Skip to main content

க. நா. சு. மொழிபெயர்ப்புக் கவிதைகள்


நான்
லாரா ரைடிங்

காற்று வீசி வீசிக் கஷ்டப்படுகிறது.
கடல்நீர் நிறைந்து அவதியுறுகிறது.
நெருப்பு எரிந்து எரிந்து கஷ்டப்படுகிறது.
நான் கஷ்டப்படுவதோ எனக்கு ஒரு தனிப்பெயர் ஏற்பட்டுவிட்டதனாலே தான்.
கல் கடினத்தினாலும்
ஒளி ஒளியினாலும்
பறவைகள் பறப்பதினாலும் அதுபோல
நான் என் என்மையால் கஷ்டப்படுகிறேன்.
இதற்கு முடிவு என்ன? மாற்று என்ன?
துயரமில்லாதிருப்பது எங்கே? எப்படி?
இதைவிடச் சிறந்த நிலை எனக்கு எப்போது ஏது?
என்று நான் நானுக்கும் அதிகமாவது?
துயர் உலகம் அதிக உலகமாகவும்
குறைந்த துயராகவும் ஆவதற்கு வழி எது?
விழும் மழை ஈரத்துடனும் ஈரமேயில்லாமலும்
விழுவது எங்கே? எந்தப் பிரதேசத்தில்?
இன்னும் அதிகம் இறந்து
அதிகம் வாழ்வு தேட வேண்டும்
அதிக துயரத்திலே
செழுமை வாழ்வு தேட வேண்டும்.

நத்தை
ஃபெடரிகோ கார்சியா லோர்க்கா

நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
எல்லையுள்ள ஒரு கடல்.
என் உள்ளத்திலே
நீர் நிரம்புகிறது.
அதிலே நிழலும் ஒளியுமாக
சிறு மீன்கள் நீந்துகின்றன.
என்னிடம் நத்தை ஒன்று
கொணர்ந்து தந்தார்கள்.

மடக்கு நாற்காலிகள்
குந்தர் க்ராஸ்

இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கிவிடுகிறோம்
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் - கறி சமைக்கிறோம்.

இந்த நாற்காலிகள் நிலையில்லாமல்
நகருவதையே விளம்பரப்படுத்துகின்றன.
மடக்கு நாற்காலிகளைத் தூக்கிக்கொண்டு
ஜனங்கள் இடம் விட்டு இடம் பெயர்கின்றனர்.

வீட்டு நினைவுகளையும் வாந்தி யெடுக்கும்
மக்களையும் சுமந்து வரும் கப்பல்களில்
பேடண்ட் எடுத்த நாற்காலிகள்
பேடண்ட் பண்ணாத மனிதர்களைச் சுமக்கின்றன.

இங்கும் அங்கும் போய்ப்போய்
கடலின் இரு கரையிலும் மடக்கு நாற்காலிகள்
தோன்றிவிட்டன! மாறுதல்கள்
எத்தனை துயரம் தருவன!

பீட் கவிதை
ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

''எந்த ஜந்து தன்னைத்தானே பெற்றுக்கொள்கிறது?"
பிரபஞ்சமே பைத்தியக்காரத்தனமானதுதான்.
-சற்றே பைத்தியக்காரத்தனமானது தான்.

இரண்டு பக்கங்களிலும்
இரண்டு பிராக்கட்டுகளாக
நகர்ந்து சுழண்டு விழுந்துவிடும்
-விழுந்து இறந்து விடும்.

குருடான லோகத்தாலான குழாய்
ஜில்லிட்டுத் தரையில் கிடக்கிறது
தலையும் வாலும் இல்லாமல்
புல்லிலே
கால் விரல்களை
லேசாக ஆட்டுகிறது.

ஆயிரங்கால் பூச்சியின் கறுப்புத்தலை
பல அங்குலங்கள் நகர்ந்து
மச்சு பிச்சுக் கோயில் படியேறி
வால் அப்பால் கிடப்பதைக்
காண எட்டிப் பார்க்கிறது.
பிரபஞ்சத்தின் தலையும் வாலும்
மூன்றாகத் துண்டிக்கப்பட்டன.

[சந்தியா பதிப்பகம் வெளியிட்ட 'க.நா.சு. கவிதைகள்' என்ற நூலில் உள்ள ஐந்து மொழிபெயர்ப்பு கவிதைகள் இவை. அனைத்தும் 'இலக்கிய வட்டம்' இதழில் வெளியானவை. 'வேஷம்' (31.7.64) தவிர மற்ற கவிதைகளுக்கு பிரசுர தேதி குறிப்பிடவில்லை.]

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...