Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பிராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம்.
நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு.
இக் கருத்தைப் பல நாள் ஆராய்ந்து பிராய்டின் கொள்கையினின்றும் மாறுபட்ட கருத்தை யுங் வெளியிட்டார். நனவிலி மனம் முற்றிலும் பாலியல்பு வாய்ந்தது என்பதை இவர் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. லிபிடோ என்பது மனிதன் உயிர் வாழ விரும்பும் ஆர்வத்தையே குறிக்கிறது என்று இவர் கருதினர். மேலும் பிராய்டு குறிப்பிட்ட இனம் அல்லது தொகுப்பு நனவிலி மனத்தைப் பற்றி இவர் விரிவாக ஆராய்ந்து பல புதிய கருத்துகளை வெளியிட்டார். யுங்கின் கொள்கைப்படி நனவிலி மனத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. சமூகம் ஏற்றுக்கொள்ளாத இச்சைகள் அனுபவங்கள் ஒரு பகுதியில் இருக்கும். மற்றொரு பகுதியில் அவனுடைய மூதாதையர் அனுபவங்களும், அவர்களுடைய இச்சைகளும் மறைந்து கிடக்கும். யுங்கின் மற்றொரு முக்கியமான கருத்து “நனவு மனத்திலிருந்து நனவிலி மனம் தோன்றவில்லை; ஆனால் நனவிலி மனத்திலிருந்தே நனவு மனம் தோன்றுகிறது” என்பதாகும். உடல் அமைப்பு எவ்வாறு ஒருவனுடைய மூதாதையரின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அதேபோல அவனுடைய மனத்தின் அமைப்பும் மூதாதையரின் மன அமைப்பைப் பொறுத்திருக்கிறதென்று யுங் கூறுகிறார். மனிதன் ஒரு பெரிய வண்டியைப் போன்றவன்; அந்த வண்டி அவனுடைய மூதாதையரையெல்லாம் சுமந்து செல்கிறது என்று இதை விளக்கிச் சொல்வதுண்டு.
நனவிலி மனத்தைப் பற்றி இவ்வாறு இரண்டு பகுதிகளாகக் கூறும்போது இங்கும் தனித்தனியாக இரண்டு பகுதிகள் இருப்பதில்லையென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனத்தில் நனவு மனம், நனவிலி மனம் என்று தனித்தனிப் பகுதிகள் இல்லை என்று முன்பு அறிந்துகொண்டதைப் போலவே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும்.
நனவிலி மனத்திலே இரண்டு விதமான ஆற்றல்கள் உண்டு என்றும் யுங் கூறியுள்ளார். அனிமா (Anima) என்று ஒரு ஆற்றலையும், மற்றொரு ஆற்றலை நிழல் (Shadow) என்றும் அவர் வழங்கினர். அனிமா ஆற்றலானது ஒருவனுடைய அகத்தையும் அதன் வழியாக அவனுடைய ஆளுமையையும் மேலோங்கச் செய்கிறது. அனிமா ஆற்றல் ஒருவனிடத்தில் திறம்பட வேலை செய்தால் அவனுக்கு எந்தத் துறையில் திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் அவன் சிறந்து விளங்குவான். கவிதை, இசை, சிற்பம் முதலான துறைகளில் புகழ்பெற அனிமா ஆற்றல் சிறப்பாக உதவுகிறது. அனிமா ஆற்றலுக்கு மாறான தன்மைகளை நிழலாற்றல் ஒருவனுடைய ஆளுமையில் தோற்றுவிக்கின்றது. காமுகனும், பிறரை வெறுப்பவனும் இந்த நிழல் ஆற்றலின் ஆதிக்கத்திலே இருப்பவர்கள் என்று கூறலாம்.
ஒருவனுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதோடு யுங் நின்றுவிடுவதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் அம்மனிதனுக்கு உரித்தான இடத்தையும் அறிந்துகொள்ளுமாறு செய்ய அவர் முனைந்தார். ஆகையால் மனித மனத்தின் இன்னும் ஆழமான பகுதிக்கு யுங் செல்கிறார் என்று நாம் கூற முடியும். ஆதலால் அவர் மேல்நாட்டு உளவியலார்களின் திறமையைக் கொண்டிருப்பதோடு பாரத தேசத்து யோகிகளின் உள்ளுணர்வு ஆற்றலையும் கொண்டிருந்தார் எனலாம். வெளி உலகத்திலிருந்து ஒருவனுக்கு ஏற்படும் அனுபவங்களை அவர் தெரிந்துகொள்ள முடிந்ததோடு மனத்திலே ஒலிக்கும் உள் ஒலியையும், மனத்திலே ஒளி விடும் ஆன்மாவையும் அவர் விளக்கிக் கூற முயன்றார். அதனாலேயே அவருடைய முறை விஞ்ஞான அடிப்படையாக இல்லை என்று பலர் கருத இடமளித்தது. ஒருவன் தன் வாழ்க்கையிலே வெற்றி காணாது தோல்வியடைந்த முயற்சிகளுக்கு ஈடு செய்யவே நரம்புக் கோளாறுகளும், கனவுகளும், பொய்க் கற்பனைகளும் தோன்றுகின்றன என்று யுங் கருதினார். லிபிடோ என்பதை பிராய்டை விட மிக விரிவான பொருளில் இவர் வழங்கினார். நரம்புக் கோளாறுகளை வெளியுலக அனுபவங்களின் வாயிலாக மட்டும் இவர் விளக்குவதில்லை. ஒரு மனிதனுடைய தனித்தன்மை வெளியுலக வெற்றி தோல்விகளால் மட்டும் முன்னேற்றமடைவதில்லை என்றும் ஆன்மிக முன்னேற்றமும் அதற்குக் காரணம் என்றும் அவர் எண்ணினர். மேலைநாட்டு உளவியல் அறிஞர்கள் சடப்பொருளை மட்டும் ஆராய்ந்தார்கள். கீழ்நாட்டு யோகிகள் சடப்பொருளை மாயை என்று விலக்கிவிட்டு ஆன்மாவுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஒருவனுடைய மனம் நல்ல முறையில் அமையவேண்டுமானால் இந்த இரண்டுமே மிக முக்கியம் என்று யுங் வலியுறுத்துகிறார், “நன்கு பண்பட்டு வளர்ந்த மனிதனொருவனுக்கு நனவு மனம் மிக விரிந்திருக்க வேண்டும். அவனுடைய நனவிலி மனம் மிகமிகச் சுருங்கி இருக்க வேண்டும்” என்று யுங் கூறியுள்ளார்.
ஒரு மனிதன் ஆரோக்கியமான மனத்தோடுகூடி இருக்கவேண்டுமானல் மதம் மிக முக்கியம் என்றும் யுங் கருதினார். மதமே ஒருவனுடைய ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றுகிறது. மதப் பற்றுடைய வாழ்க்கை குறைந்து வருவதாலேயே மனத்திலே அமைதியின்மையும், மனக்கோளாறுகளும் பெருகி வருகின்றன என்று யுங் அழுத்தமாகக் கூறினார்.
மனிதன் எதேச்சையாகத் திரிந்து வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். அவன் இப்பொழுது பெரிய பெரிய நகரங்களில் புதிய சூழ்நிலைகளில் வாழவேண்டியிருக்கிறது. அவசரமும், பரபரப்பும், வேகமும் மிகுந்த இந்த வாழ்க்கையானது அவனுடைய அமைதிக்குப் பாதகமாக நின்று புதிய புதிய மனக்கோளாறுகளையும் மனநோய்களையும் விளைவிக்கின்றன. நாட்டுப் புறங்களிடையே வாழும் மக்களிடையேயும், ஆதிவாசிகளாக உள்ள மக்களிடையிலேயும் இத்தகைய கோளாறுகள் காணப்படினும் நகரத்தின் நாகரிக வாழ்க்கையில் உள்ளவர்களிடையே காணப்படுதைப் போல அத்தனை மிகுதியாக இக்கோளாறுகளை அவர்களிடையே காண முடியாது.
நரம்புக் கோளாறுகளையும், படபடப்பையும் கட்டுப்படுத்துவதற்கென்று நரம்புகளுக்கு மயக்கத்தை அளிக்கும் பலவகையான மருந்துகள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. உறக்கத்திற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் இல்லாவிட்டால் இன்று பலரால் இரவிலே உறங்கவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமை மாற வேண்டுமானல் மன அமைதிக்கான வழிகளை நாம் பின்பற்றவேண்டும். தியானம் என்பது மனத்திற்கு மிகப் பெரிய அமைதியளிக்கும் சாதனம் என்று ஞானிகள் பழங்காலத்திலிருந்தே கூறியுள்ளார்கள். இன்று மஹரிஷி மஹேஷ் யோகி என்ற பெரியார் இமயமலைச் சாரலிலே தியான நிலையம் ஒன்றை அமைத்து மக்களுக்குத் தியானத்தின் பெருமையை உணர்த்த முற்பட்டிருக்கின்றார். எளிதாக எல்லாரும் பின்பற்றக்கூடிய தியான முறையை அவர் வகுத்து அதில் மக்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். உலகிலுள்ள பல நாட்டு மக்களும் அந்நிலையத்திற்கு வந்து பயிற்சி பெறுகிறார்கள்.
உலகப் புகழ்வாய்ந்த கலைஞர்களும் தங்களுடைய பழைய வாழ்க்கையிலே சலிப்படைந்து இந்தத் தியான நிலையத்தை நாடுகிறார்கள் என்றால் தியானத்தின் பெருமையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஆட்லரும், யுங்கும் பிராய்டின் கருத்துகளை முற்றிலும் ஏற்க மறுத்துத் தனித்தனியே பிரிந்து விட்டார்கள் என்பதைக் கண்டோம். பொதுவாகப் பார்க்குமிடத்து பிராய்டின் கருத்தே பெரியதோர் அளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் யுங்கின் கொள்கையானது மேல்நாட்டு உலோகாயுதக் கொள்கைக்கும், கீழ்நாட்டு ஆன்மிகக் கொள்கைக்கும் பாலம் அமைத்து இரண்டையும் பிணைத்து இரண்டும் மனிதனுடைய முழுமையான வாழ்விற்குத் தேவையானவையே என்று காட்டுவதாக அமைந்துள்ளது.
ஆட்லரின் கொள்கை மிக எளிமையானது; சிக்கலற்றது; எல்லாருக்கும் எளிதில் புரியக் கூடியது. அதனால் பலர் அதை வரவேற்றார்கள். அதனாலும் பல நன்மைகள் உண்டாயின. யுங்கின் கொள்கை மதப் பற்றுடையவர்களுக்கு உகந்ததாகப்பட்டது. பொதுவாக இக்காலத்தில் இரண்டுமே மனப் பகுப்பியலை மேலும் விளக்க உதவின. யுங்கின் கொள்கை, மனத்தைப் பற்றி அறிய மனத்தின் ஆழத்திற்குள்ளே முழுகிப் பார்க்க உதவி செய்கின்றது என்று கூறலாம்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...

('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.) அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது . ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார் . நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன் . அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன் , அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன் . ( இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் ) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன் . அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர் , “ எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம் ! அந்த நாட்கள் மறைந்துவிட்டன . இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன் . இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் ” என்றதும் அவருட