Skip to main content

Posts

Showing posts from April, 2020

கிராமதானத்திற்கு உகந்த தமிழ்நாடு | வினோபா பாவே

தமிழ்நாட்டில் பாபாவின் யாத்திரை ஒன்றே முக்கால் மாதமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. ஊழியர்களுக்கு ஒருமுறை என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன். ஏனெனில் உங்களுடைய ஒத்துழைப்பும், உதவியுமில்லாமல் பூதான இயக்கப் பணி இங்கே நடைபெற முடியாது. திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திலும் தமிழகத்தில் நடைபெறுகின்ற செயல் சமக்கிரகமாகவும், பரிபூரணமாகவும் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளேன். சமக்கிரக என்று சொன்னால் பூதான இயக்கத்தோடு எல்லா நிர்மாணப் பணிகளையும் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். தமிழகத்தில் எந்த அளவிற்குக் காரியம் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் செய்யவேண்டும். தெலுங்கானாவில் பூதான உதயம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கம் தெலுங்கானாவில் தோன்றியது என்பதை அறிவீர்கள். இயக்கம் ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணமோ, சங்கல்பமோ அதற்கு முன்னால் இதயத்தில் தோன்றவேயில்லை. தெலுங்கானாவில் காணப்பட்ட நிலையில், அச்சூழ்நிலையில் பூமிதான இயக்கம் இயற்கையாகவே தோன்றியது. இரு கிராமத்திலுள்ள நிலமில்லாத மக்களுக்கு 80 ஏக்கரா வேண்டுமென்று கேட்டேன். ஒருவர் முன்வந்து 100 ஏக்கரா தானம் தந்தார். அந்தச் சம்பவம் எனக்குச் சிறிய விஷயமாக…

பூதானமும் ஆதாரக் கல்வியும் | மு. அருணாசலம்

முந்தைய பகுதி: வினோபாவும் துப்புரவும் 1957இல் வினோபா அவர்கள் தஞ்சைக்குப் பூதான யாத்திரையாக வந்தபோது, ஒருநாள் காலையில் சென்று பார்த்தேன். (பார்த்த நாள் 23-1-57) கூட்டம் அதிகமாக இருந்தபடியால் சற்றுத் தூரத்திலேயே இருந்தேன். சர்வோதயம் ராமசாமி அவர்கள், “அருணாசலம் வந்திருக்கிறார்” என்று அறிவித்தார். வினோபா அருகில் வரும்படி சொல்லவே, சென்றேன். காது அவருக்குக் கொஞ்சம் கேட்கவில்லை. “எந்த அருணாசலம்? மூனாவா?” என்று கேட்டார். “ஆம்” என்று சொன்னேன். அதற்கு முன் அவரோடு அதிகம் நெருங்கிப் பேசிப் பழகியிருந்தும், பத்து ஆண்டுகளுக்கு அதிகமாய்க் கடந்துவிட்டன. இருந்துங்கூட, அவர் என்னை ஞாபகம் வைத்திருந்து ‘மூனா’ என்று அடையாளம் குறிப்பிட்டது மாத்திரமல்லாமல், 1945-46 ஆண்டுகளில் நான் பவுனார் சென்று அவருக்குக் கம்பராமாயணப் பகுதிகளைப் படித்துக் காட்டியதை நினைவுபடுத்திக்கொண்டு, “நன்றாக ஞாபகமிருக்கிறது” என்றார். அடுத்து, இயல்பாக டி.கே.சி. அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. சென்னையில் ஒரு சமயம் டி.கே.சி. அவர்களைத் தாம் சந்தித்துப் பேசியதைப் பற்றி அப்போது குறிப்பட்டார். குறிப்பிட்ட சம்பவம் மிகவும் சுவையுடையது. அப்போது சில …

வினோபாவும் துப்புரவும் | மு. அருணாசலம்

முந்தைய பகுதி: வினோபாவும் தமிழும் 1946ஆம் ஆண்டில் பவுனாரில் ஜம்னாலால் பஜாஜின் இடமாகிய ‘பரந்தாம்’ என்ற மாளிகையில் வினோபா தங்கியிருந்தார். அக்காலத்தில் அவர் ஈடுபட்டிருந்த முக்கிய வேலைகள் மூன்று: முதலாவது, மாணாக்கருக்கு வடமொழி கற்பித்தல், தாம் பிற மொழிகள் கற்றல், ஆராய்தல்; இரண்டாவது, கிராமங்களில் வாழ்ந்த ஏழை மக்களிடையே துப்புரவு, சுகாதாரத்துக்கான பழக்க வழக்கங்களை உண்டாக்குதல்; மூன்றாவது, நூற்றல் தொழிலில் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பயன்படக்கூடிய ஆராய்ச்சி செய்தல். அவ்வாண்டு சேவாகிராமத்திலிருந்து நான் பவுனார் சென்று அவரைப் பார்த்தபோது, பிந்திய இரண்டு அம்சங்களையும் நன்கு எடுத்துக்காட்டவல்ல சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 1946ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி இரண்டு நண்பர்களுடன் பவுனார் சென்றேன். ஐந்து மைல் தூரம். வயல், வரப்பு, முட்புதர், சப்பாத்திக்கள்ளி காரை இண்டஞ்செடி - இந்தப் பாதைதான். எவ்விதச் சாலையும் இல்லை. ஆனால் வழிநெடுகிலும் கொய்யாத் தோட்டங்களில் பெரிய பழங்கள் பழுத்து உதிர்ந்திருந்தன. வேலியடைப்பு பெரும்பாலும் காணப்படவில்லை. தோட்டத்தினுள் நுழைந்தால், தோட்டக்காரனே வந்து, நமக்குத் தின்பத…

வினோபாவும் தமிழும் | மு. அருணாசலம்

சேவாகிராமத்துக்கு அருகிலுள்ள பவுனார் என்ற சிற்றூரில் ஒரு தனி வீட்டில் வினோபா வாழ்ந்துவருகிறார். இந்திய நாட்டின் பாஷைகள் பலவற்றைக் கற்பதும், தம்முடன் வசிக்கும் ஊழியர் சிலருக்குச் சம்ஸ்கிருத மொழி கற்பிப்பதும், நூல் நூற்பது பற்றித் தக்கிளியிலும், ராட்டையிலும் பலவகை ஆராய்ச்சிகள் நடத்துவதுமே அவருக்கு இப்பொழுது பொழுதுபோக்கு. வினோபா பாவேயின் பெயர், 1940ஆம் வருஷம் காந்தியடிகள் சர்க்காரின் யுத்தக் கொள்கையை எதிர்க்கும் முகத்தால் தொடங்கிய தனிப்பட்டோர் சத்தியாக்கிரக இயக்கத்தால்தான் இந்நாட்டுக்கே முதன்முதலில் தெரியவந்தது. முதல் சத்தியாக்கிரகியாக, காந்தியடிகள் இவரையே அனுப்பினார். நெடுங்காலம் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திலும், சேவாகிராம் ஆசிரமத்திலும் வாழ்ந்து, சத்தியம், அஹிம்சை என்ற தத்துவங்களில் பூரணமாய் இவர் தோய்ந்திருந்தார். பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரப் பிராமணரான வினோபா, தம் தாய்மொழியான மராத்தி மொழியில் புலமை மிக்க பண்டிதர். தாம் எழுதிய நூல்கள் யாவும் மராத்தியில்தான் எழுதினார். காசி சென்று சம்ஸ்கிருதம் பயின்றார். அவருடைய கல்வியின் ஆழத்தையும், வாழ்க்கையின் எளிமையையும், உள்ளத்தின் சீல…

காந்தி சிகரெட்டுகள்!

என் பெயர் எத்தனையோ காரியங்களுக்கெல்லாம் துஷ்பிரயோகஞ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் என் பெயரை சிகரெட்டுகளுடன் சம்பந்தப்படுத்தியிருப்பதைப் போன்ற அக்கிரமமானதும், என்னை அவமதிப்பதுமானகாரியம் வேறு எதையும் நான் கண்டதில்லை. என்னுடைய படம் அடங்கியதான ஒரு 'லேபிளை' ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருக்கிறார். அந்தச் சிகரெட்டுக்கு 'மகாத்மா காந்தி சிகரெட்டுகள்' என்று பெயர். மதுபானங்களை நான் எவ்வளவு கடுமையாக வெறுக்கிறேனோ அவ்வளவுக்குப் புகை பிடிப்பதையும் நான் வெறுக்கிறேன். புகை பிடிப்பது ஒரு தீய செய்கை என்று நான் கருதுகிறேன். அது ஒருவரின் மனச்சாட்சியையே கொன்றுவிடுகிறது. வெளிக்குத் தெரியாமலேயே அது வேலை செய்துவிடுவதால் எப்பொழுதும் அது குடியையும் விட மிகவும் மோசமானதாகும். இப்பழக்கம் ஒருவரைப் பிடித்துக்கொண்டுவிடுமானால் பிறகு அதை விடுவது என்பது மிகவும் கஷ்டமானது. மேலும் அது அதிகப் பணத்தை நஷ்டப்படுத்தும் கெட்டப் பழக்கம். நமது மூச்சையும் அது கெட்ட நாற்றம் அடிக்கச் செய்கிறது. பல்லின் நிறத்தையும் மாற்றிவிடுவதோடு சில சமயங்களில் புற்றுநோயையும் உண்டாக்குகிறது. அது ஓர் ஆபாசமான பழக்கம். சிகரெட்டுகளுடன் என…

எரிப்பிறவி | காகா காலேல்கர்

(காந்தி எழுதிய ஆசிரம வாழ்க்கை வரலாறு நூலுக்கு காகா காலேல்கர் எழுதிய முன்னுரை.) (1) பாபூ அவர்கள் சிறை சென்ற ஒவ்வொரு சமயத்திலும் நாங்கள் அவரிடம் ஏதேனும் எழுதும்படி கோருவது வழக்கம். ஒரு சமயம் நான் அவரிடம் ஒரு தார்மீக வாசக மாலை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். அதற்குப் பதிலாக அவர் 13 பாடங்கள் கொண்ட பாலசிட்சையொன்று தயாரித்துத் தந்தார். ஆனால் அதற்குக் காரணமாயிருந்த கருத்தை விளக்கி, “இந்தக் கருத்து ஏற்கப்படுமானால்தான் இந்த பாலசிட்சையை அச்சிடலாம்” என்றார். பாபூவின் கருத்து மிகவும் புரட்சிகரமானதாயிருந்ததால் எங்களில் எவராலும் அதை ஏற்கக் கூடவில்லை. ஆகவே அந்த பாலசிட்சை நாளது வரையில் அச்சாகாமலே இருந்துவிட்டது . மற்றொரு சமயத்தில் நான் அவரிடம், “நீங்கள் ‘சத்திய சோதனை’ எழுதியிருக்கிறீர்கள். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக வரலாறும் எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது எங்களுக்கு சத்தியாக்கிரக ஆசிரமத்தின் வரலாறு எழுதிக்கொடுங்கள். நீங்கள் யாத்திரை செய்து செய்து சிரத்தையின் மூலதனம் செலவழிந்து போகும்போது மீண்டும் தூண்டுதல் பெறுவதற்காக ஆசிரமத்திற்கு வருவதாகப் பலமுறை சொல்லியிருக்கிறீர்கள், ஆசிரமவாசிகளாகிய எங்களிடமி…