நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு