Skip to main content

வினோபாவும் துப்புரவும் | மு. அருணாசலம்

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
முந்தைய பகுதி: வினோபாவும் தமிழும்
1946ஆம் ஆண்டில் பவுனாரில் ஜம்னாலால் பஜாஜின் இடமாகிய பரந்தாம்என்ற மாளிகையில் வினோபா தங்கியிருந்தார். அக்காலத்தில் அவர் ஈடுபட்டிருந்த முக்கிய வேலைகள் மூன்று: முதலாவது, மாணாக்கருக்கு வடமொழி கற்பித்தல், தாம் பிற மொழிகள் கற்றல், ஆராய்தல்; இரண்டாவது, கிராமங்களில் வாழ்ந்த ஏழை மக்களிடையே துப்புரவு, சுகாதாரத்துக்கான பழக்க வழக்கங்களை உண்டாக்குதல்; மூன்றாவது, நூற்றல் தொழிலில் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பயன்படக்கூடிய ஆராய்ச்சி செய்தல். அவ்வாண்டு சேவாகிராமத்திலிருந்து நான் பவுனார் சென்று அவரைப் பார்த்தபோது, பிந்திய இரண்டு அம்சங்களையும் நன்கு எடுத்துக்காட்டவல்ல சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
1946ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி இரண்டு நண்பர்களுடன் பவுனார் சென்றேன். ஐந்து மைல் தூரம். வயல், வரப்பு, முட்புதர், சப்பாத்திக்கள்ளி காரை இண்டஞ்செடி - இந்தப் பாதைதான். எவ்விதச் சாலையும் இல்லை. ஆனால் வழிநெடுகிலும் கொய்யாத் தோட்டங்களில் பெரிய பழங்கள் பழுத்து உதிர்ந்திருந்தன. வேலியடைப்பு பெரும்பாலும் காணப்படவில்லை. தோட்டத்தினுள் நுழைந்தால், தோட்டக்காரனே வந்து, நமக்குத் தின்பதற்கு பழங்கள் கொடுக்கிறான். தின்னும் பழத்துக்கு அவன் காசு வாங்குவதில்லை. கையில் எடுத்துக்கொண்டு போனால்தான் காசு தரவேண்டும். மிக மிக வறுமை நிறைந்த மக்கள். அவர்களிடை இத்தகைய தரும சிந்தை - உபகார உணர்ச்சி - காணப்பட்டது மிக்க ஆச்சரியமாயிருந்தது.
இரவு ஏழு மணிக்குப் பவுனார் அடைந்தோம். வினோபா தங்கிய மாளிகை, பவுனார் என்ற பெயருடைய சிற்றாற்றின் கரையில் அமைந்திருந்தது. வெளியே போயிருந்த வினோபா சற்று நேரத்துக்கெல்லாம் வந்தார். வினோபாவின் சீடரான சத்தியன் என்பவர் என்னுடன் வந்திருந்து என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கொஞ்சநேரம் பேசியிருந்துவிட்டு, பின் வினோபா பிரார்த்தனை நடத்தினார். அவர் பேசுவது மெதுவாக இருந்தாலும், பிரார்த்தனை நடத்துவது மிகவும் கம்பீரமாக இருக்கும். மராத்தி பஜனைப் பாடல்கள் அதிகம் பாடினார். இன்றுள்ள பஜனை முறையே மராத்தியில்தான் பிறந்ததென்பது உண்மை. அவர் அன்று பாடியவற்றுள்,
விட்டல டால விட்டல டண்டி
விட்டல தோண்டி விட்டால
என்பது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முடிந்தபின் போய்ப் படுத்துக்கொண்டோம். கடுங்குளிர். நான் போர்த்தக் கொண்டுபோயிருந்த மெல்லிய கம்பளிப் போர்வை குளிரிலிருந்து என்னைக் காப்பாற்றவில்லை. மிகவும் கஷ்டப்பட்டேன் என்பது உண்மை.
அவருடைய மாணாக்கரில் ஒருவர் என் அருகே படுத்திருந்தார். மறுநாளைய வேலைத்திட்டம் பற்றிப் பேசினார். நாளை வெள்ளிக்கிழமை காலையில் துப்புரவு வேலைக்குப் போய்விடுவார். வேலை, இங்கிருந்து ஐந்து மைல் தூரத்திலுள்ள சூர்காம் என்ற ஊரில் நடக்கிறது. யாரையும் எதிர்பார்க்காமல் அவர் காலை நான்கு மணிக்கு எழுந்து பிரார்த்தனை நடத்திவிட்டு மண்வெட்டியைத் தோளில் சாத்தியபடி போய்விடுவார்என்று அவர் சொன்னார். கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டேன்.
காலை நான்கு மணி அடித்தது. எழுந்தோம். அவசரமாய்க் கடன்களை முடித்துவந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டோம். முடிந்ததும் வெளிவந்து சுமார் ஐந்து நிமிஷம் பேசிக்கொண்டு நின்றிருப்போம். திடீரென்று நினைத்துக்கொண்டு, நாமும் சூர்காம் செல்வோம் என்று முடிவு செய்து வினோபாவைப் பார்த்தால், காணவில்லை. சூர்காம் நோக்கிச் சென்றிருப்பார் என்று அந்த மாணாக்கர் சொன்னார். சொல்லிவிட்டு, “அவரைத் தேடி நீங்கள் சென்றால் திரும்பி வர மணி 12 ஆகும். ஆதலால் ஏதேனும் உணவருந்திச் செல்லுங்கள்!என்று உபசரித்து உணவு கொடுத்தார். என்ன உணவு தெரியுமா? தயிரும் வெல்லமும்; அவ்வளவே.
விரைந்து இந்த விசித்திர உணவை அருந்திவிட்டு, சூர்காம் நோக்கிச் சென்றோம். மிக்க வேகமாக நடந்து பாதித் தூரத்துக்கு மேல் வந்தபின் அவரைப் பிடித்தோம். அவரோ, தோளில் மண்வெட்டியைச் சாத்தியபடி நிதானமாக நடந்துகொண்டிருந்தார்.
வழி நெடுகிலும் மிக்க சுவையுடைய பேச்சு. முக்கியமாக வசன நடை பற்றி. வசன நடை பேச்சையொட்டித்தான் இருக்கவேண்டும். நேர்முகமாய்ப் பொருளை எடுத்துக்கூறி, கேட்போர் கருத்து முழுமையும் உணர்ந்துகொள்ளுமாறு அமைய வேண்டும். ஆனால் பேச்சில் ஒலி இருக்கிறது. ஒலியின் ஏற்றத் தாழ்வு இதனால் வரும் பாவம் - இவை பேச்சில் உள்ளன. எழுத்தில் இவை அமையமாட்டா. ஆகவே வசன நடை பூரணப் பயன் பெறவேண்டுமானால், அதில் அழகு அமைய வேண்டும். பேசுகிறபடியே மட்டும் எழுதினால் போதாதுஎன்றார் வினோபா.
இடையில் தமிழ் இலக்கணம் பற்றிய பேச்சு வந்தது. வினைச்சொல்லில் இரண்டு வகை; ஒன்று, செயப்படுபொருள் உடையது; மற்றது இல்லாதது. ஆனால் தமிழ் இலக்கணத்தில் இவ்விரண்டுக்கும் முறையே செயப்படுபொருள் குன்றா வினை, செய்யப்படுபொருள் குன்றிய வினை என்று பெயர் சொல்லுகிறோம். செயப்படுபொருள் உடைய வினைக்கு ஏன் செயப்படு பொருள் குன்றா வினை என்று எதிர்மறையாகப் பெயர் சொல்லுகிறீர்கள்? இது சற்றே வினோதமாக இல்லையா?” என்று கேட்டார். உண்மைதானே? இதற்கு விடையென்ன?
***
நடந்துகொண்டேயிருந்தோம். பவுனாரிலிருந்து ஒரு சிறு மண் சாலை வழியாகச் சுமார் நான்கு மைல் ஆகிவிட்டது. சாலை வழியே சென்றுகொண்டிருந்த வினோபா, திடீரென்று ஓரமாகப் போய்த் தம் கையிலிருந்த மண்வெட்டியால் தரையைச் சுரண்ட ஆரம்பித்தார். பேச்சின் சுவையில் ஈடுபட்டே வந்துகொண்டிருந்த நான், முதலில் அவர் செயலைக் கவனிக்கவில்லை. கவனித்த பிறகுதான் அவர் செயல் விளங்கிற்று. சாலையோரமாக மக்கள் மலங்கழித்திருந்தார்கள். அவர் மண்ணைச் சுரண்டி அதன் மேல் போட்டு மூடிக்கொண்டே வந்தார்.
செய்த செயலில் அவர் காட்டின தீவிரமும் ஒருமித்த உணர்வும், “சற்று நிறுத்துங்கள், இவ்வேலையைச் செய்கிறோம்என்று முன்னுக்கு வந்து சொல்லும் தைரியம் எங்களுக்கு இல்லாதபடி செய்துவிட்டன.
வினோபா இவ்வேலை தொடங்கியதும், ஊர் நெருங்கிவிட்டது, இவ்வூரே சூர்காம் என்ற கிராமம் என்று அறிந்தோம். மேலும் அரை மைல் தூரம் சென்றோம், ஒரு தொண்டர் வந்தார். அவர் கையில் சாம்பல் நிறைந்த வாளியொன்று, ஒரு மண்வெட்டி; அவர் வினோபாவின் சீடரென்றும், அவ்வூரில் வாழ்பவர், கிராமத் துப்புரவுத் தொண்டில் வினோபாவுக்கு அங்கு உதவுபவர் என்றும் அறிந்தோம்.
சென்ற ஆறு மாத காலமாக வினோபா சூர்காம் கிராமத்தில் துப்புரவுப் பணி செய்துவருகிறார். வாரமொரு முறை அதிகாலையில் மண்வெட்டி சகிதமாக வந்து சேர்வார். ஊர் எல்லையில் இந்தத் தொண்டர் அவரை எதிர்கொண்டு வேலையில் உதவுவார்.
சூர்காம் தமிழ்நாட்டுக் கிராமங்களைப் போன்ற ஒரு சீர்கேடான பட்டிக்காடு. சூர்காம் என்பது சூரன் கிராமம். ஒருகால், தமிழருடைய முருகப்பெருமான் அழித்த சூரன் (சூரபதுமன்) இவ்வூரில் தங்கியிருந்து அது காரணத்தால் ஊர் இப்பெயர் பெற்றதோ என்னவோ!
சூரபதுமன் என்னத்தக்க ஆபாசங்களை ஒழிக்கவே வினோபா அங்கு உழைத்துவந்தார். பொதுவாக நம் நாட்டில் எங்கும் சாலையோரம், ஆற்றங்கரையோரம் போன்ற இடங்களில் காலையில் மக்கள் சாதாரணமாக மலஜலங் கழிக்கிறார்கள். இதைவிட ஒரு நாட்டு மக்களுக்கு இழிவான செயல், நாகரிகம் என்ற அம்சத்தைப் பொறுத்தவரையில், வேறு இருக்கமுடியாது. இந்த ஊரில் இந்த நிலைமை இன்னும் கேவலமாக இருந்தது. ஊரிலிருந்து வெளியே வரும் இந்தச் சாலையில் காலை ஏழரை மணி வரையில் சுமார் முந்நூறு பேருக்குக் குறையாமல் வெளிக்குப் போய்க்கொண்டிருப்பார்கள். ஆண்களும் அப்படி, பெண்களும் அப்படி. சாலையில் போவோரைக் கண்டால் பெண்கள்கூட எழுந்திருக்கமாட்டார்கள். இவர்களுக்காக இங்கு மலக்குழிகள் பல வெட்டிக்கொடுத்தும் பயன் ஏற்படவில்லை. பிறகு நான் வேறு ஒரு முறையை அனுசரித்தேன். ஒருவர் வெளிக்குப் போகிறார் என்றால், காலையில் எதிர்ப்புறத்தில் நான் தோளில் மண்வெட்டியைப் பிடித்தபடியே நின்றிருப்பேன். அவர் எழுந்தவுடன் சென்று, மண்வெட்டிப் போட்டு மலத்தை மூடுவேன். எல்லோருக்கும் இது பெரிய தொந்தரவாயிருந்தது. ஏதடா, இவனொரு பிராமணன், இப்படிக் கூடவே வந்து நிற்கிறானே என்ற சங்கட உணர்ச்சியால், காலையில் இங்கு வந்து மலஜலம் கழிப்போர் தொகை குறைந்துவிட்டது. நீங்களே பார்க்கிறீர்கள், முந்நூறு பேர் வந்த இடத்தில், இப்பொழுது சுமார் பத்துப் பேர்தான் வருகிறார்கள். சுமார் இரண்டு மணிநேரம் குனிந்த தலை நிமிராமல் வேலை செய்துவந்த நான், இப்பொழுது கொஞ்ச நேரம் நிமிர்ந்தபடியே வேலை செய்து முடித்துப் போய்விட முடிகிறது. இந்த அளவுக்கு இது இச்சிற்றூரில் பெருத்த வெற்றி என நான் கருதுகிறேன்என்றார்.
இதற்குள் ஊர் வந்துவிட்டது. வினோபாவும் அவர் சீடருமாக, சாலை முழுமையும் மலத்தை எடுத்துச் சாம்பல் தெளித்துக்கொண்டே வந்துவிட்டார்கள். ஊரினுள் நேரே சாலை வழியே அவர் போகவில்லை. இடப்புறமாகத் திரும்பி, ஊரிலுள்ள வீட்டுத் தோட்டங்களின் பின்புறமாக வினோபா சென்றார். ஏன் தெரு வழியே செல்லவில்லை?” என்று கேட்டேன்.
நாம் இப்போது கிராமப் பிரதட்சிணம் செய்யப்போகிறோம். முன்னெல்லாம் இறைவன் தங்குகிற ஆலயப் பிரதட்சிணம் செய்வார்கள். இப்பொழுது நாம் மக்கள் தங்கி வாழ்கிற கிராமப் பிரதட்சிணம் செய்கிறோம். தெருவிலுள்ள அசுத்தம் கொஞ்சம் குறைவாயிருக்கும். இங்கு தோட்டத்தின் பின்புறம் ஒரு சிற்றாறு ஓடுகிறது. ஆற்றங்கரை ஒதுப்புறமாயிருக்கிறபடியால் இங்கு அசுத்தம் அதிகம். கிராமப் பிரதட்சிணம் என்று சொல்லும்போது, இந்த அசுத்தத்தைத் நீக்கித் துப்புரவு செய்வதை மனத்தில் வைத்தே சொல்லுகிறேன்என்று வினோபா பதில் கூறினார்.
அசுத்தம் செய்கிற மக்களுக்குத் துப்புரவு உணர்ச்சி உண்டாக்க வேண்டி, அவர்கள் வாழும் இடத்துக்கு அருகிலேயே, ஆற்றங்கரையின் பக்கமாக, அவர்கள் ஒதுங்கும் இடத்தை ஒட்டி, அவர் ஒரு பெரிய மலக்குழி அமைக்கச் செய்திருந்தார். இது நீண்ட குழி. இருபது அடி நீளம் ஆறடி ஆழம். அகலம் மூன்றடி. இதை நாற்புறமும் பனை ஓலையால் அடைத்து நெடுகிலும் குறுக்கே ஆறங்குல இடை வெளி விட்டுச் சட்டங்கள் போட்டிருந்தார். மலஜலம் கழிப்பவர் இரண்டு சட்டங்களில் வந்து உட்கார வேண்டியது; மலஜலம் கழித்தவுடன் மண்போட்டு மூடவேண்டும். சிலர் மண்போட்டு மூடாத குறையைத் தொண்டர் தீர்த்துவந்தார். தினம் மூன்று முறை அவர் பிரதட்சிணம் செய்யும்போது, குழியில் மண் போட்டு மூடி, , கொசு மொய்க்காதபடி காப்பாற்றி வந்தார். ஓரளவுக்கு இந்த முறை வெற்றி தந்ததை நாங்கள் கண்டோம். கொஞ்சம் கொஞ்சமாக ஊரார் இவற்றை உபயோகித்து வந்தனர். முன்னே பார்த்தபடி சாலையில் மனித அசுத்தம் குறைந்தது. ஒரு கிராமத்தைத் துப்புரவு ஆக்க அவர் ஆறு மாதத்துக்கு மேலாகச் செய்த முயற்சி சிறிதளவு வெற்றி தந்தது உண்மை.
வலமாகச் சென்ற நாங்கள் அவரைத் தொடர்ந்து அவர் வேலையிலும் பங்குகொண்டு, சுமார் முக்கால் மணி நேரம் ஆகி, தொடங்கின இடத்துக்கே வந்து சேர்ந்தோம். இடையில் அவர் தம் மண்வெட்டியை எங்களிடம் தரவில்லை. தொண்டர் கொண்டுவந்திருந்த கருவியை நாங்கள் அவ்வப்போது சற்று நேரம் இரவல் வாங்கிக்கொண்டோம்.
பிரதட்சிணம் முடிந்த இடத்தருகே ஒரு கோயில். அங்கு ஒரு கொடி வணக்கம் நடந்துகொண்டிருந்தது. நடத்தியவர் வினோபாவின் சீடரும், நூற்பில் வல்லவருமான வல்லப் பாய் என்பவர். பள்ளிக்கூடம் இல்லாத அவ்வூர்ப் பிள்ளைகளைக் கூட்டி அவர் அவர்களுக்குக் கல்வியும், நூற்பும், துப்புரவும் பழக்கிக்கொண்டிருந்தார். வினோபாவின் விருப்பப்படி அவர் சூர்காமிலேயே அப்போது தங்கி வேலை செய்துவந்தார். நாங்கள் அவ்விடம் வந்த சமயம் பிள்ளைகள் கொடி வணக்கப் பாடல் பாடினார்கள். பாடல், ‘ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாராஎன்பது. நாங்கள் அவர்களை அணுகின சமயம் அவர்கள் பாடின வரிகள் தற்செயலாக ப்யாரே வீரோ ஆவோஎன்பன. (இதன் பொருள், ‘நம் வீரர்களே, வாருங்கள்.’)
ஆடம்பரமில்லாத, ஊக்கம் அளிக்காத, சோர்வே தருவதாகிய, சமூக சேவை செய்வது யாருக்கும் எளிதன்று. உண்மையில் இன்று நம் சமூகத்தில் இத்தகைய சேவைக்கு மிகுந்த மனவுறுதியும் ஆண்மையும் தேவை என்பதில் ஐயமில்லை. எனவே இத்தகைய ஆண்மை நிறைந்த சேவை செய்த வினோபாவை வீரரே வாருங்கள்என்று அழைப்பது போல் அந்நேரப் பாடல் அமைந்திருந்தது முற்றிலும் பொருத்தமேயாகும்.
பிள்ளைகளுக்குச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, பின் வல்லப பாயிடம் பேசவேண்டியவற்றைப் பேசிவிட்டு, வினோபா பவுனார் நோக்கித் திரும்பினார். நாங்களும் திரும்பினோம். அந்தக் கிராமப் பிரதட்சணம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது.
திரும்பி வரும் பாதையில் ஒரு சிறு நீர்க்கால் சாலையின் குறுக்கே ஓடிற்று. வினோபா தம் தோளில் சாத்திய மண்வெட்டியைக் கீழிறக்கி நீரில் அலம்பினார். உடன் வந்த நண்பர்களுள் ஒருவரான ருத்ரப்ப சுவாமி தாம் அந்த மண்வெட்டியை வாங்கிக்கொள்ளப் போனார். சிரித்தபடியே வினோபா சொன்னார்: மண்வெட்டி என்னுடைய ஆயுதம். ஆயுதத்தைப் பிறர் சுமக்க யாராவது கொடுப்பதுண்டா? பரசுராமனுடைய பரசை மற்றவர் யாரேனும் சுமப்பதுண்டா? பரசு உடையவர் பரசுராமன். அவர்போல நான் மண்வெட்டிராமன்என்றார். சொல்லியதெல்லாம் ஹிந்தி மொழியில். மண்வெட்டிராமன் என்பது மட்டும் தமிழில் சொன்னார். இந்த வாதத்துக்குப் பதில் சொல்ல முடியுமா?
கேட்ட நாங்கள் சிரித்தபோதிலும், கருத்தின் ஆழத்தை உணர்ந்து வியந்தபடியே மிச்சமுள்ள தூரமும் நடந்து பவுனார் வந்தடைந்தோம்.
பிற்பகல் நடந்த மற்றொரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. சுமார் நான்கு மணி இருக்கும். மாணாக்கர் சிலருக்கு அவர் வடமொழி கற்பித்துக்கொண்டிருந்தார். அச்சமயம், சுற்றுப்புறத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து சில ஆசிரியர்களும், சுமார் ஐம்பது பிள்ளைகளுமாக வந்திருந்தார்கள். வினோபாவைத் தரிசித்து அவரிடம் சில வார்த்தைகள் கேட்டுப்போக வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். முன்னதாக அவர்கள் வர அனுமதி பெற்றுக்கொள்ளாதபடியால், வினோபா தம் வேலையை நிறுத்திவிட்டு அவர்களை வந்து பார்க்க இணங்கவில்லை. எனினும், பள்ளிக்கூடப் பிள்ளைகள் திரளாக வந்திருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டி, அவருடைய மாணாக்கர் அவரை இணங்கும்படி செய்தார்கள்.
கட்டிடத்தின் பின்புறத்தில் ஒரு தாழ்வாரம், அதில் சில படிகள். படிகளின் கீழே பிள்ளைகள் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். அனைவரும் மராத்திப் பிள்ளைகள். வினோபா வந்தார். வந்தவுடன் ஆசிரியர்களைப் பார்த்து, இப்படி அனுமதி பெறாமல் வந்து பிடிவாதம் பிடித்தது தவறு என்றும், அதனால் தம்முடைய வேலைகள் கெடுகின்றன என்றும் அவர் எடுத்துக்காட்டினார். பிள்ளைகளைப் பார்த்தவுடன் அவர் மனம் கொஞ்சம் மாறிற்று. வெறும் ஏட்டுப்படிப்பு அடிமை நிலையை வளர்ப்பது, அது எங்களுக்கு வேண்டாம்என்று பொருள்படும்படியாக இரு வரிகளை அமைத்துப் பாடினார்:
பரஸ்வாதீன் ஜினணி புஸ்தக வித்யா
நைகாமாசி, நைகாமாசி, நைகாமாசி
என்று அவர் பாட, பிள்ளைகள் அனைவரும் கூடவே பாடினார்கள். தனித்தனியாக ஒவ்வொரு பிள்ளையையும், பெண்ணையும் பாடச் சொன்னார். ஒவ்வொருவரும் பாடினர். ஒவ்வொரு பிள்ளையின் வாழ்க்கையிலும் அன்றைய சம்பவம் மறக்கமுடியாத நிகழ்ச்சியாயிற்று.
வினோபா பாடினார் என்று சொல்வது போதாது. அவர் எதைச் சொன்னாலும் பேசினாலும், பாட்டுடன் ஆட்டமும் கலந்தேயிருக்கும். அன்று அவர் ஆட, ஆசிரியர்களும், பிள்ளைகளும் ஆடினார்கள். பஜனையும் ஆட்டமும் மராத்தியர்களுக்கு இயல்பு. ஆகவே, அன்றைய பாட்டும் ஆட்டமும் எவ்வளவு கோலாகலமாயிருந்தன என்பதை நேரில் கண்டவர்களே உணரமுடியும்.
இந்தக் கோலாகலத்தைக் கேட்ட வினோபாவின் மாணாக்கரொருவர் உள்ளிருந்து வெளியே வந்தார். அவர் கையில் ஒரு கம்பியிருந்தது. அச்சமயம் வினோபாவின் மேற்பார்வையில் அவர் ஓர் ஆராய்ச்சி நடத்திவந்தார். சாதாரணமாக அப்போதெல்லாம் பருத்தியிலிருந்து விதையை நீக்கிப் பஞ்சைப் பிரித்தெடுக்க வேண்டி, ‘கைமனைஎன்ற ஒரு கருவியில் பருத்தியை அரைப்பது வழக்கம். இது 6-7 வயதுடைய குழந்தைகள் செய்யமுடியாத கடின வேலை. இச்சிறு பிள்ளைகள் இவ்வேலை செய்வதற்கு வழி என்ன என்ற ஆராய்ச்சி அப்பொழுது நடந்துவந்தது. கீழே ஒரு பலகையை வைத்து அதில் பருத்தியை வைத்து ஓர் இருப்புக் கம்பியால் அழுத்தி உருட்டினால் பஞ்சு நிற்கும், விதை நீங்கும். இது பலகை மணையும் கம்பியும் என்ற குழந்தைகள் முறை; இப்போது பாட சாலைகள் நன்கு அறிந்த முறை. ஆனால் வினோபா 1946இல் இதற்கான சோதனை நடத்திக்கொண்டிருந்தார்.
உள்ளிருந்த மாணாக்கர் சோதனையிலிருந்தபடியே கையில் பிடித்த கம்பியுடன் வெளியே வேடிக்கை பார்க்க வந்ததைக் கண்ட வினோபா, இச்சோதனையைப் பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் செய்து காட்டலாம் என்று எண்ணினார். தாழ்வாரத்தில் ஒரு பலகை போடச்செய்து, அதில் அம்மாணாக்கரை வந்திருந்து தாம் பஞ்சு பிரிக்கும் முறையையும் பட்டை போடும் முறையையும் செய்து காட்டச் செய்தார்.
ஒரு பருத்திச் சுளையை எடுத்தார். அது வேலிப்பருத்தி. எட்டுக்கொட்டை. ஐந்து வயதுப் பிள்ளைகளும் இருந்த படியால், கொட்டைகளை ஒன்று, இரண்டு என்று எட்டு வரையில் எண்ணிக் காட்டினார். ஒன்றில் அபூர்வமாய்ப் பத்துமிருந்தது. ஒரு பையனை எண்ணச் சொன்னார். எல்லோருக்கும் எண்ணத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டுப் பட்டையை எடுக்கச் செய்தார். இதற்குள் முதல் பட்டை தயாராயிற்று. அதைக் கையில் எடுத்தார். பட்டை ஏழங்குல நீளமிருந்தது. இது என்ன?” என்று பிள்ளைகளைக் கேட்டார். இது பஞ்சுப்பட்டைஎன்ற பதில் வந்தது.
பட்டையல்ல. இது ராமன். இப்பட்டை எவ்வளவு விறைப்பாய், நேராய் வளையாமல் நிற்கிறது பாருங்கள். நீங்களும் ராமன் போல் நிமிர்ந்து நிற்கவும், உட்காரவும் வேண்டும்என்றார். வளைந்த முதுகுகளெல்லாம் நிமிர்ந்தன.
அடுத்த பட்டை தயாராகிவிட்டது. அது ஆறங்குலமிருந்தது. இது லக்ஷ்மணன்என்றார். இரண்டையும் இரண்டு கையில் பிடித்துக்கொண்டு இந்தமாதிரி நீங்கள் எப்போதும் நிமிர்ந்திருக்க வேண்டும்என்று காட்டினார்.
மூன்றாவது பட்டை தயாராயிற்று. ஐந்து அங்குலம். அதையும் எடுத்து முதல் கையில் பிடித்தார். இதைப் பாருங்கள். இது ஜானகி. இப்பொழுது மூன்று பட்டைகள். மூன்றும் ராம, லக்ஷ்மண, ஜானகி. நான் பாடுகிறேன். நீங்களும் பாடுங்கள்என்று சொல்லிவிட்டுப் பாடலானார்.
ராம லக்ஷ்மண ஜானகீ
ராம லக்ஷ்மண ஜானகீ
பட்டைகளைக் கையில் பிடித்தபடியே பிள்ளைகள் மத்தியில் சென்று சுழன்று சுழன்று பாடி ஆடலானார். உட்கார்ந்தவர்கள் அனைவரும் ஆடினார்கள். என்னுடன் வந்திருந்த ஈங்கூர் முத்துசாமியும் கும்மாளம் போட்டுக்கொண்டு தம்மையறியாமல் ஆடிக்கொண்டிருந்தார்.
இவ்விதமாக, அன்று பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் ஒரு சிறந்த அனுபவம் ஏற்பட்டது. பட்டை போடும் பயிற்சி மட்டுமல்ல. அதிலிருந்து உடற்பயிற்சியில் கவனம், கணிதம், பாட்டு, ஆட்டம் ஆகிய எல்லாம் பிறந்தன.
மற்றொன்று. பட்டையைப் பார்த்த உடனே அது தெய்வபக்தி நிரம்பிய வினோபாவின் உள்ளத்தில் ராமனாகவும் லக்ஷ்மணனாகவும் சீதையாகவும் காட்சி கொடுத்ததையும் கண்டோம்.
பின்னர் நேரமாகவே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு திரும்ப சேவாகிராமம் வந்து சேர்ந்தோம்.

***

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...

('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.) அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது . ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார் . நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன் . அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன் , அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன் . ( இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் ) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன் . அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர் , “ எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம் ! அந்த நாட்கள் மறைந்துவிட்டன . இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன் . இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் ” என்றதும் அவருட