Photo | National Gandhi Museum |
மகாத்மாஜி கரூரில் வந்து சேருவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே நான் கரூர் போய்ச்சேர்ந்தேன். கரூரிலிருந்து ஈரோடு முதலிய இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு வேண்டிய கார்களுடன் சென்றிருந்தேன். நான் போய்ச்சேர்ந்த கொஞ்ச நேரத்தில் காந்தியடிகள் வந்துசேர்ந்தார். அவர் வந்துசேர்ந்ததும் நேராகத் தம் அறைக்குச் சென்றார். குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாதாரணமாக அவர் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகுதான் மற்றவர்களைப் பார்ப்பது வழக்கம். அவர் வந்தவுடனே நான் வந்து காத்துக்கொண்டிருப்பதாக அவருக்குச் செய்தி போயிற்று. அதைக் கேட்டதும், “உடனே அவிநாசியைக் கூப்பிடு” என்று சொல்லியனுப்பினார்.
நான் சென்றேன். சாதாரணமாக மகாத்மாஜி புன்சிரிப்புடன் எல்லோரையும் வரவேற்பார். அதோடு நகைச்சுவையும் கலந்திருக்கும். அவரைச் சென்று காண்பதே ஓர் இன்பம். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். ஆனால், இச்சமயம் அவர் முகம் கொஞ்சம் கடுமையாக இருந்தது. சாதாரணமாக இருக்கும் புன்சிரிப்பு இல்லை. அந்த நகைச்சுவையும் காணப்படவில்லை. நான் சென்று அவர் எதிரே உட்கார்ந்ததும், “அவிநாசி, நீயும் இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டார். அதைக் கேட்டதும் திடுக்கிட்டேன். நான் என்ன தவறு செய்தேனென்று எனக்குப் புரியவில்லை. அவருடைய கடுமையான தோற்றம் என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. பயபக்தியுடன், "நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லையே'' என்று சொன்னேன்.
அதற்கு அவர், "அன்று நாடகத்திற்கு என்னிடம் ரூ.1500-க்கு செக் கொடுத்தாய் அல்லவா?" என்று கேட்டார். நான், "ஆம்" என்றேன்.
அதற்கு அவர், “பாங்கில் கொடுக்கப்பட்டவுடனே செலாவணியாகவில்லை என்பது உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
அதைச் சொன்னவுடனே எனக்கு விஷயங்கள் நினைவுக்கு வந்தன. நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியார் மகாத்மா காந்தியடிகள் பால் பக்தி கொண்டவர்கள். நாடகத்திற்கு மகாத்மாஜியை அழைத்துவர வேண்டுமென்று அவர்கள் விரும்பியிருந்தார்கள். அப்படி வருவதானால் ஹரிஜன நிதிக்கு ரூ.1500 கொடுப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ரூ.1500-க்கு அதிகமாகவே அன்று நாடகத்திற்கு வசூலாகுமென்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், பொதுக்கூட்டம் நடந்த அன்றிரவே நாடகம் நடந்தபடியால் லட்சக்கணக்கான பேர்கள் கூடியிருந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் இருந்த மக்கள் தங்கள் வீடு செல்லவே இரவு ஒன்பது அல்லது பத்து மணி ஆகியிருக்க வேண்டும். ஆகையால் நாடகக் கம்பெனியார் எதிர்பார்த்திருந்தபடி அதிகமான பேர் நாடகத்திற்கு வரவில்லை. எனவே, அவர்கள் எதிர்பார்த்த வசூலும் ஆகவில்லை. சுமார் ரூ. 1000 தான் வந்தது. அதைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து, ''தயவுசெய்து தாங்கள் மீதத்தையும் சேர்த்துக் கொடுத்துவிடுங்கள். பின்னால் வசதி வரும்போது அதைத் திருப்பிக் கொடுக்க முயலுகிறோம்'' என்று உரைத்தார்கள்.
மகாத்மாஜிக்கு அவர்கள் சார்பில் நான் முன்னமே வாக்களித்திருந்தேன். எனவே, எப்படியும் மகாத்மாஜிக்கு ரூ.1500 கொடுக்கவேண்டியிருந்தது. வசூலாகும் பொதுப்பணங்களை என் கையில் நான் வைத்துக்கொள்ளும் பழக்கம் கிடையாது. பாங்கில் அந்த அந்தக் கணக்கில் அவ்வப்போது போட்டுவிடுவதுதான் வழக்கம். மகாத்மாஜிக்கு அளிக்கவிருக்கும் ஹரிஜன நிதி தாற்காலிகமாக ஏற்பட்டதாகையால் பாங்கில் அதற்குக் கணக்கு வைக்கவில்லை. வந்த செக்குகளை வசூல் செய்து அனுப்ப மகாத்மாஜி அவைகளை ஒரு நண்பரிடம் கொடுத்திருக்கிறார். அச்சமயம் கோவை ஜில்லா அர்பன் பாங்கில் என் பெயரில் ஒரு கணக்கு இருந்தது. ஆதலால் அந்தக் கணக்கில் காந்தி நிதிக்கு வசூலாகும் பணம் அத்தனையும் போடப்பட்டிருந்தது. அவர்கள் கொடுத்த ஆயிர ரூபாயையும் உடனே பாங்குக்கு அனுப்பிவிட்டேன். அவர்களுக்காகக் கொடுக்க வேண்டிய தொகைக்காக என் சகோதரரிடம் சொல்லி ரூ.500/- ஐ உடனே பாங்கில் கட்டும்படி சொல்லிவிட்டு, ரூ.1500-க்கு ஒரு செக் எழுதி மகாத்மாஜியிடம் கொடுத்துவிட்டு, ஊரை விட்டு அவருடன் சுற்றுப்பிரயாணம் செய்யக் கிளம்பிவிட்டேன். செக்கை காலையில் சுமார் 11 மணிக்குப் பாங்குக்குக் கொண்டு போயிருக்கிறார். கணக்கில் போதுமான பணம் இல்லாதபடியால் ஒரு மணிநேரம் கழித்து வரும்படி பாங்குக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் முன்னமேயே சொல்லியிருந்தபடி என்னுடைய சகோதரர் அந்த நேரத்திற்குள் அந்தப் பணத்தைக் கணக்கில் கட்டியிருக்கிறார். செக்குக்குப் பணமும் பெற்றுச் சென்றார்கள். செக்கைக் கொண்டுபோனதும், பாங்குக்காரர்கள் ஒரு மணிநேரம் கழித்து வரச்சொன்னதையும், பிறகு சென்று பணம் பெற்று வந்ததையும் அந்த நண்பர் மகாத்மாஜிக்குத் தெரிவித்திருக்கிறார். இதுதான் விஷயம். இவ்விஷயங்களையெல்லாம் மகாத்மாஜிக்கு எடுத்துரைத்தேன்.
மகாத்மாஜி சொன்னார்: ''மகத்தான தவறு ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், பொதுப்பணம் எதையும் ஒரு தனிப்பட்ட கணக்கில் போடக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? உன்னைப் போன்ற ஊழியர்கள் இதுமாதிரி விஷயங்களில் சர்வ ஜாக்கிரதையாக இருப்பதுடன் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். இவ்விஷயத்தில் தவறு ஒன்றும் நேரவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அத்துடன் நீயே ரூ. 500 அதிகமாகக் கொடுத்திருக்கிறாய் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால், நீ செய்திருக்கும் தவறுகள் இரண்டு. ஒன்று, பொதுப்பணத்தைச் சில தினங்களுக்கான போதிலும், தனியாக ஒரு கணக்கு ஏற்படுத்தி, அதில் போட்டிருக்கவேண்டும். இரண்டாவது, உன் கணக்கில் பணம் இல்லாமல் இருக்கும்போது அதில் இருப்பதற்கு அதிகமாக நீ செக் கொடுக்கவே கூடாது. உனக்கு ரூ.500 பெரிதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், நாம் செய்கிற காரியம் ஒவ்வொன்றும் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். பொது ஊழியர்கள் எந்த விதமான குறைகளுக்கும் ஆளாகக்கூடாது என்பது பற்றியே நான் இவ்வளவு கடுமையாக இதை எடுத்துரைத்தேன்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
அன்று அவர் சொன்ன மொழிகள் இன்னும் என் காதில் ரீங்காரம் செய்துகொண்டிருக்கின்றன. சிறு விஷயங்களிலுங்கூடப் பெரியவர்கள் எவ்வளவு கவனமாகக் கவனிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மகாத்மாஜிக்குச் செல்லாக வேண்டிய பணம் முன்னமேயே வந்துவிட்டது. எனவே, இதைப்பற்றி அவர் கவனியாமல் இருந்திருக்கலாம். ஆனால், என்னுடைய நன்மையை உத்தேசித்து அவர் இதை ஞாபகத்தில் வைத்து என்னிடம் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து அவர் சொன்ன அந்த யோசனையை நான் மிகவும் போற்றிவந்திருக்கிறேன். அந்த யோசனை, இன்னும் மற்றப் பல விஷயங்களிலும் மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்ள எனக்கு ஏதுவாயிற்று. என் எதிர்கால வாழ்க்கையிலேயே அவருடைய அந்த வார்த்தை எனக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது.
உணவும் ஓய்வும் முடித்துக்கொண்டு கரூரிலிருந்து புறப்பட்டு ஈரோடு வந்துசேர்ந்தோம். ஈரோட்டிலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளைப்போல் பதினாயிரக்கணக்கான மக்கள் கூடி மகாத்மாஜியை வரவேற்றார்கள். அங்கிருந்து திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்குச் சென்றோம். அங்கு ராஜாஜி அவர் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார். மகாத்மாஜியைத் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் சேர்த்ததுடன் நான் அவருடன் சென்ற அப்போதைய பிரயாணம் முடிவாயிற்று. அவரிடம் விடைபெற்று, ஊர் திரும்பினேன்.
- கலைமகள், ஆகஸ்ட், 1949.
Comments
Post a Comment