இலங்கையிலே கொழும்பு நகரத்துப் பொருட்காட்சி சாலையிலே ஒரு சாசனக்கல் இருக்கிறது. இந்தச் சாசனக்கல் இலங்கையின் தென்கோடியில் உள்ள காலி என்னும் ஊரிலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்தக் கல் 4 அடி 9 அங்குல நீளமும், 2 அடி 6 அங்குல அகலமும், 5 அங்குலம் கனமும் உள்ளது. இதிலே தமிழ், சீனம், பாரசீகம் என்னும் மூன்று மொழிகளில் சாசனம் எழுதப்பட்டுள்ளது.
(இந்தக் கல் கண்டெடுக்கப்பட்ட வரலாறு முதலியவற்றை J.R.A.S. (C.B), Vol. Xxii, P. 129ல் காண்க. இந்தச் சாசனத்தின் மொழிபெயர்ப்பு முதலிய செய்திகளைப் பற்றி The Galile Trilingual Stone, by Mr. E. W. Perera, Spotlia Zeylanica, Vol. viii, pp. 122 f. காண்க)
சீன தேசத்துச் சக்கரவர்த்தி யுவுங்லோவின் 7ஆம் ஆண்டில் இரண்டாம் மாதத்தில் இந்தச் சாசனங்கள் எழுதப்பட்டன. யுவுங்லோ அரசன் கி.பி. 1403 இல் ஆட்சிக்கு வந்தான்.
தேனவரை நாயனாரின் புகழைக் கேள்விப்பட்ட சீனத்து அரசன், தமது தூதர்களாகிய சிங்வோ , உவிங்சுவிங் என்பவர்களின் மூலமாகச் சில பொருள்களைக் காணிக்கை யாக அனுப்பியதையும் அப்பொருள்களின் விபரத்தையும் இந்தத் தமிழ்ச் சாசனம் கூறுகிறது. சீன மொழிச் சாசனத்தில் இந்தத் தூதர்களின் பெயர்கள் ச்சிங் ஹோ என்றும் வங்ச்சிங்லீன் என்றும் கூறப்படுகின்றன.
தமிழ்ச் சாசனம் தேனவரை நாயனாரைத் தேவரை ஆழ்வார் என்றும் கூறுகிறது. தெய்வங்களை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும், பட்டாரகர் என்றும் கூறுவது தமிழ் மரபு. சீன மொழிச் சாசனம், மேற்படி சீனத்து அரசன் புத்தர் கோவிலுக்கு அளித்த காணிக்கைப் பொருள்களைக் கூறுகிறது. பாரசீக மொழிச் சாசனம் மிகவும் சிதைந்து, அழிந்து காணப்படுகிறபடியால் யாருக்குக் காணிக்கைப் பொருள் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. முகம்மதியர் சம்பந்தமான நிலையத்துக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பொருள்களைக் கூறுகின்றது என்பதில் ஐயமில்லை. தமிழ்ச் சாசனத்தில் கூறப்படுகிற காணிக்கைப் பொருள்களைப் போன்ற பொருள்களே மற்ற இரண்டு சாசனங்களிலும் குறிப்பிடப்படுகின்றன.
சிங்கள மொழியில் தேவுநுவர என்பது தேவநகரம் என்று பொருள்படும். இப்போதைய சிங்கள மொழியில் இந்நகரம் தேவுந்தர என்று வழங்கப்படுகிறது. தமிழில் தேன் வரை என்று வழங்கப்படும். போர்ச்சுகீசியர் இப்பெயரை தனவரெ என்று வழங்கினார்கள். ஆங்கிலத்தில் இப்பெயரை தொண்ட்ரா என்று வழங்குவர். இந்த நகரம் இலங்கைத்தீவின் தென்கோடியில் இருக்கிறது. இது பண்டைக் காலத்தில் பேர்போன துறைமுகப் பட்டினமாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டில், போர்ச்சுகேசியர் கொழும்பு துறைமுகம் உண்டாக்கிய பிறகு, பழைய துறைமுகப்பட்டினமாகிய தேனவரை நாளடைவில் சிறப்புக் குன்றி, சாதாரண சிறு கிராமமாக மாறிப் போயிற்று.
தேனவரைத் துறைமுகப்பட்டினம் சிறப்புற்றிருந்த காலத்தில் அக்காலத்து வியாபாரக் கப்பல்கள் இங்கு வந்து தங்கின. மிகப் பழைய காலத்தில் யவனக் கப்பல்கள் (கிரேக்க கப்பல்கள்) இங்கு வந்தன. பிற்காலத்தில் அரபியர்களும் சீனர்களும் மற்றவர்களும் இந்தத் துறைமுகத்தில் தமது வியாபாரப் பொருள்களைக் கொண்டு வந்து இறக்கியும், இங்கிருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டும் வியாபாரம் செய்தார்கள். தொன்றுதொட்டு தமிழகக் கப்பல் வியாபாரி களும் இந்நகரத்தில் வியாபாரம் செய்தனர். அன்றியும், தமிழர் பலர் இந்நகரத்தில் தங்கிக் குடியிருந்தனர். அவர்கள் இந் நகரத்திலே வருணனுக்குக் கோயில் அமைத்து வழிபட்டனர்.
தேன்வரை நகரத்தில் கோயில் கொண்டிருந்த வருணனைச் சிங்களவர் தமது மொழியில் உபுல்வன் (இது உதகபால வருணன் என்பதன் திரிபு) என்று வழங்கினார்கள். பிற்காலத்தில் உபுல்வன் என்னும் சொல் உப்பலவண்ணன், உத்பலவர்ணன் என்று பாலி மொழியிலும், வடமொழியிலும் கூறப்பட்டது. பின்னர், மாலிக்காபூர் முதலான முகம்மதியரின் படையெடுப்புக் காலத்தில், தமிழ்நாட்டுப் பார்ப்பனர் சிலர் சிங்கள அரசரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களை ஆதரித்த சிங்கள அரசர் அவர்களைத் தேவாலயங்களில் (பௌத்த ஆலயங்கள் அல்ல - இந்து தேவாலயங்கள்) பூசை செய்ய நியமித்தார்கள். நாளடைவில், காலப் போக்கில், இவர்கள் உப்பலவண்ணனை விஷ்ணுவாக மாற்றிவிட்டனர். தேனவரை நகரத்திலும் பார்ப்பனர் குடியிருந்த செய்தி சாசனங் களினால் தெரிகிறது.
தேன்வரையில் இருந்த (உபுல்வன்) உப்பலவண்ணனைப் பிற்காலத்தவர் தேனவரை ஆழ்வார் என்றும், தேனவரை நாயனார் என்றும் பெயரிட்டழைத்தனர். சிங்களவர் தேவுந்தர தேவியோ (தேவுந்தர நகரத்துத் தெய்வம்) என்று வழங்கினார்கள்.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தேனவரை நாயனார் கோயில் சீன நாடு வரையில் புகழ்பெற்றிருந்த தென்பதை இந்தச் சாசனத்தினால் அறிகிறோம். (இந்நகரத்தில் முற்காலத்தில் இருந்த வருணன் (உபுல்வன்) கோயிலைப் பற்றியும், வருணன் வழிபாட்டைப் பற்றியும் முன்னைய 'பொழில் களில் கூறியுள்ளேன்[1])
1. ஸ்வ ஸ்தி )..............
2 இரா சாதி ராச பரமேசுரன் பூர்ண சந்திரப் பிரகாசன் சீனத்தில்
3. மஹா இராசா இலங்காராச்சியத்தில் நாயினார் தேவரை
4. நாயினார்க்குத் திருமுன் காணிக்கையாக நாயினார் பிரகா
5.சங்கேட்டு தூதர் சிங்வோ உவிங்சுயிங்ங்கையின்
6. லே வரக்காட்டினது இப்பாசிதம் கேட்ப்பது இ
7. ந்தப் புவனத்திலுண்டான பிராணிகளெல்லாம் நாயி
8. னார் கிருபையினாலே சுகமே பரிபாலியா நின்றது ஆங்கு வரும்
9. கிற ரோங்கும் மனித்தரும் தேவரை நாயனார் திரு அரு
10. ளத்தால் ஒழிந்தாண்டரையேயாள் நின்றது இப்படியை
11. த் தேனவரை ஆழ்வார்க்கு காணிக்கை ஆக காட்டினது
12. ஆகப்படி பொன் வெள்ளி துலுக்கி பட்டு சந்தனம்
13. எண்ணைக் காப்புப் பல காணிக்கைக்கு வகை பொன் ஆயிரம் க
14. ழஞ்சு வெள்ளி அய்ஞ்சாயிரக் கழஞ்சு பல நிறத் துலுக்கி அய்ம்ப து பல
15. நிறப் பட்டு அய்ம்பது பொன் எழுத்து (காசதாரத் தூசஞ் சுவடு நாலு
16. ந்த சுவடு இரண்டு நீலத் தூசஞ் சுவடு இரண்டு பழஞ் செப்பு சிவ தூபம் இ
17. டுகிற செப்புப் பாத்திரம் அஞ்சு பூக்குத்துகிற செப்புக்
18. கெண்டி பத்து கறிக்கால் பத்து குத்து விளக்கிச் சாவான்
அஞ்சு கறி
19. க்கால் அஞ்சு மரத்தாலே பொன் பூசின தாமரைப்பூ சுவடு ஆறு
20. அகில் வைக்கிற பொன் பூசின செப்பு அஞ்சு மெழுகுதிரி சுவடு பத்து
21. எண்ணை இரண்டாயிரத்து அஞ்ஞறு கட்டி சந்தன முறி
22. பத்து ஆக இவ்விசைப் படியாலுள்ளது ..... நாயினார்
23. தேனவரை நாயினார்க்கு திரு முக்காணிக்கையாகக் குடுக்கவும்
24. யுங்லொக்கு யாண்டு ஏழா யிரண்டா (ம்ம) டி
Epigraphia Zeylanica, Vol. iii
குறிப்பு: 6 ஆம் வரி 'இப்பாசிதம் கேட்பது என்பதில் பாசிதம் என்பது பாஷிதம் என்னும் சொல்லின் திரிபு. 8, 9 ஆம் வரி வருகிற ரோங்கும்' என்பதை 'வருகிறவரோங்கும்' என்று வாசிக்கவும். 12, 14 ஆம் வரிகளில் வருகிற 'துலுக்கி' என்பது பட்டுத்துணியைக் குறிக்கிறது போலும். 13, 21ஆம் வரிகளில் வரும் 'எண்ணை ' என்பதை, 'எண்ணெய்' என்று வாசிக்கவும். 15 ஆம் வரியில் 'தூசம்', என்பது துவசம் என்பதன் திரிபு போலும். துவசம் = கொடி. மேற்படி வரியில் 'சுவடு' என்பது இரட்டை எனப் பொருளுள்ள சோடி என்பதன் திரிபாக இருக்கலாம். 21ஆம் வரி இரண்டாயிரத்து அஞ்ஞறு கட்டி என்று வாசிக்கவும். கட்டி என்பது முகத்தல் அளவை. சீன நாட்டுச் சொல்லாகிய 'சட்டிஸ்' என்பதன் திரிபுபோலும். சந்தன முறி = சந்தன மரத்துண்டு.
அடிக்குறிப்பு
[1] வருணன் வணக்கம், தமிழ்ப்பொழில், துணர்-34, மலர் -4 & 5, 1958.
-
தமிழ்ப் பொழில், துணர் 34, மலர் 11, பிப்ரவரி - மார்ச், 1959
Comments
Post a Comment