Skip to main content

அக்னி நதி | அத்தியாயம் 4 | குர் அதுல் ஐன் ஹைதர் | தமிழில், சௌரி

பொழுது புலர்ந்தது. இமயத்தின் சிகரங்களின் மேல் இளம் இருள் மூட்டம் விலகிக் கொண்டிருந்தது. பொய்கைகளில் சிவந்த தாமரை மலர்கள் விரிந்தன. கிராமத்துப் பாதையில் சேர்ந்து செல்லும் ஆயர் மகளிரின் தலையில் பால் - தயிர்க்குடங்கள் இளம் வெயிலில் பள் பளத்தன. இலுப்பை மரங்களில் மலர்கள் குலுங்கின. அங்கே வண்டுகள் ரீங்கரிப்பது அவன் செவியிலும் ஒலித்தது. வெம்மை யேறிய பகலவனின் கதிர்கள் அவன் இமைகளை உணர்த்தியதும், கண்களைக் கசக்கிக் கொண்டு அவன் எழுந்தான். தான் சிதிலமடைந்த படிக் கட்டில் கிடப்பதை உணர்ந்தான். அது குளத்தின் படித்துறை. கண் விழித்துப் பார்த்தபோது, கலவரமடைந்தான், நாம் எங்கிருந்தோம், இங்கு எப்படி வந்தோம். தீவிரமாக யோசித்தும் விளங்கவில்லை.

அலுப்புத் தீர சோம்பல் முறித்தபின் எழுந்தான்; மறுபடியும் உடலை முறுக்கிச் சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டபின், படியில் நிதானமாக உட்கார்ந்தான். எதிரே இலுப்பைத் தோப்பைக் கண்டான். கூடாரங்களைக் காணவில்லை. வெறிச்சோடிக் கிடந்தது. மரத்தின் மறைவிலிருந்து ஒரு மான் விருட்டென்று ஓடியது. அணில்கள் வில்வப் பழங்களைக் கடித்துத் தின்று கொண்டிருந்தன. பச்சைக் கிளிகள் கொப்புகளிலிருந்து பறக்கத் தொடங்கிவிட்டன. கானகப் பகுதி அமைதி பெற்றது. ஆனால் அவன் அமைதி குலைந்திருந்தான். தெளிவற்ற கனவுகளாக முந்தைய நிகழ்ச்சிகள் நினைவு வந்தன. அருகில் அரச பரிவாரங்கள் வேட்டைக்குப் போகும் வழியில் தாவளமிட்டுத் தங்கியிருந்தன. திறந்த வெளியில் அமைத்திருந்த அரங்கத்தில் இரவு முழுவதும் நடன விழா நடைபெற்றது. பலர் தோன்றி நடனமாடினார்கள். அவனும் ஆவலை அடக்க முடியாமல் கலந்து கொண்டான். களிவெறியுடன் ஆடினான். நேரம் போனதே தெரியவில்லை. களைத்துத் தள்ளாடி அமர்ந்தபோது, அரசர் அவனைத் தம் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். அவனும் நறவமும், வறுத்த இறைச்சியும் வழங்கப்பட்ட போது மறுக்கவில்லை . விருந்தில் திளைத்தான். அந்த இரக்க நிலையிலும் சம்பகாவைத் தேடித் துருவின் அவன் கண்கள். அவளோ நடன விழா முடிந்ததும், அரசகுமாரியுடன் அந்தப்புரப் பகுதிக்குச் சென்று விட்டாள். அவளை எதிர்நோக்கி விடியும் வரை அவன் காத்திருந்தான். பிறகு சோர்ந்து போய் விரக்தி மேலிட, ஆசிரமத்திற்குக் கிளம்பினான். உறக்கம் அவனை நடக்க விடவில்லை. தள்ளாட்டத்துடன் படித் துறையில் படுத்தவன்தான். வெயில் ஏறிய பிறகே விழிப்புக் கண்டது. விடியற் காலையில், வேட்டைக்குப் புறப்பட துந்துபி முழங்கியதோ, கூடாரங்கள் கலைக்கப்பட்டதோ, புறப்பட்டபோது, சம்பகாவும் அரசகுமாரியும் படித்துறைப் பக்கம் வந்தவர்கள் கௌதமனைக் கண்டுதுணுக்குற்றதோ, அவர்கள் பேசிக் கொண்டதோ - எதுவும் தெரியாது அவனுக்கு.

அரசகுமாரி நிர்மலா தேவி அப்போது சொன்னாள்; சம்பகா! அதிசயமான பிராமணப் பையன் இவன்! முந்தாநாள் உன்னுடன் ஓவியத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்; இரவு நடராஜப் பெருமானைப் போல் ஆனந்தத் தாண்டவம் புரிந்தான்; இப்போது குழந்தையைப்போல் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவனை எழுப்பி, விடை பெற்றுக் கொள்வோமே.

சம்பகா கௌதமனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு நிர்மலாவிடம், "வேண்டாம். விழித்திருப்பவனுக்கு ஒரு உறக்கம் வரத்தான் செய்யும். இதேபோல் தூங்குபவனுக்கு விழிப்பு வராமல் போகாது. எப்போதும் விழித்திருப்பவர்களைத்தான் நாம் பார்க்க வேண்டும்; வா, போகலாம்.

இருவரும் பல்லக்கில் ஏறிக் கொண்டு புறப்பட்டார்கள். இப்போது இலுப்பைத் தோப்பில் பூரண சாந்தி நிலவியது.

படியில் அமர்ந்தவண்ணம் அவன் சிந்தித்தான். அந்த ஓர் இரவிலேயே அவன் வெகுவாக வளர்ந்துவிட்டான். அவன் இதயத்தில் தனி பிரபஞ்சம் விரிந்தது. அதில் அவன் சுயேச்சையாக சஞ்சரித்தான். துணைக்கு மாயையைச் சேர்த்துக் கொண்டான். இதற்காக அவன் வருத்தப்படவில்லை. என்ன விசித்திரமான அனுபவங்கள் ! சிவனுக்குப் பதிலாக, வாழ்வில் எழும் நஞ்சு முழுவதையும் அவனே மாந்திவிட்டது போல் இருந்தது. இந்த முயற்சியே விநோதமாகத்தான் இருந்தது. இந்தப் போட்டியை அவன் கபிலனோடு போடவில்லை. அப்பாவி ஹரிசங்கர் பல காதங்களுக்கப்பால் எங்கோ இருப்பான்!

ஆனால் சம்பகா புறப்படும்போது ஏன் என்னைச் சந்திக்க வரவில்லை. எழுப்பி விடை பெற்றுக்கொள்ளக்கூட அவளுக்குத் தோன்றவில்லையா..?

கெளதமனுக்கு இதை நினைத்ததும் மகிழ்வு முகிழ்த்தது. என்னிடம் விடை பெற அவள் யார்? வேறு பாட்டுக்கே இட மில்லையே. என்னுள் ஒன்றிவிட்டவள். என்னிடம் பேச, விடைபெற வேண்டிய அவசியம்? அவள் என்னோடு, எப்போதும் இருக்கிறாள், பேசுகிறாள், உறவாடுகிறாள். ஒருவேளை இதுவும் மாயைதானோ? பிதற்றல். நான் என்னையே ஏமாற்றிக் கொள்ளுகிறேன். மாயையில் செம்மையாகச் சிக்கிக் கொண்டதன் விளைவு இது! அவள் என்னை விட்டுப் பிரிந்தவள், வேறுபட்டவள்; வெகு தொலைவில் ஒதுங்கிப் போனவள். நான் எங்கே, அவள் எங்கே? எல்லாமே பொய்தான், பிரமைதான்.

நல்லது!'' கெளதமன் படியிலிருந்து எழுந்தான். (இங்குதான் அவள் அன்றைக்கு உட்கார்ந்திருந்தாள்.) 'சம்பகா! வெகு ஆடம்பரத் துடன் யானை வேட்டைக்குக் கிளம்பிவிட்டாய்! இந்த வாழ்வு? உன் துணை இல்லாமலேயே கழியும்."

ஆசிரமத்தை நோக்கிச் சென்றான். இதுதான் அவனுக்கு இறுதி ஆண்டு படிப்பு முடிந்ததும் அவன் தந்தை வந்து அழைத்துப் போவார். குருதேவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பும்போது வழக்கம்போல் உபதேச மொழிகளை வழங்குவார்:

'ஸத்யம் வத! தர்மம் சர!' (உண்மை பேசு, உனக்குரிய தர்மத்தைக் கடைப்பிடி!) எந்தத் தர்மத்தை? அவனுடன் பயிலும் மாணவர்கள், மற்ற ஆசிரமத்துச் சிறுவர்கள் யாவரும் அவனை வழியனுப்பப் படித்துறை வரைக்கும் வருவார்கள். வித்தையைக் கற்றுத் தேர்ந்ததற்கு அறிகுறியாக , படிப்பாளியாகிவிட்டதைக் கெளர விப்பதாக, அவன் தலையில் பரிவட்டம் கட்டிக்கொள்ளுவான்; கண்களுக்கு மை தீட்டிக்கொள்வான். காதுகளுக்கு மணி குண்டலங்கள் அணிந்து கொள்வான். காவிக்கரை போட்ட சாதராவைத் தோளில் போட்டுக்கொள்வான். கால்களுக்குக் செருப்புகள்; தலை முடியில் முள்ளம்பன்றி முள்ளாலான ஊசியைக் குடுமி முடிச்சுக்கு இதவாகக் குத்திக்கொண்டு, குடையைப் பிடித்த வண்ணம், மிக மதிப்பாக சிராவஸ்தி நகர வீதிகளில் நடந்து செல்வான். அயோத்தி, பாடலிபுத்திரம் சென்று ராஜ சபைகளில் சன்மானம் பெறுவான். புரோஹிதராகப் பதவி ஏற்பான். அரசரின் மந்திரிகள் குழாமில் இடம் பெறுவான். அந்தப் பேதைப்பெண் சம்பகா அப்போது என்ன நிலையில் இருப்பாள்? மூடப்பெண் .. மகதத்தின் பாழடைந்த விகாரையில், சிரத்தை முண்டனம் செய்து, துறவுக்கோலம் பூண்டு, சாக்கிய முனிவர் புத்தர் போதித்த நிர்வாண நிலையை எய்தத் தவம் செய்து கொண்டிருப்பாள்.

அவளுக்குத் தன் மேதாவிலாஸத்தில் இவ்வளவு செருக்கு இருக்குமானால், எனக்கு என் உயர்த்தியில் கர்வம் இருக்கக் கூடாதா? வெறும் சித்திரக்காரனாகவும், படிமம் படைக்கும் சிற்பியாகவும் இருந்து என்ன பலன்? நான் தர்ம சூத்திரங்களை இயற்றுவேன். சட்ட திட்டங்களைப் படைப்பேன். மனு, கபிலன், ஜைமினி எவரும் என் கால்தூசி பெறமாட்டார்கள். பெரிய மேதாவிகளின் உலகத்தையே உலுக்கிக் காட்டுவேன். ஞானபலம் என்னிடம் குறைவில்லை. விநாயகருடைய எழுதுகோலைப் போன்றது என் எழுத்தாணி. சம்பகா என்னை வரிக்கா விட்டால் ஒரு கேடும் வந்துவிடாது; என் வாழ்வு இருண்டு விடாது. என்னிடம் கலைமகள் பூரணமாக வீற்றிருக்கிறாள். அவள் என்னைப் புறக்கணிக்க மாட்டாள்; என்னை விட்டு ஒரு போதும் விலகமாட்டாள்.

சம்பாவிடம் அப்படி என் கவர்ச்சி? உலகில் ஆயிரம் அழகிகள் உலவுகிறார்கள் ஏன்? அந்தராஜகுமாரி நிர்மலா எவ்வளவு அழகு...! ஆனாலும், சம்பகா! உன்னை உற்றுப்பார்த்தால், உனக்கு ஈடு இணையான அழகியைக் காணத்தான் முடியாது.

அவள் அழகு உருவம் எப்படியிருந்தது ...? கெளதமனுக்கு நினைத்ததும் கோபம் எழுந்தது. தரையில் தென்பட்ட சரளைக் கற்களை உதைத்துத் தன் சினத்தைக் காட்டிக் கொண்டான். 'நான் தீர்மானித்து விட்டேன். உன் படத்தை ஒருபோதும் நான் எழுதப் போவதில்லை. சம்பகா! நீ உன்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் உன்னைத் துளியும் மதிக்கவில்லை. உன் உருவத்தையே மறந்து வருகிறேன். உருவம் வெறும் கூடும். என் இதயத்தில் இடம் பெற்றிருக்கிற - பத்திரமாக இருக்கிற உருவத்தை விசுவகர்மா இருக்கிறானே - தேவலோகச் சிற்பி - அவன் தான் அறிய முடியும்.

கெளதமன் மனச் சள்ளையுடன் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான். இருப்புக் கொள்ளவில்லை; வெளியே வந்தான்; இங்குமங்குமாகத் திரிந்தான். ஆசிரமத்து மாணாக்கர்கள் கௌதமனை வியப்புடன் கவனித்தார்கள். ஒருவன் கேட்டான். "இரவு எங்கே போயிருந்தாய்?" கௌதமன் பொருட்படுத்தவில்லை.

நண்பன் அகிலேசன் கேட்டபோது, பொய் சொன்னான். "நதிக் கரையில் இரவு முழுதும் தங்கித் தவயோகத்தில் ஆழ்ந்திருந்தேன்." அவன் மனமறிந்து சொல்லும் முதல் பொய் இது. பொய் சொல்வது இப்போது அவனுக்கு இயல்பாகத் தோன்றியது; விரும்பவும் செய்தான். அன்றைக்கு அவன் சந்தியாவந்தனம் செய்யவில்லை; வழக்கம்போல் குருவை வணங்கவும் போகவில்லை. ஆசிரமங்களை அடுத்துள்ள சோலையில் திரிந்து கொண்டிருந்தான்.

"நான் அவள் உருவத்தை வரையப் போவதில்லை. வாழ்க்கையின் எல்லாத் தொடர்புகளையும் விட உயர்ந்ததாக இருக்கவேண்டும் கலை." தனக்குள் பலதடவை சொல்லிக் கொண்டான். இறுதியில் முடிவை அவனால் புறக்கணிக்காமல் இருக்க முடியவில்லை . அவன் கலைஞன்; படைப்பார்வம் அவனை உந்தியது, அலைக்கழித்தது.

மறுநாளே கெளதமன் ஓவியத்திற்கான உபகரணங்களையும், சிற்பம் செதுக்கத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, இலுப்பைத் தோப்புக்கு வந்து சேர்ந்தான். படித்துறைக்கு எதிரே இடம் சரி செய்தான். வண்ணங்களைக் குழைத்து வைத்தான். தூரிகை, திரைச் சீலைகளைச் செப்பம் செய்தான். புதிய வண்ணங்கள் இறக்க மூலிகைகளைக் கொதிக்க வைத்தான். சீனத்துத் திரைச்சீலையில் ஓவியம் வரையத் தொடங்கினான். ஓடவில்லை . உருவம் - அருவம் இரண்டிற்கும் இடையே கீழே வைத்துவிட்டு, நான் எதை வரைவது? இதற்குப் பொருள் என்ன ? வேதாந்திகள் 'ஈசுவரன் உருவற்றவன், அறியவொண்ணாதவன், புலப்படாதவன்' என்று சொல்கிறார்கள். ஏதாவது ஒரு புறச்சான்று, எடுத்துக்காட்டு இருந்தால்தானே கருத்துக்கு உருக் கொடுக்க முடியும்... வாழ்ந்து கொண்டிருப்பதே உயிருக்கு அடையாளம் தான், அதுவே உயிர் உயிருக்கு அது இலக்கணமாகாது. அதன்பால் கவரப்படுவது அவரவர் கருத்துக்கு ஏற்றவாறு அமையும். பிறகு, கலைஞன் சுத்தமான கருத்தை - எண்ணத்தை எப்படி வெளிப் படுத்துவான்? அவனுடைய கொள்கை நோக்கு எப்படி நடுநிலையில் இருக்க முடியும்? கலைஞனின் உண்மையான கலை தியானம் - சிந்தனை வளம்; அதுவே முழுமையானதல்ல. சுத்தமான ஆகிருதி அல்லது பொருளின் உருவகம் அப்பொருளில்தான் பொதிந்திருக் கிறது. அதுதான் வாஸ்தவமான லட்சியம். பொருளின் தனிப்பட்ட நிலையை எப்படித் தூண்டிவிட முடியும்? யதார்த்த வாழ்க்கை யிலிருந்து கண்களை அகற்றிக்கொண்டுவிட முடியாது.

இப்படியெல்லாம் அவன் சிந்திப்பதன் விளைவாக, குளக் கரையில் உட்கார்ந்து பல சித்திரங்களைத் தீட்டினான். பிறகு அவற்றைத் திருப்திப்படவில்லை என்று சொல்லிக்கொண்டு  குலைத்துவிட்டான். இதேபோல், சிவப்பு மண்ணால் பல மூர்த்திகளை உருவாக்கிய பின் உடைத்தான்.

கெளதமனின் கலை மோகம் பிரபலமானது. ஆசிரமத்தின் சுவர்களில் மண், மரத்தூள், சுண்ணாம்பு மூன்றையும் குழைத்துப்பூசி, அதன் மேல், கெட்டியான வண்ணங்களில் படங்கள் வரைந்திருக் கிறான். சிவப்பு மண்ணைக் குழைத்துச் சிலைகள் வரைந்திருக்கிறான். அவன் வரைந்தவை பெரும்பாலும் பிரும்ம ஞானத்தின் குறியீடுகள். திரிசூலம், கல்பவிருட்சம், நிலத்தாமரை, வாழ்க்கைச் சக்கரம், கமலாஸனம், அக்கிக்கம்பம் இப்படித்தான் இருக்கும். சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிராமக் காட்சியைத் தீட்டி வருகிறான். அதில் பெண்கள், குடியானவர் குழந்தைகள், பசுக்கள், மொக்கு - மலர்கள் இடம் பெறுகின்றன. இந்த உருவங்களில் வலு இருந்தது. வாழ்வின் செம்மை, வெம்மை இரண்டும் இடம்பற்றிருந்தன. வெறும் கற்பனை யுகமாக இராமல், யதார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது நிலத்தாயின் சுய சிருஷ்டி.

பிறகு ஒருநாள் கெளதம் நீலாம்பரன் அழகிய யக்ஷிணி மூர்த்தியை வரைந்தான். கதம்ப மரக்கிளையைப் பற்றியவாறு, மரத்தடியில் யக்ஷிணி ஒயிலாக நிற்கும் கோலம் ; மிகக் கவர்ச்சியான படிமம். பிரபல படிமக் கலைஞர்கள் வந்து பார்த்துவிட்டுச் சினந்தார்கள்; பாராட்ட மறுத்தார்கள். ஒவியக்கூடங்களும், தேவால யங்களும் அதை ஏற்க விரும்பவில்லை. விமரிசகர்கள் உன்னித்துப் பார்த்தார்கள்; அதிசயித்தார்கள்; உள்ளுர வியந்தார்கள். ஆனால் எவரும் அவனைப் பாராட்டவில்லை. கலைஞர்கள். கலை விமரி சகர்கள், புத்திஜீவிகள் கூட்டங்களில் கௌதம நீலாம்பரன் சர்ச்சைக் குரியவனானான். அவனுடைய கலைத்திறனின் புதிய திருப்பத்தை விமரிசித்தார்கள்; வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. கௌதமன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் தத்துவ ஞான மார்க்கத்தைக் கைவிட்டவன். அதனால், தூய செளந்தரிய உணர்வு எது, அதன் அறிமுகம் எப்படி ஏற்படும், பிறருக்கு அதை எப்படிக் காட்டுவது என்பவற்றைத் தெரிவிக்க அவனுக்கு உரிமை கிடையாதா? உருவம் அருவம், இருப்பு இல்லாமை என்பவை குறித்து எழுப்பப்பெரும் சச்சரவுகளில் முடிவுகூற அவன் யார்? அவன் விருப்பமெல்லாம் படைப்புக் கலையோடு சரி. மனிதர்களையும், மனிதரகசியங்களையும் சித்திரமாகவோ, சிலையாகவோ வடித்துக் காட்டுவதே அவன் விரும்பும் பணி, சாதனை. வேதாந்த வித்தகன் என்ற நிலையில் அவன் சிந்தித்தான். 'தூய அழகுணர்ச்சி பற்றிய அனுபவமே தனி இன்பம்; அது மின்னலைப் போல் அகண்டது, சுயம் பிரகாசமானது. கலைஞனின் கற்பனை விசுவகர்மாவின் கற்பனைக்கு மறுபெயர். படைப்பவன் ஆத்மாவிலோ 'நான்' என்பதிலோ உறைந்திருக்கிறான்.

அவன் கணந்தோறும் அகிலத்தைக் கண்டுகொண்டிருக்கிறான்; அவன் சொரூபமே அகிலத்தின் பிரதிபலிப்புதான். அவனே ஆத்மா! அழகின் ஆதரிசனமான மதிப்பீடு, அகிலத்தையே 'நான்' என்று உணர்வதுதான். இதன் அடிப்படையில்தான் அழகும், அதை உணரும் தன்மையும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் உண்மையான நிலை, தூய அறிவு, தூய வாழ்வு இதயம்தான் பரந்த சித்திரக்கூடம்; இங்கு எல்லா ஓவியங்களும் இருக்கின்றன. இங்கு உவமைகள் யாவும் ஒருமைப்பாட்டுள் ஒடுங்குகின்றன. விதவிதமான வண்ணக் கண்ணாடி களிலிருந்து ஒரே வகையான ஒளி பிரகாசிக்கிறது. எந்தப் பொருளா கட்டும், முறையாக உருவாக்கப்படுமானால், அது பூரணமாகக் கலை வடிவம்தான். கலைஞன், ரசிகன் இருவருக்கும் ஒரே பொதுவழி . தெள்ளிய அறிவுள்ள சிந்தனைச் செல்வர்கள் இந்த உண்மையை உணர்வார்கள்.

அழகிய யக்ஷிணி படிமத்தை உருவாக்கியதன் மூலம் படிமக் கலையில் புது மரபு தொடக்கி வைக்கப்பட்டது. சிற்பக்கலை சுத்தமான பௌதிகக் கலையாக உருமாறியது. அதில் மயக்கமற்ற யதார்த்த நிலை நிறைந்திருந்தது. கதம்ப மரத்தடியில் காட்சிதரும் வானதேவிகளும், தேவ கன்னிகளும் உண்மையில் அயோத்தியிலும் சிராவஸ்தியிலுமுள்ள மகளிர், கிராமங்களில் வாழும் குடியானவப் பெண்கள். இந்த உழவர் மகளிரைத் தினமும் நீர்த்துறையில் காணலாம், பாடித்திரியும் களிப்பில் காணலாம். கழனிகளில் களை யெடுக்கும் நிலையில் பார்க்கலாம்.

கெளதமன் உருவாக்கிய யக்ஷிணி இடுப்பை வளைத்து ஒருக்களித்த நிலையில் ஒயிலாக நின்று கொண்டிருந்தாள். கைகள் வாளிப்பாக இருந்தன. பெரிய கண்கள். மேனி நல்ல திடம்; வாட்ட சாட்டம். இந்த உருவம். இந்த சம அமைப்பு - கம்பீரம், ஒயில், உயிர்ப்பு, நிஜ உணர்வு எல்லாமே கலந்த முழுப் படைப்பு. இந்தப் புதிய வார்ப்பில் உயிர்ப்பு இருந்தது. ஓட்டம் இருந்தது. வலிமை இருந்தது. தோற்றத்தில் சுதந்திர உணர்வும் பெருமிதப் பெருக்கும் பொங்கி நின்றன. இங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கலைஞன் விரும்பும் சுயேச்சை, பந்தத்திலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. தான் எதை உருவாக்க வேண்டும், உருவாக்கப் போகிறோம் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது.

ஒருநாள் கெளதமன் சில புதிய சித்திரங்களை எடுத்துக்கொண்டு விமலேஸ்வரனின் ஒவியக் கூடத்திற்குச் சென்றான். சிராவஸ்தியில் உள்ளது அது. அங்கு எப்போதும் போலவே அவனுடைய நண்பர் களும் விரோதிகளும் குழுமியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் சில எழுத்தாளர்களும் மற்றவர்களுங்கூடத் தென்பட்டார்கள். இது அவனுக்கு வியப்பாக இருந்தது. இவர்கள் அரசியல் விவாதத்திற்காக அவன் குடிலுக்கு வந்திருக்கிறார்கள். எல்லாரும் மெளனமாக இருந்தார்கள், கவலைக்குறி தெரிந்தது. ஏதோ யோசனை - குழப்பம் அவர்களுக்கு. கௌதமனை ஏறிட்டுப் பார்த்தார்கள்; ஏதும் பேசவில்லை. அவனும் சாளரத்தினருகில் அமர்ந்து மெளனியானான்; கடைவீதியின் கலகலப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"உனக்குத் தெரியாதா?'' விமலேஸ்வரன் கேட்டான்.

''என்னவாம்?'

"நீ எதுவும் கேள்விப்படவில்லையா? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்?"

இந்த சமயத்தில் கதவை யாரோ தட்டுவது கேட்டது. கதவைத் திறந்ததும் அகிலேசன் உள்ளே வந்தான். மூச்சு வாங்கியது. கால்களில் புழுதி ஏறியிருந்தது. வெகுதூரத்திலிருந்து வந்திருக்கிறான்.

"நண்பர்களே! எல்லாரும் சாமான் செட்டுகளை எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டு வெகு சீக்கிரம் புறப்பட்டு விடுங்கள்! தாமதிக்க வேண்டாம்!"

"ஏன்? என்ன நடந்தது?" கெளதமன் கலவரமடைந்தான்.

"மகதத்தில் போர் மூண்டு விட்டது. சந்திரகுப்தனின் படை எல்லாப் பகுதிகளையும் வென்று கொண்டு, விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இங்கு இன்னும் முடக்கம் தீரவில்லை. இனி நிம்மதியாக ஏர் செல்லாது. சமவெளியில் வீர தாண்டவம் தொடங்கியாக வேண்டும். இது உனக்கு ஏற்ற காலமில்லை. காலன் போர் முரசம் கொட்டிக் கொண்டு உன்னைப் பின்தொடர்கிறான். அந்த யமன் உருவம் - அருவம், தன்மை - இன்மை இவைகளின் வேறுபாட்டை அகற்றிக்கொண்டு வருகிறான்.'' அகிலேசன் மூச்சு வாங்கப் பேசிவிட்டு, களைத்துப் போய் உட்கார்ந்து கொண்டான். கண்களை மூடி ஆசுவாசப் படுத்திக்கொண்டான். பிறகு சொன்னான் "நம் அரசர் யானை வேட்டையிலிருந்து திரும்பி வந்து கொண் டிருந்தார். வழியில் விஷ்ணுகுப்தரின் வீரர்கள் தாக்கினார்கள். அரசருக்குத் துணையாக வந்தவர்கள் எல்லாரும் மடிந்தார்கள்."

"எல்லாருமா ?" கெளதமன் துணுக்குற்றான்.

"ஆமாம்; அப்படித்தான் கேள்விப்பட்டேன். அரச குமாரியும், மற்ற பெண்களும் நதியை நீந்திக் கடந்து பாஞ்சாலர்களின் ஆட்சிப் பகுதிக்கு விரைந்தார்களாம். ஆனால் எதிரிகள் பின் தொடர்ந்தார் களாம்,'' - அகிலேசன் அவசரமாக எழுந்தான்.

"நீ எங்கே போகிறாய்?" வேதனைக் குரலில் கெளதமன் கேட்டான்.

அகிலேசன் சொன்னான்: " நான் போரிடப் போகிறேன். ஆனால் நீ போருக்கு வரமாட்டாய். நீதான் அஹிம்ஸைவாதியாயிற்றே?'' பதிலுக்குக் காத்திராமல் சென்றுவிட்டான்.

கெளதமன் எழுந்து நின்றான். விமலேஸ்வரனிடம் கேட்டான்: " நீயாவது சொல்லப்பா! இங்கு கலைஞர்களும், கல்வியில் தேர்ந்த வர்களும் குழுமியிருக்கிறீர்களே, சொல்லுங்கள்! எப்போதாவது போரில் ஈடுபட வேண்டும்? யாராவது ஹரிசங்கரிடம் கேட்டுச் சொல்லுங்களேன். எப்போது ஜீவஹிம்ஸை செய்யலாம், எப்போது செய்யக்கூடாது என்று." கெளதமன் நிலை கொள்ளாமல் கூடத்தில் நடந்தான். பிறகு உரக்கக் கூவினான்: "நண்பர்களே! எனக்கு ராஜா நந்தருடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. சாணக்கியரை நான் அறிந்தவனில்லை . சந்திரகுப்தனுடன் எனக்குச் சச்சரவு கிடையாது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து என்னை எதற்காகத் தங்கள் சண்டையில் இழுக்கிறார்கள்? நானும் கொலையாளியாக வேண்டுமா? எனக்கு எல்லா உயிர்களும் பிரியமானவை. நானும் உயிர்வாழ விரும்புகிறேன். நான் என்ன செய்வேன்?" சாளரத்தின் குறுக்குப் பலகையில் தலை சாய்த்து, கண்களை மூடிக்கொண்டான்.

சித்திரசாலையில் குழுமியிருந்தவர்கள் வெளியேறிக் கொண் டிருந்தார்கள். காலடியோசைகளைக் கேட்டு கெளதமன் கண்களைத் திறந்தான். கூடம் வெறிச்சோடிக் கிடந்தது. அவர்களுடன் வெளிவாசல் வரைக்கும் ஓடினான். பிறகு நின்று கத்தினான்: "நண்பர்களே! உங்கள் கலைப் படைப்புகளை அப்படியே விட்டுச் செல்லுகிறீர்களே. சிலைகள் உடைந்து நாசமாகிவிடுமே! என் சகோதரர்களே..!''

கீழே அங்காடி வீதியில் கூக்குரல்களும், வெறியாவேசக் கூச்சல் களும் பயங்கரமாக எழுந்தன. நகரத்திற்குள் போர் மூண்டுவிட்டது. கொடுமையான ஆக்கிரமிப்பு. கடைவீதி அல்லோலப்பட்டது. ரணகளக்காட்சிகள் அதிகரித்தன. தூசிப்படலம் சூழ்ந்தது. யானை களின் பிளிறல்கள், அம்புகள் பாயும் ஒலிகள், வாள்களும் கேடயங் களும் மோதிக்கொள்ளும் ஓசைகள், பெண்களும் குழந்தைகளும், சிறுவர்களும் எழுப்பும் அவல ஓலங்கள் - இவற்றுக்கிடையில் கெளதம் நீலாம்பரனின் குரல் அமுங்கிவிட்டது. கூடத்துப் படிகளில் சிலை போல் நின்றான். எங்கும், ரத்தக்களறி . பிணங்கள், குற்றுயிரான உடல்கள், முடமான உடலங்கள் வீதியில் சிதறிக்கிடந்தன. நண்பர் களின் சடலங்கள் தெருவில் கிடப்பதையும் கண்டான். சாணக்கியரின் வீரர்கள் வெகு லாவகத்துடன் எதிர்ப்பவர்களைச் சாய்த்துக்கொண்டே முன்னேறினார்கள். கௌதமனுக்குக் கண்கள் இருண்டன. தூணில் சாய்ந்து கொண்டு நிதானமடைந்தான். கூடத்தை வெறித்துப் பார்த்துவிட்டு, ரணகளத்தில் புக முனைந்துவிட்டான். எதிரே விமலேசுவரனின் சடலம் தென்பட்டது. அவன் கையிலிருந்த வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். கனவில் நடப்பவனைப் போல் சென்றான், வாளைச் சுழற்றிக்கொண்டே

இரவு வெகுநேரம் வரைக்கும் போரிட்டுக் கொண்டிருந்தான். விழுப்புண்களின் வேதனை தாளாமல் ஒரு சந்தில் நினைவு குன்றி விழுந்தான். பக்கத்தில் நகர மக்களின் சவங்கள் கிடந்தன. வான முகட்டுக்கு அருகில், நகர எல்லைக்கு அப்பால் ஜேதவனம் எனும் சிறு காட்டின் நடுவில், மாளிகை ஒன்று அமைதியாகத் தென்பட்டது. மரங்களின் கும்பலுக்கிடையில் மறைந்திருந்தது. அதன் தூபிக்கலசம் இருட்டிலும் இலேசாகப் பளபளத்தது. சூழ்நிலையைக் கண்டு அது மெளனமாக எள்ளி நகையாடுகிறதோ?

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர