Skip to main content

வினோபாவும் தமிழும் | மு. அருணாசலம்

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
சேவாகிராமத்துக்கு அருகிலுள்ள பவுனார் என்ற சிற்றூரில் ஒரு தனி வீட்டில் வினோபா வாழ்ந்துவருகிறார். இந்திய நாட்டின் பாஷைகள் பலவற்றைக் கற்பதும், தம்முடன் வசிக்கும் ஊழியர் சிலருக்குச் சம்ஸ்கிருத மொழி கற்பிப்பதும், நூல் நூற்பது பற்றித் தக்கிளியிலும், ராட்டையிலும் பலவகை ஆராய்ச்சிகள் நடத்துவதுமே அவருக்கு இப்பொழுது பொழுதுபோக்கு.
வினோபா பாவேயின் பெயர், 1940ஆம் வருஷம் காந்தியடிகள் சர்க்காரின் யுத்தக் கொள்கையை எதிர்க்கும் முகத்தால் தொடங்கிய தனிப்பட்டோர் சத்தியாக்கிரக இயக்கத்தால்தான் இந்நாட்டுக்கே முதன்முதலில் தெரியவந்தது. முதல் சத்தியாக்கிரகியாக, காந்தியடிகள் இவரையே அனுப்பினார். நெடுங்காலம் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திலும், சேவாகிராம் ஆசிரமத்திலும் வாழ்ந்து, சத்தியம், அஹிம்சை என்ற தத்துவங்களில் பூரணமாய் இவர் தோய்ந்திருந்தார்.
பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரப் பிராமணரான வினோபா, தம் தாய்மொழியான மராத்தி மொழியில் புலமை மிக்க பண்டிதர். தாம் எழுதிய நூல்கள் யாவும் மராத்தியில்தான் எழுதினார். காசி சென்று சம்ஸ்கிருதம் பயின்றார். அவருடைய கல்வியின் ஆழத்தையும், வாழ்க்கையின் எளிமையையும், உள்ளத்தின் சீலத்தையும் நன்கு உணர்ந்தவர்கள், அவரை மகரிஷி என்றே சொல்வார்கள்.
வினோபா தமிழ்மொழியை நன்கு பயின்றுவருகிறார் என்று நான் சேவா கிராமம் வருமுன், சென்னையிலேயே கேள்வியுற்றிருந்தேன். இங்கு வந்தபின், ஒரு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு கிடைத்தபோது, சில நண்பர்களோடு, அவரைப் பார்க்கப் பவுனார் சென்றேன். என்னை அவருக்கு அறிமுகப்படுத்திவைத்த நண்பர், காசி ஹிந்து விசுவ வித்தியாலயத்தில் நான் புரொபஸர்ஆக இருந்தவன் என்று கூறினார்.
, பேராசிரியர்?” என்று சிரித்துக்கொண்டே கூறி, வினோபா என்னை வரவேற்றார். பிறகு என்னுடைய தமிழ்ப் படிப்பையும் நூல்களையும் செய்துவரும் வேலையையும் விசாரித்தார். நான் சொல்லிவந்தேன்.
அவர் கேட்ட கேள்விகள் யாவும் ஹிந்தி மொழியில்; நான் பதில் சொல்லியது ஆங்கிலத்தில்; ஹிந்தி பேசத் தெரியாமையால் இந்த நிலைமை எனக்குச் சங்கடமாயிருந்தது. இதை அவரே உணர்ந்து, “நீங்கள் தமிழிலேயே பேசுங்கள்; பேசுவது எனக்கு நன்றாய்ப் புரியும். காதில் கொஞ்சம் தமிழ் சப்தமாவது விழட்டும்; எனக்கு மிக்க உற்சாகமாயிருக்கும். அன்றியும், எனக்குள்ள சொற்பத் தமிழறிவும் மறந்துபோகாமல் காத்து வளர்த்துக்கொள்ள இது உதவியாயிருக்கும்என்று கூறினார்.
தமிழில் பேசுவது, இதைவிட எனக்கு அதிக உற்சாகம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. தமிழில் சொல்லியது ஒவ்வொன்றையும் மிகவும் நுட்பமாய்த் தெரிந்துகொண்டு பேசினார். பேசிக்கொண்டிருக்கையிலேயே, எழுந்து ஓர் அலமாரியைத் திறந்து, தாம் வைத்திருந்த பாரதியார் பாடற் புத்தகத்தை எடுத்துக் கையில் கொடுத்தார். புத்தகத்தைப் பிரித்தால், அவர் படித்துக் குறிப்பெழுதிய இடங்களும், அடையாளமிட்ட இடங்களும் பல காணப்பட்டன. குறிப்புக்கள் அவர் தாய்மொழியான மராத்தி மொழியில் இருந்தன.
புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டிக்கொண்டிருந்தபோது படியுங்கள்என்று சொன்னார். எதைப் படிப்பது?” என்று கேட்டேன். புத்தகத்தைக் கையில் வாங்கி, ‘பகைவனுக் கருள்வாய்என்ற பாடலை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவருக்குப் பாட்டில் விருப்பமதிகம். நான் பாடவேண்டுமென்று அவர் எண்ணினார். எனக்குப் பாடத் தெரியாமையால், வசனம் போல் வாசிக்கத்தான் முடிந்தது. இதையும் அவர் விருப்பத்தோடு கேட்டுவந்தார். சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தியறியாயோ?’ என்ற வரி வந்தபோது, ‘சிப்பிஎன்பது என்னவென்று உடனிருந்தவர்களிடம் ஆங்கிலத்திலும், மராத்தியிலும் விளக்கம் சொன்னார். பிறகு, “முத்து என்பது சம்ஸ்கிருதத்தில் முக்தம் என்று வழங்குகிறது. வடநாட்டில் முத்துக் குளிக்கும் தொழில் இல்லை. இது தென்னாட்டில் கீழ்க்கடற்கரையில்தான் உண்டு. இத் தொழில் தமிழ் மக்களுக்குத்தான் உரியதாயிருந்தது. ஆதலால் சொல்லும் அவர்களுடையதாகத்தான் இருக்கவேண்டும்என்று தாமாகக் கூறினார்.
இதன் பின் பல பாடல்கள் படித்தோம். முக்கியமாய்க் குறிப்பிடத்தக்கவை, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘விடுதலைஎன்பன. பிந்திய பாட்டில் அவர் மிகவும் ஈடுபட்டார். ஒருமுறை படித்துக்காட்டியபோது, அவரும் பாடிவந்தார். அதன்பின் இரண்டாம் முறையாக, “நான் படிக்கிறேன் கேளுங்கள்என்று சொல்லிப் படிக்க ஆரம்பித்தார்.
'படிக்க' என்று நான் சொல்வது பிழை; உண்மையில் பாடத்தான் பாடினார். பறையருக்கும் தீயருக்கும் புலையருக்கும் விடுதலைஎன்ற இந்தப் பாட்டு கம்பீரமாய்த் தாளத்தோடு பாடக்கூடியது. காங்கிரஸ் தொண்டர் படைகள் காலையில் அணிவகுத்துச் செல்லும்போது, இப்பாடலைத் தாளத்துக்கிசையப் பாடி அடிவைத்துச் செல்வார்கள்.
என்னுடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவர் இதில் பழகியவர். இந்த முறையில் நண்பர் ஒரு தடவை படித்ததை வினோபா மிக்க கவனமாய் ஊன்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்; கேட்டது மட்டுமன்று, உடன் தாளமும் போட்டுவந்தார். ஆகவே, மறுமுறை தாமாகப் படிப்பதாய்ச் சொன்னபோது, இத்தாளத்தைத் தொடர்ந்து போட்டுக்கொண்டு பாடலானார்.
அவருக்கு வயதோ ஐம்பதுக்கு மேலாயிற்று. காலமோ கடுங்குளிர்காலம். தமிழ் மொழியோ, முற்றிலும் அன்னிய மொழி. எனினும் அவர் பாடியபோது, ஒவ்வொரு சொல்லும் சீரும், ஆணியறைந்தாற் போலக் கணீரென்றும் ஒலித்தன. முதிர்ந்த பிராயத்தில் யாருக்கும் குரல் கொஞ்சம் கனத்திருக்கும்; ஆனால், இயல்பாகவே அவர் குரல் அந்த வயதிலும் மிக்க கம்பீரமாய்க் கணீரென்று ஒலித்தது. அந்தக் குரலில் அவர் இந்தப் பாட்டைப் பாடியபோது, அவருடைய அளவில்லாத உற்சாகமும் கலந்து, கேட்டோருக்கு மிக்க மனவெழுச்சி தருவதாயிருந்தது. ஜாதியில் இழிவுகொண்ட மனிதரென்பதிந்தியாவில் இல்லையேஎன்று புத்தகத்தில் அச்சிட்டிருந்தது. இதை அப்படியே ஒரு முறை பாடிவிட்டு, ‘மனிதர் என்பது இந்தியாவில்என்றுதானே சந்தி பிரிக்க வேண்டும்?” என்று கேட்டுவிட்டுப் பின்னும் படித்தார்.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்என்ற வரியைப் படித்தபின், ‘கொளுத்துவோம்என்ற சொல்லின் பொருளைத் தெளிவாக்கிக்கொண்டார்; பின் அதே வரியைப் பலமுறை படித்தார். படிக்குந்தோறும் தாளம் நிற்கவில்லை. கூட இருந்த மராத்தியர்கள் எல்லோரும் பாட்டு தெரியாவிட்டாலும் பொருள் தெரியாவிட்டாலும் கூட தாளம் போட்டுக்கொண்டேதான் இருந்தனர்.
இப்பாட்டு முடிந்தபின், ‘சுதந்திரப் பள்ளுஎன்ற பாடல் படித்தோம். அதன் தலைப்பில் போட்டுள்ள பள்ளர் களியாட்டம்என்ற குறிப்பின் பொருளைக் கேட்டார். அதை நன்றாய் விளக்கிய பின், பாடல் முழுமையும் படித்தோம். அதில் பல இடங்களில் அவர் மனம் ஈடுபட்டது. சிறப்பாக, ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்ற கருத்தை அவர் மிகவும் பாராட்டினார். அன்றும், மறுநாளும் அடிக்கடி அவ்வரியையே சொல்லிக்கொண்டிருந்ததுண்டு. பாட்டின் கடைசியில் அமைந்த வரி, அன்று நாங்கள் படித்த பகுதிகளுக்கெல்லாம் முடிவுரையாக அமைந்தது.
முதலில் அவர் எங்களைப் படிக்கும்படி சொன்ன பாடல், ‘பகைவனுக்கருள்வாய்என்ற பல்லவியோடு தொடங்குகிறது. உத்தம சத்தியாக்கிரகியான வினோபாவின் மனம் இந்தப் பாடலில் ஈடுபட்டதில் வியப்பில்லை. பகைவனிடத்தில் கோபம் கொள்வதோ, அவனுக்கு ஹிம்சை செய்வதோ, நினைப்பதோ உண்மையான அஹிம்சையாகாது. உத்தம அஹிம்சாவாதியான கிறிஸ்து நாதர், “பகைவன் உன்னை ஒரு கன்னத்தில் அடித்தால், மற்றொரு கன்னத்தையும் அவனிடம் காட்டுஎன்று கூறினார்; இது தனக்கு உண்மையிலேயே கோபம் பிறவாதிருக்கும் பொருட்டுச் செய்த உபதேசமாகும். இதேபோல பாரதியாரும், ‘தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய்என்று தம் நெஞ்சுக்குக் கூறி, பகைவனுக்கு அருளும்படி, அதாவது அன்பு காட்டும்படி, சொல்லிய உபதேசம் வினோபாவின் உள்ளத்தையே திறந்து காட்டியது போலிருந்தது.
இந்தப் பாடலோடு தொடங்கிய அன்றைய பேச்சு, ‘பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்என்ற வரியோடு முடிந்தது, எல்லா விதத்திலும் பொருத்தமாயிருந்தது.
இவ்வரியையே பலமுறை அவர் திருப்பித் திருப்பிப் பாடி இதிலேயே திளைக்கலானார்.
***
இவ்விதக் கருத்தொற்றுமைகளால் வினோபாவுக்கு, பாரதி பாடல்களில் விருப்பமதிகம். இவ்விருப்பத்துக்கு வேறொரு காரணமும் உண்டு. அதையும், மறுநாள் சந்தர்ப்பம் வந்தபோது விளக்கமாய்க் கூறினார்.
காலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, திடீரென அவர் சொல்லலானார்: நான் படித்த ஒரு சுலோகத்தின் கருத்து ஞாபகம் வருகிறது. தோண்டத் தோண்ட மணலில் நீர் சுரக்கிறது. அதுபோல, குருவினிடம் மாணாக்கன் கற்கக் கற்கப் புது விஷயங்களை அறிகிறான் என்பது அக்கருத்து. இதேபோல் நீங்கள் தமிழில் ஒரு பாடல் சொல்லமுடியுமா?” என்று கேட்டார். தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவுஎன்ற திருக்குறளை எடுத்துக்காட்டினேன். கேட்டு அவர் மிகவும் நன்றாயிருக்கிறது என்று அனுபவித்தார்.
பிறகு தமிழ் நூல்கள் சம்பந்தமாகப் பேச்சுத் தொடங்கிற்று. தமிழிலேயே ஒப்பற்ற தனிப்பெருமையுடைய நூல் திருக்குறள் என்றும், எந்த மொழிக்கும் இந்நூல் பெருமை தருமென்றும் விவரித்துக் கூறினேன். பின்னர், பக்தித் தேன் நிறைந்து ததும்புகின்ற அருட்பாசுரங்களான தேவார திருவாசகங்கள் குறிப்பிடத்தக்கவை என்றும் இத்தகைய விரிவான பக்தி இலக்கியம் வேறெந்த மொழியிலுமே காண்பற்கில்லையென்றும் கூறினேன். அடுத்தபடி, காவியம் என்ற முறையில் கம்ப ராமாயணத்தின் தனிச்சிறப்பையும், அதன் கவிதைச் சுவையையும் சிறிது எடுத்துக்காட்டினேன். கேட்டுவந்த வினோபா பேசலானார்.
நீங்கள் கூறிய இலக்கியங்கள் யாவும் எவ்வளவோ பழமையானவை. இவ்வளவு விரிவான இலக்கியம் பலநூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டிருப்பது, தமிழுக்கே பெருமை. ஆனால் நான் இவற்றைப் படித்து அனுபவிப்பதில் சில தடைகளும், கஷ்டங்களும் உள்ளன. திருக்குறள் உயர்ந்த நீதிநூல்தான்; வடமொழி படித்த எனக்கு அக்கருத்துக்கள் பழக்கமாயிருக்கின்றன. திருவாசகம் முதலான அருட்பாசுரங்களை இசையோடு பாடவேண்டும். ஆகவே இசைவல்லாரே எனக்கு அவற்றைக் கற்பிக்கத் தக்கார். இனி, திருக்குறள், கம்ப ராமாயணம் என்பவற்றின் முழுப்பொலிவையும் அவற்றின் கவிதைச் சுவையில் காணலாமென்றால், அது ஓரளவு தமிழனாய்ப் பிறந்திருந்தால் முடியுமேயன்றி, வேற்றுமொழிக்குரியவனான என்னால் அவ்வளவையும் அனுபவிக்க முடியாது. கவிதைச் சுவை அந்தந்தப் பாஷையோடு ஒட்டியது. தவிர, இந்த நூல்கள் யாவும், பழைய நூல்கள். சொற்கள், இலக்கணம், முதலியன பழமையாயிருத்தல் பற்றி முழுமையும் என்னால் உணரமுடிவதில்லை. ஆதலால், இவற்றையெல்லாம்விட, பாரதியார் பாடலில்தான் எனக்கு மனம் அதிகமாய்ச் செல்லுகிறது. பெரும்பாலும் அவருடைய பாடல்கள் இன்றைய பேச்சு நடையில் உள்ளன. சொற்களில் கஷ்டம் குறைவு. தவிர, பாட்டிலமைந்த கருத்துக்களும் இன்று நம் வாழ்க்கையோடு தொடர்புடையவை. ஆதலால் நானாகப் படிப்பதென்றால், பாரதியார் பாடல் படிக்கத்தான் மனம் செல்கிறது. நான் தமிழ் படித்ததெல்லாம் வேலூர் சிறையில் கொஞ்சகாலம் இருந்தபோது. மற்றபடி, பண்டை இலக்கியங்களை யாரேனும் எடுத்துச்சொல்லி எனக்குக் கற்பித்தால், நான் கற்கத் தயாராயிருக்கிறேன்.என்று சொன்னார்.
வால்மீகி, கம்பர் பற்றிய பேச்சு அடுத்து இயல்பாக எழுந்தது. ராமாயணத்தைப் பாடிய வால்மீகி, பகவானுடைய சரித்திரமாகவே தம் நூலைப் பாடினார். அது ஒரு பக்தி காவியம். பாத்திரங்களின் குணவிசேஷங்களைச் சித்தரித்துக் காட்டுவது அவர் நோக்கமன்று. ஆனால், கம்பருடைய காவியமும் இதிகாசமாயிருந்தபோதிலும், அவருடைய சாதனை வேறு. தெரிந்த ராமகதையில் வரும் ஒவ்வொரு பாத்திரத்தையும் தனிமனித உருவமும் குண விசேஷங்களும் உடையதாக அவர் சித்தரித்தார். குணவிசேஷம் என்றால், குறைவும் உண்டு நிறைவும் உண்டு. ராமன் பகவான் எனினும்கூட, கம்பர் அவனை மனிதனாகவே காட்டுகிறார். அவனுடைய குணநலங்கள் எப்போதும் தனித்தன்மையுடையனவாகவே இருக்கின்றன. இக்கருத்துக்களை வினோபா ஒப்புக்கொண்டார்.
இந்தியராய்ப் பிறந்தோர் யாவரும் இந்தி மொழியை எழுதப் பேச அறிந்திருக்க வேண்டும், இம்மொழியொன்றுதான் இந்தியப் பொதுமொழியாயிருக்கத்தக்கது என்பது காந்தியடிகளின் கருத்து. இந்தியாவில் அறிவாளிகள் அனைவரும் இக்கருத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வட இந்தியருக்கு இந்தி மொழி கற்றல் மிகவும் எளிது; தங்கள் தங்கள் பேச்சோடு அது ஒட்டியிருத்தலால், எல்லோரும் எளிதில் இந்தி பேச முடியும். தென்னிந்தியர், சிறப்பாகத் தமிழர், இந்தி கற்பது அவ்வளவு எளிதன்று; சற்றே கஷ்டந்தான்.
கஷ்டப்பட்டேனும் தென்னிந்தியர் இந்தி கற்பது போல, வட இந்தியருள் அரசியலில் பங்குகொள்பவர் அனைவரும் தென்னிந்திய மொழி ஒன்றேனும் நன்றாய்க் கற்க வேண்டும் என்பது காந்தியடிகள் அபிப்பிராயம். அவர் தமிழ்மொழியைக் கற்க முயன்றார் என்பதும், திருக்குறளை மூலத்திலேயே படிக்க ஆசைகொண்டார் என்பதும் நாம் அறிவோம். தென்னிந்திய மொழிகளை வட இந்தியர் பயில வேண்டும் என்ற கருத்தை ராஜேந்திரப் பிரசாத் மிகவும் வற்புறுத்தி எழுதியிருக்கிறார்.
ஆனால் இதைச் செயலில் தீவிரமாய்க் கடைப்பிடித்தார், வினோபா. தாய்மொழியாகிய மராத்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் அவர் மிகச்சிறந்த பண்டிதர்; மேலும், குஜராத்தி, வங்காளி ஆகிய மொழிகளிலும் நல்ல புலமையுடையவர். அப்படியே அவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கையும் நன்றாய்ப் பயின்றிருக்கிறார். அந்தந்த மொழியிலும், மொழி நுட்பங்களைத் துருவி ஆராயும் அளவுக்கு அவருடைய பயிற்சி சென்றிருக்கிறது. இந்தியர் ஒவ்வொருவரும் பல மொழிகளை அறிந்திருந்தால்தான், மனவொற்றுமை வளர இடமுண்டு என்பது அவர் கருத்து. தமிழ் படித்தவர்களையோ தமிழரையோ அவர் கண்டுவிட்டால் அவரிடம் இந்த வயதில் ஏற்படும் உற்சாகமும், அமைந்திருக்கிற தமிழ்ப் புலமையும் பார்ப்போருக்கு மிக்க ஆச்சரியத்தைத் தரும். நம் நாட்டின் ஒற்றுமைக்கு விரிந்த மொழியறிவு எவ்வளவு துணை செய்யும் என்பதை அவருடைய பேச்சால் நன்கு உணரமுடியும்.

***

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல