நமது நாட்டுப் பழங்கால அரசியல் வரலாறு, நாகரிக வரலாறு, சமய வரலாறு முதலியவை வரன்முறையாக எழுதப்படவில்லை . இத்தகைய வரலாறுகள் நமது முன்னேற்றத்திற்கு இன்றியமையாதன. வரலாற்றுக் குறிப்புகள் சில சமய நூல்களிலும், இலக்கிய நூல்களிலும், உரை நூல் களிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. சிதறுண்டு கிடக்கும் சில குறிப்புகள் வரலாறு எழுதுவதற்கு உதவி புரியும் என்னும் கருத்துடன் நான் கண்ட சில குறிப்புகளை எழுத முற்படுகிறேன். ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரப் பிரபந்தத்திற்கு எழுதப்பட்டுள்ள வியாக்கியானத்தில் (விரிவுரையில்) காணப்படும் சில குறிப்புகளை ஈண்டுக் கூறுகிறேன். 1. செங்கட் சோழன் விளந்தை வேளை வென்றது மின்னாடு வேலேந்து விளைந்த வேளை விண்ணேறத் தனிவேலுய்த் (து) உலகமாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே என்பது திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி (6ஆம் பத்து, 6ஆம் செய்யுள்). இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் "ஒளி வர்த்தியாநின்ற வேலைக் கையிலேயுடைய விளைந்த வேளாகிற குறும்பனை வீரஸ்வர்க்கத்தேற போம்படி ஏகப்ரயோகத்தாலே வேலை நடத்தி, ஜகத்தை