Skip to main content

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் கப்பல்களைச் செலுத்திக் குறிப்பிட்ட இடங் களுக்கு ஏறக்குறையக் காலத்தில் செல்லக் கூடியதாயிருந்தது. ஆகவே, யவன வியாபாரிகள் அதிகமாகத் தமிழ் நாட்டிற்கு வரத் தலைப்பட்டார்கள். இவ்வர்த்தகப் பெருக்கத்தினால் நமது தேசத்தாருக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது.

"இந்தியா தேசம் ஏராளமான செல்வத்தை யவன தேசத்திலிருந்து ஆண்டுதோறும் கவர்ந்து கொள்கிறது'' என்று பிளினி என்னும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

இந்தத் தமிழர் யவனர் வியாபாரத் தொடர்பைப் பற்றிப் புறநானூறு, மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இத்தொடர்பு, வியாபாரத்தோடு மட்டும் நின்றிருந்ததே தவிர, சமயம், கலை, பாஷை முதலியவைகளிற் சிறிதும் இடம் பெறவில்லை . யவனர் நம்முடன் நேர்முகமாகக்கொண்டிருந்த இந்த வியாபாரத் தொடர்பு, கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையில் நிலை பெற்றிருந்தது.

ஏழாம் நூற்றாண்டில், அரபி தேசத்து முகம்மதியர்கள் எகிப்து, பாரசிகம் முதலிய நாடுகளை வென்று கைப்பற்றிய பிறகு, யவனர் நமது தேசத்துடன் வைத்திருந்த நேர்முகமான வியாபாரத் தொடர்பு தடைப்பட்டுவிட்டது. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு, முகம்மதியர் கடல் வழியையும், தரை வழியையும் கைப்பற்றி ஆதிக்கம் பெற்றதோடு, இந்திய வியாபாரத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியப் பொருள்களை வாங்கிக் கொண்டு போய் ஐரோப்பிய தேசங்களில் விற்பனை செய்வதால் பெரும் பொருள் ஊதியங் கிடைப்பதைக் கொண்டு முகம்மதியர், ஐரோப்பியரை இந்தியாவுடன் நேர்முகமாக வியாபாரம் செய்யவொட்டாத படி தடுத்துவிட்டார்கள். இவ்விதமாகப் பண்டைக் காலத்தில் ஐரோப்பியர் நமது தேசத்துடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்பு அற்றுப் போயிற்று.

முகம்மதியர், மலையாளக் கரையிற் பண்டக சாலைகளை அமைத்து, மிளகு முதலிய பொருள்களைச் சொற்ப விலைக்கு ஏராளமாய் வாங்கிச் சேமித்து வைத்து, அவற்றைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டு அரபிக்கடல் வழியாகச் செங்கடலிற் சென்று அங்கிருந்து தரை வழியாகச் சூயஸ், கெய்ரோந்தி அலக்ஸாந்திரியா முதலான நகரங்களின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போய், ஒன்றுக்குப் பன்மடங்கு அதிகமாக விலை வைத்துச் சரக்குகளை விற்று பெரும் பொருள் திரட்டினார்கள். வர்த்தகத் தொழில் செய்யும் ஜாதியார் எப்பொழுதும் செல்வந்தராயிருப்பது எல்லோரும் அறிந்த உண்மை . இதன்படி, வியாபாரத் தொழிலில் ஈடுபட்ட முகம்மதியர், மேன்மேலும் செல்வம் பெற்றுச் சிறப்படைந்து விளங்கினார்கள். ஐரோப்பியர் இப்போது கைத்தொழில் நாகரிகம் முதலியவற்றில் சிறப்படைந்திருப்பது போய் அக்காலத்திற் சிறப்புப் பெறாமல் தாழ்ந்த நிலையில் இருந்தார்கள். ஆகையால், ஆடை முதலிய பல பொருள்கள் இந்தியா முதலிய கீழைத் தேசங்களிலிருந்தே ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதனால், இந்த வியாபாரத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த முகம்மதியர், பெருஞ்செல்வம் சம்பாதித்ததில் அதிசய மொன்றுமில்லை. இவ்வாறு சில நூற்றாண்டுகள் கழிந்தன.

"இந்தியச் சரக்குகளை ஐரோப்பிய நாடுகளிற் கொண்டு போய் விற்பதனால் முகம்மதியர் செல்வம் பெற்றும் சிறப்புடன் வாழ்வதைக் கண்ட ஐரோப்பிய தேசத்தார், தாங்களும் நேர்முகமாக இந்தியாவுடன் வியாபாரம் செய்து பொருள் செய்து கொண்டே போனால், கடைசியில் அவன் கிழக்குப் பக்கமாகத் தான் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்வான் என்றும் பூகோள சாஸ்திர உண்மையை மனத்திற் கொண்டு, இந்தியா தேசம் ஐரோப்பாவுக்குக் கிழக்கில் இருக்கிறபடியால், ஐரோப்பாவிலிருந்து மேற்குப் பக்கமாய்ப் பிரயாணம் செய்து கொண்டு போனால் இந்தியா போய்ச் சேரலாம் என்று கொலம்பஸ் என்பவர் நம்பினார். ஆனால், அவர் சொல்லிய கருத்தை ஒருவரும் ஆதரிக்கவில்லை . கடைசியாக, மிகுந்த சிபாரிசின் மேல், ஸ்பெயின் தேசத்து அரசன் கொலம்பஸுக்கு உதவி செய்யச் சம்மதித்து, சில கப்பல்களையும் மாலுமி களையும், பிரயாணத்துக்கு வேண்டிய சாமான்களையும் கொடுத்து உதவினான். கொலம்பஸ், ஸ்பெயின் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, மேற்குப் பக்கமாகக் கடலிற் பிராயணம் செய்து கொண்டு போனார். சில நாட்கள் பிராயணம் செய்தபிறகு, கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளையும், புதிய உலகம் என்னும் அமெரிக்காக் கண்டத்தையும் கண்டு பிடித்தார். ஆனால், கொலம்பஸ் அத்தீவுகள் இந்திய தேசத்தைச் சேர்ந்தவை என்றும், அக்கண்டம் இந்தியா தேசம் என்றும் தவறாக நினைத்தார். அவர், தாம் கண்டு பிடித்த பூபாகம் இந்தியா தேசந்தான் என்கிற நம்பிக்கையுடன் இறந்தார்.

ஆனால் உண்மையில் அது இந்தியா தேசம் அன்று. "ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்” என்றபடி, கொலம்பஸ் இந்தியா தேசத்தைக் கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு செல்ல, தற்செயலாகப் புதிய பூபாகங்களைக் காணப் பெற்றார். கொலம்பஸ் புதிய உலகத்தைக் கண்டு பிடித்த செய்தி ஐரோப்பியர்களுக்குப் புதிய உணர்ச்சியை யளித்தது. ஏனைய ஐரோப்பிய ஜாதியாரும் இந்தியா தேசத்துக்குப் புதிய வழியைக் கண்டு பிடிக்க ஊக்கங்கொண்டு முயற்சி செய்தார்கள். இவ்வாறு ஊக்கங் கொண்டவர்களில் போர்ச்சுகல் தேசத்தரசனும் ஒருவன். எமானுவெல் (Emanuel) என்னும் பெயருள்ள அந்த அரசன் ஆப்பிரிக்காக் கண்டத்தைச் சுற்றிக் கொண்டு, கிழக்கு முகமாகப் பிரயாணம் செய்தால், இந்தியா தேசம் போய்ச் சேரலாம் என்று நம்பிக்கை கொண்டவன். ஆகையால் அவ்வழியாகச் சென்று, இந்தியா தேசத்தைக் கண்டு பிடிக்கும்படி வாஸ்கொ -டா - காமா என்பவரை அனுப்பினான். வாஸ்கொ-டா-காமா போர்ச்சுகல் தேசத்துத் துறைமுகப் பட்டினமாகிய லிஸ்பன் என்னும் பட்டினத்தை விட்டு, 1497ஆம் வருஷம், ஜூலை மாதம், 9ஆம் நாள் புறப்பட்டுக் கடல் வழியாகச் சென்ற போது, எதிர்காற்றில் அகப்பட்டு அனேக கஷ்ட நஷ்டங்களுக்குட் பட்டார். ஆனாலும் மனந்தளராமல், மேன்மேலும் கப்பலை யோட்டிக் கொண்டு, ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென் கோடியாகிய நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கடந்து, அக்கண்டத்தின் கிழக்குக் கரையோரமாகப் பிரயாணம் செய்து, கடைசியில் மிலாண்டா (Milanda) என்னும் கடற்கரைப் பட்டினத்தை அடைந்தார். அது பேர்பெற்ற துறைமுகப் பட்டினம், ஆகையால், இந்தியாவிலிருந்து பல கப்பல்கள் அங்கு வந்திருந்தன. வாஸ்கொ - டா - காமா அங்கிருந்து ஒரு முகம்மதிய மாலுமியை, இந்தியா தேசத்திற்கு வழிகாட்டும்படி தம்முடன் அழைத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு, அந்த முகம்மதிய மாலுமியின் உதவியால், 1497 ஆம் வருஷம், மே மாதம், 22 ஆம் நாள் மலையாளக் கரையில் உள்ள கள்ளிக் கோட்டை (Calicut) என்னும் பட்டினத்தை யடைந்தார். முதல் முதல் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஐரோப்பியர் இவர்தாம்.

பிறகு வாஸ்கொ-டா-காமா கள்ளிக்கோட்டையை யரசாண்டிருந்த சாமுத்திரி அரசனைக் (zamarin) கண்டு பேசிப் போர்ச்சுகல் தேசத்தார் கள்ளிக்கோட்டையில் வர்த்தகம் செய்ய அவ்வரசனிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, மீண்டும் தம் ஊருக்குச் சென்று, தாம் இந்தியாவைக் கண்டு பிடித்த சந்தோஷச் செய்தியைத் தம்முடைய அரசனுக்குத் தெரிவித் தார். போர்ச்சுகல் தேசத்தரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இந்தியா தேசத்துடன் வர்த்தகம் செய்வதற்காகவும், கூடுமானால் அத்தேசத்தைத் தன் ஆட்சிக்குட்படுத்துவதற் காகவும் சில கப்பல்களை ஆயத்தம் செய்து, பீட்ரோ ஆல்வாரெஸ் காப்ரால் (Pedro Alvarez Cabral) என்பவர் தலைமையிற் பல போர்ச்சுகீசியரை அனுப்பினான். இந்தக் காப்ரால் என்னும் தலைவர் கப்பலைச் செலுத்திக் கொண்டு போகிற போது, ஆப்பிரிக்காக் கண்டத்தின் கரையோரமாகச் சென்றால், எதிர்காற்றில் அகப்பட்டு வருந்த வேண்டியிருக்கும் என்று நினைத்து, அக்கண்டத்துக்கு மேற்கே அதிக தூரமாய்க் கடலில் போய்க் கொண்டிருக்கையில், தென் அமெரிக்காவில் உள்ள, இப்போது பிரேசில் (Brazil) என்று வழங்கப்படுகிற, செழிப்பான தேசத்தில் தற்செயலாகப் போய்ச் சேர்ந்தார். தாம் போகக் கருதி வந்த இந்தியா தேசம் செல்லாமல், தற்செயலாய் வேறு ஒரு புதிய தேசத்திற் சென்றதை அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர் மீண்டும் அங்கே இருந்து புறப்பட்டு இந்தியா தேசம் வந்து சேர்ந்தார். பிரேசில் தேசத்திலிருந்து இந்தியா புறப்படும் போது, அங்கிருந்து சில பழச்செடிகளை இந்தியாவிற் கொண்டுவந்து பரவச் செய்தார் அவர் கொண்டு வந்தவை மிளகாய், முந்திரிக் கொட்டை, கொய்யாப் பழம், அன்னாசிப் பழம், சீத்தாப் பழம், பப்பாளிப் பழம் முதலியவை. இப்படிச் செடிகள் இவர் கொண்டு வருவதற்கு முன்பு நமது நாட்டிற் கிடையா.

பதினைந்தாம் நூற்றாண்டின் கடைசியில் நமது நாட்டிற்கு வந்த பறங்கியர் (போர்ச்சுகீசியருக்குப் 'பறங்கியர்' என்று பெயர்) கொச்சி, கள்ளிக் கோட்டை, கோவா முதலிய கடற்கரைப் பட்டினங்களில் அமர்ந்து, வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். இவர்களுக்கு முன் ஏகபோகமாய் வர்த்தகம் செய்திருந்த முகம்மதியருக்குப் பறங்கியர் வந்து வர்த்தகம் செய்வது பிடிக்கவில்லை. இதனால் பறங்கியருக்கும் முகம்மதியருக்கும் சில சண்டைகள் வந்தன. அச்சண்டைகளிற் பறங்கியர் வெற்றி பெற்று முகம்மதியரை யடக்கி, அராபிக் கடலைத் தங்கள் ஆதிக்கத்திற் கொண்டு வந்தார்கள். அது முதல் சுமார் ஒரு நூற்றாண்டு வரையில் பறங்கியர்கள் இந்தியா, இலங்கை முதலிய கீழைத் தேசங்களில் வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்கள் வர்த்தகம் செய்வதோடு மட்டும் நில்லாமல், கிறிஸ்தவ மதத்தைப் பரவச் செய்யவும் பாடு பட்டார்கள். ஏசுவின் சபைப் பாதிரிமார்களைக் கொண்டு வந்து, பெருந்தொகையான இந்துக்களைக் கிறிஸ்தவராக் கினார்கள். சவேரியார், தத்துவ போதக சுவாமி, ஜான் - டிபிரிட்டோ , வீரமா முனிவர் முதலிய பாதிரிமார்கள் இவர்கள் அழைத்து வந்த ஏசுவின் சபையைச் சேர்ந்த துறவிகளாவர். இதுவுமன்றி, பறங்கியர் தங்கள் வியாபாரப் பட்டினங்களைக் காவல் புரியும் பொருட்டு, பறங்கிப் போர் வீரர்களையும் கொண்டு வந்திருந்தார்கள். இப்போர் வீரர்கள் இந்தியப் பெண்களை மணஞ்செய்து கொள்ளும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். இவ்விதக் கலப்பு மணத்தினாற் பிறந்த பிள்ளைகள் 'துப்பாசி' என்னும் பெயருடைய புதிய ஜாதியானார்கள். இந்தத் துப்பாசிகள் பறங்கிப் பாஷையைப் பேசி வந்தனர்.

இவ்விதமாகப் பறங்கியர் இந்தியாவுக்குப் புது வழி கண்டு பிடித்து, இந்திய தேசத்துடன் வியாபாரம் செய்து பொருள் திரட்டிச் செல்வந்தராவதைக் கண்டு, ஏனைய ஐரோப்பிய ஜாதியாரும் இந்தியா தேசத்துடன் வியாபாரம் செய்ய ஆவல் அடைந்தனர். அவர்களுள் ஹாலாண்டு (Holand) என்னும் நாட்டிலுள்ள டச்சுக்காரரும் இம்முயற்சியில் முனைந்து நின்றார்கள். இந்த டச்சுக்காரருக்கு ஒல்லாந்தர் என்பதும் பெயர். இந்த ஒல்லாந்தர் இந்தியாவுக்கு வடகிழக்கு வழியொன்றைப் புதிதாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள்.

கொலம்பஸ் ஐரோப்பாவுக்கு மேற்கு முகமாய் இந்தியாவுக்குப் போக ஒரு வழியைக் கண்டு பிடிக்க முயன்றாரல்லவா; பறங்கியர், ஐரோப்பாவுக்குத் தெற்கு முகமாய் ஆப்பிரிக் காவைச் சுற்றிக் கிழக்கு முகமாகச் சென்று, இந்தியாவுக்கு ஒரு வழியைக் கண்டு பிடித்தார்களே, அதைப் போலவே தாங்களும் ஐரோப்பாவுக்கு வடகிழக்குப் பக்கமாய்ச் சென்று இந்தியாவுக்குப் புது வழி ஒன்றைக் கண்டு பிடிக்கலாமே' என்று ஒல்லாந்தர் நினைத்தார்கள். அப்படி நினைத்தது அக்காலத்தில் பூகோள சாஸ்திரத்தை அவர்கள் சரிவர அறியவில்லை என்பதைத் தெரிவிக்கிறது. இந்த எண்ணத்தோடு அவர்கள் நான்கு கப்பல்களை இந்தியாவுக்கு வட கிழக்குப் பாதையைக் கண்டுபிடிக்க அனுப்பினார்கள். இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். ஆனால், முன்பு அறிந்திராத சில தீவுகளையும், கடல்களையும் கண்டு பிடித்தார்கள். ஒல்லாந்தர், வட கிழக்குப் பக்கமாய்ப் புது வழி கண்டுபிடிக்க முயற்சி செய்த அதே காலத்தில், வேறு நான்கு கப்பல்களைப் பறங்கியர் கண்டு பிடித்த வழியைப் பார்த்து வரும்படி அனுப்பினார்கள்.

இக்கப்பல்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜாவா (சாவகம்) தீவு வரையிற் சென்று திரும்பி வந்தன. அது முதல் ஒல்லாந்தர், இந்தியா தேசத்துடனும், கிழக்கிந்தியத் தீவுகளுடனும் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். இந்த வியாபாரத்தை முதலில் தனிப்பட்ட முறையில் நடத்தி வந்தனர். பின்னர், 1602 ஆம் வருஷம், மார்ச்சு மாதம், 2ந்தேதி, 'கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம்' என்னும் பெயரால் ஒரு சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த ஒல்லாந்தர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பறங்கியரை, இந்தியா, இலங்கை முதலிய இடங்களிலிருந்து துரத்தி விட்டு, அவர்கள் இருந்த இடங்களைத் தாங்கள் கைப்பற்றிக் கொண்டு வியாபாரம் செய்து வந்தனர். இவர்களும் யாழ்ப்பாணம் முதலிய இடங் களில் இந்துக் கோயில்களை இடித்தும், இந்துக்களைக் கட்டாயப்படுத்திக் கிறிஸ்துவர்களாக்கியும், கிறிஸ்துவர் களுக்கு மட்டும் உத்தியோகங்களைக் கொடுத்தும் வந்தனர். முதலில் வர்த்தகர்களாக வந்த இவர்கள், பிறகு நாடுகளைப் பிடித்து அரசாள முற்பட்டார்கள். ஆனால் ஆங்கிலேயர் இவர் களை இந்தியாவிலும் இலங்கையிலுமிருந்து துரத்திவிட்டார்கள்.

இந்தியாவுடன் வர்த்தகம் செய்து செல்வந் திரட்ட விரும்பிய மற்றொரு தேசத்தார் ஆங்கிலேயராவர். இவர்களும் ஒல்லாந்தரைப் போலவே, இந்தியாவுக்கு வட கிழக்குப் பாதை யொன்றைக் கண்டுபிடிக்க முதலில் முயன்றனர். இவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக வட கிழக்குப் பாதையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தும் பயனடையவில்லை . 1568 ஆம் ஆண்டில் ஸர் பிரான்ஸிஸ் டிரேக் (Sir Fincis Drake) என்னும் ஆங்கிலேயர், இந்தியாவிலிருந்து போர்ச்சுகல் தேசத்துக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பறங்கிக் கப்பலைப் பிடித்துக் கொள்ளையடித்தார். கொள்ளையிடுகையில், ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு இந்தியாவுக்குச் செல்லும் வழியைக் குறிப்பிடுகிற படம் ஒன்றைக் கண்டெடுத்தார். அதன் பிறகு, 1594இல் ஸர் ஜான் லங்காஸ்டர் (Sir John Lancaster) என்னும் ஆங்கிலேயர் நன்னம்பிக்கை முனை வழியாக ஜாவா (சாவகம்) வரையில் யாத்திரை செய்து திரும்பிவந்தார். பின்னர், கி.பி. 1600 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி என்னும் வர்த்தகச் சங்கம் நிறுவப்பட்டது. அது முதல் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்து வியாபாரம் செய்யத் தலைப்பட்டனர்.

நமது தேசத்தில் வியாபாரம் செய்ய வந்த இன்னொரு ஐரோப்பிய ஜாதியர் டேன்ஸ் (Danes) என்னும் டேனிஷ்காரர். இவர்கள் டென்மார்க்கு தேசத்தைச் சேர்ந்தவர். 1620இல் கிழக்கிந்திய வர்த்தகச் சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு நமது தேசத்திலுள்ள தரங்கம்பாடி, பழவேற்காடு, சிராம்பூர் முதலிய இடங்களில் வர்த்தகம் செய்து வந்தனர். ஆனால் இவர்களின் வர்த்தகம் பலப்படவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில், தரங்கம்பாடி முதலிய இடங்களை இவர்கள் இங்கிலீஷ் காரருக்கு விற்று விட்டுப் போய்விட்டார்கள். இவர்களும் கிறிஸ்தவ மதத்தைப் பரவச் செய்ய முயன்று வந்தனர்.

இந்தியாவுடன் வியாபாரம் செய்யக் கடைசியாக முயற்சி செய்தவர்கள் பிரஞ்சுக்காரர். பிரஞ்சுக் கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம் 1664இல் ஏற்படுத்தப்பட்டது. பிரஞ்சுக்காரர், புதுச்சேரி முதலிய இடங்களில் வர்த்தகம் செய்து வந்தனர். டியுபிலே என்பவர் புதுச்சேரிக்கு அதிகாரியாய் வந்தபோது இந்தியாவில் பிரஞ்சு அரசாட்சியை நிலைநாட்ட முயற்சி செய்தார். அவருடைய முயற்சி வெற்றியாகவேயிருந்தது. ஆனால் பிரெஞ்சுக்காரரின் வெற்றியையும் செல்வாக்கையும் தடைப் படுத்தி அவர்களை இந்தியாவிலிருந்து துரத்திவிட்டு, இங்கிலீஷ் அரசாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்னும் எண்ணத் துடன் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியார் முயற்சி செய்தார்கள். பிறகு இரு தரத்தாருக்கும் பல போர்கள் நிகழ்ந்தன. கடைசியாக ஆங்கிலேயர் வெற்றிபெற்று, ஆங்கில அரசாட்சியை நிறுவினர். இதற்கு அக்காலத்தில் இந்தியாவின் நிலைமை இடங்கொடுத்தது. பிறகு இலங்கை முதலிய தேசங்களையும் பிடித்து, ஆங்கிலேயர் அரசாளத் தொடங்கினார்கள்.

வியாபாரத்துக்காக வந்த ஐரோப்பியர்கள், இந்தியரைக் கிறிஸ்தவ மதத்திற் சேர்க்கவும் முயற்சி செய்து வந்தார்கள். இந்துக்களைக் கிறிஸ்தவராக்கும் பொருட்டு அனேக பாதிரிமார்களை ஐரோப்பிய தேசங்களிலிருந்து அழைத்து வந்தார்கள். நமது தேசத்துக்கு வந்த பாதிரிமார்கள் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்க முற்பட்டபோது, அவர்களுக்குப் பாஷைகள் தடையாக நின்றன. ஆகவே அவர்கள் முதலில் இந்திய பாஷைகளைக் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தாங்கள் எந்த நாட்டாருக்கு மதபோதனை செய்யக் கருதினார்களோ, அந்த நாட்டுப் பாஷையைக் கற்றுத் தேர்ந்து, அதிற் பேசவும் பிரசங்கம் செய்யவும் முயன்றார்கள். அந்த முறையில் தமிழ் நாட்டிற்கு வந்த பாதிரிமார்கள் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து தமிழிற் பேசவும் சொற்பொழிவு நிகழ்த்தவும் நூல் இயற்றவும் தொடங்கினார்கள். இவ்வாறு தமிழ் மொழிக்கும் ஐரோப்பியப் பாதிரிமாருக்கும் ஏற்பட்ட தொடர்பினால், தமிழிற் சில மாறுதல்கள் அல்லது முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

தமிழ்மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது அபிவிருத்தி அனைத்தும் பாதிரிமார்களால் உண்டானவையே. இல்லறத் தாராகிய ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களால் தமிழுக்கு அதிகமாக யாதொன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நமது நாட்டில் 19 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கிலேய உத்தியோகஸ்தர், தங்கள் உத்தியோக முறைக்கு உதவியாக இருப்பதற்காகவும், நமது நாட்டுக் கலையின் நோக்கை அறிவதற்காகவும், சென்னைக் கல்விச் சங்கம் (The Madras College) என்னும் ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாகத் தமிழைக் கற்று வந்தார்கள். இச்சங்கத்தினால் தமிழ் மொழிக்கு விசேஷமாக யாதொரு அபிவிருத்தியும் உண்டானதாகச் சொல்ல முடியாது. கிறிஸ்தவர்களால் தமிழுக்கு ஏற்பட்ட அபிவிருத்தி எல்லாம் பாதிரிமாரைச் சேர்ந்ததே. பாதிரிமாரும் தமிழுக்காகச் செய்ய வேண்டும் என்னும் கருத்துடன் செய்யவில்லை. தங்கள் மதத்தைப் பரப்புவதற்காகச் செய்த முயற்சியின் பலனே தமிழுக்குச் சில நன்மைகளை அளித்தது. எவ்வாறாயினும், அந்த நன்மைகள் ஐரோப்பியப் பாதிரிமார்களால் உண்டானவையே.

-

தமிழ்மணிக் கோவை (இரண்டாம் கோவை), வித்துவான் சி. குப்புசாமி ஆழ்வார் (தொ - ர்), சென்னை - மதுரை, 1937.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (