பொழுது புலர்ந்தது. இமயத்தின் சிகரங்களின் மேல் இளம் இருள் மூட்டம் விலகிக் கொண்டிருந்தது. பொய்கைகளில் சிவந்த தாமரை மலர்கள் விரிந்தன. கிராமத்துப் பாதையில் சேர்ந்து செல்லும் ஆயர் மகளிரின் தலையில் பால் - தயிர்க்குடங்கள் இளம் வெயிலில் பள் பளத்தன. இலுப்பை மரங்களில் மலர்கள் குலுங்கின. அங்கே வண்டுகள் ரீங்கரிப்பது அவன் செவியிலும் ஒலித்தது. வெம்மை யேறிய பகலவனின் கதிர்கள் அவன் இமைகளை உணர்த்தியதும், கண்களைக் கசக்கிக் கொண்டு அவன் எழுந்தான். தான் சிதிலமடைந்த படிக் கட்டில் கிடப்பதை உணர்ந்தான். அது குளத்தின் படித்துறை. கண் விழித்துப் பார்த்தபோது, கலவரமடைந்தான், நாம் எங்கிருந்தோம், இங்கு எப்படி வந்தோம். தீவிரமாக யோசித்தும் விளங்கவில்லை. அலுப்புத் தீர சோம்பல் முறித்தபின் எழுந்தான்; மறுபடியும் உடலை முறுக்கிச் சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டபின், படியில் நிதானமாக உட்கார்ந்தான். எதிரே இலுப்பைத் தோப்பைக் கண்டான். கூடாரங்களைக் காணவில்லை. வெறிச்சோடிக் கிடந்தது. மரத்தின் மறைவிலிருந்து ஒரு மான் விருட்டென்று ஓடியது. அணில்கள் வில்வப் பழங்களைக் கடித்துத் தின்று கொண்டிருந்தன. பச்சைக் கிளிகள் கொப்புகளிலிருந்து பற