தம சந்திர காந்தியின் மெய்காப்பாளர்களின் தலைவர் ஓர் அரபுக்காரர். குலாம் முகமது மக்ராணி என்பது அவர் பெயர். உத்தம சந்திரரைப் பாதுகாப்பதில் அவர் உயிரைத் துறந்தார். உத்தம சந்திரரின் வீட்டை அடுத்துள்ள வைஷ்ணவக் கோயிலில் இவருக்கு ஏற்படுத்திய ஞாபகச் சின்னம் இன்றும் இருக்கிறது.
வீட்டைப் பாதுகாக்கும் வேலையை அரபுகளிடம் உத்தம சந்திரர் விட்டுவிட்டார். என்ன வந்தாலும் சரி என்று உள்ளே அமைதியுடன் இருந்தார். சத்தியத்திற்காகத் தம் உயிரையும் தத்தஞ்செய்துவிடத் தயாரானார். வீட்டிலிருந்த தமது புதல்வர்கள் ஐந்து பேரையும் அருகில் அழைத்தார். தம் மனைவி, கோத்தாரி ஆகியவர்களையும் உடன் வைத்துக்கொண்டார். "சத்தியத்திற்காக உயிரை விடும் வாய்ப்பைக் கடவுள் அளித்திருக்கிறார். ஆகையால், அமைதியாகவும் அஞ்சாமலும் இருந்து சாவைச் சந்தோஷமாக எதிர்நோக்குவோம்'' என்றார்.
பீரங்கிக் குண்டுகள் வீட்டின் வெளிச்சுவரின் மீது தாக்கிக்கொண்டிருந்தபோது உள்ளே உத்தம சந்திரர், தாம் கொண்ட உறுதியில் தளராமல் இருக்கும் பலத்தைத் தமக்கு அருளுமாறு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார். இதற்கு மத்தியில் ராணியின் அக்கிரமச் செய்கையைப் பற்றிய செய்தி ராஜ்கோட்டிலிருந்த பிரிட்டிஷ் ராஜீய ஏஜெண்டுக்கு எட்டியது. அவர் குறுக்கிட்டதன் பேரில் ராணியின் நடவடிக்கை அத்தோடு நின்றது.
இச்சம்பவத்திற்குப் பிறகு உத்தம சந்திரர், ஜுனாகட் சமஸ்தானத்தில் குடியானா என்ற இடத்திலிருந்த தமது வீட்டிற்குத் திரும்பினார். அவர் சமஸ்தானத்திற்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்த ஜுனாகட் நவாப், அவரை அரண்மனைக்கு வரவழைத்தார். உத்தம சந்திரர், நவாப் முன்னால் வந்தபோது அவருக்குத் தமது இடக்கரத்தினால் சலாம் செய்தார். அதைப் பெரும் அவமதிப்பாகத் தர்பாரிலிருந்த எல்லோரும் கருதினர். அனுபவம் மிக்க ஒருவர் இவ்விதம் நடந்துகொண்டு விட்டது நவாபுக்கே ஆச்சரியமாக இருந்தது. அதைப் பற்றி நவாப் கேட்டபோது உத்தம சந்திர காந்தி கூறியதாவது: "வலது கை முன்பே போர்பந்தருக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நான் போர்பந்தரின் ஊழியன் என்பதை மறந்துவிட முடியாது. ஆகவே, அந்தச் சமஸ்தானத்தினிடம் விசுவாசமின்றி நடப்பதற்கில்லை. உங்களிடம் சேவை செய்ய எனது இடக்கரமே பாக்கியாக இருக்கிறது. ஆனால், நான் உத்தியோகம் பார்க்க வரவில்லை. ஓய்வு எடுத்துக்கொண்டு அமைதியாக வாழவே விரும்புகிறேன்." - மரியாதைக் குறைவாக நடந்துகொண்டு விட்டதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்றே நவாபின் தர்பாரில் இருந்தோர் விரும்பியிருப்பார்கள். ஆனால், நவாப் விஷயங்களை அறிந்தவர். உத்தம சந்திரரின் விசுவாசத்தையும், உறுதியையும், அவர் போக்கையும் பாராட்டினார். ராஜாங்க மரியாதைக்காகச் சிறு தண்டனை விதித்து, அதே சமயத்தில் ஏராளமான சன்மானங்களையும் கொடுத்தார். உத்தம சந்திரர் தமது காலில் செருப்பு இல்லாமல் வெளியில் பத்து நிமிட நேரம் நிற்க வேண்டும் என்பதே நவாப் விதித்த தண்டனை. அவருக்கு அளித்த சன்மானம், உத்தம சந்திரரும் அவர் சந்ததியாரும் குடியானாவில் வியாபாரம் செய்தால், அவர்களுக்குச் சுங்கத் தீர்வை கிடையாது என்பது. உத்தம சந்திரர் சில நிமிட நேரம் வெயிலில் நின்றுவிட்டுக் குடியானாவுக்குப் போய்விட்டார்.
பிறகு அவர் அமைதியான வாழ்க்கை நடத்திவந்தார். தினமும் கொஞ்ச நேரம் குதிரையில் ஏறி வெளியே போய்வருவார். மற்ற நேரங்களைப் பிரார்த்தனையிலும் மத சம்பந்தமான விவாதத்திலும் கழித்து வந்தார். இவர் போர்பந்தர் திவானாக இருந்தபோது இவருக்கு 2,000 கோரி சம்பளம். (ரூபாய்க்கு நான்கு கோரிகள்) இதல்லாமல் உணவு தானியங்கள், கறி காய் முதலியவைகளைச் சமஸ்தான உக்கிராணம் கொடுத்துவிடும். இது அவ்வளவு பெரிய சம்பளம் அல்ல. என்றாலும், தமது மூத்த குமாரர்களான வல்லபஜி, பீதாம்பர்ஜி ஆகியவர்களின் விவாகத்தின் போது, அக்கால வழக்கத்தை அனுசரித்து ஏராளமானவர்களை அழைத்திருந்தார். எல்லாச் சடங்குகளுடனும் விவாகம் நடந்தது. அவ்வூர் முழுவதையும் அழைத்திருந்தார். வழக்கத்தை அனுசரித்து அவ்வூர்க் கோட்டை வாசல்களில் அரிசியை ஒட்டி வைப்பதன் மூலம் ஊர் முழுவதும் அழைக்கப்பட்டது. வந்தவர்களுக்கெல்லாம் சாப்பாடு. ஏழு நாட்கள் நடந்த இந்த வைபவத்தில் ராணாவும் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டார்.
உத்தம சந்திரர் பொதுஜன ஆதரவைப் பெற்ற திவானாக இருந்ததால் சன்மானங்கள் ஏராளமாக வந்தன. கல்யாணத்திற்கு அவர் எவ்வளவு செலவிட்டாரோ அவ்வளவும் சன்மான மாக வந்துவிட்டது. வேறு யாராவது என்றால், வந்ததையெல்லாம் தங்களுக்கு வந்தவையே என்று எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், உத்தம சந்திர காந்தி, கல்யாண வேலைகளெல்லாம் முடிந்த பிறகு, கல்யாணத்தில் வந்த பணத்தையெல்லாம் ராணாவிடம் கொண்டுபோனார். இவையெல்லாம் ராணாவின் குடிகளிடமிருந்தே வந்தவைகளாகையால், அவை ராணாவுக்கே சொந்தமானவை என்று கூறி அவரிடம் ஒப்படைத்தார். இதைக் கண்டு மனமுருகிப் போன ராணா, அப்பணத்தைச் சமஸ்தான கஜானாவுக்கு அனுப்பிவிட்டுக் கல்யாணச் செலவு முழுவதையும் கஜானாவிலிருந்தே கொடுத்துவிடுமாறு உத்தரவிட்டார். "உங்கள் குமாரர்கள் என் குமாரர்களே'' என்றும் கூறினார்.
போர்பந்தரில் ராணியின் கொடிய ஆட்சி தீர்ந்ததும், ராணா விக்ரமஜித் பட்டத்திற்கு வந்தார். சமஸ்தானத்தின் நன்மையை விரும்பியவர்கள், உத்தம சந்திர காந்தியைத் திரும்பவும் திவானாகக் கொண்டுவர முயன்றார்கள். ஆனால், ஓய்விலிருந்து திரும்பவும் திவான் பதவிக்குச் செல்ல அவர் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முயற்சியினாலும், ராணா சிமாஜியின் வாக்குறுதிகளினாலும் ஒரு பலன் ஏற்பட்டது. உத்தம சந்திரரின் குமாரர்கள் எல்லோருக்கும் சமஸ்தானத்தில் உத்தியோகங்கள் கிடைத்தன. ராணா சிமாஜியின் அந்திய காலத்தில் அவரிடமிருந்து எழுத்து மூலம் உத்தம சந்திரர் ஓர் உறுதிமொழி பெற்றிருந்தார். ''உத்தம சந்திர காந்தி, இந்தச் சமஸ்தானத்திற்கு மதிப்பிற்குரிய சேவையைச் செய்திருக்கிறார். எனக்கும் சமஸ்தானத்திற்கும் என்றும் விசுவாசமாகவும் இருந்திருக்கிறார். ஆகையால், அவருக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படாதபடி, எனக்குப் பின்னால் பட்டத்திற்கு வருகிறவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். அதோடு உத்தம சந்திர காந்தியின் சந்ததியாருக்குச் சமஸ்தானத்தில் உத்தியோகங்களும் கொடுக்க வேண்டும்.''
மைனராயிருந்த ராணாவுக்காக ராணி ஆட்சி நடத்திய காலத்தில் இந்த உறுதிமொழி பலனில்லாது போயிற்று. ராணா விக்கிரமஜித் வயதுக்கு வந்ததும் உத்தம சந்தரரின் குடும்பத்திற்கு நன்மை ஏற்பட்டது.
உத்தம சந்திர காந்திக்கு ஆறு குமாரர்கள். ஐந்தாவது குமாரரான கரம்சந்திர காந்தியே, மகாத்மா காந்தியின் தந்தை. இவரும், ஆறாவது குமாரரான துளசிதாஸ் காந்தியும் ஒருவர் பின் ஒருவராகப் போர்பந்தர் திவானாக இருந்தனர். உத்தம சந்திரரின் அறிவாற்றல், சத்தியத்தில் பக்தி, வீரம் ஆகியவைகளெல்லாம் கரம்சந்திர காந்தியிடமே அதிகம் குடிகொண்டிருந்தன.
நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் (தொகுதி 3), காந்தி நூல் வெளியீட்டுக் கழகம்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (