வாசகர்: பசுப் பாதுகாப்பைப்பற்றி இப்பொழுது உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஆசிரியர்: நானே பசுவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதாவது, அதனிடம் அன்பு கலந்த ஒரு மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தியாவைப் பாதுகாப்பது பசு. ஏனெனில், இந்திய நாடு விவசாய நாடாக இருப்பதால் அது பசுவை நம்பி வாழ வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வழிகளில் பசு மிகவும் பயன் அளிக்கும் மிருகம். நம் முஸ்லிம் சகோதரர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால், நான் பசுவுக்கு மதிப்பளிப்பதைப் போலவே என் நாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் மதிப்பளிக்கிறேன். ஒருவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லிமாகயிருந்தாலும் சரி, பசுவைப் போன்றே மனிதரும் பயன் உள்ளவரே. அப்படி இருக்கும்போது ஒரு பசுவைப் பாதுகாப்பதற்காக ஒரு முஸ்லிமுடன் சண்டையிடுவதோ அல்லது அவரைக் கொல்வதோ சரியா? அப்படிச் செய்வதனால் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு பசுவுக்கும் விரோதியாவேன். ஆகையால், பசுவைப் பாதுகாப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, நாட்டின் நன்மையை முன்னிட்டு அதைப் பாதுகாப்பதற்கு என்னுடன் ஒத்துழைக்கும்படி என் முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக்கொள்வதேயாகும். நான் கூறுவதற்கு அவர் இணங்...