Skip to main content

பசுப் பாதுகாப்பைப் பற்றி | மகாத்மா காந்தி


வாசகர்: பசுப் பாதுகாப்பைப்பற்றி இப்பொழுது உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஆசிரியர்: நானே பசுவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதாவது, அதனிடம் அன்பு கலந்த ஒரு மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தியாவைப் பாதுகாப்பது பசு. ஏனெனில், இந்திய நாடு விவசாய நாடாக இருப்பதால் அது பசுவை நம்பி வாழ வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வழிகளில் பசு மிகவும் பயன் அளிக்கும் மிருகம். நம் முஸ்லிம் சகோதரர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால், நான் பசுவுக்கு மதிப்பளிப்பதைப் போலவே என் நாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் மதிப்பளிக்கிறேன். ஒருவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லிமாகயிருந்தாலும் சரி, பசுவைப் போன்றே மனிதரும் பயன் உள்ளவரே. அப்படி இருக்கும்போது ஒரு பசுவைப் பாதுகாப்பதற்காக ஒரு முஸ்லிமுடன் சண்டையிடுவதோ அல்லது அவரைக் கொல்வதோ சரியா? அப்படிச் செய்வதனால் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு பசுவுக்கும் விரோதியாவேன். ஆகையால், பசுவைப் பாதுகாப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, நாட்டின் நன்மையை முன்னிட்டு அதைப் பாதுகாப்பதற்கு என்னுடன் ஒத்துழைக்கும்படி என் முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக்கொள்வதேயாகும். நான் கூறுவதற்கு அவர் இணங்கவில்லையாயின், இவ்விஷயம் என் சக்திக்குப் புறம்பானது என்ற காரணத்தினால் பசு எப்படியாவது போகட்டும் என்று நான் விட்டுவிட வேண்டும். பசுவிடம் பச்சாத்தாபம் எனக்கு மிக அதிகமாக இருக்குமானால், அதைக் காப்பாற்ற நான் என் உயிரையே தியாகம் செய்யவேண்டுமேயல்லாமல் என் சகோதரனின் உயிரைப் போக்கிவிடக்கூடாது. இதுவே நமது தர்மம் என்று நான் கொள்கிறேன்.

மனிதர் பிடிவாதக்காரர்கள் ஆகிவிடும்போது நிலைமை சங்கடமானதாகிவிடும். நான் ஒரு வழிக்கு இழுத்தால், என் முஸ்லிம் சகோதரர் வேறு வழிக்கு இழுப்பார். நான் உயர்ந்தவன் என்ற அகம்பாவத்துடன் இருந்தால் அவரும் பதிலுக்கு அப்படியே செய்வார். நான் கௌரவமாக அவருக்குப் பணிந்தால், அவர் மேலும் அப்படியே பணிந்துவிடுவார். அவர் அப்படிச் செய்யாது போனாலும், நான் பணிந்து போனதில் நான் தவறு செய்துவிட்டதாகக் கருத முடியாது. ஹிந்துக்கள் பிடிவாதம் காட்டக்காட்டப் பசுக்களைக் கொல்வதும் அதிகமாகிறது. பசுப் பாதுகாப்பு சங்கங்களைப் பசுக்கொலைச் சங்கங்கள் என்று சொல்லலாம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய சங்கங்கள் நமக்குத் தேவைப்படும் என்பதே வெட்கக்கேடானதாகும். பசுக்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை நாம் மறந்துவிட்டபோதே இத்தகைய சங்கங்கள் அவசியமாயின என எண்ணுகிறேன்.

ரத்தக் கலப்புள்ள ஒரு சகோதரன், ஒரு பசுவைக் கொல்லும் தறுவாயில் இருக்கும்போது நான் என்ன செய்வது? நான் அவனைக் கொன்றுவிடுவதா அல்லது அவன் காலில் விழுந்து கொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வதா? பிந்திய முறையையே நான் கைக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், எனது முஸ்லிம் சகோதரனிடமும் நான் அதையேதான் செய்யவேண்டும்.

ஹிந்துக்கள் பசுக்களைக் கொடுமையாக நடத்தும்போது அவை அழியாமல் பாதுகாக்கிறவர் யார்? பசு வமிசத்தை ஹிந்துக்கள் தடிகளால் போட்டு அடிக்கும்போது அது நியாயமல்ல என்று அவர்களிடம் யார் தாம் வாதாடுகிறார்கள்? ஆனால் இவையெல்லாம் நாம் ஒரே தேசீயச் சமுதாயமாக இருப்பதைத் தடுக்கவில்லை.

கடைசியாக, ஹிந்துக்கள் கொல்லாமையில் நம்பிக்கையுள்ளவர்கள், முஸ்லிம்கள் அப்படியல்ல என்பது உண்மையாக இருக்குமானால், ஹிந்துக்களின் கடமை என்ன? கொல்லாமை மதத்தைப் பின்பற்றும் ஒருவர், இன்னொருவரைக் கொல்லலாம் என்று விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவர் செய்ய வேண்டிய காரியம் நேரானது. ஓர் உயிரைக் காப்பதற்காக இன்னொருவரைக் கொன்றுவிடக்கூடாது. கொல்ல வேண்டாம் என்று வேண்டிக்கொள்ளலாம்; அவருடைய முழுக் கடமையும் அவ்வளவுதான்.

ஆனால் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் அகிம்சையில் நம்பிக்கை இருக்கிறதா? விஷயத்தை ஆழ்ந்து கவனித்தால், இந்த அகிம்சைக் கொள்கையை ஒருவர்கூட அனுசரிக்கவில்லை; உயிரினங்களை அழித்துக்கொண்டுதான் வருகிறோம். ஓர் உயிரைக் கொல்லும் பாபத்திலிருந்து தப்பவே இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகப் பார்த்தால் ஹிந்துக்களில் பலர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்கள் அகிம்சையைக் கடைப்பிடிக்கவில்லை என்றாகிறது. ஆகையால் அகிம்சையில் நம்பிக்கை வைக்கும் ஹிந்துக்களும், அந்த நம்பிக்கையில்லா முகம்மதியர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்வது அபத்தமானதாகும்.

சுயநலமிகளும் போலிகளுமான மதப்பிரசாரகர்கள் இத்தகைய எண்ணங்களையெல்லாம் நம் புத்தியில் உண்டாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இதற்கு மெருகு கொடுக்திருக்கிறார்கள். சரித்திரம் எழுதும் வழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லா மக்களின் பழக்க வழக்கங்களையும் ஆராய்வதாகவும் பாசாங்கு செய்கிறார்கள். கடவுள் நமக்கு ஓர் அளவுக்குத்தான் புத்தியைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்களோ, தாங்களே கடவுளாக எண்ணிக்கொண்டு விசித்திரப் பரீட்சைகளிலெல்லாம் ஈடுபடுகிறார்கள். தங்களுடைய ஆராய்ச்சிகளையெல்லாம் உயர்வாகப் புகழ்ந்து, அவர்களை நம்பும்படியும் நம்மை மயக்குகிறார்கள். நாமும் நமது அறியாமையால் அவர்களுக்கு அடிபணிகிறோம்.

விஷயங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதிருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் குரானைப் படிக்கலாம். அதில் நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஹிந்துக்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாக இருப்பதைக் காணலாம். எந்த ஒரு முஸ்லிமும் ஆட்சேபிக்க முடியாத உண்மைகளும் பகவத் கீதையில் உள்ளன. எனக்குப் புரியாதவையும், நான் விரும்பாதவையும் குரானில் இருக்கின்றன என்பதற்காக ஒரு முஸ்லிமை நான் வெறுப்பதா? இரண்டு பேர் சச்சரவுக்குத் தயாராக இருந்தால்தான் சச்சரவுக்கே இடம் ஏற்படுகிறது. ஒரு முஸ்லிமுடன் சண்டையிட நான் விரும்பவில்லையென்றால் என்னிடம் சண்டைக்கு வருவதற்கு அவருக்குச் சக்தியே இல்லாது போகும். அதே போல, என்னுடன் சச்சரவுக்கு வர ஒரு முஸ்லிம் மறுத்துவிடுவாரானால் நானும் சக்தியற்றவன் ஆகிவிடுவேன். வெறும் கையை ஓங்கினால் சுளிக்கிக்கொள்ளத்தான் செய்யும். ஒவ்வொருவரும் தங்களுடைய மதத்தின் தத்துவத்தை நன்கு அறிந்து அதைக் கடைப்பிடிப்பார்களானால்—போலிப் போதகர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் அனுமதி தராமல் இருந்தால்—சண்டை சச்சரவுக்கு இடமே இராது.

(மகாத்மா காந்தி எழுதிய ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய சுயராஜ்ஜியம் நூலிலிருந்து | தமிழில், ரா. வேங்கடராஜுலு )

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்

ம னம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன! சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள்! சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர். குழந்தை அழுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன. கண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள். இந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா? சமூக வாழ்க்கையிலே அது முறையா...

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...