Photo | National Gandhi Museum மகாத்மாஜி கரூரில் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நான் கரூர் போய்ச்சேர்ந்தேன். கரூரிலிருந்து ஈரோடு முதலிய இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு வேண்டிய கார்களுடன் சென்றிருந்தேன். நான் போய்ச்சேர்ந்த கொஞ்ச நேரத்தில் காந்தியடிகள் வந்துசேர்ந்தார். அவர் வந்துசேர்ந்ததும் நேராகத் தம் அறைக்குச் சென்றார். குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாதாரணமாக அவர் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் மற்றவர்களைப் பார்ப்பது வழக்கம். அவர் வந்தவுடனே நான் வந்து காத்துக்கொண்டிருப்பதாக அவருக்குச் செய்தி போயிற்று. அதைக் கேட்டதும் , “ உடனே அவிநாசியைக் கூப்பிடு ” என்று சொல்லியனுப்பினார். நான் சென்றேன். சாதாரணமாக மகாத்மாஜி புன்சிரிப்புடன் எல்லோரையும் வரவேற்பார். அதோடு நகைச்சுவையும் கலந்திருக்கும். அவரைச் சென்று காண்பதே ஓர் இன்பம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். ஆனால் , இச்சமயம் அவர் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது. சாதாரணமாக இருக்கும் புன்சிரிப்பு இல்லை. அந்த நகைச்சுவையும் காணப்படவில்லை. நான் சென்று அவர் எதிரே உட்கா