Skip to main content

பழஞ் செய்திகள் - மயிலை சீனி. வேங்கடசாமி


நமது நாட்டுப் பழங்கால அரசியல் வரலாறு, நாகரிக வரலாறு, சமய வரலாறு முதலியவை வரன்முறையாக எழுதப்படவில்லை . இத்தகைய வரலாறுகள் நமது முன்னேற்றத்திற்கு இன்றியமையாதன. வரலாற்றுக் குறிப்புகள் சில சமய நூல்களிலும், இலக்கிய நூல்களிலும், உரை நூல் களிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. சிதறுண்டு கிடக்கும் சில குறிப்புகள் வரலாறு எழுதுவதற்கு உதவி புரியும் என்னும் கருத்துடன் நான் கண்ட சில குறிப்புகளை எழுத முற்படுகிறேன். ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரப் பிரபந்தத்திற்கு எழுதப்பட்டுள்ள வியாக்கியானத்தில் (விரிவுரையில்) காணப்படும் சில குறிப்புகளை ஈண்டுக் கூறுகிறேன்.

1. செங்கட் சோழன் விளந்தை வேளை வென்றது

மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் (து) உலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

என்பது திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி (6ஆம் பத்து, 6ஆம் செய்யுள்).

இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் "ஒளி வர்த்தியாநின்ற வேலைக் கையிலேயுடைய விளைந்த வேளாகிற குறும்பனை வீரஸ்வர்க்கத்தேற போம்படி ஏகப்ரயோகத்தாலே வேலை நடத்தி, ஜகத்தை யடையத் தானிட்ட வழக்காம்படி நிர்வகித்த ராஜாவானவன் கிட்டி ஆரம்பித்த திருநறையூர்.”

இதில் செங்கட் சோழன், விளைந்தவேள் என்பவனை வென்ற செய்தி கூறப்படுகிறது. மூலத்திலும் உரையிலும் 'விளைந்த வேள்' என்றிருப்பது தவறு. 'விளந்தை வேள்' என்று இருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது.

செங்கட் சோழன் விளந்தை வேளை வென்ற செய்தி வேறு நூல்களில் கூறப்படவில்லை.

2. செங்கட் சோழன் திருவழுந்தூரில் போர் வென்றது

பாராளர் இவர் இவர் என்று அழுந்தை ஏற்ற
படைமன்னர் உடல் துணியப் பரிமாவுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே

(திருமங்கை, பெரிய திருமொழி, 6ஆம் பத்து)

"இன்னார் இன்னார் என்று ப்ரசித்தராயிருக்கிற ராஜாக்கள் ஸபரிகாரராய்க் கொண்டு திருவழுந்தூரிலே வந்து எதிரிட, அவர்களுடன் துணியும்படிக்கீடாக வென்ற செங்கட் சோழன்” என்பது வியாக்கியானம்.

அழுந்தை என்றும் (அகம்., 196; 11), அழுந்தூர் என்றும் (அகம்., 246; 14) கூறப்படும் திருவழுந்தூர் சோழநாட்டில் இருக்கிறது. செங்கட் சோழனைப் பகைவர் எதிர்த்துத் தோற்ற செய்தி இதில் கூறப்படுகிறது.

3. செங்கட் சோழன் 70 மாடக்கோயில்களைக் கட்டியது

இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்(து) உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே

இதில், செங்கட் சோழன் 70 திருக்கோயில்களைக் கட்டிய செய்தி கூறப்படுகிறது.

4. சோழ அரசர் வெற்றிலை உண்டது

திருமங்கை மன்னன் அருளிய முதல் பத்து மூன்றாந் திருமொழியில், "முற்ற மூத்துக் கோல்துணையா” என்னும் பாசுரத்துக்கு விரிவுரை கூறும் வியாக்கியான ஆசிரியர், சோழர்கள் வெற்றிலை உண்ணும் முறையைக் கூறுகிறார்.

"சோழர்கள் வெற்றிலை சிலரிடலன்றிக்கே தாங்களே எடுத்தியே தின்பது; 'தலை கவிழ்ந்து வாங்கில் சிலரை வணங்கிற்று' என்னும் துர்மானத்தாலே.”

இதனால், சோழ அரசர் பிறர் கொடுக்க வெற்றிலையை வாங்கி உண்பதில்லை என்பதும், தாங்களாகவே எடுத்து உண்ணுவர் என்பதும், இவ்வழக்கத்தின் காரணம், பிறர் கொடுக்க வாங்கினால், தாம் தலைவணங்கியது போலாகும் என்னும் கருத்தே என்பதும் தெரிகின்றன.

5. சோழர் சாமந்த அரசர் தலைமேல் அடிவைத்து யானை ஏறியது

சோழ அரசர் உலாப் போக யானைமேல் ஏறும்போது, தமக்குக் கீழ்ப்பட்ட சாமந்த அரசரின் தலைமேல் கால் வைத்து யானைக் கழுத்தில் ஏறி அமர்வர் என்கிற செய்தி, குருபராம் பராப்ரபாவம் என்னும் நூலினால் தெரிகிறது.

''பின்னையுஞ் சில நாள் கழிந்தவாறே, ஒரு நாளளவில் (சோழ அரசன் வந்து மன்னனாரை (வீரநாராயணபுரத்துப் பெருமாளை) சேவித்து மீண்டு போகையில், தன்னுடைய சாமந்தன் தலைமேலடியிட்டு ஆனைக்கழுத்தின் மீதேற, அதை இவர் (நாதமுனிகள்) கண்டு, 'சர்வேஸ்வரன் பிரம்மாதி தேவர்கள் தலைமீது அடியிட்டுப் பெரிய திருவடி (கருடன்) மேற்கொள்ளும்படி இது வாகாதோ' வென்று மோகித்தா ரென்பதும் பிரசித்தம்" (ஸ்ரீ நாதமுனிகள் வைபவம்).

6. சாமந்த அரசர் (சிற்றரசர்) பேரரசர் அரண்மனையில் உழக்கரிசி பெறுதல்

''சாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்க வுண்டாகிலும், மாளிகைக்குள்ளே செப்பாலே நாழி யரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பார்களிறே.''

இது, திருவாய்மொழி முதல் பத்து, 3 ஆம் திருவாய் மொழி 9 ஆம் பாசுரத்தின் வியாக்கியானம்.

கப்பம் கட்டும் சிற்றரசர்களான சாமந்த அரசர்கள் தமக்கென்று நாடும் ஊரும் உடையவரேனும், தமது பேரரசனிடத்துச் சென்று, அவன் செம்பு நாழியாலே அளந்து கொடுக்கும் நாழி அரிசியைத் தமக்குரிய வரிசையாகப் பெற்று வந்தனர் என்பது இதனால் அறியப்படுகிறது.

7. மொட்டையடிப்பது

காம்பறத் தலைசிரைத்(து) உன் கடைத்தலை யிருந்து வாழும்
சோம்பரை உகத்திபோலும் சூழ்புனல் அரங்கத் தானே

என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை 38 ஆம் பாசுரம். இதில் 'தலை சிரைத்து' என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் வருமாறு:

''தலைமயிராகிறதுதான் அபிமான ஹேதுவிறே. கோமுற்றவர் (?) தண்டிக்குமிடத்தில் தலையைச் சிரைக்கிறது. அபிமானத்தைப் போக்குகிறதாய்த்து. ஏகாந்தியாயும் சந்நியா சியாயும் வபநம் பண்ணுகிறது தன் அபிமானத்தைத் தானே போக்கிறபடியிறே - தண்டமுகத்தாலே பிறரபிமானத்தைப் போக்குவதும் இம்முகத்தாலே; ஸ்வாபிமானத்தைப் போக்கு வதும் இம்முகத்தாலேயிறே. ஆக, அஹங்கார கர்ப்பமான உபாயந்தர பரித்யாகத்தைச் சொன்னபடி.''

இதனால், குடுமி வைப்பது அக்காலத்தில் அபிமான கரமாகக் கருதப்பட்டதென்பது விளங்குகிறது.

8. கொல்லிப் பாவை

பழைய சங்க நூல்களில் கொல்லிப்பாவையைப் பற்றிக் கூறப்படுகிறது. கொல்லி மலையில் இருந்த ஓர் அழகிய பெண் உருவமாகும் இது. சில உரையாசிரியர்கள், இக்கொல்லிப் பாவை ஒரு யக்ஷி தெய்வம் என்றும், அங்குச் செல்வோரை இது மயக்கி அழிக்கும் என்றும் கூறுவர். இந்த வியாக்கியானத் திலிருந்து, கொல்லிமலையில் எழுதப்பட்ட ஒரு சிற்ப உருவம் இது என்று தெரிகிறது. இக்கருத்துப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது.

"குவளையங்கண்ணி கொல்லியம்பாவை'' என்றும், ''குலங்கெழு கொல்லி கோமள வல்லி" என்றும் திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில் கொல்லிப் பாவையைக் குறிக்கிறார். இவற்றிற்கு வியாக்கியானம் இவ்வாறு கூறப்படு கிறது :

"கொல்லிமலை மேலே ஒரு பாவை யுண்டு. எல்லாரும் உருவகுப்புக்குத் தமிழர் சொல்லுவதொன்று.''
"பாவை யுண்டு என்றது ஸ்திரி பிரதிமை எழுதி யிருக்குமென்றபடி " - குறிப்புரை.
"கொல்லி மலையிலே ஒரு பாவையுண்டு; வகுப்பழகி தாயிருப்பது, அதுபோலேயாயிற்று. இவளுக்குண்டான ஏற்றமும் பிறப்பும்."

9. பழமொழிகள்

நாலாயிரப் பிரபந்த வியாக்கியானத்தில் சில பழமொழிகளும் கூறப்படுகின்றன. அவை:

பூப்போலே வந்து புலியானி கோளோ. ('பூப்போலே' என்றிருப்பது பூனைபோலே என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது).

மறக்குடி அறஞ்செய்யக் கெடும்.

கரும்பு தின்னக் கூலி கொடுப்போரைப் போலே.

ஆனைக்குப்பு ஆடுவோரைப் போலே அநாதரித்திருந்தான். (ஆனைக்குப்பு ஆடுதல் - சதுரங்கம் ஆடுதல்)

சண்டாளன் ஒத்துப்போகாது.

அம்மியைக் கட்டிக்கொண்டு ஆற்றில் இழிவாரைப் போலே.

அம்புக்குச் செல்லாத விடத்தை ஆசனத்தாலே திருத்துவோம்.

மூலையிற் கிடந்ததை முற்றத்திலே யிட்டோம்.

எருது கொடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்.

ஊமை கண்ட கனாவாய் விடமாட்டாததுபோல.

மிடறு தின்றால் சொறிய ஒண்ணாததுபோலே.

கண்ணாலப் பெண்டாட்டிக்கு உள்ள அவகாலமில்லை.

துடுப்பிருக்கக் கை வேகவேணுமே.

கள்ளரச்சம் காடு கொள்ளாது.
.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

10. தமிழ் நாட்டின் வடவெல்லை

திருப்பாணாழ்வார் அருளிய "அமலன் ஆதிப்பிரான்'' என்னும் பாசுரத்தில் திருப்பதி மலையை ''வடவேங்கட மாமலை'' என்று கூறினார். இதற்கு வியாக்கியானம் கூறுவது வருமாறு:

''வடவேங்கிடம் - தமிழ் தேசத்துக்கு எல்லை நிலம்."
பெரியவாச்சான் பிள்ளை உரை.

"திருமலை என்னாதே வடவேங்கடம் என்றது. தமிழர் தமிழுக் கெல்லை நிலம் அதுவாகச் சொல்லுகையாலே"
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை.

திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி முதற் பத்தின் 8 ஆம் திருமொழியில், "செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே " என்று அருளியதற்கு, மேற்கண்டவாறே பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் அருளியிருக்கிறார்; அதாவது:

"தமிழ்ப் பாழை நடமாடுகிறதுக்கும் எல்லையான நிலமாயிருக்குமிறே" (பாழை - பாஷை).

இதனால், அக்காலத்தில் திருவேங்கட மலையும் அதனைச் சார்ந்த நாடும் தமிழ் நாடாக இருந்ததென்பது தெரிகின்றது. பிற்காலத்தில் முகம்மதிய அரசர் விஜயநகர அரசரை வென்றபிறகு திருவேங்கடத்தில் தெலுங்கர் வந்து குடியேறினர் என்பது சரித்திரம் கூறுகிற வரலாறு.

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 7, 1948

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர