Skip to main content

அக்னி நதி | அத்தியாயம் 3 | குர் அதுல் ஐன் ஹைதர் | தமிழில், சௌரி

மலைச்சாரலை ஒட்டிச் செல்லும் பாதை சிராவஸ்தி நகரிலிருந்து வட திசைப்பக்கம் இட்டுச் செல்வது. இரு மருங்கிலும் நாணல் புதர்களும் இடையிடையே பலாச மரங்களும் மண்டியிருந்தன. எங்கும் பூக்காடாக விரிந்தது. அதனூடே ஒரு நதி ஆவேசத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. மேலண்டைக் கரையில் ஒரு படித்துறை. அங்கு அரண்மனைப் படகுகள் வந்து தங்குவது வழக்கம்.

அயோத்தியையும் வடகோசலத்தையும் ஆண்டுவரும் மன்னன் நண்பர், துணைவர் சூழ வடக்குப்பக்கத்தில் வேட்டையாடப் போகிறான். முன் சென்று திரும்பிய வழிகாட்டிகள், யானைக்கூட்டம் நடமாடும் பாதை அடர்மழை காரணமாகச் சக்தி நிறைந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். வேட்டைக்கான யாத்திரையை மேலே தொடராமல், படகுத்துறையில் பரிவாரங்களுடன் இறங்கினான். யானைகளும், பல்லக்குகளும், ரதங்களும், அலங்கார வண்டிகளும் படகுத்துறையை விட்டுச் சாலை வழியாகப் புறப்பட்டன. சற்றுத் தொலைவில் அரசனின் ராஜகுரு புருஷோத்தமரின் பர்ணசாலையிருந்தது. அதற்கு அப்பாலுள்ள இலுப்பைத் தோப்பில் கூடாரங்கள் அமைத்தார்கள். ராஜ பரிவாரங்கள் அங்கு வசதியாகத் தங்கின. வெறிச்சோடிக்கிடந்த கானகப்பகுதியில் கலகலப்பு களை கட்டியது. திருவிழாக்கோலம்! மான் கூட்டங்களும், வாத்து, வான்கோழி, மயில்கள் சுயேச்சையாகத் திரிந்து கொண்டிருந்த சோலைப்பகுதி இப்போது சந்தைக் கூட்டமாகக் கலகலத்தது!

அரசனுடன் வந்த அந்தப்புறப் பெண்கள் பகல் முழுவதும் அந்தச் சோலையில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். மாலை மயங்கியதும், நதித்துறைக்கு வந்து, திளைந்து குளித்தார்கள். சிலர் பகற்பொழுதுகளில் வில்லும் அம்பும் ஏந்தி மான் வேட்டையாடு வதும் உண்டு.

இரண்டு மூன்று நாட்கள் இவ்வாறு கழிந்தன. இதற்குள் சம்பகா சலிப்படைந்தாள். சுவையற்ற வாழ்க்கையாகத் தோன்றியது. அலைச்சல், வேட்டை இரண்டுமே இப்போது அவளுக்கு பிடிக்க வில்லை. ராஜகுமாரி நிர்மலாவை உடனழைத்துக்கொண்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் குடியிருப்புப் பக்கம் வந்து சேர்ந்தாள். எதிரே மாந்தோப்பு. நல்ல அமைதி; சுகமான குளுமை. வானத்தில் வண்ண பேதங்களுடன் முகில் பத்தைகள் சிதறிக்கிடந்தன். நீர் இறைக்கும் ராட்டினம் இயங்கிக் கொண்டிருந்தது.

'சம்பகா! பாட்டு கேட்கிறது. கவனி! அந்தப்பக்கம் போவோம். வா!" நிர்மலா கேட்டுக்கொண்டாள்.

இருவரும் மாந்தோப்பு வழியாக நடந்தார்கள். இலைச்சருகுகள் நொறுங்கின. மரக்கிளைகளின் இடைவெளியில், சற்றுத் தொலைவில் ஆசிரமங்கள் தெரிந்தன.

"இது எந்த இடம்?" சம்பகா கதம்ப மரக்கிளையைப் பற்றியவாறே கேட்டாள்.

''இந்தப் பிள்ளைகள் யார்?' நிர்மலாவுக்கு வியப்பு. பிரும்மச் சாரிகளான மாணவர்களைக் கண்டதும் அவளுக்குத் தன் அண்ணன் நினைவு வந்தது.

கெளதம நீலாம்பரன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வரையிலும் பட்டினியுடன் நதிக்கரைப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். இரவு வெகு நேரம் வரைக்கும் நதியில் முழங் காலளவு ஆழத்தில் நின்று கொண்டே இருந்தான். அந்தக் குளுமை அவனுக்குத் தேவையாக இருந்தது. பிறகு, மணல் மேட்டில், கருவேல முட்களைப் பரப்பி, அதன் மேல் படுத்து உறங்குவான்.

நான்காம் நாள் அவனுக்குச் சலித்துவிட்டது. குடிலுக்குத் திரும்ப விரும்பினான். மாலையில் தள்ளாடிக்கொண்டு தன் பாதையில் சென்ற போது, பின்னாலிருந்து யாரோ குரல் கொடுப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தான். அகிலேசன் முறுவலித்தவாறு அருகில் வந்தான்.

"கெளதமா! மூன்று நாட்களாக உன்னை எங்கெல்லாம் தேடுவது? கண்காணாமல் எங்கே போனாய்?"

"நான் இங்குதான் இருந்தேன். நீ எங்கே வந்தாய் இந்தப் பக்கம்?''

"நீ எதற்கு வந்தாயோ, அதற்குத்தான் " குரலில் கிண்டல் தொனித்தது.

"நான் பகவானின் லீலாவிநோதத்தைக் கண்டு கொண்டிருக்கிறேன்."

"பகவானின் லீலாவிநோதத்தில் சிறுதுளியை நேற்றுப் பார்த்தேன். அது வில்லும் அம்பும் தாங்கி, ஒரு மானுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் மரத்தில் ஏறிக்கொண்டது.''

அகிலேசன் சொல்வது கௌதமனுக்குப் புரியவில்லை.

'வனதேவி! கானகக் கலையே, வனதேவி..!' தொலைவில், புதர்களுக்கு அப்பால் யாரோ பாடிக்கொண்டு செல்வது தெரிந்தது. அடுத்த அடிகள் லேசாகக் கேட்டன: "நீ தொலைவில் கோலங்காட்டி மறைந்தனையே, மீண்டு வருவாயோ, எங்கள் குடிசைப் பக்கம் ...?''

"மனிதர்களைக் கண்டால் உனக்குப் பயமோ?''

கெளதமன் பதில் சொல்லவில்லை. இருவரும் குளிர்ந்த காற்றை ரசித்தவாறு, புல் தரையில் நடந்தார்கள். காற்று மணத்தது. இருவருக்குமே பாடத் தோன்றியது. ரிக்வேதப்பாடல் ஒன்று அவர்களுக்கு இயல்பாகப் பாட வந்தது.

வனதேவி! விருப்பம் போலெங்கும் இளைப்பாற வனப்பான நீர் நிலங்கள் சூழ்நிலையாய்க் கொண்டாய் மணம் சிதறும் தாவரங்கள் பூவிரித்துப் பூரிக்க வணங்கும் கலையாய்க்கான கத்தாயே நீ பரந்தாய்!

சற்றுத் தொலைவில், குழல் ஊதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிறுவர் கூட்டம் சென்றது. கிராமத்தில் இன்று கலகலப்பு அதிகம்தான். கெளதமன் களைப்பு மேலிட்டு மரநிழலில் அமர்ந்துவிட்டான்.

"ஒரு பக்கம் தேவிகள், மறுபக்கம் தேவ கன்னிகள், மரக் கிளைகளில் யக்ஷிணிகள் - இந்த மரக்கிளைகளுக்கடியில், நிழலில் இளைப்பாறாதே - எச்சரிக்கை! யக்ஷிணிகள் ஆண்களை மயக்கி வசப்படுத்திக் கொள்வார்களாம். எங்காவது, இரண்டாவது பாடலில் புத்திர நகரம் உருவாகி விடப் போகிறது!" அகிலேசன் செயற்கையான பெரும் போக்குடன் உபதேசிக்கலானான்.

"அடேடே! இது யார் ?" கௌதமன் எதிரே நிற்கும் பெண்ணை வியப்புடன் பார்த்தான். அருகில் நின்ற அகிலேசன் தன் போக்கிலேயே பிரசங்கித்தான்; ''மகாபாரதத்திலே ஓரிடத்தில் வியாஸ் கவி கேட்கிறதைப் போல இருக்கிறதே உன் கேள்வி. 'நீ யார், பெண்ணே ? கதம்ப மரக் கிளையைப் பற்றிக்கொண்டு ஒயிலாக நிற்கும் நீ தேவ கன்னியோ? யக்ஷிணியோ? அப்ஸரஸோ...'' கெளதமா! மரங்களின் ரகசியத்தைப் புரிந்து கொள்ள முடியாதப்பா!''

"எந்த மரங்களின்?''

"கெளதமா! நாம் பெண்களைக் கவனித்துப் பார்க்கலாம், உற்று நோக்கலாம் என்று எப்போது தீர்மானித்தாய்? இதற்கு உரிமை கிடையாதே நமக்கு வழி தவறத் துணிந்து விட்டாயா?” அகிலேசன் எச்சரித்துவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டான். கிளை மறைவில் விலகிச் சென்றான்.

கெளதமன் திடுக்கிட்டான். எதிரே உன்னிப்பாகப் பார்த்தான். கதம்ப மரத்தினடியில் முன்பு நீதித்துறையில் கண்ட பெண் நின்று கொண்டிருந்தாள்.

சம்பகா கௌதமனைப் பார்க்கவில்லை. நிர்மலாவோடு பேசிக் கொண்டே ஒற்றையடிப்பாதையில் வேறு பக்கமாகச் சென்றுவிட்டாள். அகிலேசன் பாறைமீது அமர்ந்து தியானத்தில் லயித்திருந்தான். கண்விழித்ததும் கௌதமனைப் புறப்படுமாறு பணித்தான். இருவரும் கிராமப் பக்கம் நடக்கலானார்கள். குடிசைகள் பக்கம் வந்ததும் கெளதமன் நின்றான். "நான் பிக்ஷை வாங்கி வருகிறேன், நீ முன்னே போ!'' என்று சொல்லித் திரும்பினான். அந்தப் பெண்கள் சென்ற பாதையில் விரைந்தான். புதர்களிலிருந்து நீட்டிக்கொண்டிருந்த முட்கள் அவன் கால்களைக் கீறின.

சம்பகா கூடாரத்திற்கு அருகில் வந்தபோது, பின்னால் சருகுகள் நொறுங்க யாரோ பின் தொடர்வது தெரிந்தது. திரும்பிப் பார்த்தாள். சரயூ நதியை நீந்திக் கடந்த வாலிபன் தென்பட்டான். கரிய கண்கள். சிவந்த நிறம், வெள்ளையான வேட்டி உடுத்தியிருந்தான்; இளம் பிராமண பிரம்மச்சாரி.

"அயோத்தியிலிருந்து இங்கு பலர் வந்திருப்பதாகக் கேள்விப் பட்டேன். இன்று இங்கு பிக்ஷை கொள்ள விருப்பம்.'' பெருந் தோரணையில் பேசினான்

''காட்டில் வனதேவியைப் போற்றிப் பாடிக்கொண்டிருந்தது. நீயா?'' - சம்பகா மெல்லக் கேட்டாள்.

"பாடியது யார் என்பதும் தெரியாது. நான் யார் என்பதும் எனக்குத் தெரியாது" கெளதமன் சலனமில்லாமல் பதில் சொன்னான்.

'நீ ஓவியம் வரைவாயா?'' கெளதமன் பதில் சொல்வதற்குள் அவளே தொடர்ந்தாள். "குருதேவர் புருஷோத்தமரின் ஆசிரமத்தில் பயிலும் கௌதம நீலாம்பரன் நல்ல சித்திரக்காரன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உன்னைப் பார்த்தால் அந்தப் பெயர்தான் நினைவுக்கு வருகிறது. நான் பெயருக்குள்ள புதிரான ரகசியத்தில் நம்பிக்கை கொண்டவள். நீ எப்படியோ?''

"யாரோ மூடர்கள் சொன்ன தகவல்களை நம்பி, இப்போது குறிப்பிட்ட பேர்வழிதான் நான்"

"போகட்டும். நீ என் படத்தை வரைவாயா? இன்று காலை பல ஓவியர்கள் இங்கு வந்து போனார்கள்."

"நான் சிற்பி. கற்பனையின் ஆதாரத்தில், உள்ளத்தின் சங்கேதங் களையும் அழைப்புகளையும் துணைக்கொண்டு சித்திரம் வரைகிறேன். என்னை விசுவகர்மாவானாலும் மதித்துத்தான் ஆகவேண்டும்.''

"நீ நாஸ்திகனோ? இந்தக் காலத்து மாணாக்கர்கள் கபிலரின் சாங்கிய மதத்திலும், சித்தார்த்தரின் பௌத்தத்திலும் அதிக நம்பிக்கை கொண்டு வருகிறார்கள்."

"எனக்கு பிக்ஷையாக மாவோ, தானியமோ அளித்து அனுப்பி வையுங்கள். என்வழி சங்கடமாக இருக்கும். சீக்கிரம் திரும்ப வேண்டும்." கௌதமன் குரலில் கண்டிப்பைக் காட்டினான். இந்தப் பெண்ணை மறுமுறையும் பார்க்க மாதக்கணக்கில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். இப்போது அவளை நேரிடையாகச் சந்தித்திருக் கிறான். இருந்தும், அவசரப்படுகிறான் விலகிப்போக! அவனுக்கு அவளைக் குறித்து நெருக்கமான உரிமை உணர்வு ஏற்படத் தொடங்கியது. தன் உள்ளம் - இதயம் - வாழ்வு - சகலத்திலும் கலந் திருக்கும் ஓர் அங்கம் அவள் என்று உணர ஆரம்பித்தான்! சங்கோசம், நாணம், கூச்சம் ஏதும் அங்கு குறுக்கிடவில்லை . அநாதி காலமாக அவள் தெரிந்தவள் என்கிற உரிமையான ஒட்டுறவே அவனுக்குத் தோன்றியது.

கெளதமன் பக்கத்திலிருந்த மற்றவளைக் கவனித்தான். அவள் கௌதமனை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவளை எங்கோ பார்த்த நினைவு. அவனும் உற்றுப் பார்த்தான். ஆம், இவள் ஹரிசங்கரின் தங்கை ; அவளேதான்!

சம்பகா கூடாரத்திற்குள் சென்று கோதுமை மாவு கொணர்ந்து, கெளதமனின் பிக்ஷைப்பாத்திரத்தில் இட்டாள். 'சரி, போய் வா! செளகரியப்பட்ட போது இங்கு வா!'' மெல்லச் சொன்னாள்.

பிக்ஷை இட்டவளை வணங்கிவிட்டுத் திரும்பினான். இந்த இரு பெண்களும் அரசனுடன் எதற்காக வந்திருக்கிறார்கள்? கூடாரங் களுக்கு அருகில் பல பெண்கள் இங்குமங்கும் நடமாடிக்கொண்டிருந் தார்கள். இந்த இரு பெண்களும் தனித்தன்மையுடன் தனித்தே இருந்தார்கள்.

"அந்த இரு பெண்களும் யார்? - எதிர்ப்பட்ட ஒரு முதியவளிடம் கெளதமன் கேட்டான். அவள் சமையல் கூடமாக அமைத்திருந்த கூடாரத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். திகைப்புடன் நின்று கௌதமனை வியப்புடன் பார்த்தாள். கண்கள் பிரகாசித்தான : “பார்ப்பதற்கு நீ பிராமண பிரும்மசாரி போல் இருக்கிறாய். உனக்கு ஏன் இந்த ஆர்வம்? ஒருத்தி ராஜகுருவின் மகள் சம்பகா : மற்றவள் ராஜகுமாரி நிர்மலா . இருவரும் ராஜாவுடன் யானை வேட்டையைப் பார்க்க வந்திருக்கிறார்கள். இதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமோ? இதோ பார்! நீ இனிமேல் இந்தப்பக்கம் வராதே! இப்போதெல்லாம் போக்கிரிப்பயல்கள் துறவியாகவும் பிரும்மச்சாரியாகவும் வேஷம் போட்டுக்கொண்டு வந்து மோசம் செய்கிறார்கள், மகா மோசம்!'' கோபமாகப் பேசிவிட்டு அவள் மேலே சென்றாள்.

கெளதமன் சினந்தான். "கிழப்பேய்! நாணங்கெட்ட முண்டம்!'' தனக்குள் ஏசிவிட்டு, தன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான்.

மறுநாள், கெளதமன் சால்வையை மேலே போர்த்திக்கொண்டு கூடாரங்கள் உள்ள சோலையை நோக்கி நடந்தான். பல இடங்களிலும் தேடிப்பார்த்தான். அவள் தென்படவில்லை. அரச குடும்பத்துப் பெண்கள் பொது இடங்களில் தென்படவும் மாட்டார்கள். ஏதாவ தொரு பட்டுவிதானத்திற்கு அடியில் கிளியுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாளோ என்னவோ? இதை நினைத்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. கிளிக்குப் பேச்சுக் கற்றுக்கொடுப்பது பெரிய இடத்துப் பெண்களுக்குப் பொழுதுபோக்கு. அல்லது பல்லக்கில் அமர்ந்து காற்று வாங்கச் சென்றுவிட்டாளோ என்னவோ?

"நான் இங்கே இருக்கிறேன்." கதம்ப மரத்தின் மறைவிலிருந்து அவள் வெளிப்பட்டாள். அவனுக்கு நிலை கொள்ளவில்லை.

"நீ ஏன் கவலையாக இருக்கிறாய்? எனக்கு கவலைப்படுவது அலுத்துவிட்டது. நேற்றிலிருந்து நிர்மலா விசனப்பட்டுக் கொண்டிருக் கிறாள்.''

'ஏன்?''

"அவளுடைய சகோதரன் அரசவைபவத்தைத் துறந்து எங்கோ சென்றுவிட்டான். நேற்று உன்னைப் பார்த்ததிலிருந்து அவளுக்குத் தன் சகோதரனின் நினைவு வந்துவிட்டது."

"ஆனந்தன் தன் காதலியைத் துறந்து விட்டானாம். அதுவும் சித்தார்த்தர் பேச்சைக்கேட்டு.''

சம்பகா பேசவில்லை .

ஒருகால் ஆனந்தன் திரும்பி வந்தாலும் வரலாம். அவன் இன்னும் முழுவதும் அர்ஹத் (புத்த) நிலையை எட்டவில்லை. அடிக்கடி திரும்பி வந்துவிடுகிறான்.”

''இது கெட்ட செய்தி. முக்தி உயர்ந்த நிலை. அவனுக்கு எடுத்துச் சொல்லேன். சாக்கிய முனிவர் மஹாமதியிடம் என்ன சொன்னார் தெரியுமா?''

"என்ன சொன்னாராம்"

"சாக்கிய முனிவர் சொன்னார்: மஹாமதி. எப்படி நடிப்பு, நடனம், இசை, ஓவியம், மற்ற கலைத்தொழில் ஆகியவற்றில் மெல்ல மெல்லத் தேர்ச்சி பெறுவதைப் போலவே, அர்ஹத்' நிலையும் சாதனை மூலம்தான் ஏற்படும். நம் அரசகுமாரன் தியாகத்தைக் கூட ஒரு கலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.''

சம்பகா ஒரு மேட்டில் உட்கார்ந்தாள்.

"என்னுடன் வாயேன். நான் வரைந்த சித்திரத்தைக் காண்பிக் கிறேன்." - கௌதமன் சொன்னான்.

''எனக்கென்ன லாபம்?'' உற்சாகத்துடன் அவள் கேட்டாள்.

"என்னைக் கோமாளி , வெறும் கற்பனைப்பித்து என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என்னையும் மற்ற மாணாக்கர்களைப்போல எண்ணிவிட்டாயா? சம்பகா ராணி, சிராவஸ்தி நகரைச் சேர்ந்த இந்தக் கெளதம நீலாம்பரன் சித்திரக்கலையில் தேர்ந்த பெரிய ஆசாரியர் என்று உலகம் புகழப்போவதை நீ கேட்கப் போகிறாய்."

சம்பகா பேசவில்லை . பத்துவருஷங்களுக்கு முன்பு ஹரிசங்கர் - நிர்மலாவின் சகோதரன் - இப்படித்தான் வீறாப்புடன் பேசினான். என்னைச் சோம்பேறி, கற்பனாவாதி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் ஒரு நாள், அயோத்தியின் அரசகுமாரன் கணித சாஸ்திரத்தில் மகா நிபுணன் என்று கேள்விப்படப் போகிறாய்?"

'கருத்து வெளியீடு நோக்கத்தால் வேறுபட்டிருக்கலாம். ஆத்மாவுக்கு ஆசைப் பந்தம் காரணமாக இப்படைப்பு முழுவதுமே கானல் நீராகத் தோற்றமளிக்கிறது. அந்தக்கானல் நீர் என்னையும் ஹரிசங்கரையும் நிம்மதியில்லாமல் செய்துவிட்டது. அடிப்படை நோக்கமென்ன? கெளதமன் சிந்தித்தான்.

சம்பகா இறங்கி வந்தாள். "உன் நண்பன் ஆனந்தன் எங்காவது தென்பட்டால், அவனிடம் சொல், நீ காதலித்த சுந்தரி நீ காணும் கானல் நீர்த்தோற்றத்திலிருந்தும் விடுபட்டுவிட்டாள். ஆதலால் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். இதை மறக்காமல் சொல்லிவிடு."

"நான் கேள்விப்பட்டது உண்மைதானா? நீ பிக்குணியாக விகாரைக்குப் போகப் போகிறாயாமே?''

''அதில் என்ன தவறு? அந்த அனுபவத்தையும் பார்த்து விட வேண்டாமா?''

"சம்பகா உனக்கு என்ன வயதாகிறது?''

"பல நூற்றாண்டுகள். குத்து மதிப்பாகக்கூடக் கூற இயலாது; நினைவில்லை." அவள் சிரித்து விட்டாள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, நாடோடிப் பாடகர்கள் வாயிலாக மகாபாரதக் கதையை பாடக் கேட்டேன். பீஷ்மர், அர்ச்சுனன் கதையைக் கேட்டபோது, அந்தக் காலத்தில் சித்திராங்கதாவும் அலோபியும் எப்படி இருந்திருப்பார்கள்?' என்று நினைக்கத் தோன்றியது.''

"என்னைக் கண்டதும் அந்த நினைப்புக்குப் பதில் கிடைத்திருக்கு மல்லவா? நீதான் சிலைவடிக்கும் கலைஞானாயிற்றே! சிற்பி..."

"நீ மாறாக ஏதும் சொல்லிவிடவில்லை. எந்தக் கலைப்படைப் பிற்கும், பெயர் - உருவம் இரண்டின் இணக்கமும் இன்றியமைத்து, பெயரால் செவியும், உருவால் கண்ணும் அறிமுகமாகின்றன.''

"தன்மை - இயல்பு என்ற நிலையில் உள்ள ஒன்றை அறிவால்தான் உணர முடியுமேயன்றி, புற உணர்வுகளால் அனுபவிக்க முடியாது இல்லாவிட்டால், உன் கருத்தை நீயே மறுக்க வேண்டி வரும்.”

'தூய உருவம் இயல்புதான். செயற்கையான கலவையல்ல. அதை வெளிப்படையான அடையாளத்தால் இனங்காட்ட முடியும். குறிப்பாக அறிவிக்க முடியும்; அதையே வெளிப்படைச் சின்னமாகக் கருதிவிட முடியாது."

"வானத்திற்கு உருவம் தான் அடையாளம்"

''சுத்தமான உருவம். நிலையின் விளக்கத்தைப்பற்றி வாதிடுபவரின் நிலையே சாசுவதமில்லை .''

"நீ எப்படி உருமாற விரும்புகிறாய்?"

"ஒருநாள் அதை நான் உனக்குச் சொல்லத்தான் போகிறேன். பொறுத்திரு!''

ஆடு கத்துவது கேட்டது. நிர்மலா வெண்மையான மலர்களைக் கூடை நிறையக் கொய்து நிரப்பிக்கொண்டு, ஒற்றையடிப் பாதையில் வந்து கொண்டிருந்தாள். கௌதமனைப் பார்த்ததும், அவள் கூடையை வரப்பின் மேல் வைத்துவிட்டு, கைகுவித்து வணங்கினாள். கௌதமன் ஞான முதிர்ச்சி கண்ட புனிதரான அந்தணரைப் போல், அவளை ஆசீர்வதித்தான். பிறகு, திரும்பிப் பாராமல் நடந்தான்.

சாந்தி - மன அமைதி பெற்றவர்கள் பாக்கியசாலிகள்!

சம்பகா முணுமுணுத்துக் கொண்டாள். அவளுக்கு கெளதம் சித்தார்த்தர் கயா ஷேத்திரத்தில் நிகழ்த்திய தர்மோபதேசம் நினைவு வந்தது. அன்று அவர் கூறினார். "பெரியவர்களே! எல்லாப் பொருள் களையும் தீப்பற்றிக் கொண்டது. கண்களில் தீ கனல்கிறது. உருவம், அமைப்பு, பார்வை, புலன்களுடன் தொடர்பு கொண்ட பொருள்கள், தீராத வேட்கை, ஆசை, சொற்கள், வாசனை. நாற்றம், அறிவு. மூளை. எண்ண ம், உறுப்புகள், பெளதிகக் கற்பனைகள் - சகலமும் இந்தத் தீயில் வெந்து போகின்றன. இதற்கான தீக்குண்டத்தை உருவாக்குபவை வெறுப்பு, விருப்பு, பிறவி, முதுமை, சாக்காடு, சோகம், துயரம், நிராசை- இவைதாம்."

குருகுலத்திலிருந்து வந்த மாணவன் திரும்பிச் சென்று விட்டான். சோலைப்பகுதி கீழைக்காற்றில் ஆவேசமாக ஆடிக்கொண்டிருந்தது. மரங்களை ஒட்டிய ஒற்றையடிப்பாதையில் பிக்குணிகள் பிட்சா பாத்திரத்தை ஏந்தியவாறு தம் குடில்களுக்குச் சென்றுகொண்டிருந் தார்கள். அவர்களுடைய முகங்களில்தான் என்ன அமைதி! அவர்கள் ஓட்டமுள்ள தனி வழியில் கலந்துவிட்டார்கள். இனி அங்கிருந்து திரும்புதல், தடம் மாறுதல் ஏதும் கிடையாது. நானும் அப்படிக் கலக்க முடியுமா? - சம்பகா ஏக்கத்துடன் சிந்தித்தாள்.

"பெண்களைப் பற்றி நம் பொது நோக்கு எப்படி இருக்க வேண்டும்?'' நூற்றாண்டுகளுக்கு முன்பு இதே சிராவஸ்தி நகரில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்வி எழுப்பப்பட்டது.

"ஆனந்தா! அவர்களைப் (பெண்களை) ஏறிட்டும் பார்க்கக் கூடாது.'' பதில் வந்தது.

"ஒருகால் அவர்களைப் பார்க்க வேண்டி வந்து விட்டாலோ? அல்லது, பார்த்துவிட்டால்?''

"அவர்களுடன் பேசக்கூடாது." 'அவர்களாகவே வலிய வந்து பேசினாலோ?" "எப்போதும் விழிப்பாய் இருக்க வேண்டும்."

பல இரவுகள் தொடர்ந்து விழித்திருந்ததால், கெளதமனின் கண்கள் சொக்கின. உறக்கம் சூழ்ந்து தாக்க வந்தது. அவன் சிரமப் பட்டு விழித்துக் கொண்டிருந்தான்.

அரச பரிவாரங்கள் தங்கியிருந்த சோலையிலிருந்து கால் சலங்கையொலியும், பக்கவாத்தியத் தொனிகளும் எழும்பின. முழுமதி நகர்ந்து நகர்ந்து ஆசிரமத்திற்கு மேலே வந்தது. மலர்க்கொடி களுக்குக் கீழே அடக்கமாக அமைதியில் மூழ்கியிருந்த குடில்கள் நிலவொளியில் சோபித்தன. சில குடில்களில் விடி விளக்கு மினுக்கிக் கொண்டிருந்தது. கெளதமன் மட்டும் உறங்கவில்லை. அவன் மெல்ல எழுந்தான். வெள்ளைச் சாதராவைப் போர்த்திக்கொண்டு ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தான். சோலைப்பக்கம் விரைவாக நடந்தான். சருகுகள் நொறுங்கிய சப்தம் கேட்டது. துணுக்குற்ற அணில் குறுக்கே பாய்ந்து ஓடியது. அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான். எவரும் பார்த்துவிடக்கூடாதே என்கிற கவலை. தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்த சோலைப்பக்கம் சென்றான். சிறு அரங்கம்; பெண்களின் இசைக்குழு நாட்டியத்திற்கு ஏற்ப இசைத்துக் கொண்டிருந்தது.

கெளதமன் கவனித்தான். தன்னை ஏசிய கிழவி அரங்கத்திற்கு எதிரில் அமர்ந்திருப்பதைக்கண்டு துணுக்குற்றான். கூடாரத்தின் மறைவில் ஒருக்களித்து நின்று கொண்டான். அரங்கத்தின் தன்மயத் துடன் ஆடிக் கொண்டிருந்த பெண்ணின் கலைத்திறனை ரசித்துக் கொண்டிருந்தான்.

ரசிகர்கள் திகைத்தார்கள். ஒரு வாலிபன் கூடாரத்தின் பின்பக்கத் திலிருந்து மேடைக்கு வந்தான். சலங்கைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, உற்சாகப் பெருக்குடன் தாளகதிகளுக்குக்கேற்ப தாண்டவ நடனம் ஆடத் தொடங்கிவிட்டான். எதிரே இருந்தவர்கள் வியப்பு மேலீட்டுடன் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நடராஜப் பெருமானே மனிதவுருக்கொண்டு இங்கு வந்திருக்கிறாரோ ? அதிசயித் தார்கள்.

நடனத்திற்கு ஏற்ற எட்டுச் சுவைகளையும் கருத்துக் குறிப்பால் வெளிப்படுத்தினான். சிவ தாண்டவம் தனிச்சிறப்பாக அமைந்தது. முத்திரைகளில் உலகத்தின் ஆக்கம், இயக்கம், அழிவு மூன்றையும் தெளியவைத்தான். சிவமயமானான். அவன் வாக்கு சப்த பிரும்பம்; ஜீவராசிகளின் உயிர்ப்பு அதில் தெரிந்தது. அவனுடைய ஆடைதான் சந்திரன், விண்மீன்கள். சிவபிரான் தான் தாளம், லயம், கதி, ஜதி, இசை சகலமும் என்பதை அவன் எடுத்துக்காட்டினான். சர்வ வியாபியான சிவ தத்துவம் புலனாயிற்று!

சம்பகா நடனமாடிக்கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள் பார்வதியானாள்; சிவனின் துணைவி - சக்தி சொரூபம். சிவ- பார்வதி நடனம் இனிய கலைமலர்ச்சியாகத் தொடங்கியது. தெள்ளிய நிலவு; விரிந்த நிலப்பரப்பு; இசை முழக்கம்; துணை வாத்தியங்களின் கூட்டுறவு மோகனக் கவர்ச்சி சூழ்நிலையை எழில் மயமாக்கியது. வெள்ளிப் பத்தைகள் போன்ற வெண்முகில்கள் நதிக்கு மேலே மிதந்தன. கொக்குகள் இறக்கை இடுக்கில் அலகைச் செருகி, ஒடுக்கமாக மணல் திட்டில் உறங்கிக் கொண்டிருந்தன. கார்த்திகை மாதத்து முழு மதியும் மலர்களின் மேலிருந்து தரையில், கண்ணோட்டம் விட்டது.

இரவு ஓய்ந்து ஒடுங்கியது. கலை கேளிக்கையில் விழாக்கோலம் பூண்டவர்களின் ஆரவாரம் அடங்கியது. சிலம்பொலிகளும் பாடல் ஓசையும் நின்றன. புலரி தொடங்கியதும், கூடாரப் பகுதியில் முழு அமைதி நிலவியது. அரங்கமேடையில் மலர்களும் மொக்குகளும் நிறையச் சிதறிக் கிடந்தன.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர