Skip to main content

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை.

1935க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக, இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல், ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பிளேட்டோ, ரூஸ்ஸோ, டால்ஸ்டாய் மற்றும் பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத தாகூர், பிரேம்சந்த், சரத் சந்திர சட்டர்ஜி, வி. ஸ. காண்டேகர் முதலியவர்களுடைய நூல்கள் தமிழில் மளமளவென்று லாபத்தைக் கருதாமல் மொழிபெயர்க்கப்பெற்றுத் தமிழ் இலக்கியத்துக்கு வலிமை தந்தன. 1950லும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும், அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு, போட்டி போட்டுக் கொண்டு அதன் விளைவாக, மொழிபெயர்ப்பாளரின் ரசனையின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களுக்குப் பதிலாக, பணம் தரக்கூடிய நூல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். இதுவே, நல்ல தரமான இயக்கம் என்று சொல்லும்படியான அளவுக்கு 1956க்குப்பின் சாகித்திய அகாதெமி, இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏற்பட்டு, மொழிபெயர்ப்பில் செயல்படத் தொடங்கியது. அதுவரை இலக்கியத் துறையில் மொழிபெயர்ப்பு என்பதிலே நம்பிக்கையே வைக்காத பலரும், மொழிபெயர்ப்பாளரானார்கள். அவர்கள் செய்த மொழிபெயர்ப்புகளும் குப்பைக்கூளங்களாகத் தமிழ் வாசகர்கள்மேல் ஏற்றப்பட்டு மொழிபெயர்ப்பு என்றாலே இலக்கியத்தரமில்லாதுதான் இருக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படக் காரணமாகிவிட்டது.

மூல (Original) எழுத்துப்போல, நாவல், கவிதை, நாடகம், விமரிசனம் போன்ற துறைகள் போல இலக்கியத்தில் மொழிபெயர்ப்பும் ஓர் அவசியமான துறை. மொழிபெயர்ப்பு வேகம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில்தான் இலக்கிய வேகமும் ஒரு மொழியில் சுத்தமாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக உலக இலக்கியச் சரித்திரத்தில் பல பகுதிகளைச் சொல்லலாம். குறிப்பாக ஆங்கில இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் காலத்தையும் இரண்டாவது எலிஸபெத் காலமான இந்தக் காலத்தையும் சொல்லலாம். 1945இல் தமிழ் இலக்கியம் ஓரளவுக்குத் தேக்கம் பெற்றது. அதன் விளைவாக 1950 முதல் சுமார் 1965 வரையில் மொழிபெயர்ப்பும் தேக்கமுற்றது. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் பிறநாட்டு அரசியல் ஸ்தாபனங்களும், இந்திய மத்திய அரசாங்க, மாகாண அரசாங்க ஸ்தாபனமும் மொழிபெயர்ப்புகளின் தரத்தைக் குறைக்கவே உபயோகப்பட்டன. இந்தக் காலஅளவில் வெளிவந்துள்ள தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் எஸ். மகராஜன் செய்த ஷேக்ஸ்பியர் ‘ஹாம்லெட்’ நாடகத்தையும், சித்தலிங்கய்யாவின் கரந்த் நாவல் மொழிபெயர்ப்பும் தவிர, வேறு ஒரு மொழிபெயர்ப்பு நூல்கூடத் தமிழில் இலக்கியத்தரமானதாக வெளிவரவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்

ஓர் ஆண்டில் பத்திருபது நூல்களாவது உலக இலக்கிய வரிசையிலிருந்தும் ஒரு பத்திருபது நூல்கள் இந்தியப் பிறமொழிகளிலிருந்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியிருக்கின்றன. அப்படி ஓர் ஆண்டில் முப்பது நாற்பது இலக்கிய நூல்கள் பிறமொழிகளிலிருந்து வந்துகொண்டேயிருந்தால்தான், அதன் பாதிப்பினாலும் விளைவாலும் தமிழிலும் ஒரு பத்துப் பன்னிரண்டு நூல்கள் வெளிவர முடியும். அதில்லாமல் எங்களுக்கு முன்னேயே எங்கள் புதுக்கதைகளையும் பழங்கதைகளையும் பேசிக்கொண்டே பொழுதைப் போக்கி வருகிறோம். எங்களுக்குக் கல்கி போதும், சாண்டில்யன் போதும், அகிலன் போதும் - இதற்கெல்லாம் மேலே இலக்கியமா, அது எங்கே இருக்கிறது என்று நமக்குள்ளேயே சொறிந்து கொடுத்துக்கொண்டே இருந்துவிட்டால் இலக்கியம் தேங்காமல் என்ன செய்யும்?

மொழிபெயர்ப்புகள் படிக்கிற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர்களிடையே இந்த மனப்பான்மை வளரவில்லை. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த இலக்கியப் பிராந்தியத்தையும் பற்றி நினைவேயில்லாதவர்களைப்பற்றி நாம் பண்டிதர்கள் என்று அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம். தமிழில் உள்ளது போதும், வேறு எதுவும் நமக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை என்கிற ஒரு மனப்பாங்கு நமக்குள்ளே பெருமளவிற்கு வளர்ந்து வந்திருப்பது கண்கூடு. டால்ஸ்டாய் நிறைய தமிழில் படிக்க வேண்டும், ஷெரிடனைப் படிக்க வேண்டும், அல்டேர்கேடுவைப் படிக்கவேண்டும், ஃபாக்னரைப் படிக்கவேண்டும் என்று எந்தவிதமான ஆர்வமும் காட்டாமல் மு.வ., மு. கருணாநிதி என்று சிந்தனைகளைத் தேக்கிவிடுகிற காரணமாகத்தான் தமிழில் மொழிபெயர்ப்புகள் அதிகமாகத் தோன்றவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

இதற்கிடையில் சிறிது சிறிதாக ரஷ்ய, அமெரிக்க அரசாங்கங்கள் மொழிபெயர்ப்புகள் வெளியிடும் பாணியைச் சுருக்கிக்கொண்டார்கள். 1960க்குப் பின் அவர்கள் நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை. சாகித்ய அகாதெமியும் ஆரம்பத் துரைத்தனமாகப் பல ஐரோப்பிய, இந்திய நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட்டு அவை வெற்றி பெறவில்லை என்று சொல்லி மேலே ஏற்றுக்கொண்ட மொழிபெயர்ப்புகளையும் நிதானமாகச் செய்யத் தொடங்கியது. புதிதாகத் தோன்றிய நேஷனல் புத்தக டிரஸ்ட் தாங்களே எழுதி வெளியிட்ட பல நிபுணர்களின் நூல்களைத் தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. இந்த நிபுணர்களின் முதல் நூல்களே சரிவர அமையவில்லை. உதாரணம் கோபால் சிங்கின் ‘குரு கோவிந்த சிங்’, பி. சாம்பமூர்த்தியின் ‘ஸ்ரீ தியாகராஜா’, திலீப் முகர்ஜியின் ‘சைதன்யா’ இவற்றைச் சொல்லலாம். நிபுணர்களைத் தேர்ந்தெடுத்ததில் தவறில்லை; அவர்களுக்கு ஜீவிய சரித்திரங்கள் எழுதிக் கைவரவில்லை. சைதன்யாவும், குரு கோவிந்த சிங்கும், தியாகராஜாவும் பிறவிக் கடல் நீந்திக் கரையேறப் பிறந்தவர்கள்; அவர்களைத் தங்கள் நூல்களிலேயே பல பக்கங்களில் பிறக்க வைக்கிறார்கள் இந்த நூல்களின் ஆசிரியர்கள்.

ஆதான் - பிரதான் என்று ஒரு திட்டத்தையும் மேற்கொண்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கின்ற காரியத்தை அது மிகவும் தரமற்ற வகையில் செய்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பகவத் சரன் வர்மாதான் ஹிந்தியில் ஆலோசகர்; தமிழில் மீ. ப. சோமசுந்தரம் ஆலோசகர். அவர்களுடைய இலக்கியம் சுவர்களைத் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டது. அவர்கள் பத்தாம்பசலி நூல்களை, இந்திய இலக்கியம் என்று ஆதான் - பிரதான் வரிசையில் வெளியிட்டு வருகிறார்கள். மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கப்படும் முறையும் பெயர்களும் தரமாக இல்லை என்று சொல்லவேண்டுவதேயில்லை. ஸ்தாபனத்துக்கோ, அதன் ஆலோசகர்களுக்கோ வேண்டியவர்களாக இருந்தால் போதும் - மொழிபெயர்க்கத் தகுதி வந்துவிடும் என்று அவர்கள் நினைக்கிற மாதிரி தெரிகிறது.

அரசாங்க அல்லது அரை அரசாங்க மொழிபெயர்ப்பு முறைகள் சிரிப்புக்கிடமாக இருக்கின்றனவே தவிர மொத்தத்தில் இலக்கியத்துக்கு இடமாக இல்லை. உதாரணமாக, சாகித்ய அகாதெமி தயவில் வங்க இலக்கிய வரலாறு’ என்று ஒரு மொழிபெயர்ப்பு தமிழில் வந்துள்ளது. இதில் ஒரு வாக்கியம் ‘கவி ரவீந்திரநாத தாகூரின் சகோதரியின் மகளை அவர் திருமணம் செய்துகொண்டார்; அவர் சகோதரரும் அவ்வாறே செய்தார்’ என்று இருக்கிறது. இந்த நூலை மொழிபெயர்த்தவர் பழைய இலக்கியக் குடியைச் சேர்ந்த பெரும்புலி - பல மொழிபெயர்ப்புக் கருத்தரங்குகள் நடத்தியவர் - ஆனால், அவை Southern Languages Books Trust சார்பில் நடந்தவை - ஆகவே, இலக்கியத்தரமானவை அல்ல என்று திடமாகச் சொல்லலாம். இந்த மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து, இந்த வாக்கியம் உண்மையில் சரியென்று சொன்னவர் புதுப்புலி பேராசிரியர், டாக்டர், இத்யாதி. இந்த மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா என்று அவர் பார்த்துக்கொள்வதற்காக அவர் சாகித்ய அகாதெமியிலிருந்து பெற்றுக்கொண்ட கூலி ஓர் ஆயிரம் ரூபாய். மொழிபெயர்ப்பாளருக்கு அதிகம் கிடைத்திருக்கும்.

தமிழில் அதே நேரத்தில் சற்றுத் தரமான முயற்சிகளும் நடைபெறாமல் இல்லை. ஆனால், அவை கண்ணுக்கெட்டாமல் பசியும் பரிதவிப்புமாக ஏதோ சிலரால் தங்கள் தங்களுக்கெட்டிய வகையில் செய்யப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய, ஜப்பான் கவிதைகளில் சிலவற்றைச் சில இளங்கவிஞர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். சில சிறுகதைகள் வெளியிடப்பட்டுள்ளன. சில இலக்கியக் கட்டுரைகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன. இவையெல்லாம் தமிழில் இந்தக் காலகட்டத்திலும் மொழிபெயர்ப்புக் கலை இறந்துவிடவில்லை என்பதைக் காட்டவே போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியாகியுள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமான இலக்கியப் படைப்பு ஏற்படுத்தக்கூடிய அளவில் மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டிருக்கவில்லை என்பதுதான் விஷயம்.

தமிழ் இலக்கியத்தில் ஒரு புது வேகம் 1965க்குப்பின் ஏற்பட்டு ஒரு புதிய ஞானக்கூத்தன், ஷண்முக சுப்பையா, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன், கா. கந்தசாமி என்று பலரும் பலவிதங்களில் சிறப்பாக எழுதிவருகிறார்கள். இந்தத் தலைமுறைக்கு இரண்டொரு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் தேவை - சாமிநாதன் என்றவர் சில மொழிபெயர்ப்புகளை எழுதிச் சிறு பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். எழுத்துகளில் மொழிபெயர்ப்புகளுக்குத் தமிழில் ஒரு வேகம் ஏற்படலாம் - ஏற்படவேண்டும். இந்த வேகம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தமிழர்கள் மொழிபெயர்ப்புகளுக்குத் தரும் ஆதரவைப் பொறுத்தது.

***

சுடர், தில்லி தமிழ்ச் சங்க ஆண்டு மலர், 1972

[இக்கட்டுரை அழிசி வெளியீடாக வரவிருக்கும் க.நா.சு.வின் தொகுக்கப்படாத கட்டுரைகளின் தொகுப்பில் இடம்பெறுகிறது.]

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (