என்
பெயர் எத்தனையோ காரியங்களுக்கெல்லாம் துஷ்பிரயோகஞ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்
என் பெயரை சிகரெட்டுகளுடன் சம்பந்தப்படுத்தியிருப்பதைப் போன்ற அக்கிரமமானதும்,
என்னை அவமதிப்பதுமான
காரியம் வேறு எதையும் நான் கண்டதில்லை. என்னுடைய படம் அடங்கியதான ஒரு 'லேபிளை' ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருக்கிறார்.
அந்தச் சிகரெட்டுக்கு 'மகாத்மா காந்தி சிகரெட்டுகள்' என்று பெயர். மதுபானங்களை நான் எவ்வளவு கடுமையாக வெறுக்கிறேனோ
அவ்வளவுக்குப் புகை பிடிப்பதையும் நான் வெறுக்கிறேன். புகை பிடிப்பது ஒரு தீய
செய்கை என்று நான் கருதுகிறேன். அது ஒருவரின் மனச்சாட்சியையே கொன்றுவிடுகிறது.
வெளிக்குத் தெரியாமலேயே அது வேலை செய்துவிடுவதால் எப்பொழுதும் அது குடியையும் விட
மிகவும் மோசமானதாகும். இப்பழக்கம் ஒருவரைப் பிடித்துக்கொண்டுவிடுமானால் பிறகு அதை
விடுவது என்பது மிகவும் கஷ்டமானது. மேலும் அது அதிகப் பணத்தை நஷ்டப்படுத்தும்
கெட்டப் பழக்கம். நமது மூச்சையும் அது கெட்ட நாற்றம் அடிக்கச் செய்கிறது. பல்லின்
நிறத்தையும் மாற்றிவிடுவதோடு சில சமயங்களில் புற்றுநோயையும் உண்டாக்குகிறது. அது
ஓர் ஆபாசமான பழக்கம். சிகரெட்டுகளுடன் என் பெயரைச் சம்பந்தப்படுத்த என் அனுமதியை யாரும்
பெறவும் இல்லை. அந்தச் சிகரெட்டைத் தயாரித்திருக்கும் பெயர் தெரியாத ஸ்தாபனம்,
அந்த லேபிள்களை மார்க்கெட்டிலிருந்து வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டால்
அல்லது அத்தகைய லேபிள்களைக் கொண்ட சிகரெட்டுகளை வாங்கப் பொதுமக்கள்
மறுத்துவிட்டால் நான் நன்றியறிதல் உள்ளவனாவேன்.
- 'எங் இந்தியா'- 12-1-1921
Comments
Post a Comment