Skip to main content

வாழ்க நீ எம்மான்! | நரசய்யா


என்னுடைய வருடாந்திர விடுமுறை முடிந்து, பம்பாய்க்கு மெட்ராஸ் - பாம்பே மெயிலில் புறப்பட்டேன். 1960ஆம் வருடத்து செப்டம்பர் மாதம், ஐ.என்.எஸ். விக்ராந்துக்குச் செல்வதற்கு பம்பாய் வரச்சொல்லி ஆர்டர் தந்தி மூலம் வந்திருந்தது. இரவு பத்தரை மணிக்குப் புறப்படும் மெயில், அன்று சற்று தாமதமாகவே புறப்பட்டது. முதல் வகுப்பு; அதிலும் அந்தக் காலத்து கம்பார்ட்மெண்ட்; ஆறு பெர்த்துகள் கொண்டது. என்னைத் தவிர மற்றொரு பிரயாணி பெயர் இருந்தது. அவரும் இதுவரை வரவில்லை . டிக்கட் பரிசோதகர் மற்றொரு முறை அவர், அதாவது, இரண்டாவது பிரயாணி வந்தாரா என்று கேட்டுவிட்டுச் சென்றார்.
வண்டிக் கிளம்பச் சரியாக இரண்டு நிமிடங்களே இருந்தபோது வேகமாக வந்து ஏறிக்கொண்ட நபர் உயரமாக நல்ல உடற்கட்டுடன் இருந்தார். நடை யாரையோ நினைவூட்டியது. கதர் உடைகளில் இருந்த அம்மனிதரை எங்கோ முன்பே சந்தித்தது போல எனக்கு ஒரு பிரமை!
வண்டி கிளம்பினபோதுதான் பார்த்தேன். நெற்றியில் ஒரே கோடாகக் காட்சியளித்த நாமமும் சிவந்த மேனியும் அடையாளம் காட்டிவிட்டன!
"டேய், வாசுவாடா?'.
சரியாக பதினான்கு வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன்! அரியலூரில் என்னுடன் படித்தவன்.
"நரசய்யா! என்னடா நேவியிலே நீ சேந்துட்டதா ராமய்யா சொன்னான்; இன்னும் நேவியிலேதானே இருக்கே?''
"நேவியிலெல்லாம் சேந்தாச்சுன்னா அவ்வளவு சுலபமா வெளியிலே வந்துட முடியாதாக்கும்! இதென்னடா ஒரே கதர் மயம்? காங்கிரஸ் கட்சிக்காரனாயிட்டியா? ஆனா நீதானே டாக்டரோ என்னவோ ஆகணும்னு சொல்லிண்டிருந்தே; இதென்னடா வேஷம்?''
"வேஷமும் இல்லே காங்கிரசும் இல்லே; காந்தி கிராமத்துலே புரொபஸர் வேலைடா; இப்போ வார்தாவுக்குப் போறேன்; மொதல்லே பூனாவிலே ஒரு மீட்டிங்; முடிஞ்சப்பறம் அங்கிருந்தே வார்தா போறேன். இப்போ முழுசா காந்தி தத்துவம்தாண்டா; ரொம்ப பிடிச்சிருக்கு.
இரவு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். வார்தாவைப் பற்றியும் காந்தியைப்பற்றிய பல விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டே அவன் தூங்கிவிட்டான். எனக்குத் தூக்கம் வரவில்லை. பின்னோக்கி ஓடும் தந்திக் கம்பங்களையும் தூரத்து குன்றுகளையும் பார்த்துக்கொண்டே நினைவலைகளை ஓடவிட்டேன்.
அரியலூரின் இரயில்வே நிலையத்தின் 100 மீட்டருக்கு முன்பே காந்தி பழனிக்குப் பிரயாணம் செய்துகொண்டிருந்த வண்டி நின்றது. எங்கள் பள்ளியின் எல்லா வகுப்பு மாணவர்களும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்து அங்குள்ள பரந்த வெளியில் அமர்ந்துகொண்டோம். மகாத்மா வரும் வண்டி தூரத்தில் தெரிந்த போதே எனக்கு ஏதோ ஒரு புல்லரிப்பு. இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமே அல்லாமல் எப்படி இருப்பார் என்ற ஒருவிதமான எண்ணமும் கிடையாது!
அப்போது பார்த்த காந்தி அதாவது 1946இல் செக்கச்செவேலென்ற நிறத்தில், எங்கள் கற்பனை ஆற்றலைத் தாண்டி, ஏதோ தெய்வம்போலக் காட்சி அளித்தார். எங்கள் ஆச்சரியத்தினின்றும் நாங்கள் விடுபடு முன்னரே அவர் வண்டி புறப்பட்டுவிட்டது! அது ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்! எனக்கு அந்த ஆச்சரியத்தினின்றும் விடுபடவே சில நாட்களாயின!
அப்போதிருந்து எங்களில் சிலர் காந்தியைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தோம். ஆச்சரியம் என்னவென்றால் அதுவரை எந்த விதமான அரசியல் சம்பந்தப்பட்ட பேச்சுகளிலும் கலந்திருந்திருக்காத வாசுதேவன், காந்தி வண்டி புறப்பட்டு எங்களைக் கடந்து செல்கையில் கன்னத்தில் போட்டுக்கொண்டு அவ்வண்டி சென்ற திக்கையே நோக்கிக்கொண்டு கை கூப்பியபடியே நின்றதும் அன்றிலிருந்து அதீதமாக காந்தி வழிபாட்டை ஆரம்பித்ததும்தான்! நெற்றியில் திருச்சூர்ணமும் நன்றாக வாரி பின்பக்கம் முடியாகக் கட்டப்பட்டிருந்த குடுமியும், சற்றே தனது வயதுக்கு மீறிய வளர்ச்சியும், தீர்க்கமான நாசியும், நல்ல நிறமும் அவனது ஈர்க்கும் சக்தியாக அமைந்திருந்தன. அவனுடைய பாட்டி சொல்லுவாள்: 'இவனுக்கு தலையிலே ஒரு கிரீடம் வச்சு, வில்லையும் கையில் கொடுத்துட்டா அசல் படத்திலிருக்கும் இராமச்சந்திர மூர்த்தியே தாண்டி!'
எட்டாவது படிக்கும் போதே டாக்டர்தான் ஆவேன் என்று வாசுதேவன் சொல்லுவான்; வகுப்பில் எப்போதும் முதல்வனாகத்தான் இருப்பான்; எவருடனும் அதிகம் பேசவும் மாட்டான். அந்தக் காலத்திலேயே ஆஸ்டின் கார் வைத்திருந்த குடும்பம்; அவனது தந்தை ஒரு பெரிய மிராசுதார்; நாங்கள் இருந்தது பழைய தபாலாபீஸ் கட்டடத்தில்; அவர்கள் வீடு சன்னதித் தெருவில்; அந்த வீட்டை அவர்களே முழுமையாக பார்த்திருப்பார்களா என்று எனக்கு சந்தேகம் உண்டு;
வாரத்துக்கொருமுறை எல்லோருக்கும் இனிப்பு வழங்குவான். மற்றபடி எவருடனும் அதிகம் பழகமாட்டான். வாசுதேவன் தந்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் புகழ்ந்து பேசும் பேர்வழி; “நம்ம நாட்டுக்காரன் கையிலே நாட்டைக் கொடுத்துட்டா உருப்படாமே செஞ்சுடுவான்கள்! மொதெல்லே டிசிப்ளின் இருந்தாத்தானே ஆட்சி செய்யலாம்? சும்மா விடுதலைன்னுட்டாப் போறுமா? அதுக்கேத்த டிரெயினிங் எல்லாம் இருக்க வேண்டாமோ?”
அவருக்கு இந்தியர்கள் மீது நம்பிக்கை கிடையாது!
வாசுவுக்கும் காந்தி, காங்கிரஸ் விடுதலை இவைகளையெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாது! அவன் தந்தை போட்ட கோட்டைத் தாண்டும் வகையும் இல்லை; படிப்புதான் அவனுக்கு முக்கியம்; அப்போது நாங்கள் எட்டாம் வகுப்பு; பரீட்சை எழுதியகையோடு தந்தைக்கு பழனிக்கு மாற்றல் வந்துவிட்டதால் அங்கு சென்றுவிட்டோம். ஆகையால் எனக்கு அரியலூரில் பிறகு நடந்தவை தெரியாது. பழனியில் ஒரு வருட படிப்புக்குப் பின்னர் லால்குடி; அங்குதான் எஸ்.எஸ்.எல்.சியை முடித்தேன். உடனே கடற்படையில் சேர்ந்துவிட்ட காரணத்தால், தொடர்பும் இல்லை.
நான் காலையில் எழுந்தபோது, டிரெயின் ஏதோ ஒரு ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்டிருந்தது. வாசு தனது கையில் இரண்டு பொட்டலங்களுடனும் ஒரு பிளாஸ்குடனும் ஓடி வந்து ஏறிக்கொண்டான். "பல் தேச்சிண்டு வா; சூடா இட்லி காபி வாங்கிண்டு வந்திருக்கேன் சாப்பிடலாம்...''
சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தான். "நேவியிலெ என்னடா செய்யறே?''
நான் விவரமாகக் கூறிவிட்டு அவனைக் கேட்டேன், "ஏண்டா, நீ டாக்டராப் போறதா சொன்னயே என்னாச்சு?'
''எல்லாமெ நாம நெனக்கிற மாதிரியே நடக்கறதா என்ன? நான் நெனச்சது அதுதான்; ஆனா நீ போனப்பறம் காந்தியைப் பத்தி நெறயவே படிச்சேன். ஒண்ணு புரிஞ்சது; ஏழைங்களுக்கு நாம் எல்லாம் ஒண்ணும் செய்யல்லேன்னு; அப்பா ஒத்துக்கல்லெ; பெரிய ப்ராப்ளம் ஆயிடுத்து; நடுவுலே அம்மா மாட்டிண்டு கஷ்டப்பட்டா பாவம்! ஒனக்குத் தெரியும்; அப்பா சொன்னபடி செய்யல்லேன்னா அவருக்குக் கோபம் வரும்; அம்மா ஒத்தாசையோடே நான் திருச்சிக்கு வந்து மாமா வீட்டில இருந்துண்டு படிச்சேன். இண்டர்மீடியேட் பண்றப்பவே...'' அவன் கண்களைத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.
''அப்பா போனதுக்கு நான்தான் காரணம்னு சித்தப்பா கோபப்பட்டார். அம்மா புரிஞ்சிண்ட மாதிரி யாராலேயும் என்னெப் புரிஞ்சிக்க முடியல்லே; நான் அம்மாண்டே எனக்குக் காந்தித் தத்துவத்திலே ஈடுபாடு இருக்குன்னேன். கொஞ்ச நாள்ளெ அம்மாவும் சொன்னா - நீ என்ன செய்யணுமோ அதெச் செஞ்சுக்கோ நானும் ஒனக்கு உதவியா இருக்கேன்னுட்டா - பேசாமெ திண்டுக்கல்லுக்குப் போயிட்டோம். அங்கே சந்தோஷமா இருந்தது. நான் டாக்டரேட் முடிச்சேன். அதெப்பாத்துட்டு திருப்தியா அம்மாவும் கண்ணெ மூடிட்டா ...''
அதற்குப் பிறகு அவன் சொன்னதெல்லாம் நான் காதால் மட்டும்தான் கேட்டேன் - கிரஹித்துக்கொள்ளவில்லை.
இறந்த பிறகும் இவர்களில் வாழும் காந்தியை எண்ணி வாழ்க நீ எம்மான் என்று என் வாய் மட்டும் முணுமுணுத்தது!
திசைகள், அக்டோபர், 2003.
(நன்றி: சொல்லொணாப்பேறு, நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு.)

Comments

Most Popular

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்

கு. ப. ராஜகோபாலனின் கதைகளை , அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும் , கதை நடத்தும் திறனும் , உருவ , கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது. ஆண் , பெண் உறவுகளை , பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக , உரக்க , மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் , அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம் , கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா . வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும் , கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா . விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு , நோய் , சாவு...

எழுத்து ஆக்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக்கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக் கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத் தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்திவிட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும் கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான், முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது. எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவதுபோல் வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் ...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...