Skip to main content

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும்.

நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள்.

செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேலைக்காக வேறு ஊருக்குச் செல்லும்போது மல்லிகைப்பூ கொடி சிறியதாக இருந்தது. இப்போது பெரிதாகப் படர்ந்திருக்கிறது. சாயந்திர நேரம். மதினி காபி தயார் செய்துகொண்டிருக்கலாம். சங்கரன் அண்ணாச்சி ஹாலில் உள்ள ஊஞ்சலில்தான் மதியம் படுத்திருப்பார். சரியாக நாலு மணிக்கு அவருக்கு விழிப்பு வந்துவிடும் என்று மதினி சொல்லியிருக்கிறாள். நாலேகால் மணிக்கு அவருக்கு பில்டர் காபி வேண்டும். இப்போது அவர்கள் வீட்டிற்குள் நுழையலாம். முறுக்கு, அதிரசம் கொண்டுவந்து மதினி வைத்துவிடுவாள். சங்கரன் அண்ணாச்சி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியதை நினைத்தால் அலுப்பாக இருக்கிறது. இன்னொரு நாள் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எதிரே குடை பிடித்துக்கொண்டு சோமு பிள்ளை வந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது செருப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் குடை. டிசைன் குடை அல்ல. நீளமான கருப்புக் குடை. வாக்கிங் ஸ்டிக்காக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

சோமு பிள்ளை, “எப்படா வந்தே. வேலை மாறியிருக்கியா. அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா. எவ்வளவு நாள் இருப்பே. உங்கப்பனை விசாரிச்சதா சொல்லு” என்றார்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் ஊர்ல இருப்பேன்” என்றேன்.

“உனக்குக் கல்யாணம் எப்போ” என்றார் சோமு பிள்ளை. அவர் எனக்கு என்ன முறை வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.

“இப்போ இல்லை. இப்பதானே வேலைக்குப் போயிருக்கேன்” என்றேன்.

அவர் “நல்லா இரு” என்று ஆசீர்வாதம் மாதிரி சொல்லிவிட்டுச் சென்றார். அவர் முழுக்கை சட்டை அணிவார். சட்டைப்பையில் மூக்குக் கண்ணாடியை அதற்கான கூட்டுடன் வைத்திருப்பார். அது புடைத்திருக்கும்.

இந்த நேரத்தில் வாசலிலோ சாலையிலோ ஆட்கள் இல்லை. மதிய மயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கமாட்டார்கள். என் ஆபீசர் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று, மூன்றரை மணிவரை மந்த நேரம், மூளை சுறுசுறுப்பாக இருக்காது என்று சொல்லுவார்.

மாகாளி பலசரக்குக் கடை பெரிதாக இருந்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் இந்தக் கடை மூக்குப்பொடி கடையாக இருந்தது. T.A.S. ரத்தினம் பட்டணம் பொடி என்று பெரிய எழுத்தில் போர்டு இருக்கும். ஒரு வாட்டசாட்டமான வாலிபர் முறுக்கு மீசையுடன் உரலுக்கு முன் உட்கார்ந்து ஆட்டுக்கல்லைப் பிடித்துக்கொண்டு இருக்கும் பெரிய ஓவிய போர்டு மாட்டப்பட்டிருந்தது. மூக்குப்பொடி போட்டவர்கள் எங்கேதான் போனார்கள் என்று தெரியவில்லை. புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மூக்குப்பொடி மேல் ஈடுபாடு ஏற்படவில்லை.

என் அத்தை மூக்குப்பொடி போடுவாள். “சுறுசுறுப்பா இருக்கு. மூளை வேலை செய்யுது. மூக்கடைப்பு உடனே விலகியிரும்” என்பாள் அத்தை. பக்கத்தில் சென்றால் மூக்குப்பொடி நெடி அடிக்கும். மூக்குத் துவாரங்களின் வெளிப்புறத்தில் மூக்குப்பொடி ஒட்டியிருக்கும். மூக்குப்பொடி போட்டுவிட்டு மூக்கை ஒரு சிறு கைக்குட்டை போன்ற துணியால் ராவிவிடுவாள். அந்தத் துணியில் மூக்குப்பொடி ஒட்டியிருக்கும். அவள் அருகிலேயே அந்தத் துணி கிடக்கும். கையைக் கழுவிவிட்டு சமையல் செய்வாளா என்பது தெரியவில்லை. மாமா ஒருதடவை சொன்னார். “உங்க அத்தை வைக்கிற வெண்டைக்காய் புளிக்குழம்புக்கு ஈடு இணை கிடையாது.” மூக்குப்பொடி சமையலுடன் கலந்தால் ருசியாக இருக்கும் போல.

என் நண்பன் சோணைமுத்து கணக்கு வாத்தியார் கிளாஸ்லே மூக்குப்பொடி போட்டுவிட்டு தும்முவோம் என்றான். நான் விளைவுகளை அறியாமல் ஒப்புக்கொண்டேன். ஒரு பொடி மட்டை வாங்கி வந்தோம். கணக்கு வாத்தியார் உற்சாகமாகக் கிளாஸை நடத்திக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வேறு யாருக்கும் புரிந்ததா என்றும் தெரியவில்லை. சோணைமுத்து, பொடி மட்டையைப் பிரித்தான். ஒரு சிட்டிகைப் பொடியை விரல்களில் எடுத்துக்கொண்டோம். மூக்கருகே கொண்டுசென்று மூச்சை இழுத்தேன். மண்டைக்குள் சுரீர் என்றது. பெருந்தும்மல் வந்தது. தொடர்ந்து தும்மல் வந்தது. எனக்கும் மேலே சத்தமாக, அடக்கமுடியாமல் சோணைமுத்து தும்மிக்கொண்டிருந்தான். பையன்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றுதானே வாத்தியார் நினைக்கவேண்டும். அப்படித்தான் முதலில் நினைத்திருப்பார். ஆனால் இரண்டு பையன்களுக்கு ஒரே நேரத்தில் ஜலதோஷத்தில் தும்மல் வரும் என்று எப்படி நம்புவார். எங்கள் இருவரையும் வரச்சொன்னார். தும்மிக்கொண்டே வந்தோம். எங்கள் முகத்தைப் பார்த்தவருக்கு விவரம் தெரிந்துவிட்டது. அதற்குள் கணக்கு வாத்தியார் மூன்று தும்மல்கள் போட்டுவிட்டார். அவரால் பேச முடியவில்லை. அவருக்கு மேலும் தும்மல் வந்தது. எங்களை அறை வாசலில் முட்டி போடச் சொன்னார். அவர் அறைக்கு வெளியே வந்து மூக்கைச் சிந்தி முகத்தைக் கழுவிவிட்டு அறைக்குள் நுழைந்து கணக்குக் கிளாஸ் எடுத்தார். ஹெட்மாஸ்டரிம் சொல்லி, எங்கள் அப்பாக்களை ஸ்கூலுக்கு வரச்சொல்லி கேவலப்படுத்திவிட்டார் வாத்தியார். நான் அப்பாவிடமும் அடி வாங்கினேன்.

பலர் கூட்டமாக மூக்குப்பொடி வாங்கிய கடையில் ஒரு காலத்தில் கூட்டமில்லாமல் போய்விட்டது. பலசரக்குக் கடை வந்துவிட்டது. மூக்குப்பொடிக் கடை வைத்திருந்தவர், செல்வாக்காக இருந்தவர், இப்படி வீழ்ச்சி அடைவோம் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.

பருத்திப்பால் கடை வைத்திருக்கும் ரங்கண்ணன் கடை திறக்க ஆயத்தமாக இருந்தார். ஒரு தள்ளுவண்டி. வண்டியின் கீழ்த்தளத்தில் அடுப்பு. தீ எரிந்துகொண்டிருக்கும். அடுப்பின் மேலே வெண்கலப் பானை. எவர்சில்வர் மூடி. ஒரு வாளித் தண்ணீர். கிளாஸ் கழுவ உபயோகப்படும். இன்னொரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் தனியாகத் தண்ணீர் இருக்கும். எவர்சில்வர் வாளித் தண்ணீர் அழுக்கான பிறகு தண்ணீர் மாற்றிக்கொள்வார். எனக்குப் பருத்திப்பால் என்ற பெயரைக் கேட்டாலே அருவருப்பாக இருக்கும். பருத்தியிலிருந்து பஞ்சை அல்லவா எடுப்பார்கள். அந்தப் பஞ்சிலிருந்து தயார் செய்யும் துணியை அல்லவா பலவகைகளில் பயன்படுத்துகிறோம். அந்தப் பருத்தியிலிருந்து தயார் செய்யும் பாலை எப்படிக் குடிப்பது. நினைத்தாலே எனக்குக் குமட்டியது. பிறகுதான் தெரிந்தது பருத்தி விதையை ஆட்டுரலில் ஆட்டி அரைத்து செய்யப்படுவது என்று. எனக்குப் பிடிக்கவில்லை. ஜலதோஷம் பிடிக்கும்போது நெஞ்சு கபத்திற்கு நல்லது என்று அப்பா பருத்திப்பால் குடிக்கச் சொல்வார். இனிப்பாக இருந்தது. ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. சினிமா தியேட்டரில் போரடிக்கும் காட்சி வரும்போது குறைந்த விலை டிக்கெட் பகுதியிலிருந்து ‘பருத்திப்பால்’ என்று சத்தம் வரும். பருத்திப்பாலை போரடிக்கும் காட்சியுடன் இணைத்த புத்திசாலிகள் உள்ள ஊர் இது.

பெரியப்பா வீட்டை நெருங்கிவிட்டேன். வாசலில் பெரியம்மை நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் முகம் எப்போதும் சிரிப்பு உள்ள முகம். “உள்ளே வா. எப்ப வந்தே. வீட்லே எல்லோரும் நல்லா இருக்காங்களா. பக்கத்துலே இருந்தாலும் நடந்து போகச் சள்ளையா இருக்கு. உடம்பு நோவுது. உங்க பெரியப்பாவுக்கு எப்பவும் நான் கூட இருக்கணும். இருந்த எடத்தை விட்டு அசைய மாட்டேங்குறார். ஈஸிசேருலே படுத்திருக்கிறவர் கையிலே இருந்த பேப்பர் கீழே விழுந்துச்சுன்னா எடுக்கறத்துக்கு என்னைக் கூவுவார். நான்தான் போய் எடுத்து அவர் கையிலே கொடுக்கணும். ஈஸிசேரை விட்டு எந்திருச்சு எடுத்துக்கிட்டாத்தான் என்னவாம். எடுக்கமாட்டார். பேனைப் போடறதுக்கும் ஆப் பண்றதுக்கும் கூட நான்தான் போகணும்.” என்றாள்.

பெரியப்பா பின்கட்டில் உள்ள தோட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இவ்வளவு பேசமாட்டாள். நான் உள்ளே நுழைந்தேன். பின்கட்டைப் பார்த்து, “யாரு வந்திருக்கா பாருங்க. ராசாக்கண்ணு வந்துருக்கு. ஊர்லேயிருந்து லீவு போட்டு வந்திருக்கும்போல. ஊர்லேயிருந்து முறுக்கு, காரசேவு, ஜிலேபி எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கு” என்றாள்.

நான் உள்ளே நுழைந்த உடனேயே பலகாரப் பையை பெரியம்மையிடம் கொடுத்துவிட்டேன்.

நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். பின்கட்டிலிருந்து தலைப்பாக்கட்டுடன் பெரியப்பா வந்தார். “முருங்கை காய்ச்சுத் தொங்குது. நல்ல விளைச்சல் பூமி. காய்கறி, தக்காளி, மிளகாய் நல்லா வருது. எப்ப வந்தே” என்றார்.

நான், ஊருக்கு வந்த விவரம், வேலை பார்க்கும் இடம், தங்கியிருக்கிற இடம், வேலை நிலவரம் பற்றியெல்லாம் அவரிடம் சொன்னேன். பெரியம்மை உள்ளே காபி தயார் செய்துகொண்டிருந்தாள்.

ஒரு தட்டில் நான் கொண்டுவந்திருந்த காரச்சேவைப் பிரித்துக் கொஞ்சம் காரச்சேவை வைத்து, என் முன்னால் ஸ்டூலை இழுத்துப்போட்டு வைத்தாள். காபி டம்ளரையும் வைத்தாள். பெரியப்பாவிற்குத் தட்டில் நிறைய காரச்சேவு வைத்திருந்தாள். காபி டம்ளரும் பெரியதாக இருந்தது.

என் அப்பாவிற்கும் பெரியப்பாவிற்கும் சேர்ந்து ஐந்து ஏக்கர் நஞ்சை நிலம் இருந்தது. பூர்வீகச் சொத்து. பெரியப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். அப்பா கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் நிலத்தின் பக்கம் செல்வதில்லை. அறுவடை முடிந்த பிறகு பெரியப்பா, நெல் அரைத்து எங்கள் பங்காக அரிசி மூட்டைகளை வீட்டில் இறக்கிவிடுவார். அப்பாவிற்குத் தன் பாகத்தைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. ‘எல்லோருக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. பெரியவர்கள் இருக்கும்போதே சில விஷயங்களை செட்டில் செய்துவிடவேண்டும்’ என்று அவர் நினைக்கிறார். பெரியவர்கள் காலத்துக்குப்பின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. எல்லாமே குழம்பிவிடும். வெளியூரில் இருக்கும் பெரியப்பா மகன்களுக்கும் எனக்குமே ஒத்துப்போவதில்லை. தங்கைக்குத் திருமணம் செய்யவேண்டும். பெரியப்பாவிடம் ஆனந்தபவன் அரியநாயகம் அண்ணாச்சி மூலம் அப்பா சொல்லிவிட்டார். பெரியப்பா பதில் சொல்லவில்லை. இருமியதாக அப்பாவிடம் அண்ணாச்சி சொன்னார். நான் சின்னப் பையன் இதிலெல்லாம் தலையிட முடியாது. பெரியப்பாவையும் பெரியம்மாவையும் பார்க்க வந்தேன்.

சம்பிரதாயமான விஷயங்களுக்குப் பிறகு, நான் பெரியப்பாவிடம், “பெரியப்பா நீங்க ஒரு பாட்டுப் பாடணும். கேக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு” என்றேன். பூனை ஒன்று பின்கட்டிலிருந்து உள்ளே வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது.

பெரியப்பா, “என்ன பாட்டுப் பாட” என்றார்.

பெரியம்மை சிரித்துக்கொண்டே, “நீங்க பாட்டுப் பாடி பலகாலம் ஆச்சு. ‘சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி’ பாடலைப் பாடுங்கள்” என்றாள். பெரியம்மையைப் பார்த்து ஒரு காலத்தில் இந்தப் பாடலை அவர் பாடியிருப்பார் போல.

பெரியம்மையைப் பெரியப்பா பார்த்தார். பெரியம்மை வெட்கப்பட்டாள். பெரியப்பா பாடினார். ‘சித்திரம் பேசுதடி... உன் சித்திரம் பேசுதடி. எந்தன் சிந்தை மயங்குதடி...’ என்று ஆரம்பித்தார். ‘பாவை உன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி...’ என்ற இடத்திலும், ‘என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நான் அறிவேன்’ என்ற இடத்திலும் பெரியம்மை வெட்கப்பட்டாள். பெரியப்பாவும் சும்மா இருக்காமல் பெரியம்மையை நோக்கிக் கையை நீட்டி நீட்டிப் பாடினார். பாடி முடித்தார். பெரியம்மை கூச்சம் தாங்காமல், “காபி ஆறிவிட்டது. சுட வைச்சு கொண்டு வாரேன்” என்று பெரியப்பா குடிக்காமல் வைத்திருந்த காபி டம்ளரை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.

பெரியப்பா ஈஸிசேரில் சாய்ந்திருந்தார். கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்திருந்தார்.

பெரியப்பா என்னைப் பார்த்துச் சொன்னார். “தம்பி ராசாக்கண்ணு. நம்ம பூர்வீக நிலத்தை எங்க அப்பா இறந்தபின்னாலே நான்தான் உழுதுகிட்டு வாரேன். உங்க அப்பாவுக்கும் அதுலே பாதிப்பங்கு சட்டப்படி இருக்கு. அரியநாயகம் அண்ணாச்சி, உங்க அப்பா பாகம் பிரிக்க விருப்பப்படறதா சொல்றாரு. எனக்கு வேலை இல்லை. விவசாயம்தான் எனக்குத் தொழிலு. இவ்வளவு காலமும் நிலத்துலே உழைச்சுருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. வேலை பாக்கிறாங்க. உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளைக் கரையேத்தணும். உங்க அப்பாவுக்கும் பெரிய அளவுலே வருமானம் இல்லை. நிலத்தை பாகம் பிரிச்சாலும் உங்கப்பாவாலே விவசாயம் பண்ண முடியாது. வேலைக்குப் போறாரு. வேற ஆள்ட்டே விவசாயத்துக்கு புதுசா குத்தகைக்கு விட்டா பல பிரச்சினைகள் வந்து சேரும். பக்கத்துலே என் பாகம் நிலம் இருக்கும். அதனாலே நான் ஒரு யோசனை சொல்றேன். அஞ்சு ஏக்கர் நிலத்துலே ஆளுக்குப் பாதின்னா இரண்டைரை ஏக்கர் நிலம் வருது. நான் உரிமையிலே கேக்கறேன். எனக்கு அறுபது பெர்சண்ட் நிலம், அதாவது அரை ஏக்கர் கூடுதலா மூணு ஏக்கர் வரும். உங்க அப்பாவுக்கு அரை ஏக்கர் குறைவா, இரண்டு ஏக்கர் வரும். இந்த இரண்டு ஏக்கரை வெளி ஆளுக்கு வித்தா என்ன விலை போகுமோ அந்த விலை கொடுத்து நான் வாங்கிக்கறேன். அதுக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்றேன். அரை ஏக்கர் கூடுதலா எனக்கு விட்டுக்கொடுத்தது இந்த நிலத்துலே உழைச்ச மூத்தவர்ங்கிறதுனாலே கேக்கறேன். அவருக்கு அரை ஏக்கர் விட்டுத்தர சம்மதம் இல்லைன்னா ஆளுக்கு இரண்டரை ஏக்கர்னே பிரிச்சுக்குவோம். அதுக்குண்டான கிரையத் தொகையை நான் கொடுத்திர்றேன். எப்படி முடிவோ அதுக்கு ஏத்த மாதிரி வர்ற தை மாசம் பத்திரம் பதிஞ்சுக்குவோம். உங்க அப்பாகிட்டே கேட்டுச் சொல்லு.”

பெரியப்பாவிற்கு கண்கள் கலங்கிவிட்டன. பெரியம்மை சுடவைத்த காபியை வைத்துவிட்டு பெரியப்பா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ என்ன சொல்றே” என்று பெரியம்மையைப் பார்த்துக் கேட்டார். “நான் என்ன சொல்றது. நீங்க சொன்னதுக்கு மேலே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றாள் தயங்கிக்கொண்டே.

“பெரியப்பா, இன்னொரு பாட்டு” என்றேன். “என்ன பாட்டு” என்றார். பெரியம்மை, “அமுதும் தேனும் எதற்கு” என்றாள். பெரியப்பா காபியை நிதானமாகக் குடித்தார்.

பெரியப்பா பாடினார். ‘அமுதும் தேனும் எதற்கு... நீ அருகினிலே இருக்கையிலே எனக்கு...’ என்று ஆரம்பித்து பெரியம்மையை நோக்கி மீண்டும் கையை நீட்டி நீட்டிப் பாடினார்.

‘நிலவின் நிழலோ உன் வதனம்... புது நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம்...’ என்று பெரியப்பா பாடும்போது பெரியம்மை நிலைகொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு அழலானாள். பெரியப்பா பாடுவதை நிறுத்திவிட்டார்.


நான் அப்பாவிடம் பெரியப்பா நிலம் தொடர்பாகச் சொன்னதைக் கூறினேன். அப்பாவிற்குக் கண்கள் கலங்கிவிட்டன. அம்மா, “இரண்டு பேருக்கும் சம பங்குதானே. எதுக்கு அவருக்கு அரை ஏக்கர் கூடப் போகணும்” என்றாள். அப்பாவிற்குக் கோபம் வந்து அம்மாவைத் திட்டினார். “உனக்கு உலகம் தெரியாது. அவரு எனக்கு மூத்தவர். நல்லது கெட்டதுக்கு முன்னாலே நின்னவரு. எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தவரு. கரெக்டா கணக்குப் பாக்கக் கூடாது. அவருக்கு அரை ஏக்கர் விட்டுத்தரலாம். நான் ஒத்துக்கலைன்னா ஆளுக்கு இரண்டரை ஏக்கர் எடுத்துக்கலாம்னும் சொல்லியிருக்காரு. என்னைப் பெரியவர் சோதிக்கறாரா என்னன்னு எனக்குத் தெரியலை. டேய் ராசாக்கண்ணு இடையிலே வேற ஆள் வேணாம். நீயே சொல்லு. இரண்டு ஏக்கர் அப்பாவுக்குப் போதும்னு சொல்லியிரு.”

அடுத்த நாள் பெரியப்பா வயக்காட்டிற்குச் சென்றிருந்ததால் இந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு வயக்காட்டிற்குச் சென்றேன். கூழ் குடித்துக்கொண்டிருந்தார். அப்பா இரண்டு ஏக்கர் பாகம் பெற்றுக்கொண்டு அவரிடம் கிரையம் கொடுக்க விருப்பம் தெரிவித்திருப்பதாவும், தங்கச்சிக்கு தை மாசத்துலேருந்து மாப்பிள்ளை பாக்கப்போவதாகவும் சொன்னேன். பெரியப்பா சிரித்தார்.

“நான் யோசித்துப் பார்த்தேன். இந்த நிலந்தானே எனக்கு வருமானத்தைக் கொடுத்திருக்கு. கூட அரை ஏக்கர் நிலம் கேக்கறது நியாயமில்லை. அவருடைய பாகம் இரண்டரை ஏக்கருக்கும் நான் கிரயத்தொகை கொடுத்திர்றேன். நான் ஏற்கனவே சொன்னதை வைச்சு இரண்டு ஏக்கர் போதும்னு உங்க அப்பா பிடிவாதம் பிடிக்கவேண்டாம். நாளைக்கு உங்க அம்மையோட அப்பாவை வரச்சொல்லு. பத்திர எழுத்தரையும் வரச்சொல்றேன். உங்க அப்பா இரண்டரை ஏக்கர் பாக விடுதலை கொடுக்கற மாதிரியும் அதற்கான கிரயத் தொகை நான் கொடுக்கிற மாதிரியும் பேசி முடிச்சுக்குவோம்.”

பெரியப்பாவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் எனக்குக் கூட அரை ஏக்கர்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன்” என்றார்.

“என்ன பெரியப்பா. நீங்க மூத்தவரு. நல்லது கெட்டதுக்கு முன்னாலே நின்னு நடத்திக்கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு இல்லாததா” என்றேன்.

“தம்பி ராசாக்கண்ணு. நான் சொன்னதைச் சொல்லு. இதுலே தேவையில்லாம தாவா பண்ணிக்க வேணாம்.”

நான் வீட்டுக்குச் சென்று அப்பாவிடம் கூறினேன். “அப்பா இதுலே தேவையில்லாம யோசிக்காதீங்க. நாளைக்கிப் போவோம். பெரியப்பா விருப்பப்படி முடிச்சுக்குவோங்கிற வார்த்தையோட நின்னுக்குவோம். அவர்தான் தெரியாம சொல்லிட்டேங்கிறாரே.” அப்பா ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள் பழங்கள், ஸ்வீட்கள் சகிதம் பெரியப்பா வீட்டிற்குச் சென்றோம். அரை ஏக்கர் பற்றி இருவருமே பேசவில்லை. பத்திர எழுத்தர், நில விவரங்களையும் சம பாக விவரங்களையும் குறித்துக்கொண்டார். பத்திரத்தில் எழுதவுள்ள விஷயங்களைக் கூறினார். பெரியம்மையிடம் பெரியப்பா, “இப்ப உனக்கு திருப்திதானே” என்றார். பெரியம்மை ஆமோதிப்பதுபோல் சிரித்தாள்.

நான் ஊருக்கு வந்ததில் சுபமாக ஒரு வேலை முடிந்தது. தை மாசம் பத்திரப் பதிவு நடைபெற்றது. தை மாசமே தங்கைக்கு மாப்பிள்ளை அமைந்தது. பங்குனி மாசத்தில் திருமணம் நடக்க முடிவானது.

***

நன்றி: ‘உயிர்மை’, செப்டம்பர் 2023

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...

('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.) அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது . ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார் . நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன் . அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன் , அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன் . ( இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் ) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன் . அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர் , “ எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம் ! அந்த நாட்கள் மறைந்துவிட்டன . இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன் . இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் ” என்றதும் அவருட