Skip to main content

பூதானமும் ஆதாரக் கல்வியும் | மு. அருணாசலம்

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
1957இல் வினோபா அவர்கள் தஞ்சைக்குப் பூதான யாத்திரையாக வந்தபோது, ஒருநாள் காலையில் சென்று பார்த்தேன். (பார்த்த நாள் 23-1-57) கூட்டம் அதிகமாக இருந்தபடியால் சற்றுத் தூரத்திலேயே இருந்தேன்.
சர்வோதயம் ராமசாமி அவர்கள், “அருணாசலம் வந்திருக்கிறார்என்று அறிவித்தார். வினோபா அருகில் வரும்படி சொல்லவே, சென்றேன். காது அவருக்குக் கொஞ்சம் கேட்கவில்லை. எந்த அருணாசலம்? மூனாவா?” என்று கேட்டார். ஆம்என்று சொன்னேன்.
அதற்கு முன் அவரோடு அதிகம் நெருங்கிப் பேசிப் பழகியிருந்தும், பத்து ஆண்டுகளுக்கு அதிகமாய்க் கடந்துவிட்டன. இருந்துங்கூட, அவர் என்னை ஞாபகம் வைத்திருந்து மூனாஎன்று அடையாளம் குறிப்பிட்டது மாத்திரமல்லாமல், 1945-46 ஆண்டுகளில் நான் பவுனார் சென்று அவருக்குக் கம்பராமாயணப் பகுதிகளைப் படித்துக் காட்டியதை நினைவுபடுத்திக்கொண்டு, “நன்றாக ஞாபகமிருக்கிறதுஎன்றார்.
அடுத்து, இயல்பாக டி.கே.சி. அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. சென்னையில் ஒரு சமயம் டி.கே.சி. அவர்களைத் தாம் சந்தித்துப் பேசியதைப் பற்றி அப்போது குறிப்பட்டார். குறிப்பிட்ட சம்பவம் மிகவும் சுவையுடையது.
அப்போது சில நண்பர்கள் டி.கே.சி. அவர்களை அழைத்துக்கொண்டு வினோபாவிடம் ஹிந்திப் பிரசார சபையில் பார்க்கச் சென்றிருந்தார்கள். டி.கே.சி. வினோபாவுக்குத் தமிழ்மொழியின் கவிதைச் சுவையைத் தனிப்பாடல்கள் மூலமாகவும் கம்பராமாயணம் மூலமாகவும் எடுத்து உணர்த்திக்கொண்டிருந்தார். அவர்களுடைய உணர்ச்சிப் பெருக்கில் வினோபா மூழ்கித் திளைத்தார்.
அந்தக் காலத்தில் அவர் திருக்குறளை ஆர்வத்தோடு படித்துவந்தார். டி.கே.சி.யை நோக்கிக் கேட்டார்: திருக்குறளை மூல பாஷையில் நான் படித்துப் பூர்ணமாய்ச் சுவைப்பதற்கு வழியென்ன?”
பளிச்சென்று டி.கே.சி. பதில் சொன்னார்: அடுத்த பிறப்பில் தமிழனாய்ப் பிறப்பதொன்றுதான்.
கேட்டவர்கள் திகைத்துவிட்டார்கள். வினோபா எவ்வளவு பெரியவர், சுலபமான புத்தகம் ஒன்றைச் சிபாரிசு செய்யாதபடி, டி.கே.சி. இப்படி எடுத்தெறிந்து பேசிவிட்டாரே!என்று அவர்களுக்கெல்லாம் கொஞ்சம் வருத்தமும்கூட.
ஆனால் வினோபாவோ, டி.கே.சி.யின் கருத்தை மனமார ஒப்புக்கொண்டார். திருக்குறளில் டி.கே.சி.க்கு எவ்வளவு ஈடுபாடு என்பதையும், அது எவ்வளவு பெருமையுடையது என்பதையுமே அவர் சொற்கள் காட்டினஎன்று வினோபா அப்பொழுது சொன்னார்.
பிறகு அவர் என்னைக் கேட்டார்: டி.கே.சி. கம்பராமாயணத்தை அனேகர் சரியல்ல என்கிறார்களே? செருகு பாடல் என்று நூற்றுக்கணக்கான பாடல்களைத் தள்ளிவிட்டுச் சில பாடல்களை எடுத்து இவை மாத்திரம் கம்பனுடைய பாடல் என்று சொல்லுகிறாரே? இதுபற்றி உங்களுடைய கருத்தென்ன?” என்று கேட்டார்.
அதற்கு நான் சொன்னேன்: கம்பருடைய பாடலில் நூற்றுக்கணக்கான செருகு பாடல்கள் உள்ளன என்பது உண்மை. கம்பர் காலத்திலேயே கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் ஏற்பட்டுவிட்டன. அதற்கு அவர் சரித்திரத்திலேயே ஒரு கதையும் சொல்லுவதுண்டு.
கம்பராமாயண காலட்சேபம் ஒன்று நடப்பதைக் கேள்வியுற்று கம்பர் அங்கே போனாராம். காலட்சேபம் முடிந்தபின் பாகவதர், “கம்பராமாயணம் எப்படியிருக்கிறதுஎன்று இவரைக் கேட்டாராம். அதற்குக் கம்பர், “இந்தப் பிரசங்கத்தில் கம்பனுடைய சில பாடல்களும் காணப்படுகின்றனஎன்று விடை கூறினாராம்.
இந்தக் கதையை நான் சொல்லி, “இந்த ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. கம்பனுடைய பாடல்கள் என்று டி.கே.சி. எடுத்துக்காட்டும் பாடல்களை நன்றாகச் சுவைக்கத் தெரிந்துகொண்டால் போதுமானதுஎன்றேன்.
உண்மைதான்என்று அவர் ஒப்புக்கொண்டதோடு, “நீங்கள் குறிப்பிட்ட கதையைத் தம் கம்பராமாயணப் பதிப்பின் முகவுரையில் டி.கே.சி. எழுதியிருக்கிறார்என்றும் எடுத்துக்காட்டினார்.
அடுத்தபடியாக டி.கே.சி. அடிக்கடி கூறும் கருத்தொன்றை எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. கடவுள் அடியார்க்கு எளியன்என்ற திருநாமத்தைத் தாங்கியவன். தாகுர் கடவுளைப் பற்றிக் குறிப்பிடும்போது ஓரிடத்தில், “கடவுளே, நீ நல்ல கவிதையைப் போல மிகவும் எளியனாயிருக்கிறாய்என்று குறிப்பிட்டார். இதை டி.கே.சி. அடிக்கடி சொல்லுவது வழக்கம். இதை அப்போது வினோபாவிடம் சொன்னேன். உடனே அவர் இந்தக் கருத்து ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லி, தம் அருகில் இருந்த ரிக் வேத புத்தகமொன்றை எடுத்து அதில் சம்பந்தப்பட்ட பகுதியைப் படித்துப் பொருள் விளக்கினார். உதயம் கவிதையைப் போல அவ்வளவு அழகுடையதாகவும் இன்பந்தருவதாகவுமிருக்கிறதுஎன்பது அங்கு காணப்பட்ட கருத்து.
அப்போது அங்கு நிரம்பத் தமிழ் கற்றுத் தமிழாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஓர் அன்பர் வந்தார். ராமாயணத்தைப் பற்றிப் பேசியபொழுது, அவர் சிந்தாமணியின் சிறப்பைச் சொல்லி, “ராமாயணத்தைவிடச் சிறப்பானது சிந்தாமணி. சிந்தாமணியிலிருந்து கம்பன் கடன் வாங்கியிருக்கிறான்என்றெல்லாம் சொல்லத் தொடங்கினார். அதை கேட்டு இடைமறித்து நான், “அப்படியல்ல, சிந்தாமணியில் ஏதோ ஒன்றிரண்டு வரிகள் நன்றாக இருக்கக்கூடும். கம்பராமாயணமோ வரிகள் மாத்திரமல்ல பாடல்கள், கட்டங்கள், படலங்கள், பாத்திரங்கள் யாவுமே மிகவும் சுவையும் உணர்ச்சியும் எளிமையும் தனி உருவமும் பொருந்தியன. இந்த அம்சமே கம்பனுக்குள்ள தனிச்சிறப்புஎன்று விளக்க ஆரம்பித்தேன்.
ஆனால் அதற்கிடையில் வினோபா குறுக்கிட்டு, “நீங்கள் இருவருமே பண்டிதர்கள். அந்தப் பெயருக்குப் பொருத்தமாகவே சண்டையில் இறங்கிவிட்டீர்கள்என்று வேடிக்கையாகச் சொன்னார். நான் விடாமல், “கம்பருடைய சிறப்பு எல்லாம் எளிமை என்பதுதான். கம்பனுடைய பாடல்கள் எளிமை என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் அமைந்தவை  என்று குறிப்பிட்டேன்.
வினோபா நம் பண்டைக்காலப் பெரியோர்கள் அல்லது ரிஷிகளுக்கு உதாரணமாய்ச் சொல்லத்தக்கவர். அடக்கமும், பணிவும் உருவெடுத்தவர். இவற்றோடு, புதிதாக எதையும் சந்தர்ப்பம் நேரும்போது அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர். இதைக் காட்டுகிற சந்தர்ப்பமொன்று அடுத்து நிகழ்ந்தது.
“‘கல்விச் சிந்தனைகள்பார்த்தீர்களா? எப்படியிருக்கிறது? அபிப்பிராயம் சொல்லுங்கள்என்று கேட்டார். புத்தகம் நன்றாயிருக்கிறது. சர்வோதயத்தார் சிரத்தையோடு செய்திருக்கிறார்கள். விஷயப் பெருமையைப் போற்றும் தகுதி எனக்கு இல்லை. ஆனால் உபயோகித்திருக்கும் அச்சைப்பற்றி எனக்கு ஒரு குறைஎன்றேன்.
என்ன குறை?”
இந்த எழுத்து, செங்குத்தாய் நேரே நிற்கிற எழுத்து. தமிழின் இயல்பு, எழுத்துக்கள் நேரே நிற்பதன்று, சாய்வாய் நிற்பதாகும். எப்போதும் நாம் இடமிருந்து வலம் நோக்கிப் படிக்கிறோம். தமிழ் எழுத்தில் உள்ள சாய்வு நம் கண்ணுக்கு உதவியாக இருக்கிறது. எப்படியோ ஆதி காலத்தில் தமிழில் அச்செழுத்து வார்த்தவர்கள் எழுத்தைக் கொஞ்சம் வலம் சாயும்படி வார்த்திருக்கிறார்கள். சாதாரணமான படிக்கிற எழுத்தாகிய பைகாஎழுத்து இப்படி அமைந்திருக்கிறது. இது நமக்குக் கிடைத்த ஒரு பெரிய அனுகூலம். படிக்கிற பகுதியின் இடையில் அபூர்வமாக நேர் எழுத்து வந்தால் குற்றமில்லை. ஆனால் எழுத்துக்கள் யாவும் நேரே நிற்பது இதுவரையும் நமக்கு ஏற்பட்டுள்ள தமிழ் எழுத்துணர்ச்சிக்குக் கேடாக உள்ளது. நாளுக்கு நாள் வளர்ச்சி வேண்டும், முன்னேற்றம் வேண்டும். எழுத்துச் செய்பவர்கள் படைப்பது எல்லாம் முன்னேற்றமாகாது. சில சமயம் எழுத்துணர்ச்சிக்கு முரணாகவும் அவர்கள் எழுத்துச் செய்துவிடுகிறார்கள். இந்தப் புது எழுத்துக்கள் அப்படிப்பட்டவை. புதிதாக இருக்கவேண்டும் என்று அவர்கள் செய்கிறார்கள். செய்தது விற்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் அச்சுக்கூடத்தினரிடம் இந்த எழுத்தே மேல் என்று சொல்லி விற்கிறார்கள். புத்தகம் வெளியிடுபவர்கள் அச்சைப் பற்றி அதிகம் சுய அபிப்பிராயம் வைத்திராமையால், புதியதே நல்லது என்றெண்ணிப் புது எழுத்து உபயோகிக்கிறார்கள். நாலுபேர் உபயோகித்த பின் இந்த எழுத்து நல்ல எழுத்து என்று பெயர் வாங்கிவிடுகிறது. பிறகு அச்சுப் போடுவோர் ஆட்சேபிக்க முடிவதில்லை. முடிந்தால் ஆட்சேபிக்கிறவர் பைத்தியக்காரர். தவிர, அச்சுக்கூடத்தில் நல்லது என்று நாம் இதுவரை கருதிவந்த பழைய அச்சுக்களைக் கழித்துவிடுகிறபடியால், அதுவும் மாதிரிக்குக்கூட இல்லாமற் போகிறது. கேடான புதியதுதான் மிச்சம். நண்பர் ராமசாமி இந்தத் தர்மசங்கடத்தில் அகப்பட்டுத்தான் இப்படிப்பட்ட எழுத்தில் அச்சுப் போட்டிருக்கிறார்என்று விரிவாக விளக்கி முடித்தேன்.
நான் பேசியதெல்லாம் தமிழில், வினோபா பேசுவதெல்லாம் இந்தி. நாங்கள் இருவரும் ஆங்கிலம் பேசுவதில்லை என்று முன்னொரு சமயம் ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம். என் தமிழைப் புரிந்துகொண்டு அவர் ஹிந்தியில் பேசுவார். அவர் பேசிய ஹிந்தியைப் புரிந்துகொண்டு நான் தமிழில் பேசவேண்டியவன். எனக்குப் புரியக்கூடிய விதமாக, முயன்று அவர் சுலபமான இந்தியில் சிறு வாக்கியங்களாகப் பேசுவார். நானும் கவனமெடுத்து, பேச்சு நடையில் கடின சொற்கள் இல்லாமல் கொச்சைப் பிரயோகமும் இல்லாமல், எளிதான தமிழில் பேசுவேன். ஆதலால் எங்கள் சம்பாஷணை பார்ப்போருக்கு ஒரு விசித்திரம் என்று தோற்றினாலும் எங்களுக்கு எளிதாகவே இருந்தது.
என்னுடைய கருத்தைக் கேட்ட பின் அவர் பழைய பைகாஎழுத்தைக் காட்டும்படி சொன்னார். என் கையில் தற்செயலாக அப்போது அப்படிப்பட்ட எழுத்தில் அச்சிட்ட எனது தமிழ்ப் புத்தகமாகிய தோட்ட வேலை ஆசிரியர்என்பது இருந்தது. எடுத்துப் பிரித்துக் காட்டினேன். அவர் இதையும் புது எழுத்தில் அச்சிட்டுள்ள தமிழ்ப் புத்தகத்தையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தார். பார்த்த பின், “நீங்கள் சொல்லுவது சரிஎன்று ஒப்புக்கொண்டார்.
***
சாதாரணமாக அப்போது அவர் செய்துவந்த பூதான யாத்திரையில் வேலை அதிகம். ஓய்வு குறைவு. ஆதலால் யாரிடமும் அவர் தனிப்படப் பேசியது குறைவு. ஆயினும் இச்சந்தர்ப்பத்தில் நான் எடுத்துக் காட்டியது ஆராய்ச்சிக்குரிய விஷயமாதலால் நெடுநேரம் இந்த ஆராய்ச்சியில் செலவிட்டார். உடன் இருந்தோர் பலருக்கு - அவர் கோஷ்டியினருக்கும், நம்மவர்க்கும் கூட - இது வியப்பாகவே இருந்தது.
பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்: இப்போது என்ன வேலை நடந்துவருகிறது?”
நான் திருச்சிற்றம்பலத்தில் காந்தி வித்தியாலயத்தில் நடந்துவரும் வேலைகள், ஆதாரக் கல்வித் துறையில் நான் வெளியிட்டுள்ள புத்தகங்கள், இவை பற்றிக் கூறினேன். அப்போதுதான் நான் வெளியிட்டிருந்த தோட்ட வேலை ஆசிரியர்என்ற புத்தகம் ஒன்றையும் அவரிடம் கொடுத்தேன்.
புத்தகத்தைக் கையில் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு, அவர் சொன்னார்: நீங்கள் பூதானத் துறையில் புத்தகம் எழுதவேண்டும். ஆதாரக் கல்வித் துறையில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் பயன்படும்படியாக, பூதானத்தையும் ஆதாரக் கல்வியையும் ஒற்றுமைப்படுத்திப் புதுப் புத்தகங்கள் எழுதுங்கள்என்றார்
எனக்குத் திகைப்பாயிருந்தது. எப்படி?” என்று கேட்டேன்.
காலம் மாறிவருகிறது. ஆதாரத் தொழில் நூற்றல்என்று நான் புத்தகம் எழுதினேன் அல்லவா? அது நெடுநாளைக்கு முன், ஆதாரக் கல்வியே தெரியாத காலத்தில்; இப்போது ஆதாரத் தொழில் பூதானம்என்று நீங்கள் புத்தகம் எழுதுங்கள்என்றார்.
அதெப்படி முடியும்? நூற்றல் கையால் செய்கிற ஒரு தொழில். அத்தொழிலை இயைபுபடுத்தி ஒரு புத்தகம் எழுதினீர்கள். ஆனால் பூதானம் ஒரு தொழில் அல்லவே! அது ஒரு தத்துவம் அல்லது வேதாந்தம் அல்லவா? அதைப் பற்றிப் பிரசாரம் செய்யலாம். ஆனால் தொழிலாக வைத்து ஆதாரக் கல்வி போதிப்பதெப்படி? முடியாதேஎன்றேன்.
என் அப்படி நினைக்கிறீர்கள்? நன்றாக முடியும். பூதானம் என்பது வெறும் தொழில்தானா? எவ்வளவோ மேல்படியிலுள்ளது. பூதானம் - அதனால் வரும் நிலம், நிலம் அளத்தல், தீர்வை முறைகள், சாகுபடி முறைகள், சமநிலை உணவுக்கான திட்டம், அதற்கான பலவகைப்பட்ட பயிர்த் தொழில், இவற்றுக்கான திட்டம், கூட்டுறவு முறைகள், இது பற்றிய சமூக வேலைகள், நன்செய், புன்செய், தோட்டக்கால், விறகு, பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பழம், காய்கறி, ஆடு மாடுகள் வளர்ப்பு, கருவிகள் செய்தல், உரம் தயாரித்தல், இவற்றிலிருந்து பிறக்கும் தொழில்களான தோல் பதனிடுதல், எண்ணெயாட்டுதல் போன்றன - இவற்றில் எல்லாப் பாடங்களையும் கற்பதற்கு எவ்வளவு சந்தர்ப்பங்கள் உள்ளன என்று பாருங்கள். பூதானம் என்பது மக்களைப் பொறுத்த விஷயம். புதிய சமுதாய சிருஷ்டி என்று சொன்னால் குற்றமில்லை. சமூக நூல் அரசியல் போன்ற எல்லா வாழ்க்கை விவகாரங்களையும் உயர்ந்த வகுப்புக்கள் முடியக் கற்பிப்பதற்குப் பூதானத்திலும் சிறந்த அடிப்படை இருக்கமுடியாது. இது பற்றி எழுத எனக்கு மிக்க ஆசை. ஆனால் நேரமில்லை. நீங்கள் அவசியம் இது செய்ய வேண்டும்என்று வற்புறுத்திச் சொன்னார்.
பின்னர் இதையொட்டிக் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடைபெற்று வெளிவந்தேன். வினோபாவோடு தஞ்சை ஜில்லாவில் பூதான யாத்திரை செய்துவந்த நண்பர் அனேகர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். நான் அவருடன் பேசிவந்த பேச்சை நிரம்பப் பாராட்டினார்கள். எனக்குக் காரணம் ஒன்றும் விளங்கவில்லை. அதன் மேல் அவர்கள் சொல்லலானார்கள்: ஐயா, தஞ்சையில் பூதான யாத்திரை செய்ததில் பூஜ்ய வினோபாவுக்கு மனச்சோர்வு அதிகம். திட்டமிட்டபடி வேலைகள் நடைபெறவில்லை. உத்தேசித்த நன்கொடைகள் கிடைக்கவில்லை. அதனால் மனவருத்தம். பல நாட்களாக அவர் ஊக்கமாய்ப் பேசியே நாங்கள் பார்க்கவில்லை. இன்றுதான் இரண்டு மணிநேரம் உங்களோடு பேசிய காலம் ஊக்கமாயிருந்தார். தமிழ், இலக்கியம், கல்வி, ஆதாரக் கல்வி என்று பேசித் தம்மை மறந்திருந்தார். உங்களைக் கண்டவுடனே அவருக்குத் தம்மை மறக்கும்படியான உணர்ச்சி ஏற்பட்டது. இது மிகவும் வியக்கத்தக்கது. இதன் பொருட்டு உங்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்என்று கூறினார்கள்.
***

(நிறைவு)

Comments

Most Popular

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு