வெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் ' முட்டைக் கண்ணா ' என்றுதான் கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை. ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா ராமலிங்கம்! போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே உன்னோடுதானே இருந்தேன் ?" என்றான். திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு , “ இல்லையே! போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே ? நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான் வந்திருந்தாய்” என்றேன். “ இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை ‘சித்திரம் '