Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம்.
“ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.”
“நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.”
"நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.”
கனவுகள் பல இவ்வாறிருப்பினும் பிராய்டு கூறுவது போல் அவற்றை ஆராய்ந்து பொருள் கண்டால் மன நிலையையும் கோளாறுகளையும் அறிந்துகொள்ள முடியும். கனவை ஆராய்வதற்கு விருப்பக் கருத்தியைபு முறையைக் கையாளுகிறார்கள் என்று முன்பே குறிப்பிட்டேன்.
அம்முறையைப் பின்பற்றி ஆராய்ந்த ஒரு கனவையும் அதன் பயனையும் சோதனை செய்தது போலவே கீழே தருகிறேன்:
ப. என்ற நண்பர் கண்ட கனவு: “உலாவச் சென்றுகொண்டிருந்தேன். ஒரிடத்திலே ஒரு பாம்புப் புற்று இருந்தது. ஓணான் ஒன்று பாம்பைப் பிடித்துத் தின்ன நினைத்து அந்தப் புற்றுக்குள் நுழைந்தது. நான் கொஞ்சம் தொலை போய்விட்டுத் திரும்பி அதே வழியில் வந்தேன். உள்ளே சென்ற ஓணான் வேகமாக வெளியே வந்து குதித்தது. பாம்பு அதைத் துரத்திக்கொண்டு வந்தது. என்னைத் தாண்டித் துரத்திக்கொண்டே போயிற்று. ஓணானைப் பாம்பு தன் வாயில் கவ்விக்கொண்டது.”
சோதனை:- இரவு 7½ மணிக்கு விருப்பக் கருத்தியைபு முறையில் சோதனை தொடங்குகிறது. எங்கும் நிசப்தம். அறைக்குள்ளே மங்கிய வெளிச்சம். நண்பர் ஒரு கட்டிலிலே கைகால்களை நீட்டிக்கொண்டு அமைதியாகப் படுத்திருக்கிறார், நான் தலைக்குப் பக்கத்தில் பின்புறமாக அமர்ந்திருக்கிறேன்.
“இப்பொழுது நீங்கள் கண்ட கனவில் சில பகுதிகளைப் பற்றித் தனித்தனியாக உங்களிடம் சொல்லப் போகிறேன். ஒவ்வொன்றையும் கேட்டதும் அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அதன் காரணமாக மனத்தில் என்ன என்ன தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் அப்படியே சொல்லிக்கொண்டிருங்கள். எதையும் ஒளிக்கக்கூடாது. உம்முடைய அறிவைக்கொண்டு எதையும் ஆராய்ந்து பார்க்கலாகாது. தோன்றியது தோன்றியபடியே கூற வேண்டும். எண்ணங்கள் மிக இழிந்தவைகளாக இருந்தாலும் அவற்றை மறைக்க முயல வேண்டாம். எல்லாவற்றையும் தாராளமாகச் சொல்ல வேண்டும். அவற்றைக் கொண்டுதான் உண்மையைக் காணலாம்" என்று இவ்வாறு கூறிவிட்டுக் கனவின் பகுதிகளை ஒவ்வொன்றாகக் கூறினேன். அவற்றைக் கேட்டு, ப. சொன்ன எண்ணங்களையும் கீழே தருகிறேன்.
கனவின் பகுதி 1. பாம்புப் புற்று:- "எங்கும் பாம்புப் புற்றுகள். அவற்றைப் பார்த்துக்கொண்டே நடக்கிறேன். - சிறு வயதில் பாம்புப் புற்றுக்குப் பூசை செய்வதைப் பார்த்தால் இரவில் நடக்கும்போது பாம்பிருக்குமோ என்று அஞ்சுதல் - வழியிலே ஒரு பாம்புச் சட்டை - பாம்பிருக்குமோ என மீண்டும் அச்சம் - ஒரு நாள் இரவிலே வீட்டிற்குத் தனியாக வருதல். பாம்பு வீட்டிற்குள்ளே இருந்தால், இருட்டிலே என்ன செய்வது? - தீக்குச்சியைக் கொளுத்திக்கொண்டே உள்ளே செல்லவேண்டும். முன்பு கணக்கராக இருந்தபோது எனது அறையில் ஒரு நாள் சரசரவென்று சப்தம் - வெளியே போய்விடுகிறேன் - திரும்பி வந்து பார்த்தபோது பாம்பு - மற்றவர்கள் வந்து அதை அடிக்கிருர்கள். நிலாவைப் பாம்பு விழுங்குவதாகச் சிறு வயதில் கேட்ட கதை.
கனவின் பகுதி 2. ஓணான் பாம்புப் புற்றில் நுழைதல்:- "ஓணான் அடிக்கடி என் கண்ணில் படுகிறது - சிறு வயதில் எனது நண்பர்கள் இருவருடன் விளையாடுதல் - அவர்கள் உண்டை வில்லால் ஓணானை அடித்தல் - ஓணானைக் கண்டு பயம் – அடிக்க வேண்டாமென்று நான் கண்டிப்பதுண்டு - ஓணானைப் பார்த்தால் உடம்பு சிலிர்க்கும் – அதன் உருவத்தில் ஒரு அருவருப்பு - அதனால் கடிவுண்டவர்கள் இறந்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் - நான் கணக்கராக இருந்தபோது ஒருநாள் அறையில் ஒரு ஓணான் புகுந்துகொண்டது - வெளியே துரத்த முடியவில்லை.
கனவின் பகுதி 3. பாம்பு ஓணானைத் துரத்தல்:- "இரவில் செல்லும்போது செடிகளைக் கண்டால் எட்டத் தள்ளிச் செல்வேன் - கனவு கண்ட மறுநாள் ஒரு ஓணான் என் பின்னல் குதித்து ஒடிற்று. அது மேலே விழுந்திருந்தால் கடிக்குமோ என்று ஐயம் - பாம்பு வளைந்து வளைந்து போகும் - நேராக ஓடினால் மனிதன் அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்."
கனவின் பகுதி 4. பாம்பு ஓணானை வாயில் கவ்வுதல்:- யாரோ இருவர் ஒரு மலைப்பாம்பை ஒரு கம்பில் கட்டித் தூக்கி வந்ததைச் சிறு வயதில் பார்த்த நினைவு - மலை ஏறும்போது பாம்பு வருமோ என்று அஞ்சுதல் - சிறு வயதில் திண்ணையில் படுத்திருந்தபோது கூரையில் ஏதோ ஒன்று அசைவதைக் கண்டு தாயைக் கூப்பிடுதல் - பார்த்தால் அது பாம்பு - அதை அடித்தார்கள் - மலைப்பாம்பு ஆடுமாடுகளை விழுங்குதல் - பாம்பின் வாலைப் பிடித்துச் சுற்றி அடித்தால் அது செத்துவிடும். ஓரூர் சென்று வரும்போது இருட்டி விட்டது. வழியில் பாம்பிருக்குமோ என அச்சம். பாம்பு வழியில் படுத்திருந்தது. காலடி ஓசை கேட்டு அது போய்விட்டது. புது வீட்டில் ஏழெட்டுத் தேளிருந்தன. பாம்பு வந்தால் என்ன செய்வதென்று அஞ்சுதல். சிறு வயதில் தாயுடன் படுத்திருந்தபோது படுக்கையடியில் ஒரு பாம்பு இருந்தது. அதைக் கண்டு தாய் அலறி நடுங்குதல்.”
எனது நண்பருக்கு இப்பொழுது திருமணமாகியிருக்கிறது. புது வீட்டில் தனிக்குடித்தனம் நடத்துகிறார். அந்த வீட்டிற்கு எதிராக ஒரு கழனியிருக்கிறது. பாம்பு அங்கே இருக்கலாமென ஐயம். மேலும் அவர் சில வேளைகளில் இருட்டிய பிறகு காட்டுப் பாதை வழியாக வீட்டிற்கு வரவேண்டியிருக்கிறது. அதனால் பாம்பைப் பற்றிய அச்சம் உள்ளத்திலே மேலெழுந்திருக்கிறது. சிறு வயதிலே வீட்டுக் கூரையின் மீதும், படுக்கைக்குக் கீழும் பாம்பைக் கண்டதும், கணக்கராக இருந்த காலத்தில் அறைக்குள்ளே பாம்பைக் கண்டதும் பாம்பைப்பற்றிய அச்சத்தை மறை மனத்தில் உண்டாக்கியிருக்கின்றன. இன்று பாம்பைப் பற்றிய எண்ணம் ஏற்படவே பழைய உணர்ச்சியானது மனத்தில் தோன்றியிருக்கிறது.
மேலும் தம் மனத்திலே உண்டாகும் பாம்பைப் பற்றிய அச்சத்திற்காக அவர் தாமே வெறுத்துக்கொள்கிறார். அதனால் சிறு வயதிலிருந்து அருவருத்து வந்த ஓணானாகத் தம்மையே கனவில் காண்கிறார், பாம்பை அடித்து வெற்றி கொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதில் காண்கிறது. இவ்விளக்கத்தைக் கூறியபோது நண்பர் அதைப் பெரும்பாலும் ஒப்புக்கொண்டார். வேறொரு ஊரில் இருந்த காலத்தில் பாம்புக் கனவே கண்டதில்லையென்றும் கூறினார். சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம் இதுவரை நினைவிற்கு வந்ததில்லை என்றும் சொல்லி வியப்படைந்தார்.
விருப்பக் கருத்தியைபு முறையைக் கையாண்டு நல்ல பலன் கண்டவர் சிக்மண்ட் பிராய்டு; ஆசை நிறைவேற்றத்திற்காகவே கனவுகள் எழுகின்றனவென்று அவர் கூறுகிறார். அவருடைய ஆராய்ச்சியைப் பெரிதும் போற்றினாலும் ஆட்லரும் யுங்கும் அவர் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. “கனவு என்ற வாயிலின் வழியாக மனக் கோட்டைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளின் மேற்போக்கான காட்சி நமக்குக் கிடைக்கிறது” என்று ஆட்லர் எழுதுகிறார். “ஒருவனுடைய வாழ்க்கைப் பிரச்சினையையே கனவு காட்டுகிறது” என்பது அவர் கருத்து.
உயர்வடைய வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் வாழ்க்கைப் போராட்டம் நிகழ்வதாக ஆட்லர் நம்புகிறார். கனவும் அந்நோக்கத்தை அடையும் முயற்சியை ஓவியம்போலத் தீட்டிக் காண்பிக்கிறது.
யுங் என்பவர் மறை மனத்திற்கு மற்றவர்களைவிட மிக உயர்ந்த இடம் கொடுப்பவர். மனித இனம் அடைந்துள்ள ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சிகளெல்லாம் மறை மனத்தில் பதிந்திருக்கின்றன என்பதும் அம்மறை மனத்திலிருந்தே வெளி மனம் வளர்கிற தென்பதும் அவர் கருத்து. ஆகவே அவர், “வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் குறைபாடுகள் முதலியவற்றிற்கு மறை மனம் கனவிலே ஈடு செய்ய முயலுகிறது. அவ்வாறு ஈடு செய்வதற்காக உண்டாகும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் புதிர்போல இருக்கின்றன. அவற்றை நிலைமைக்கேற்றவாறு ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.
பிராய்டு, ஆட்லர், யுங் ஆகிய மூவருடைய கருத்துக்களையும் சேர்த்துப் பார்க்கும்போது கனவைப் பற்றி ஒரு பொதுவான விளக்கம் நமக்குக் கிடைக்கும். பல கனவுகள் தொடர்பில்லாமல் தாறுமாருகவும் வேடிக்கையாகவும் இருப்பதால் கனவிற்கே பொருளில்லை என்று நாம் தள்ளிவிடக் கூடாது. “கனவு நம்முடைய வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையது; அது குறிப்பாக மன நிலையைக் காட்டுகிறதென்பதை வெகு எளிதில் மெய்ப்பித்துவிடலாம். மறைவாக மனத்துள்ளே வேலை செய்யும் எண்ணங்களை அது காண்பிக்கிறது" என்று மெக்டுகல் என்ற உளவியலறிஞர் எழுதுகிறார்.
கனவுகள் நிகழ்கின்ற காலத்திலேயும் மனம் வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆனால் விழிப்பு நிலையிற் போல அது அவ்வளவு கூர்மையாகவும் தீவிரமாகவும் வேலை செய்வதில்லை. தர்க்க முறைப்படியும் நுட்பமாகவும் அப்பொழுது எண்ணங்கள் தோன்றுவதில்லை. இவ்வாறு மனம் தனது முழு ஆற்றலுடன் வேலை செய்யாததால் அந்நிலையிலே மறை மனத்தில் அழுத்திக் கிடக்கும் எண்ணங்களும் ஆசைகளும் கனவாக வெளிப்படுகின்றன. ஆதலினால்தான் கனவுகளும் தாறுமாறாக இருக்கின்றன.
வாழ்க்கையில் நிறைவேறாத பல ஆசைகள் கனவில் நிறைவேறுகின்றன என்று கண்டோம். கனவிலே ஒரு சில வேளைகளில் எதிர்காலத்தில் நடைபெறப் போவதும் தோன்றுவதுண்டு. இறந்த கால அனுபவங்களைக் கொண்டிருப்பதோடு ஒரளவிற்கு எதிர்கால அனுபவங்களின் தோற்றத்தைக் காணும் திறமையும் மனத்திற்கு உண்டு. உலகப் போக்கையும் தனிமனித வாழ்க்கைப் போக்கையும் கவனித்தால் அவனுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சிறிது உணர முடியும். மேலும் மனத்துள் எழுந்துள்ள எண்ணங்களின்படியும் விருப்பங்களின்படியுமே எதிர்காலத்தில் செயல்களின் போக்கு அமைகின்றன. ஆதலால் அவை கனவில் எப்பொழுதாவது தோன்றுவதில் அற்புதமொன்றுமில்லை. இதைக்கொண்டு எல்லாக் கனவுகளும் மெய்யாகுமென்று எண்ணிவிடக் கூடாது. கனவைப் பற்றிய உண்மையை அறிந்த பின்னும் அவ்வாறு தவறாக எண்ணமாட்டோமல்லவா?
ஒவ்வொரு கனவையும் ஆராய்ந்து அதன் பொருளை அறியலாம். அதற்கு முக்கியமாகக் கனவு காண்பவனுடைய ஒத்துழைப்பு வேண்டும். மனத்திற்குள்ளேயே மறைத்து வைத்துள்ள செய்திகளையும் மனத்தில் உதிக்கிற எண்ணங்களையும் வெளிப்படையாகக் கூற அவன் வரவேண்டும். இல்லாவிட்டால் உண்மையை அறிவது பெரும்பாலும் முடியாது. அவ்வாறு வெளிப்படையாகக் கூறிய காலத்திலும் சில வேளைகளில் கனவின் பொருளை அறிய முடியாமற் போகலாம். அல்லது கனவிற்கு வேறு வகையான பொருள் கூறவும் இடமிருக்கலாம். “கனவின் பொருளை முழுமையாக அறிந்துவிட்டதாக யாரும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது. அதற்குக் கண்ட பொருளானது சரியானதே என்று தோன்றக் கூடியதாக இருக்கின்ற நிலையிலும் அதற்கு வேறு பொருளொன்று இருக்க முடியும்” என்று பிராய்டு கூறுகிறார். ஆட்லரும் யுங்கும் இக்கருத்தை ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆதலால் கனவுகளை ஆராயும்போது இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கனவென்பது பொருளற்ற தோற்றமல்ல. மன நிலையை ஒரு வேடிக்கையான முறையில் தீட்டிக் காண்பிக்கும் நிகழ்ச்சி அது. அவன் உண்மையை ஆராய்ந்து கண்ட பெருமை முக்கியமாக மனப் பகுப்பியலாரையே சாரும்.

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.