வெகு அவசரமாக ராமநாதன் என் அறைக்குள் வந்தான். வேர்த்த முகமும் வெறித்த
பார்வையுமாக வெகு விகாரத் தோற்றமாக இருந்தான். ஆத்திரமும் அவசரமும் குழம்ப சிறிது
நேரம் பேச்சு வராதவன் போல் முறைத்து முழித்து சும்மா என்னைப் பார்த்துக்கொண்டு
நின்றான்.
இயல்பாகவே ராமநாதனுடைய கண் முழிகள் மிகவும் பெரியவை. உண்மையில் கோழி
முட்டைகளைப் பொட்டிட்டுப் புதைத்து வைத்தது போல் இருக்கும் அவன் விழிகள். அவனைப்
பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் 'முட்டைக் கண்ணா' என்றுதான்
கூப்பிடுவார்கள். அதற்காக அவன் வருத்தப்படுவதோ கோபித்துக்கொள்வதோ இல்லை.
ஏதோ தடுமாற்றத்தோடு திணறிக்கொண்டு என்முன் நின்ற அவன் சற்று தெளிந்து “ஏண்டா
ராமலிங்கம்! போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் இங்கே
உன்னோடுதானே இருந்தேன்?" என்றான்.
திகைப்படைந்த நான் சற்று சிந்தனை செய்துவிட்டு, “இல்லையே! போன ஞாயிற்றுக்கிழமை நீ இங்கு வரவே இல்லையே?
நீ சனிக்கிழமையோ வெள்ளிக்கிழமையோ தான்
வந்திருந்தாய்” என்றேன்.
“இல்லையடா. நான் சத்தியமாக ஞாயிற்றுக்கிழமைதான் இங்கே வந்து உன்னோடு எட்டு மணியிலிருந்து
பனிரண்டு மணிவரை ‘சித்திரம்', கணக்கு எல்லாம் போட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.
“இல்லையில்லை அது ஞாயிற்றுக்கிழமை அல்ல” என்றேன் நான். "நீ மறந்துபோயிட்டே
ராமலிங்கம், நான்
ஞாயிற்றுக்கிழமை தான் நிச்சயமாக வந்திருந்தேன்” என்றான். மறுபடியும் நான் மறுத்தேன்.
அவன் மறுபடியும் மறுபடியும் திருப்பித் திருப்பி அதையே சொல்லி என்னை
ஒத்துக்கொள்ளச் சொன்னான். எனக்கு 'ஒருக்கால் நம்முடைய நினைவுதான் மறதியாக இருக்கிறதோ' என்ற சந்தேகம் வந்துவிட்டது. எண்ணியெண்ணிப்
பார்த்தும் நிச்சயமாகச் சொல்லமுடியாமல், "எனக்கென்னமோ நீ ஞாயிற்றுக்கிழமை வந்ததாக..."
என்று முடிக்குமுன் ராமநாதன் “இல்லை ராமலிங்கம், சந்தேகமே வேண்டாம். நான் நிச்சயமாக போன
ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு மணிவரையில் உன்னோடுதான்
இருந்தேன்" என்று அழுத்தமாகப் பரிதாபக் குரலில் சொன்னான்.
எனக்கு அலுத்துப் போய்விட்டது. மறுபடியும் மறுத்துச் சொல்லி பேச்சை வளர்க்க
மனமில்லை. அத்துடன் அவன் ஞாயிற்றுக்கிழமை வரவேயில்லை என்று கண்டிப்பாகச்
சொல்லிவிடவும் முடியாமல் எனக்குள் சந்தேகமும் வந்து விட்டது. அதனால் ஒருக்கால்
அவன் சொல்வதே உண்மை யாக இருக்கலாமோ என்ற எண்ணமும் தோன்றி அந்த விவாதத்தை உடனே
ஒழித்துவிட நினைத்து, “சரி நீ
ஞாயிற்கிழமைதான் வந்திருந்தாய். அதற்கென்ன இப்போ?" என்றேன்.
"ஒன்றுமில்லை, யாராவது கேட்டால் நான் போன ஞாயிற்றுக்கிழமை எட்டு
மணி முதல் பனிரண்டு மணிவரையிலும் இங்கே உன்னுடன்தான் இருந்தேன் என்பதை மறந்து
போகாமல் சொல்லு" என்றான்.
அவன் எதற்காக அப்படிச் சொல்லச் சொல்லுகிறான் என்று சிந்திக்கச் சிறிதும்
அவகாசமின்றி நான், "சரி
அப்படியே சொல்கிறேன் போ, என்னைத்
தொந்தரவு செய்யாதே' என்று
சொன்னேன். உடனே அவன் வெறித்த முகம் சிரித்த குறி காட்ட, “ஆமாம் மறந்துவிடாதே" என்று சொல்லிக்கொண்டே மறைந்துவிட்டான்.
என்றுமில்லாத அக்கரையுடன் நான் அப்போது ஏதோ பாடத்தைப் படித்துக்
கொண்டிருந்தேன். வெகு விரைவில் ராமநாதன் வந்துபோனதையும் மறந்துவிட்டேன்.
ராமநாதன் வந்துபோனபின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து “செட்டியார் உன்னைக்
கூப்பிடுகிறார்” என்று சீதாராம செட்டியார் வீட்டு வேலைக்காரன் வந்து என்னை
அழைத்தான்.
சீதாராம செட்டியார் ராமநாதனுடைய தந்தை. கோயமுத்தூரில் நாங்கள் குடியிருந்த
ஆரிய வைசிய வீதியில் ஒரு பெரிய மனிதர். அவர் வீடு எங்கள் வீட்டிற்கு எதிர் வீடு.
அடிக்கடி வந்து என் தந்தையுடன் அளவளாவிக் கொண்டிருப்பார். என்னிடத்தில் வெகு
பிரியமாக இருப்பார். அடிக்கடி எனக்கு பரிசுகளும் தின்பண்டங்களும் தருவார். ஒவ்வொரு
தீபாவளிக்கும் எனக்கு ஒரு பட்டுத் துண்டும் பட்டாசுக் கட்டுகளும் தருவார்.
என் தந்தை அப்போது 'நகர
போலீஸ் இன்ஸ்பெக்டராக' வேலை
பார்த்துக் கொண்டிருந்ததால் அவருக்கு சீதாராம செட்டியார் அனுப்புகிற வேஷ்டிகள்
முதலான தீபாவளி பரிசுகள் வேறு, எனக்குத் தனியே பட்டுத் துண்டும் பட்டாசும் தன்னுடைய வீட்டுக்கே என்னைத்
தருவித்துக் கொடுப்பார். ஆனால் சீதாராம செட்டியார் ரொம்ப கோபக்காரர். எதிலும் வெகு
கண்டிப்பானவர். ராமநாதன் அவரிடத்தில் நடுங்குவான். ராமநாதன் தன் தகப்பனாரிடம்
மிகவும் பயப்படுவதற்கு வேறு சில காரணங்களும் உண்டு. என்னவெனில் ராமநாதனுக்குப்
பெற்ற தாயார் இல்லை. வீட்டில் இருப்பது அவனுடைய மாற்றாந்தாய். அந்த அம்மாளுடைய
குழந்தைகள் வேறு. குழந்தைகளுடைய சச்சரவால் அந்த அம்மாளுக்கு ராமநாதனிடத்தில் அன்பு
குறைவு. அதனால் நேர்ந்த துன்பங்களும் ராமநாதனுக்கு அநேகம். தந்தை இயல்பாகவே
கோபக்காரர் ஆனதால் ஒரு குற்றம் ஏற்பட்டு அதற்காக ராமநாதனை அவர் கடிந்துகொள்ள
நேரிட்டால் - அவனை வீட்டிற்குள் அணைத்து ஆறுதல் சொல்ல அவனைப் பெற்ற அன்னை இல்லை.
எனவே ராமநாதனுக்கு அவனுடைய தந்தையின் கோபம் என்றால் சிம்ம சொப்பனம் தான்.
சீதாராம செட்டியார் கூப்பிடுகிறார் என்ற உடன் நான் புத்தகங்களையெல்லாம்
அப்படியே போட்டுவிட்டுப் புறப்பட்டேன். ஏனெனில் ராமநாதனுக்கு அவர்
எப்படியிருந்தாலும் எனக்கு அவர் வெகு நல்லவர். அடிக்கடி பரிசுகளும் தருகிறவர்.
இப்போதும்கூட ஏதாவது கொடுக்கத்தான் கூப்பிடுகிறாரோ என்ற ஆசையும் கொஞ்சம்.
வேலைக்காரனுடன் நான் போனேன். சீதாராம செட்டியார், நான் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறமாதிரி இல்லாமல்
சிடுசிடுத்த முகமாக, கிராம
தேவதைகளின் கோயிலுக்கு முன்னால் உயரமான உருவங்கள் உட்கார்ந்திருக்குமே அதுபோல ஒரு
காலின்மேல் ஒரு காலைப் போட் டுக்கொண்டு விரைப்பாக உட்கார்ந்திருந்தார். ஒரு
பக்கத்தில் சுவர் ஓரமாக ராமநாதன் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியைப்-போல்
குழைந்து குறுகி நின்றான். வீட்டுக்குள் போகும் கதவின் ஓரத்தில் ஒண்டிக்-கொண்டு என்ன
நடக்கிறதென்று கவனிப்பதுபோல் சீதாராம செட்டியாரின் இளைய மனைவி இருந்தார்கள்.
வழக்கம் போல் நான் சீதாராம செட்டியாருக்கு முன்னால் வெகு அருகில் சென்று
நின்றேன். அவர் உடனே, "ராமலிங்கம்!
நீ மிகவும் நல்ல பையன் என்று உன்னைக் கேட்கிறேன். பொய் சொல்லக்கூடாது. உண்மையைச்
சொல்ல வேணும் தெரியுமா?" என்றார்.
"சரி" என்றேன்.
"ராமநாதன் போன ஞாயிற்றுக்கிழமை காலையில் எட்டு மணி
முதல் பனிரண்டு மணிவரைக்கும் உன்னோடவே படித்துக்கொண்டிருந்ததாகவும் வீட்டிற்குள்
வரவே யில்லையென்றும் சொல்லுகின்றான். உண்மைதானா? பொய் சொல்லக்கூடாது தெரியுமா?" என்றார்.
நான் திடுக்கிட்டுப்போனேன். இந்தக் கேள்வியை அவர் தான் என்னைக் கேட்பார்
என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. யாராவது பள்ளிக்கூடத்துப் பையன்கள்
கேட்பார்களாக்கும் என்று மட்டும் எண்ணினதுண்டு. இருந்தாலும் என்ன? யார் கேட்டாலென்ன? யாராவது கேட்டால் ஆமாம் என்று சொல்லச் சொல்லி
ராமநாதன் கேட்டுக் கொண்டான். நானும் அப்படியே சொல்லுவதாக அவனுக்கு
வாக்களித்து-விட்டேன். ஒப்பந்தமாக நண்பனுக்கு உறுதிகூறிப் போகச் சொல்லிவிட்டு
இப்போது அவனைக் கைவிடலாமா? துளிகூடத்
தயங்காமல், “ஆமாம், ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணி முதல் பனிரண்டு
மணி வரைக்கும் என்னோடுதான் கணக்கும், சித்திரமும் போட்டுக் கொண்டிருந்தான்” என்றேன். "உண்மைதானா?"
என்றார் சீதாராம செட்டியார்.
"உண்மைதான்" என்றேன்.
சீதாராம செட்டியாரின் பிகுவு கொஞ்சம் தளர்ந்தது. ராமநாதன் சற்று நிமிர்ந்து
நின்றான். சிறிது மறைவாக நின்று கொண்டிருந்த சீதாராம செட்டியாரின் மனைவி
முற்றிலும் மறைந்து விட்டார்கள்.
சீதாராம செட்டியார் அதற்குமேல் என்னை ஒன்றும் கேட்கவில்லை. சற்று நேரம் ஆழ்ந்த
சிந்தனை போல மௌனமாக இருந்துவிட்டு, பிறகு என்னைப் பார்த்து, "சரி நீ போ" என்றார். நான் விட்டது போதும் என்று வீட்டிற்குப்
போனேன்...... வீட்டிற்கு வந்தபிறகுதான் என் மனது குழப்பமடைந்து, 'என்ன சொன்னோம்? எதற்காகச் சொன்னோம்? ஏன் ராமநாதன் இப்படிச் சொல்லச் செய்தான்?' என்றெல்லாம் எண்ணத் தொடங்கி நிம்மதி
குலைந்தது. என்னென்னவோ எனக்குள்ளேயே சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு
என் அறையில் நாற்காலியில் உட்கார்ந்து மேஜையின்மேல் சாய்ந்துகொண்டிருந்தேன். சற்றே
நித்திரை வந்து கண்ணயர்ந்து போனேன்.
யாரோ என் தோளின் மேல் கையை வைத்தது தெரிந்து தூக்கம் கலைந்து திரும்பிப்
பார்த்தேன். "எங்க அப்பா திருப்பூர் போய்விட்டார். வர இரண்டு மூன்று நாளாகும்"
என்று சொல்லிக்கொண்டு ராமநாதன் அங்கே நின்றான்.
நான் எழுந்து நின்று அவனைப் பார்த்து, “என்னடா ராமநாதா! என்ன இதெல்லாம்? உண்மையோ பொய்யோ நீ சொல்லச் சொன்னதற்காக
நானும் உண்மைதான் என்றே சொல்லிவிட்டேன். என்ன நடந்தது? எதற்காக அப்படிச் சொல்லச் சொன்னாய்?" என்று கேட்டேன், அதற்கு ராமநாதன், "ராமலிங்கம், நீ இந்த உதவி செய்யா திருந்தால் என் உயிரே போயிருக்கும். அப்பா என்னைக்
கொன்றிருப்பார்" என்றான்.
“ஏன்? எதற்காக? விவரமாக நடந்ததைச் சொல்லு" என்றேன்.
“ராமலிங்கம் உன் உதவியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். ஆனால் தயவு செய்து
இப்போது அதைப்பற்றி ஒன்றும் கேட்காதே. கொஞ்ச நாள் பொறு; எல்லாம் சொல்லுகிறேன். அப்புறம் உனக்கே தெரியும்
நான் ஏன் இப்படிச் சொல்லச் சொன்னேன் என்பது” என்றான், நான் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன். அப்போது மணி
மாலை 4 இருக்கும். இருவரும்
கால் பந்து (Foot-ball) ஆடப்
போய்விட்டோம்.
இது நிகழ்ந்தது 1905-ம்
ஆண்டு கடைசியில். அப்போது நானும் ராமநாதனும் ஐந்தாவது பாரத்தில் கோயமுத்தூர்
பள்ளியில் ஒரே வகுப்புத் தோழர்கள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ராமநாதன் எனக்கு
சாதாரண ஒரு பள்ளித் தோழன்தான். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ராமநாதனுக்கு
என்மீது அளவு கடந்த அன்பு ஏற்பட்டுவிட்டது. நான் அவனிடம் காட்டும் அன்பைக்
காட்டிலும் ஆயிரம் பங்கு அதிகமாக எனக்கு அன்பும் நன்றியும் செலுத்த ஆரம்பித்துவிட்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இருவரும் நகமும் சதையும் போன்ற நண்பர்களாகி இணை
பிரியாமல் இருக்கலானோம்.
அடுத்த ஆண்டு (1906) நாங்கள்
இருவரும் ஆறாவது பாரத்துக்குப் (மெட்ரிகுலேஷன்) போனோம். என்னுடைய படிப்பில் நான்
எல்லாப் பாடங்களிலும் கெட்டிக்காரன். கணக்குப் பாடத்தில் மட்டும் வெகு மட்டம்.
கணக்கு என்பது அந்தக் காலத்தில் 'அல்ஜிப்ரா', 'ஜியாமெட்ரி',
'அரித்மெடிக்' என்ற மூன்றும் சேர்ந்தது. இந்த மூன்றிலும் சேர்ந்து 42 மார்க் வாங்கினால்தான் வகுப்பில் தேறலாம்.
எனக்கு 'அல்ஜிப்ராவில்'
ஐம்பதுக்குப் பத்து அல்லது பனிரண்டு
எண்ணிக்கை வரும். 'ஜியாமெட்ரியில்'
ஐம்பதுக்குப் பதினைந்து, சில சமயங்களில் அதற்கு மேலும் வரும்.
ஏனென்றால் ’ஜியாமெட்ரி'யில்
படங்கள் போடவேண்டும். நான் சித்திரத்தில் அந்தப் பள்ளியில் முதன்மையானவன். ஆனால்
இந்த 'அரித்மெடிக்' என்ற எண் கணக்குப் பாடத்தில் மட்டும் முழு
மோசம். ஒவ்வொரு பரீட்சையிலும் தவறாமல் 100-க்கு பூஜ்யம் அல்லது ஒன்று, ஒன்றரை எண்ணிக்கைதான் வாங்குவேன். அந்த ஒன்று, ஒன்றரையும் கூட ஆசிரியர் தர்மமாகத் தருவதுதான்.
ராமநாதனோ மற்ற எல்லா பாடங்களிலும் மட்டம். ஆனால் கணக்குப் பாடத்தில் மட்டும்
புலி. 'அல்ஜிப்ரா', ‘ஜியாமெட்ரி', 'அரித்மெடிக்' என்ற மூன்றிலும் நூற்றுக்கு நூறும் கூட
வாங்கிவிடுவான். எண் கணக்கில் மகா நிபுணன்.
இப்படி இருக்கையில் 'மெட்ரிகுலேஷன்'
பரீட்சைக்கு அனுப்பப் பையன்களைத்
தேர்ந்தெடுக்கிற பொறுக்குத்தேர்வு (Selection Examination) வந்தது. பொறுக்குத்தேர்வு என்றால் அந்தக் காலத்தில்
எங்களுக்கு யமன்போல். சர்க்கார் தேர்வுக்குப் பயப்படுவதில்லை. பொறுக்குத்
தேர்வுக்கு வெகு பயம். பள்ளிக்கூடப் படிப்பு இவ்வளவு விளையாட்டாகிவிட்ட இந்தக்
காலத்திலே கூட பொறுக்குத்தேர்வுக்குப் பயந்து மாணவர்கள் வேலை நிறுத்தம் என்றும்
சத்யாக்ரஹம் என்றும் போராடுகிறார்கள். வேலை நிறுத்தம் என்றோ சத்யாக்ரஹம் என்றோ
பேர்கூட சொல்லத் தெரியாத, சொல்ல
முடியாத அந்தக் காலத்தில் பொறுக்குத்தேர்வு எவ்வளவு அச்சமாக இருந்திருக்கும்
என்பதை எண்ணிப் பார்த்தால்தான் உணரலாம். இந்தக் காலத்திலாவது ஒரு மாணவன் ஒரு
பாடத்தில் தேறாமற் போனால் அந்தப் பாடத்திற்கு மட்டும் அடுத்த ஆண்டு தேர்வுக்குப்
போகலாம். அந்தக் காலத்தில் அப்படி முடியாது. ஒரே காலத்தில் எல்லாப் பாடங்களிலும்
தேறினால்தான் தேறமுடியும். இல்லாவிட்டால் எல்லாப் பாடங்களுக்கும் அடுத்த ஆண்டு
தேர்வு எழுதித்தான் ஆகவேண்டும். அந்த அடுத்த ஆண்டில் இந்த ஆண்டு தேறின பாடங்களில்
கூடத் தேறாமல் போய்விட நேரும்.
சரி, கதையைத் தொடர்வோம்.
அந்தப் பொறுக்குத் தேர்வு நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறபோது பள்ளிக்கூடத்தின்
ஆண்டு விழா வந்தது. அதில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு பாடத்திலும் மிகவும் கெட்டிக்கார
மாணவர்களுக்குப் பரிசு கொடுப்பார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பரிசுகள்
உண்டு. கணக்குப் பாடத்தில் தவிர மற்ற எல்லாவற்றிலும் நான் முதல் பரிசோ அல்லது
இரண்டாம் பரிசோ நிச்சயமாக வாங்குவேன். ஆங்கில பாடத்தில் அநேகமாக முதல் பரிசு
வாங்குவேன். தமிழ், ஓவியம்,
மொழிபெயர்ப்பு, கட்டுரை எழுதுதல் முதலான இன்னும் இரண்டொன்றில்
நிச்சயமாக ஒவ்வொரு ஆண்டும் முதற் பரிசு எனக்குத்தான். படிப்புப் பாடங்களைத் தவிர
‘ஜிம்னாஸ்டிக்ஸ்' என்று
சொல்லும் தேகப்பயிற்சியிலும், 'ஹை ஜம்ப்' (உயரமாகத்
தாண்டுதல்), 'லாங் ஜம்ப்'
(நீளமாகத் தாண்டுதல்), பந்தய ஓட்டங்கள் முதலான வேறு பலவற்றிலும்
தனித்தனி பரிசுகள் வழங்கப்படும். இவைகளிலும் நான் பல முதற் பரிசுகளும் சில
இரண்டாம் பரிசுகளும் பெறுவேன்.
அந்தப் பரிசு விழா அந்த ஆண்டு நடந்தது. அதில் சுமார் இருபது புத்தகங்கள் (சில
பரிசுகள் இரண்டு மூன்று புத்தகங்கள் சேர்ந்தவை) எனக்குப் பரிசாகக் கிடைத்தன. பரிசு
வழங்கினவர் ’பிரின்சிபால்' எலியட்
துரை. விழாவின் காரியஸ்தர் ஸ்ரீ C. N. கிருஷ்ணசாமி ஐயர் (துணை பிரின்சிபால்).
விழா முடிந்து கூட்டம் கலைந்தது. எனக்குக் கிடைத்த அத்தனை புத்தகங்களையும்
நானே தூக்க முடியாமல் எனக்குத் துணையாக என் நண்பர் இருவரும் என் புத்தகங்களை
எனக்காக எடுத்து வந்தார்கள். அன்றைக்கு ராமநாதன் ஊரில் இல்லை. அதனால் அவனுக்குக்
கணக்குப் பாடத்தில் முதல் பரிசாகக் கொடுக்கப்பட்ட இரண்டு புத்தகங்களையும்கூட
அவனிடம் கொடுத்துவிட நானே வாங்கிக்கொண்டேன். எல்லாப் புத்தகங்களையும் நாங்கள்
மூவரும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போக வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தோம்.
எனக்கு வந்த பரிசுகளில் மிகவும் அழகான கட்டுடன் தங்க எழுத்துக்களால் பூ வேலைகளோடு
அச்சடிக்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் பூரண காவியத் தொகுப்பு, "Complete
Works of SHAKESPEARE", என்ற
நூலையும் இன்னும் இரண்டு நூல்களையும் மட்டும் நான் எடுத்துக்கொண்டு அவ்வளவு
பரிசுகள் பெற்றுவிட்ட இளமையின் இறுமாப்புடன் மற்றவர்களுக்கு முன்னால் நடந்தேன்.
அந்தச் சமயத்தில் எதிரில் விஞ்ஞான ஆசிரியர் ஸ்ரீ T. S. வெங்கட்ரமண ஐயருடன் பேசிக்கொண்டே வந்த ஸ்ரீ சுப்பையர்
என்னைப் பார்த்தார். அவரைக் கண்டதும் மரியாதையாக நான் சற்று நின்றேன். சுப்பையர்
எங்களுக்குக் கணக்கு ஆசிரியர். வெகு கெட்டிக்காரர். இரண்டு கைகளாலும் வெகு
அழகாகவும் வேகமாகவும் எழுதுவார். இரண்டு கைகளிலும் இரண்டு சாக்கட்டித் துண்டுகளை
எடுத்துக்கொண்டு வகுப்பிலுள்ள கரும் பலகையில் ஏக காலத்தில் இரண்டு வட்டங்கள்
போடுவார். இரண்டும் ஒரே அளவான வடிவத்தில் குறையில்லாமல் இருக்கும். என்
தந்தைக்குப் பழக்கமானவர். எல்லாப் பாடங்களிலும் கெட்டிக்காரனான நான் கணக்கில்
மட்டும் பூஜ்யமாகவே இருக்கிறதில் அவருக்கு வெகு வருத்தம். நயப்படுத்தியும்
பயப்படுத்தியும் எனக்குத் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ சொல்லித்தந்து பார்த்தவர்.
எண் கணக்கு மட்டும் என்னவோ என் மண்டையில் ஏறவே இல்லை. அதனால் அவருக்கு
என்னிடத்தில் அதிக கோபம். அதனால் அவரைக் கண்டால் கூசுவேன். ஆகையினால் அவரைக்
கண்டதும் நான் சற்று வெட்கத்தோடும் அச்சத்தோடும் விலகி நின்றேன்.
நான் நின்றதும் அவரும் நின்றார். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
"இதெல்லாம் நீ வாங்கின
புத்தகங்களா? எல்லாப்
பாடத்திலும் பரிசு. கணக்கில் மட்டும் எப்பவும் 'ஸைபர்'! உனக்குப் பரிசு வாங்குகிற திமிர் ரொம்ப இருக்கு. அந்த அகங்காரத்தில் கணக்கை
மட்டும் கவனிக்கிறதே இல்லை. இதோ பார்! இந்தத் தடவை 'செலக்ஷன்' பரீட்சையில் நீ கணக்கில் நல்ல மார்க் வாங்காவிட்டால் உன்னை எங்கப்பராணை
பரீட்சைக்கு அனுப்பப் போவதில்லை," என்று சொல்லிவிட்டு அதன் பின் நிமிஷங்கூட அங்கு நிற்காமல் போய்விட்டார்.
அவர் சொன்னவற்றுள் மற்றதெல்லாம் வழக்கமாக ஒரு ஆசிரியர் மாணாக்கனுக்கு
எச்சரிக்கை செய்யும் இனத்தைச் சேர்ந்தது. ஆனால் “எங்கப்பராணை உன்னை பரீட்சைக்கு
அனுப்பப் போவதில்லை" என்று அவர் சொன்னதை நான் அப்படி நினைக்க முடியவில்லை. 'எங்கப்பராணை' என்பது ஒரு சபதம். அதைக் கேட்டவுடன் என் இறுமாப்பு
இடிந்துவிட்டது. குதூகலம் குலைந்தது. பரிசுகளெல்லாம் தரிசுகளாகத் தோன்றின. வெகு
கவலையோடு வீட்டிற்குப் போனேன்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வாவில்லை. தேர்வுக்குப் போகவேணுமென்றுதானே
அவ்வளவு பாடும். ‘செலக்ஷனே' கிடைக்காது
என்றால் எத்தனை பரிசு வாங்கித்தான் என்ன பலன்? மறுநாள் பள்ளிக்கூடம் போகக்கூட மனம் வரவில்லை. 'லீவ்' எழுதிக் கொடுத்தனுப்பிவிட்டு உணவுகூடச் சரியாக உண்ண
முடியாமல் பகல் முழுதும் படுத்துப் புரண்டுகொண்டிருந்தேன். மாலை ஐந்து மணிக்குப்
பந்தாடப் போகிற நினைப்பெடுத்தது. கொஞ்சம் காற்றாடப் போய்வந்தால் கவலை குறையுமென்று
வழக்கமாகப் பந்தாடுகிற வாலாங்குளத்திற்குப் போனேன்.
கோயமுத்தூர் ரயில்வே நிலையத்துக்கு அடுத்தாற்போல் இருக்கிற ஏரிக்கு
வாலாங்குளம் என்று பெயர். அப்போது நாங்கள் அங்கேதான் பந்தாடுவது வழக்கம்.
பந்தாட்டம் நடந்துகொண்டிருந்தது. மனதிலிருந்த கவலையினால் நான் அதில்
கலந்துகொள்ளவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வெளியில் உட்கார்ந்தேன்.
சுமார் ஆறு மணிக்கு வெளியூருக்குப் போயிருந்த ராமநாதன் அப்போதுதான் திரும்பிவந்து
என்னை வீட்டில் தேடிவிட்டு அங்கே வந்தான். நான் பந்தாடாமல் கீழே உட்கார்ந்திருப்பதைக்
கண்டு, "ஏண்டா
ராமலிங்கம்! பந்தாடாமல் உட்கார்ந்துகொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?" என்றான். "உடம்புக்கு ஒன்றுமில்லை. நீயும்
இங்கே உட்கார், சொல்கிறேன்"
என்றேன்.
அவனும் உட்கார்ந்தான். நான் பரிசுகள் வாங்கினதை யெல்லாம் சொல்லி சுப்பையர்
சொன்னதையும் சொல்லி, சுப்பையரோ
சபதம் சொல்லிவிட்டார். நானோ என்ன செய்தாலும் கணக்கில் நல்ல எண்ணிக்கை
வாங்கமுடியாது. கண்டிப்பாக எனக்கு 'செலக்ஷன்' ஆகப்போவதில்லை.
– ’செலக்ஷன்' இல்லாமல் மற்ற
எது இருந்து என்ன?' என்று
துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னேன்.
வெகு அனுதாபத்தோடு கேட்டுக்கொண்டிருந்த ராமநாதன் உடனே பதில் ஒன்றும் சொல்லாமல்
யோசனை செய்துகொண்டு சும்மா இருந்தான். - இதற்குள் இருட்டிவிட்டது.
பந்தாடிக்கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக வீடு திரும்பிப் போய்விட்டார்கள். நாங்கள்
இருவரும் இருந்த இடத்திலேயே இருந்தோம். எல்லாப் பையன்களும் போய்விட்டார்கள்,
தனிமையான பின் ராமநாதனுடைய மௌனம்
கலைந்தது. மெதுவான குரலில் சொல்லத் தொடங்கினான். "ராமலிங்கம், நான் சொல்லுகிறபடி நீ செய்வதாகச் சொன்னால்
உனக்கு நிச்சயமாக ’செலக்ஷன்' கிடைக்கும்படி
நான் செய்கிறேன்" என்றான்.
எனக்குக் கொஞ்சம் உற்சாகம் உண்டாகி, “எப்படி?" என்றேன்.
உடனே ராமநாதன், “எனக்கு,
இந்த செலக்ஷனைப் பற்றிய கவலையே இல்லை.
நான் கணக்கில் தவிர மற்றதெல்லாம் நிச்சயமாகப் 'பெயில்'தான் ஆவேன். நான் என்ன செய்தாலும் 'செலக்ஷன்' கிடைக்காது. 'ஆனால் உன் விஷயம் அப்படியல்ல, நீ எல்லாப் பாடத்திலும் கெட்டிக்காரன்.
கணக்கு ஒன்றுதான் 'பெயிலா'கும். அதற்காக உனக்கு ’செலக்ஷன்' இல்லையென்பது அநியாயம். நீ சொல்லுவதைப்
பார்த்தால் சுப்பையர் அப்படிச் செய்தாலும் செய்துவிடுவார். அதற்காக நான்
சொல்லுகிறபடி நீ செய்யவேணும்” என்றான்.
"என்ன செய்யவேணும்?" என்றேன்.
“நீ என்ன செய்யவேணும் என்பதைச் சொல்கிறேன். ஆனால் நீ 'அப்படி', 'இப்படி' என்று ஒன்றும்
நியாயம் சொல்லவராமல் தைரியமாக நான் சொல்கிறபடி செய்யவேணும். அப்படியானால்தான்
உனக்கு 'செலக்ஷன்' கிடைக்கும்” என்றான் ராமநாதன். எனக்கு
வேண்டியது ‘செலக்ஷன்’தானே. அதனால் அவன் என்ன சொன்னாலும் செய்துவிடுவது என்ற
துணிச்சல் உதித்து, “சரி,
நீ எதைச் சொன்னாலும் நீ
சொல்லுகிறபடியே செய்கிறேன்” என்றேன்.
"அப்படியானால் சத்தியம் செய்து கொடு" என்றான்.
சிறுவர்கள் வழக்கமாக சத்தியம் செய்து கொடுக்கிற விதமாக நான் ராமநாதனுடைய
உள்ளங்கையைப் பிடித்து அதில் அடித்துக் கிள்ளி “சத்தியமாக நீ சொல்லுகிறபடி
செய்கிறேன்" என்றேன். அதன்மேல் ராமநாதன் சொன்னான்:-
“‘அரித்மெடிக்’ (எண்
கணக்கு) பரீட்சையில் மட்டும் நான் சொல்லுகிறபடி நீ செய்யவேணும். மற்றப்
பரீட்சைகளில் வழக்கம்போல் நீ எழுதிக் கொடு. 'அரித்மெடிக்' பரீட்சையில் மட்டும் நீ செய்ய வேண்டியது
என்னவென்றால் உன்னால் முடிந்த வரையில் கணக்குகளைப் போட்டு சில பக்கங்களை
நிரப்பிவிட்டு மடித்துப் பெயர் எழுதும்போது மறந்துபோகாமல் ‘S. ராமநாதன்' என்று பேர் எழுதி வைத்துவிடு. நான் உனக்கு வேண்டிய
அளவு சில கணக்குகளை மட்டும் சரியாகப் போட்டு 'V. ராமலிங்கம்' என்று பேர் எழுதி வைத்துவிடுகிறேன். உனக்கு ‘செலக்ஷன்’ நிச்சயம்."
அடடா! என்ன அற்புதமான யோசனை! நான் உடனே மெய்மறந்துபோய் ராமநாதனுடைய கையைக்
குலுக்கி, அவனைக்
கட்டித்தழுவிக் கொஞ்சி, மகிழ்ந்து, கூத்தாடினேன். சரி அப்படியே செய்வது என்று
தீர்மானித்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டோம். அடுத்த ஐந்தாறு நாட்களும் அதேதான்
பேச்சும் மூச்சும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு முன்னிருந்த கவலை முற்றிலும்
மறைந்துவிட்டது. வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்குப் போவதும், படிப்பதும், பந்தாடுவதுமாக இருந்தேன். கணித ஆசிரியர் சுப்பையர் 15 நாள் விடுமுறையில் எங்கோ ஊருக்குப் போய்விட்டார்.
வேறு ஒரு ஆசிரியர் கணக்குப் பாடத்திற்கு வந்துகொண்டிருந்தார். அதனால் சுப்பையரைக்
கண்டவுடன் வரக்கூடிய அச்சமும் அகன்றுவிட்டது.
அதே சமயத்தில் ராமநாதனுடைய பாட்டன் வீட்டில் ஏதோ விசேஷம் என்று ராமநாதனும்
அடிக்கடி வெளியூருக்குப் போவதும் வருவதுமாக இருந்தான். அதனால் அவனை அடிக்கடி
சந்திப்பதும் முடியாமற் போய்விட்டது. பொறுக்குத்தேர்வும் வந்தது. அந்த ஆண்டு
கணக்குத் தேர்வு கடைசியில் வந்தது. ஏன் என்றால் சுப்பையர் ஊரிலில்லாததால் அவர்
வந்தபின்தான் கேள்வித்தாள் அச்சாகவேண்டியிருந்தது.
கணக்குத் தேர்வுக்குப் போனேன். கேள்வித்தாளை வாங்கினேன். அநேக கேள்விகள்
புரியக்கூட இல்லை. கேள்வி புரிந்த இரண்டொரு கணக்குகளுக்கும் வாய்ப்பாடு மறந்துபோய்,
கூட்டல் தவறி, கழித்தல் பிசகி, மேலும் கீழுமாக விழித்து, அந்தக் குழப்பத்தில் ராமநாதனுடன் ஒப்பந்தம் செய்ததை
முற்றிலும் மறந்துபோய்க் காகிதத்தை வழக்கம் போல மடித்து, வழக்கம் போலவே 'V. ராமலிங்கம்' என்று பேர் எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
ஊரில் இல்லாததால் என் கண்ணிற்படாமலும் மற்ற தேர்வுகளுக்கு வராமலும்
இருந்துவிட்ட ராமநாதன், அவன்
எனக்குத் தந்த ஒப்பந்தத்தை மறந்து போகாமல் அந்த கணக்குப் பரீட்சைக்கு மட்டும்
தவறாமல் வந்து என்னிடம் சொல்லியிருந்தபடி வேண்டிய அளவுக்குச் சில கணக்குகளை
மட்டும் போட்டு காகிதத்தின் மேல் 'V. ராமலிங்கம்' என்று பேர்
எழுதி வைத்துவிட்டு என்னைக்கூட பார்க்காமல் உடனே ஊருக்குப் போய்விட்டான்.
இப்படியாக நான் வாலாங்குளத்தில் ராமநாதனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை
முற்றிலும் மறந்தே போனேன்.
இந்த இடத்தில் என் தாயாரைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. என்னுடைய
தாயார் எனக்கிட்ட பெயர் 'கருப்பண்ணசாமி'
என்பது. என் தந்தை இட்ட பெயர்தான் 'ராமலிங்கம்'. இந்த கருப்பண்ணசாமி என்ற பெயரைக் குறுக்கி செல்லப்
பெயராக என் தாயார் என்னை 'சாமி'
என்றுதான் அழைப்பார்கள். எனக்கு
வினாத் தெரிந்த பின் அவர் எனக்கு அடிக்கடி சொல்லி வந்த உபதேசம் ஒன்றே ஒன்றுதான்.
அது என்னவென்றால், "சாமி!
நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால் பொய் மட்டும் சொல்லாதே! 'போக்கிரி' என்று பேர் எடுக்காதே. இந்த இரண்டைத் தவிர நீ எது செய்தாலும் பரவாயில்லை"
என்பார்கள். இந்த உபதேசம் இன்றைக்கும் என் காதில் அவர் சொன்னதுபோல் ஒலிக்கின்றது.
என் வாழ்க்கையில் நான் அதிக தவறுகளைச் செய்துவிடாமல் அடிக்கடி தடுத்து என்னை
ஆட்கொண்டது இந்த ஒரே உபதேசம்தான். என் சிறு பிராயத்தில் என் தாயார் 'தினம் தினம்' குறைந்தபட்சம் மூன்று தடவையாவது இதைச் சொல்லித்
தந்து, என்னையும் சொல்லச்
சொல்வார்கள். நான், "பொய்
சொல்லமாட்டேன். போக்கிரி என்று பேர் எடுக்கமாட்டேன்” என்று திருப்பித் திருப்பிச்
சொல்லும்படிச் செய்வார்கள்.
நான் எத்தனையோ பொய்களைச் சொல்லியிருக்கிறேன். நான் செய்த பல குற்றங்களைப்
பிறர் அறியாவிட்டாலும் என் நெஞ்சம் அறியும். இருந்தாலும் என் அன்னையின் இந்த
உபதேசம் அடிக்கடி என் நினைவுக்கு வந்து, பொய் சொல்லக்கூடாதென்று மனப்பூர்வமாக முயன்றிருக்கிறேன். எனக்குள்ள எள்ளளவு
நற்குணமும் நிலைபெற்றது, இந்த
உபதேசத்தின் நினைவினால்தான். மகாத்மா காந்தியவர்களிடத்தில் எனக்கு மட்டற்ற பிரேமை
பிறந்ததும் இந்த உபதேசத்தின் உண்மையினால்தான். இந்த ‘பொய் பேசாதே’, ‘போக்கிரி என்று பேர் எடுக்காதே’ என்ற இரண்டும்தான்
மகாத்மாவின் ‘சத்தியம்’, ‘அஹிம்சை’ என்ற இரண்டு
மந்திரங்களும் என்பது பின்னால் எனக்கு விளங்கிற்று.
இனி கதையைத் தொடர்வோம்.
நான் ராமநாதனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முற்றிலும் மறந்துவிட்டு தேர்வு
விடைத்தாளின் மேல் என் பெயரையே எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டேன். எனக்கு இந்தத்
தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்த ராமநாதன் அதை நினைப்பூட்ட ஊரிலில்லாமற் போனதும்,
பள்ளிக்கூடத்தில் இதை நினைப்பூட்ட
கணக்கு வாத்தியார் சுப்பையர் இல்லாமல் அவர் 'லீவில்' போய்விட்டதும் என் மறதிக்கு அனுகூல சந்தர்ப்பங்களாக அமைந்துவிட்டன. நான்
மறந்துவிட்டேன் என்றாலும் ராமநாதன் மறக்காமல், அந்த கணக்குத் தேர்வுக்கு மட்டும் எனக்காக வந்து,
சொல்லியிருந்தபடி விடைத்தாளின் மேல்
என் பெயரை எழுதி வைத்துவிட்டு உடனே என்னைக்கூட சந்திக்காமல் ஊருக்குப்
போய்விட்டான்.
அதனால் பரீட்சைக்குப் பிறகாவது நான் செய்துவிட்ட தவறை அறிந்துகொள்ள முடியாமற்
போய்விட்டது. பொறுக்குத்தேர்வு நடந்து நான்கு நாட்களுக்குப் பின் ஒருநாள்
சுப்பையர் வேகமாக எங்கள் வகுப்புக்குள் வந்தார். அவர் கையில் கொண்டுவந்த கணக்குத்
தேர்வு விடைகளின் கத்தையை மேஜையின் மேல் வைத்துவிட்டு, “டேய்! V. ராமலிங்கம்! இங்கே வா” என்றார். நான் எழுந்து நின்றேன். உடனே அவரிடம் போகாமல்
நான் நின்றுகொண்டிருந்ததில் அவருக்குக் கோபம் வந்து, "ஏண்டா நிற்கிறாய்? இங்கே வாடா வா. அ......யோ......க்......லே"
என்றார். எனக்குத் தேள் கொட்டிவிட்ட மாதிரி யிருந்தது, மிக்க பயத்துடன் அவர் அருகிற் சென்றேன்.
“'செலக்ஷன்' பரீட்சையில்
என்ன பித்தலாட்டம் செய்தாய்? உள்ளதைச்
சொல்லு" என்றார்.
“ஐயோ! நான் பரீட்சையில் ஒரு பித்தலாட்டமும் பண்ணவில்லை ஸார்" என்றேன்.
“ஒரு பித்தலாட்டமும் செய்யவில்லையா? உன்னை என்னமோ என்றிருந்தேன், பலே திருட்டுப் பயல் நீ, பசுமாட்டுத்
தோலைப் போர்த்துக்கொண்டிருக்கிற புலிடா நீ, பரீட்சையில் ஒரு பித்தலாட்டமும் செய்யவில்லையா? நன்றாக நினைத்துப் பார்" என்றார்.
"இல்லவே இல்லை ஸார். நான் ஒரு பித்தலாட்டமும்
செய்யவில்லை" என்று மிகவும் குழைந்து கண் கலங்கிக் கூறினேன். “டேய் உண்மையைச்
சொல்லிவிட்டால் சரி, இல்லையானால்
உனக்குக் கசையடி தண்டனை கொடுத்து இனிமேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் சேரமுடியாதபடி
செய்துவிடுவேன்" என்று உரக்கக் கத்தினார். நான் நடுங்கிவிட்டேன். “நான் ஒரு
தப்பும் செய்யவில்லையே ஸார்” என்று தொடங்கினேன். அவர் உடனே மேஜையின் மீதிருந்த
கணக்குத் தேர்வு விடைத்தாள்களின் கட்டை அவசரமாக அவிழ்த்து அதன் மேலாக இருந்த
இரண்டு விடைக் காகிதங்களைத் தம் வலது கையில் வைத்துக்கொண்டு, இடது கையை என் பக்கம் நீட்டி, ஆள்காட்டி விரலை ஆட்டிக்கொண்டு,
"ஐயோ! அடடா! ஒரு பாபமும் அறியாத
யோக்கியன் நீ. அழாமல் என்ன செய்வாய்! போக்கிரிப் பயலே! இந்தா, இந்தக் கணக்குப் பரீட்சை விடைத்தாள்கள்
கட்டில் 'V. ராமலிங்கம்'
என்று இரண்டு விடைத்தாள்கள்
இருக்கின்றனவே. அவை எப்படி வந்தன?" என்று கேட்டுக்கொண்டே அந்த இரண்டு விடைத்தாள்களையும் என்மேல் வீசினார்.
ஆம்! அப்போதுதான் எனக்கு நான் ராமநாதனோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் நினைவு
வந்தது. என் தலை சுழலத் தொடங்கிற்று, கண்கள் இருண்டன. உடல் நடுக்கமெடுத்தது. உள்ளம் துடித்தது. அவர் ”போக்கிரிப்
பயலே" என்று சொன்னவுடன் என் தாயாரின் நினைவு வந்து அவர் உருவமும் முன்னால்
தோன்றி, "சாமி, நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால் பொய்
மட்டும் பேசாதே! போக்கிரி என்று பேர் எடுக்காதே!" என்று சொல்லுவது போல் என்
காதுக்குள் ஒலித்தது. உடனே நான் ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல், "ஆமாம் ஸார், நான் மறந்தே போய்விட்டேன். நீங்கள் அன்றைக்கு,
நீ செலக்ஷன் பரீட்சையில் கணக்கில்
நல்ல மார்க் வாங்காவிட்டால் 'எங்கப்பராணை
உன்னை பரீட்சைக்கு அனுப்பப்போவதில்லை' என்று சொன்னதில் நான் மிகவும் பயந்துபோய் மிகவும் வருத்தமாய் இருந்தேன். அதை
ராமநாதனிடம் சொன்னேன். அவன் எனக்கு ஒரு யோசனை சொல்லித் தந்தான். கணக்கு பரீட்சை
விடைத்தாளின் மேல் அவனுடைய பெயரை நானும், என்னுடைய பெயரை அவனும் எழுதி வைத்துவிடுவதென்பது அந்த யோசனை. அதை நான்
ஒப்புக்கொண்டு சத்தியமும் செய்து கொடுத்திருந்தேன். அதை நான் எப்படியோ முழுக்க
மறந்துவிட்டு வழக்கம்போல் என் பெயரையே எழுதி வைத்துவிட்டேன். ஆனால் ராமநாதன் அந்த
ஒப்பந்தத்தை மறக்காமல் என் பெயரை அவனுடைய விடைத்தாளின் மேல் எழுதி
வைத்திருக்கிறான் ஸார். நான் மறந்தே போனேன். நீங்கள் என்னையும் மன்னித்து
ராமநாதனையும் மன்னிக்க வேணும் ஸார்” என்று கண்ணீர் சொட்டக் கரங்களைக் கூப்பிச்
சொல்லிக்கொண்டே அவருடைய காலில் விழுந்துவிட்டேன்.
எதிர்பாராதபடி காலில் விழுந்துவிட்ட என்னை சுப்பையர் ஒரு குழந்தையைத் தந்தை
தூக்குவதுபோல் வாரியெடுத்து, தட்டிக்கொடுத்து,
தைரியப்படுத்தி, "ராமலிங்கம்! நீ வெகு நல்ல பிள்ளை. ரொம்ப
யோக்யன் என்பதை இப்போது கண்டுகொண்டேன். நீ சொன்ன உண்மை எனக்கு ரொம்பத் திருப்தியாக
இருக்கிறது. நான் உன்னையும் மன்னிக்கிறேன். ராமநாதனையும் மன்னிக்கிறேன், உனக்கு 'செலக்ஷனும்' தருகிறேன். பயப்படாதே" என்றார். என் மனம் குளிர்ந்தது. கவலை மறைந்தது.
அதுமுதல் சுப்பையர் என்னை மிகவும் தனிப்பட்ட பிரியத்தோடு நடத்தலானார். அந்தக்
காலத்தில் அப்படி நான் ஒரு ஆசிரியர் காலில் விழுந்ததை இந்தக் காலத்தில் எண்ணிப்
பார்த்தால் மிகவும் கூச்சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்னுடைய வாழ்நாளில்
நான் அதைப்போல ஒரு நல்ல காரியத்தைச் செய்ததே இல்லை என்று என் மனம் மகிழ்கின்றது.
அதை நினைக்கும்தோறும் என் நெஞ்சம் பெருமை கொள்ளுகிறது. அந்தப் பெருமைதான் எனக்கு
என் தாயார் கொடுத்த தனம்.
கடைசியாக, இதன் வாசகர்கள்
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிற அதையும் சொல்லிவிடவேண்டும்.
அது என்னவென்றால்: ஏன் ராமநாதன் குறிப்பிட்ட அந்த ஞாயிற்றுக்கிழமையில் காலை 8 மணிமுதல் 12 மணி வரையில் என்னுடன் இருந்ததாக என்னைச் சொல்லச்
செய்தான் என்பது. அது என்ன என்பதை எனக்கே ராமநாதன் நெடுநாள் வரைக்கும்
சொல்லவில்லை. பிறகு ஒருநாள் அவனாகவே அதைச் சொல்லவேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக
ஏற்பட்டது. ஒருநாள் ராமநாதன் மிகவும் வாடின முகத்தோடு என்னிடம் வந்தான். வந்தவன்
என்னோடு ஒன்றும் சொல்லாமல் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
குறிப்பறிந்து அவனுடைய கவலைக்குக் காரணம் என்னவென்று நான் கேட்டேன். அவன்,
“என்ன ராமலிங்கம், தினம் தினம் இதே தொல்லையாக இருக்கிறது"
என்று ஆரம்பித்து தன்னுடைய மாற்றாந்தாயின் அன்பின்மையால் நேர்ந்த சில
நிகழ்ச்சிகளையும் அன்றைக்கு அப்போது நடந்த ஒரு சிறு நிகழ்ச்சியையும் சொல்லிவிட்டு
அந்தத் தொடர்ச்சியில் முன் நிகழ்ந்த 'ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணியிலிருந்து பனிரண்டு மணிவரை அவன் என்னோடுதான்
இருந்தான்' என்று சொல்லச்
சொன்ன காரணத்தையும் சொல்லிவிட்டான். அது என்னவெனில்:-
ராமநாதனுடைய சொந்தத் தாயார் வயிற்றில் அவனுடன் பிறந்த இரண்டு சகோதரிகள் உண்டு.
அவர்கள் இருவரும் தாயார் இருக்கும்போதே சீரும் சிறப்புமாகக் கலியாணம் செய்து
கொடுக்கப்பட்டு அவர்களுடைய கணவன்மார் வீட்டில் வாழ்ந்துவந்தார்கள்.
அவர்களிருவருக்கும் தாயார் இறந்த பின் முன்போல பிறந்த வீட்டுக்கு அடிக்கடி வர
ஆசையில்லாது போய்விட்டது. தகப்பனாருடைய அன்பு முற்றிலும் போய்விடவில்லை என்றாலும்
மாற்றாந்தாயின் வரவேற்பு விரும்பத்தக்கதாக அமையவில்லை. அந்த இரண்டு சகோதரிகளில்
ஒருத்தி மிக்க பணக்காரி. தந்தையிடம் எந்தவித உதவியும் நாடவேண்டிய அவசியம்
இல்லாதவள். இன்னொரு சகோதரியின் புகுந்த வீடு சில கஷ்ட நஷ்டங்களால்
ஏழ்மையடைந்துவிட்டது. அந்தச் சகோதரி மாற்றாந்தாய்க்கும் மரியாதை காட்டி சிற்சில
சமயங்களில் வந்து சிற்றன்னைக்குத் தெரியாமல் தந்தையிடம் உதவிகள் பெற்றுப்போவது
உண்டு.
அந்தச் சகோதரி கடைசியாக வந்திருந்தபோது தகப்பனாரிடம் சில உதவிகளும்
பெற்றுக்கொண்டு, தன்னுடைய
குழந்தைகளுடைய நகைகளையெல்லாம்கூட விற்றுத் தன் கணவனுடைய கடன் கஷ்டங்களைத் தீர்க்க
வேண்டி நேர்ந்துவிட்டதால், தன்
இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஏதாவது, கழுத்திலும் காதிலும் போட (இறந்துபோன) தன் தாயாருடைய நகைகளிற் சிலவற்றைக் கேட்டாள்.
அதை எப்படியோ அறிந்த மாற்றாந்தாய் அவளை மிகவும் கடிந்து அவள் அழுதுகொண்டு
போய்விடும்படிச் செய்துவிட்டாள். ராமநாதனுடைய சொந்தத் தாயாருடைய நகைகள் அனேகம்.
அந்த அம்மாள் இறந்தபின் அந்த நகைகளெல்லாம் ராமநாதனுடைய தந்தையிடமே இருந்தன. அவைகள்
பழைய மாதிரி நகைகள் என்று, இளைய
மனைவிக்கு எல்லாம் புது நகைகளே போடப்பட்டன.
மேற்சொன்னபடி அந்த ஏழைச் சகோதரி வந்துபோனபின் ராமநாதனுடைய தந்தையிடம் இருந்த
அந்த நகைகளைத் தன்னுடைய குழந்தைகளுக்குப் புது விதமாக நகைகள் செய்ய தங்கம் வேணும்
என்று மாற்றாந்தாய் தான் வாங்கி வைத்துக்கொண்டாள்.
குறித்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை எட்டுமணி சுமாருக்கு அந்த நகைகளில்
சிலவற்றை எடுத்து அவற்றை அழித்துத் தன் குழந்தைகளுக்கு நகை செய்ய மாற்றாந் தாயார்
ஆசாரியிடம் காட்டிக்கொண்டிருந்தாள். ஆசாரி அவற்றை நிறுக்கத் தராசுடன் பிறகு
வருவதாகப் போய்விட்டார். அந்த நகைகளை ஆசாரி சிறிது நேரத்தில் வருவாரே என்று அந்த
அம்மாள் மீண்டும் பெட்டியில் வைக்காமல் அறையிலுள்ள ஒரு மாடத்தில் வைத்துவிட்டுக்
குளிக்கப் போய்விட்டாள்.
எதற்காகவோ அந்த அறைக்குள் போக நேர்ந்த ராமநாதனுடைய கண்ணில் அந்த நகைகள் பட்டன.
அந்த நகைகளின் வரலாற்றை அறிந்த அவனுடைய இளம் உள்ளத்தில் உடனே தன் தாயாருடைய
நினைவும், வீட்டுக்கு வந்து
மாற்றாந்தாயால் அவமதிக்கப்பட்டு அழுதுகொண்டு போய்விட்ட சகோதரியின் நினைவும் வந்தன.
உடனே அந்த நகைகளை எடுத்துக்கொண்டு ராமநாதன் மறைந்துவிட்டான். சீக்கிரம் தராசுடன்
வருவதாகப் போன ஆசாரி பதினோரு மணிக்குத்தான் வந்தார். அம்மாள் அறைக்குள் சென்று
பார்த்தாள். மாடத்தில் நகைகள் இல்லை. வைத்த இடம் மறந்துபோச்சோ என்று வீடெல்லாம்
தேடியும் வீணாயிற்று. வீட்டில் தன் குழந்தைகளைத் தவிர ராமநாதனும், ஒரு வேலைக்காரனும், ஒரு சமையற்காரியும் உண்டு. வேலைக்காரனையும்
சமையற்காரியையும் விசாரித்ததில் அவர்கள் அந்த அறைக்குப் பக்கமாகக்கூடப் போகவில்லை
என்று சத்தியம் செய்தார்கள்.
ராமநாதன்தான் எடுத்திருக்க வேணும் என்பது அந்த அம்மாளுடைய தீர்மானம். சீதாராம
செட்டியார் ஊரில் இல்லை. ராமநாதன் சுமார் பனிரண்டு மணிக்கு வீட்டிற்குச் சாப்பிட
வந்தான். அவனைக் கேட்டதற்கு அவன் காலை 8 மணிக்கு வீட்டைவிட்டுப் போன பின் 12 மணி வரையிலும் வீட்டிற்கு வரவேயில்லை என்றும் அந்த நேரத்தில் என்னுடன்
கணக்கும் ஓவியமும் போட்டுக்கொண்டிருந்ததாகவும் சாதித்துவிட்டான். மூன்று நாள்
கழித்து சீதாராம செட்டியார் வந்தார். அவர் அன்றைக்கு வரப்போகிறார் என்பதை
அறிந்ததும் ராமநாதன் என்னிடம் வந்து அப்படிப் பேசி என்னைத் தயார் செய்துவிட்டான்.
ராமநாதன் காலை 8 மணியிலிருந்து
12 மணி வரையிலும் என்னோடுதான்
இருந்தான் என்பதற்கு நான் சாட்சியம் தந்துவிட்டேன். அதனால் சீதாராம செட்டியார் ராமநாதனைச்
சந்தேகிக்கவில்லை. அவன் தப்பினான்.
இந்தக் கதையை அவன் சொல்லி முடித்ததும், நான் “அந்த நகைகளை என்ன செய்தாய்?" என்றேன். “அந்த நகைகளையா? அவைகள் யாருக்குச் சேரவேணுமோ அவர்களுக்குத்
தந்தேன்" என்றான்.
"அது யார்?" என்றேன்.
"அழுதுகொண்டு போன என் அக்காள்” என்றான்.
"எப்போது கொடுத்தாய்?” என்றேன்.
“அவற்றைக் கொஞ்ச காலம் நண்பன் வேணுவிடம் கொடுத்துப் பத்திரப்படுத்தி
வைத்திருந்தேன். பிறகு எங்கள் தாத்தா வீட்டில் செலக்ஷன் பரீட்சைக்கு முன்னால்
நடந்த ஒரு விசேஷத்திற்கு அப்பா என்னை மட்டும் போய்வரச் சொன்னார். வேணுவும்
என்னுடன் வந்தான். அங்கே அக்காளும் வந்திருந்தாள். அந்த நகைகளை அழித்து அக்காள்
குழந்தைகளுக்கு நகை செய்கிற வரைக்கும் என் மனம் ஆறவே இல்லை. அதனால்தான் கணக்குப்
பரீட்சைக்கு மட்டும் உனக்காக வந்து எழுதிவிட்டு உடனே போய்விட்டேன்” என்றான்.
(நாமக்கல் கவிஞரின் 'தாயார் கொடுத்த தனம்' நூலில் இடம்பெற்றுள்ள தலைப்புக் கட்டுரை)
Comments
Post a Comment