Skip to main content

நிர்மாணத் திட்டம் | பெரியார்


அரசியல் வாழ்வில் தற்காலம் நிர்மாணத் திட்டங்கள் என்று சொல்லப்படுவது கதர், தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு ஆகிய இம் மூன்றையே குறித்துக்கொண்டு நிற்கிறது. இவற்றை ஏறக்குறைய இன்றைக்கு நான்கு ஐந்து வருடங்களாக மகாத்மா விடாமல் வலியுறுத்தி வந்தும் கோரிய அளவு நிறைவேற்றப்பட்டதாக நாம் சொல்ல முடியாது.
அரசியல்வாதிகள் பலரால் இத்திட்டங்கள் ஊக்கமளிக்கவல்லதல்ல வென்றும், சுயராஜ்யத்திற்கு அவைகளே போதியவை அல்லவென்றும், இத்திட்டங்கள் அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்டவையல்லவென்றும், பலவாறாகப் பழிக்கப்பட்டும், மக்களுக்கு இவற்றில் மனம் செல்லாதவாறு கலக்கப்பட்டு வருகின்றது. மகாத்மா அவர்கள் இத்திட்டங்களில் கதர்த் திட்டம் ஒன்றுக்கே தனது முழு பலத்தையும் உபயோகிக்கின்றார். இரவும் பகலும் அவ்வொரு கருமத்திலேயே கண்ணாயிருக்கின்றார். நாம் அதன் தத்துவம் என்ன என்று பார்க்கின்றோமா? இல்லவே இல்லை. வருஷம் ஒன்றுக்கு 60, 70 கோடி ருபாய் நம் நாட்டிலிருந்து அன்னிய நாட்டிற்குப் போகக்கூடியதும், லட்சக்கணக்கான நமது சகோதரிகளுக்கும், சகோதரர் களுக்கும் உணவளிக்கக்கூடியதான இக்கதரை நாம் ஆதரிக்காவிட்டால் பிறகு நமக்கு என்ன தேசபக்தி, என்ன சகோதர பக்தி என்பதை நாமே சிந்திப்போம். ஒரு நாடு முதலில் அது தன் பொருளாதார விஷயத்தில் மேம் பாடடையாவிடில் மற்ற விஷயங்களில் மேம்பாடடையவே முடியாது. நம் நாட்டில் மக்கள் தங்கள் மனசாட்சிப்படி நடக்கமுடியாமல் இருப்பதற்கே தரித்திரம்தான் காரணம். கோடிக்கணக்கான மக்கள் தொழிலில்லாமலும், உணவில்லாமலும் கஷ்டப்படுகிறபடியால் எவ்வகையாயினும் தங்களுக்கு தொழில் கிடைத்தால் போதுமென்றும் உணவு கிடைத்தால் போதுமென்றும் தங்கள் மனசாட்சியை விற்று ஜீவிக்கிறார்கள். கதர், படித்தவர்கள் என்போருக்கும், பணக்காரருக்கும் தொழிலும், உணவும் அளிக்காது என்பது உண்மையே. ஆனால் சுயராஜ்யம் என்பது உண்மையில் அவர்களுக்கு ஆக அல்ல. அவர்கள் இருவரும் உண்மை சுயராஜ்யத்திற்கு விரோதிகளே. படித்தவர்களுக்கு உத்தியோகம் வேண்டும். பணக்காரருக்கு பணமும் பிரபுத்துவமும் வேண்டும். கதரினால் இவ்விரண்டும் சித்திக்காது. ஆனால் நம் நாட்டில் ஏழை மக்களுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டும். அவர்கள் வாழ்வதையே மகாத்மா சுயராஜ்யமெனக் கருதுகிறார். அவர்களுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் வழங்குகிறார். அத்திட்டங்கள் நிறைவேற்றி வைப்பதையே சுயராஜ்ய சித்தியெனக் கருதுகிறார். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல் படித்தவர்களான அரசியல்வாதிகளோ ஆங்கிலேயனிடமிருந்து அதிகாரமும், பதவியும் பெறுவதே சுயராஜ்யமெனக் கருதி தங்களுக்கு செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள மாத்திரம் மகாத்மாவையும், நிர்மாணத் திட்டத்தையும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். பதவியினாலும், அதிகாரத்தினாலும் நமது நாடு ஒரு நாளும் க்ஷேமமடையாது.
மகாத்மாவின் காங்கிரசுக்கு வருமுன் நாம் கிளர்ச்சி செய்து ஆங்கிலேயரிடமிருந்து இருவகையாக சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படும் அதிகாரங்களும், பதவிகளும் கிடைக்கப் பெற்றோம். அவைதான் இந்திய மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் மற்றும் சில 1000, 2000, 3000, 5000 ரூ. சம்பளமுள்ள ஸ்தானங்களுமாகும். அவற்றால் நம்நாடு அடைந்த பலன் என்ன? பொறாமைகளும், தேசத்தைக் காட்டிக் கொடுக்கும் தன்மைகளும், ஒற்றுமையின்மையும், இந்து முஸ்லீம் சச்சரவும், பிராமணர் - பிராமணரல்லாதார் வேற்றுமையுமேதான் மலிந்தன.
இவ்வுத்தியோகங்களும், பதவிகளும் இப்பெரும் சம்பளங்களும் இல்லாவிட்டால் நம்நாட்டில் மிதவாதக்கட்சி ஏது? ஜஸ்டிஸ் கட்சி ஏது? சுயராஜ்யக் கட்சி ஏது? ஒத்துழையாமை இறப்பதேது? பதவிகளும், அதிகாரங்களும் மக்களை எவ்வளவு பிரிவாக்கிவிட்டன, எவ்வளவு துவேஷத்தையும் அவநம்பிக்கையும் உண்டாக்கிவிட்டன?
மகாத்மாவால் முன்னோக்கிச் சென்ற நம் நாட்டின் விடுதலை எவ்வளவு பின்னடைந்துவிட்டது? இவற்றால் பொதுமக்களுக்கும், ஏழைகளுக்கும் என்ன லாபம் உண்டாயிற்று? வரிப்பளுவு குறைந்ததா? உண்மைக் கல்வி அறிவு ஏற்பட்டதா? தேசத்திற்கு அதிக வரியும் அதிக கஷ்டங்களுமே ஏற்பட்டன.
இச்சீர்திருத்தங்கள் என்னும் சுயராஜ்யம் நமக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்படுமுன், நம் நாட்டிற்கு ஏற்பட்டிருந்த வரி சுமார் 30, 40 கோடியிலிருந்து இப்பொழுது ஒன்றுக்கு நான்காய் 150, 160 கோடிக்கு வந்துவிட்டது. இந்திய ராணுவச் செலவு சீர்திருத்தம் இல்லாத காலத்தில் சுமார் 20 கோடி ரூ. இருந்தது. சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகோ 60, 70 கோடி ரூபாய் வரையில் உயர்ந்திருக்கிறது. இவ்வளவும் நாம் கொடுக்கும் வரி மூலமாய்த்தான் செலவு செய்யப்படுகிறது. நம் படித்தவர்கள் மேலும் மேலும் இதையேதான் சுயராஜ்யம் என்று சொல்லிக்கொண்டு இதற்காகவே பாடுபடுகிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் இவ்வித அபார செலவிற்கு சர்க்காரால் வசூல் செய்யப்படும் பணங்களெல்லாம் பெரும்பாகம் ஏழைகளிடமிருந்தே அல்லாமல் படித்தவர்களிடமிருந்தல்ல என்பதுதான். அதனால்தான் படித்தவர்கள் தங்கள் சுயநலத்தை கவனிக்கும்போது ஏழைகளை மறந்துவிடுகிறார்கள். சாதாரணமாய் நம் நாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்த காலத்தில் படித்தவர்களும், பணக்காரரும் அத்தேர்தல்களுக்காக எவ்வளவு ரூபாய் செலவழித்தார்கள் என்பது நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். பத்தாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம், சிற்சில தேர்தலுக்கு 50 ஆயிரம் ரூ. கூட செலவழித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆறுமாத காலத்தில் இவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஓட்டு சம்பாதிப்பதற்கு என்று செலவழிக்காமல் இதில் ஏற்பட்ட செலவையும், சிரமத்தையும், ஊக்கத்தையும் தீண்டாமை விலக்கு, கதர், மதுவிலக்கு ஆகிய இம்மூன்றின் பிரசாரத்திற்கும் செலவழித்திருந்தால் நம் நாடு எவ்வளவு முன்னுக்கு வந்திருக்கும்? இப்பொழுது சென்னையில் நடக்கும் ஓட்டு வேட்டையை கதர் பிரசாரத்திற்கு நடத்திவந்தால் எவ்வளவு தூரம் நமது நிர்மாணத் திட்டங்கள் முற்போக்கடைந்திருக்கும்? இவற்றை அவர்கள் கவனிக்காமல் இவ்விதம் செலவும், சிரமமும் படுவதன் காரணம் ஏழைமக்கள் தங்கள் ஞாபகத்துக்கு வந்ததோ அல்லது சுயநலம் இவற்றைவிட முக்கியமானதாகக் காணப்படுவதோ இவ்விரண்டிலொன்றைத்தான் சொல்லியாக வேண்டும்.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியதெல்லாம் மகாத்மாவின் நிர்மாணத் திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டுமானால் படித்தவர்களாலும், பிரபுக்களாலும் முடியவே முடியாது. கிராமத்தில் இருக்கும் ஏழைகளும், தொழிலாளிகளும்தான் இவற்றை மேற்கொண்டு நடத்த வேண்டும். கதர் திட்டம் நிறைவேறாமல் தரித்திரம் ஒழியவே ஒழியாது.
தீண்டாமை ஒழிக்கப்பட்டால் அல்லாது ஒற்றுமை உண்டாகவே உண்டாகாது. மதுபானம் விலக்கப்பட்டாலல்லாது ஒழுக்கம் ஏற்படவே ஏற்படாது.
- குடி அரசு - தலையங்கம் - 05.07.1925

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...