Skip to main content

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி


சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம்.

இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (மணி. 6-ஆம் காதை) மணிபல்லவம் கடற்கரைப் பட்டினம் என்பது, மணிமேகலை 8 ஆம் காதையினால் அறியப்படுகிறது.

இது நாக நாட்டைச் சேர்ந்தது என்று மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்குப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர். மகாவம்சம் என்னும் நூலிலே, இந்தப் பகுதி நாக தீபம் என்று கூறப்படுகிறது. நாக தீபம் என்பது தீவு அன்று. மணிமேகலை நாக நாடு என்று கூறுகிற, இலங்கையின் வட பகுதியைத்தான் மகாவம்சம் என்னும் நூலும் நாக தீபம் என்று கூறுகிறது (மகாவம்சம் முதல் அத்தியாயம் 47). நாக நாடு என்றும் நாகத் தீவு என்றும் ஏன் பெயர் பெற்றது என்றால், இங்கு நாகர் என்னும் இனத்தவர் அக்காலத்தில் வாழ்ந்துவந்தனர். தமிழ் நாட்டிலும் நாகர் என்னும் இனத்தர் இருந்தனர் என்பதைச் சங்க நூல்களினால் அறிகிறோம். 'நாகநாட்டு நாக அரசன் வலைவாணன் என்பவன் மகள் பீலிவளை என்பவளைச் சோழ நாட்டு மன்னன் வடிவேற்கிள்ளி காதல் மணம் புரிந்தான்' என்று மணிமேகலை நூல் கூறுகிறது.

சாவக நாடு (ஜாவா தீவு), காழக நாடு (பர்மா நாடு) முதலிய கீழ் நாடுகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு மரக்கலம் ஓட்டிச்சென்ற தமிழ் வணிகர், இடைவழியிலே மணிபல்லவத் துறைமுகத்தில் தங்கிச் செல்வது வழக்கம். இதனை, மணிமேகலை 14ஆம் காதையினால் அறியலாம். கம்பலச் செட்டி என்பவன் கடலில் சென்று வாணிகம் செய்து திரும்பி வருகிற வழியில் மணிபல்லவத்தில் தங்கினான் என்றும் சாவக நாட்டரசன், புத்தரது பாத பீடிகையை வணங்க மரக்கலம் ஏறி மணிபல்லவம் வந்தான் என்றும் மணிமேகலை கூறுகிறது. ஆபுத்திரனும் மணிமேகலையும் அங்குச் சென்றனர்.

இலங்கை அரசன் தேவனாம்பிய திஸ்ஸன், அரிட்டன் என்னும் பௌத்த தேரரை அசோகச் சக்கரவர்த்தியிடம் அனுப்பி, போதிமரத்தை இலங்கைக்குக் கொண்டுவரச் செய்த போது, அவர் மரக்கலம் ஏறிச் சென்றது இந்த ஜம்பு கொல பட்டினத்திலேதான். மீண்டும் போதிமரத்துடன் திரும்பிவந்து இறங்கியதும் இந்த ஜம்புகோல் பட்டினத்திலேதான் (மகாவம்சம் 19 ஆம் அதிகாரம்). சமந்தபாசாதிக என்னும் பாலி நூலும் இதனைக் கூறுகிறது. அநுராதபுரத்தில் நடப்பட்ட போதி மரத்தினின்றும் உண்டான ஒரு போதி மரக்கன்றை பிற்காலத்தில் ஜம்புகோல் துறைமுகத்தில் நட்டு வளர்த்ததாகவும், தேவனாம்பிய திஸ்ஸன் அங்குப் பெளத்த பிக்ஷகளுக்காக ஒரு விகாரையைக் கட்டினான் என்றும், அவ்விகாரை ஜம்புகொல விகாரை என்று வழங்கப்பட்ட தென்றும் மகாவம்சம் என்னும் நூலினால் அறிகிறோம் (19ஆம் அதிகாரம்). அன்றியும் இங்கு ஒரு சேதியம் (புத்தபாத பீடிகை) அமைக்கப்பட்டிருந்ததாகவும் சமந்தபாசாதிக என்னும் பாலி நூலினால் தெரிகிறது. ஜம்புகோல் பட்டினத்தில் விகாரை ஏற்பட்டிருந்ததும், புனிதமான போதிமரம் நட்டு வளர்க்கப் பட்டிருந்ததும், அதன் அருகில் பௌத்த சேதியம் இருந்ததும் ஆகிய இவை எல்லாம், அவ்விடம் பௌத்தர்களுக்குப் புண்ணிய இடமாக இருந்ததென்பதைத் தெரிவிக்கின்றன. இங்கிருந்த பாத பீடிகையை (சேதியம்) வணங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் யாத்திரிகர் வந்தனர் என்றும், வெகு தூரத்திலிருந்த யோனரட்டலிலிருந்தும். (யவன தேசம்) யாத்திரிகர் வந்தனர் என்றும் சமந்த பாசாதிக என்னும் நூல் கூறுகிறது. மணிமேகலையும், இங்கிருந்த பாத பீடிகையை (சேதியத்தைக் கூறுகிறது. ஆனால், இங்கிருந்த பௌத்த விகாரையைக் கூறவில்லை . 'மாதவி மகள் மணிமேகலையும், சாவக நாட்டரசனும் நாகநாட்டரசன் மகள் பீலிவளை என்பவளும் இந்தச் சேதியத்தை வணங்கினார்கள்' என்று மணிமேகலை கூறுகிறது (ஜம்புகோல் பட்டினத்தை, யாழ்ப்பாணத்தில் உள்ள சம்பிளித்துறை என்று கூறுகிறார் இலங்கை சரித்திரச் சுருக்கம் என்னும் நூலை இயற்றிய காட்ரிங்டன் என்பவர்). 'பிராமண திஸ்ஸன் காலத்தில் இலங்கையில் உண்டான கொடிய பஞ்சகாலத்தில், இலங்கையில் இருந்த பௌத்த பிக்குகள் அந்நாட்டைவிட்டு இந்தியாவுக்கு வந்தபோது, இந்த ஜம்புகோலபட்டினத்திற்கு வந்து கப்பல் ஏறிச் சென்றார்கள்' என்று சம்மோஹவினோதனீ என்னும் பாலி நூல் கூறுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், தேவனாம்பிய திஸ்ஸன் என்னும் அரசனால் கட்டப்பட்ட பௌத்த விகாரையில் வசித்திருந்த பிக்குகளைத் தவிர, வேறு மக்கள் இங்கு வசித்திருந்ததாகப் பௌத்த நூல்கள் கூறவில்லை. மணிபல்லவம் மக்கள் வசிக்காத ஓர் ஒதுக்கிடம் என்று கூறுகிறது (14 ஆம் காதை).

இலங்கையின் வடபகுதியாகிய நாகநாட்டிலே (நாகதீபம்) பேர்பெற்ற பௌத்த சேதியம் ஒன்று இருந்ததென்றும், அதனை இலங்கையிலிருந்த பௌத்தர்கள் பெரிதும் போற்றி வணங்கினார்கள் என்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன. அந்தச் சேதியம் ஜம்புகொல பட்டினத்தில் (மணிபல்லவத்தில்) இருந்த சேதியந்தானா என்பது விளங்கவில்லை.

இந்தப் புத்தபீடிகையைப் பற்றி (சேதியத்தைப் பற்றி) ஒரு கதை வழங்குகிறது. மாமனும் மருகனும் ஆகிய இரண்டு நாக அரசர்கள் ஒரு மணி ஆசனத்தைப் பற்றித் தம்முள் போர் செய்ய, அதனை அறிந்த புத்தர் அவர்கள் முன்னிலையில் தோன்றி, "இஃது என்னுடைய ஆசனம், நீங்கள் இதன் பொருட்டுப் போர் செய்யவேண்டா'' என்று கூறி அவர்களது போரை நிறுத்திப் பின்னர் அவ்வாசனத்தில் அமர்ந்து அவர்களுக்கு அறவுரை நிகழ்த்தினார் என்பது அக்கதை. இதனை மணிமேகலை இவ்வாறு கூறுகிறது:

கீழ்நிலை மருங்கில் நாகநா டாளும்
இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
எமதீ தென்றே எடுக்க லாற்றார்
தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங்கண் சிவந்து நெஞ்சுபுகை யுயிர்த்துத்
தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
இருஞ் செரு வொழிமின் எமதீ தென்றே
பெருந்தவ முனிவன் இருந்தறம் உரைக்கும்
பொருவறு சிறப்பில் புரையோ ரேத்தும்
தரும் பீடிகை தோன்றிய தாங்கென்

(மணி. 8:54 - 63)

மேலும்,

வேக வெந்திறல் நாகநாட் டரசர்
சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்(கு)
அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப்
பிறவிப்பிணி மருத்துவன் இருந்தறம் உரைக்கும்
திருந்தொளி ஆசனம் சென்று கை தொழுதி

(மணி. 9: 58 - 62)

என்றும் கூறுகிறது. இதே வரலாற்றினை மகாவம்சம் என்னும் பௌத்த நூலும் கூறுகிறது. அது வருமாறு:

மகோதரன் என்னும் நாகராசனுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள், கண்ணாவத் தனமலைக்கு அரசனான ஒரு நாகராசனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் சூலோதரன். சூலோதரனுடைய தாய்வழிப் பாட்டன் இறந்த பிறகு, அவனிடம் இருந்த ஒரு மணி ஆசனத்தின் பொருட்டு மருகனும் மாமனும் ஆகிய இவ்விருவரும் கடும் போர் செய்தார்கள். இதனை அறிந்த புத்த பகவான் ஆகாய வழியே வந்து அவர்களுடைய போரை நிறுத்தி ஆசனத்தில் அமர்ந்து உபதேசம் செய்தார். பிறகு, அந்த ஆசனத்தை நாக அரசர் களுக்குக் கொடுத்து, 'நான் இதில் அமர்ந்திருந்தபடியால் இந்த ஆசனம் உங்களுக்கு நன்மையையும் சந்தோஷத்தையும் உண்டாக்கும். இதை எனது ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிச் சென்றார். இக்கதை மகாவம்சம் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் கூறப்பட்ட மணி ஆசனந்தான், மணி பல்லவத்தில் இருந்த புத்தபீடிகை (சேதியம்) என்று மணிமேகலை நூலினால் அறிகிறோம். இனி, மணிபல்லவம் என்னும் பெயர் வந்ததன் காரணத்தை ஆராய்வோம்.

மணிபல்லவம் என்பது மணிபல்லங்கம் என்பதன் திரிபு எனத் தோன்றுகிறது. பல்லங்க என்னும் பாலி மொழியின் பொருள், பலகை அல்லது ஆசனம் என்பது. மணிபல்லங்க என்றால் மணியாசனம் எனப் பொருள்படும். மணிபல்லங்க என்னும் சொல் தமிழில் மணிபல்லவம் என்று திரிந்து வழங்கியது போலும். இலங்கையிலேயுள்ள பௌத்தர்கள் பாராயணம் செய்யும் செய்யுள்களில் ரத்னத்திரய வந்தனர் காதா என்பதும் ஒன்று. இத்தோத்திரச் செய்யுள்களில் ஒன்று இது:

பஹினி ஸத மாது லேஹி தின்ன
மணிபல்லங்க வரே யஹிங் நிஸின்னோ
முனி தம்ம மதேஸயீ முனீனங்
ஸிரஸாதங் பணமாமி நாகதீபங்

இந்தப் பாலிமொழிச் செய்யுளின் பொருள் வருமாறு:

பாஹினி ஸத - தங்கையின் மகனும், மாது லேஹி - மாமனும், தின்ன - கொடுத்த, வரே- உத்தமமான, மணிபல்லங்க - மணி ஆசனமானது, யஹிங் - எந்த இடத்தில் உள்ளதோ அங்கு, நிஹின்னோ - அமர்ந்து, முனி - புத்தபகவான், முனீனம் - பிக்ஷக்களுக்கு, தம்மம் - தர்மத்தை, அதேஸயீ - போதித்த, தம்நாகதீபம் - அந்த நாகத் தீவை, ஸிரஹா - தலை வணங்கி, பணமாமி - வணங்குகிறேன்.

இச்செய்யுள், நாகத் தீவிலே (நாக நாட்டிலே) நாக அரசர்களால் புத்த பகவானுக்கு அளிக்கப்பட்ட மணி பல்லங்கத்திற்கு (மணி ஆசனத்திற்கு) வணக்கம் கூறுகிறது. இந்த மணியாசனம் மணிபல்லவத் துறைமுகப்பட்டினத்தில் இருந்ததாக மணிமேகலை நூல் கூறுவதை மேலே காட்டினோம். மணிபல்லங்கம் அல்லது தமிழ் வழக்குப்படி மணிபல்லவம் அமைந்திருந்த இடத்திற்கு அந்த ஆசனத்தின் பெயரையே அமைத்துத் தமிழர் வழங்கினார்கள் போலும். சென்னைக்குத் தெற்கேயுள்ள சிங்கப்பெருமாள் கோயில் என்னும் ஊர், அங்குள்ள சிங்கப்பெருமாள் கோயிலின் பெயரையே கொண்டிருப்பதுபோல, மணிபல்லங்க சேதியம் உள்ள இடமும் மணிபல்லங்கம் எனப் பெயர் வழங்கப்பட்டு பிற்காலத்தில் மணிபல்லவம் எனத் திரிந்து வழங்கியது போலும். பண்டைக் காலத்திலே தமிழ்நாட்டிலும் பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதும், அவர்கள் பாலி மொழியைத் தமது சமய மொழியாகக் கொண்டிருந்தார்கள் என்பதும், பௌத்த வேதமாகிய திரிபிடக நூல்களில் சிலவற்றிற்குத் தமிழ் நாட்டிலேயிருந்த தமிழ்ப் பௌத்தர்கள் உரை எழுதி யிருக்கிறார்கள் என்பதும் ஈண்டு நினைவு கூரற்பாலன.

இக்கட்டுரையினால், மணிபல்லவம் என்பதும் ஜம்புகோல் பட்டினம் என்பதும் ஒரே இடத்தைக் குறிப்பன என்பதும், மணிபல்லங்கம் என்னும் பெயர் தமிழில் மணிபல்லவம் எனத் திரிந்து வழங்கப்பட்டதென்பதும் விளக்கப்பட்டன. வாசகர், இக்கருத்து பொருத்தமுடைத்தென்று கருதினால் கொள்க; இன்றேல் தள்ளுக.

-

செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 23, பரல் 10, 1949

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல