Skip to main content

தமிழ்நாட்டின் தொன்மை - மயிலை சீனி. வேங்கடசாமி


அண்மையில் வெளிவந்து பாடசாலைகளில் பிள்ளை களுக்குப் பாடமாக வைத்திருக்கும் இந்திய சரித்திரப் புத்தகம் ஒன்றைக் கண்டேன். அதில், சிலப்பதிகாரக் கதையைத் தமிழ்நாட்டின் ஆதிச் சரித்திரமாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அப்புத்தகத்தை வாசிக்கும் பிள்ளைகள் கி.பி. முதல் நூற்றாண்டில் நடந்த கோவலன் கதையையன்றித் தமிழ்நாட்டிற்கு வேறு புராதன சரித்திரம் இல்லையோ என்று ஐயுறுவார்களன்றோ? அவ்வித ஐயம் எனக்கும் தோன்றிற்று. ஆகவே, தமிழ்நாட்டின் சரித்திர ஆரம்ப காலத்தை ஆராய்ந்தறியத் தொடங்கினேன். இவ்வாராய்ச்சியில் பாரத, இராமாயண காலத்துடன் தமிழ்நாடு சம்பந்தப்பட் டிருந்ததையும் இராமாயண காலத்திற்கு முன்னரே தமிழ்நாடு நாகரிகமடைந்து விளங்கியதையும் கண்டேன். அதனையே இங்கு எழுத முற்பட்டேன்.

கி.மு. 1000 வருடங்களுக்கு முன் செங்கோலோச்சிய சாலோமன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்ட எபிரேய வேத புத்தகத்தில் "தார்ஷிஸ் (Tarshish) கப்பல்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை, பொன்னையும் வெள்ளியையும் யானைத் தந்தங்களையும் குரங்கையும் மயிலையும் சுமந்து கொண்டு வந்தன” என்று எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு தமிழ்நாட்டின் தொன்மை கி.மு. 1000 வருடங்களுக்கு முற்பட்ட தென்பது யூகிக்கப்படும். இது புறப்பாட்டுப் புறச்சான்றாகும்.

அகச் சான்று, புறச் சான்றுகளைக் கொண்டு பாரதப் போரில் தமிழ்நாட்டின் தொடர்பை விளக்குவோம். பாரத காலத்தில் தமிழ்நாட்டின் மூவேந்தர் அரசாண்டனர் என்பது புறநானூறு, சிலப்பதிகாரம் என்னும் நூல்களில் காணப்படு கிறது. பாரதப் போர் நடந்த காலத்தில் சேர நாட்டில் செங்கோல் செலுத்தியவன் உதியன் சேரலாதன் என்னும் தமிழரசன். இவன் பாரதப் போரில் எக்கட்சியையும் சேராமல் நடுவுநிலைமை வகித்தான். ஆனால், பாண்டவர் சேனைக்கும் ' துரியோதனனாகியோர் சேனைக்கும் பாரதப் போர் முடியும் வரையில் உணவு அளித்தான். இச்செய்கையால் இவ்வரசன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். இதனைப் புறநானூறு இரண்டாவது செய்யுளில் அறியலாம். இதே சரித்திரத்தைச் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில்,

ஓரைவரீரைம்பதின் மருடன் றெழுந்த
போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட வாடாமோ வூசல்
கடம்பெறிந்த வாபாடி யாடாமோ வூசல்

(சிலம்பு 29:25)

என்னும் செய்யுளால் இளங்கோவடிகள் நன்கு விளக்கியிருக் கிறார். சேரனைப்போலவே சோழ அரசனும் (அவன் பெயர் சொல்லப்படவில்லை) பாரதப் போர் வீரர்களுக்கு உணவளித் தான் என்னும் சரித்திரமும் காணப்படுகிறது. ஆனால், பாரத காலத்தில் பாண்டிய அரசனைப் பற்றி யாதொன்றும் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படவில்லை. ஆயினும், பாண்டவர் துரியோதனனாகியோர் காலத்தில் பாண்டி நாட்டினை அரசாண்டவன் சித்திரவாகனன் என்னும் அரசன். அவன் மகள் சித்திராங்கதை என்பவளைப் பாண்டவர்களுள் ஒருவனாகிய பார்த்தன் (அர்ச்சுனன்) மணம்புரிந்தான் என்றும் இக்கடிமணங் காரணமாக அவர்களுக்குப் புலந்தரன் என்னும் அரசிளங்குமரன் பிறந்தான் என்றும் பாரதப் போர் தொடங்கு முன் இப்புலந்தரன் பாண்டவர் பொருட்டுத் துரியோதனன் பால் தூது சென்றான் என்றும் பாரத சரித்திரம் விளம்பு கின்றது (புலந்தரனுக்குப் பப்ரவாகனன் என்னும் பெயரும் உண்டு). மேற்சொல்லிய இக்காரணங்களால் தென்னாட்டுச் சரித்திரம் வடநாட்டுச் சரித்திரத்திற்குப் பிற்பட்டதன்று என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகிறதன்றோ?

இனி பாரத காலத்திற்கு முற்பட்ட இராமாயண சரிதத்தை ஆராய்வோம். சங்க காலத்தில் இயற்றப்பட்ட இராமாயண வெண்பா என்னும் நூல் துரதிஷ்டவசமாக மறையுண்ட படியால் இராமாயண காலத்தில் தமிழ்நாட்டின் சரித்திரக் குறிப்புகளைத் தெரிவிக்கும் அகச்சான்றுகள் இல்லை. ஆயினும் போதிய புறச்சான்றுகள் உள. சீதாபிராட்டியாரைத் தேடும் பொருட்டு வானர வீரர்களைப் பல திசையிலும் அனுப்பிய சுக்ரீவன் அவ்வீரர்களுக்குக் கீழ்க்கண்டபடி கட்டளையிட்டதாக வடமொழி இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷி எழுதியிருக்கிறார்: "ஆந்திரம், புண்டரம், சோளம் (சோழம்), கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள். பிறகு பொன்னிறத்ததாயும் அழகுடைத்தாயும் முத்தமயமான மணிகளால் அலங்கரிக்கப்பெற்றதாயும் பாண்டியர்களுக்கு யோக்கியமாயுமுள்ள கவாடத்தையும் பார்க்கக் கடவீர்கள்.” வால்மீகி இராமாயணத்தில் கண்ட இக்குறிப்புகளால் இராமாயண காலத்தில் அல்லது வால்மீகி மகரிஷி காலத்தில் தமிழ்நாட்டினை மூவேந்தர் ஆட்சி செய்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும். இன்னும், இராம, இராவணர் காலத்தில் இருந்த பாண்டிய அரசன் பிரமசிரம் என்ற அஸ்திரத்தைப் பெற்றுப் பராக்கிரம னாக விளங்கினான் என்றும் அதனால் இராவணன் அப் பாண்டியனுடன் சந்தி (சமாதானம்) செய்து கொண்டு பின்னர் இந்திரலோகத்தை வெல்லப் போனான் என்றும் காளிதாச மகாகவி இயற்றிய இரகுவமிசம் என்னும் காவியத்தில் காணப்படுகிறது. இதனால் இராமாயண காலத்தில் இருந்த பாண்டிய மன்னன் இராவணனும் அஞ்சும்படியான பராக் கிரமம் உடையவனாயிருந்தானென்பது வெளிப்படை. இவை வடமொழி நூல்களிலுள்ள புறச்சான்றுகள்.

இராமாயண காலத்திற்கு முற்பட்ட பரசுராமர் காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னனைப் பற்றிப் பண்டைத் தமிழ் நூலாகிய மணிமேகலையில் சொல்லப்பட்டிருக்கிறது. இச்சோழன் பெயர் காந்தன் என்பது. இக்காந்த மன்னன் புகார் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட காலத்தில், பரசுராமர் அரச குடும்பங்களை நாசம் செய்யும் பொருட்டுச் சோழநாட்டுக்கு வந்தார். பரசுராமர் தன்னுடன் போர் செய்ய வருவதைக் கேட்ட காந்தன் அவருடன் எதிர்த்துப் போர் செய்யத் துணிந்து நின்றான். இதனையறிந்த பரத கண்டத்தின் அதி தேவதையாகிய சம்பாபதி (துர்க்கை என்றும் சொல்வதுண்டு) சோழன் முன் தோன்றிப் பரசுராம ருடன் எதிர்த்துப் போர் செய்யத் தகாதென்று கூறிற்று. இத் தெய்வத்தின் கட்டளையை மீறிச் செல்ல உடன்படாமல் காந்தன், அரச குடும்பத்தில் உதிக்காத ஒருவனைத் தன் சிங்காதனத்தில் வைத்துத் தான் வருமளவும் சோழநாட்டை ஆளும்படி கட்டளையிட்டுப் பொதிகையிலுள்ள அகத்திய முனிவரிடம் சென்றான். பரசுராமர் சோழநாட்டுக்கு வந்து அங்கு அரச குடும்பத்தவனல்லாத ஒருவன் அரசாட்சி செய்வதைக் கண்டு அவனுடன் போர் செய்யாமல் வாளா சென்றார். இது, மணிமேகலை சிறைசெய் காதையில் உள்ள கீழ்க்கண்ட அடிகளால் நன்கு விளங்கக்கிடக்கிறது.

மன்மருங் கறுத்த மழுவா நெடியோன்
றன்முன் போன்ற மகாதொழி நீயெனக்
கன்னி யேவலிற் காந்த மன்னவ
னிந்நகர் காப்போர் யாரென நினைஇ
நாவலந் தண்பொழி னண்ணார் நடுக்குறக்
காவற் கணிகை தனக்காங் காதல
னிகழ்ந்தோர் காயினு மெஞ்சுத லில்லோன்
ககந்தனாமெனக் காதலிற் கூஉய்
அரசாளுரிமை நின்பா லின்மையிற்
பரசுராமனின் பால்வந் தணுகா
னமர முனிவ னகத்தியன் றனாது
துயர் நீங்கு கிளவியின் யான்றோன் றளவுங்
ககந்தன் காத்தல் காகந்தி என்றே
யியைந்த நாம மிப்பதிக் கிட்டீங்
குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர் நாள்

(மணி. 22:25-39)

இனி, பரசுராமரும் ஸ்ரீராமரும் சற்றேறக்குறைய ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்பது வெளிப்படை. அன்றியும் ஸ்ரீராமர் இலங்கைக்குச் சென்றபோது இடையில் அகத்திய முனிவர் ஆசிரமத்தில் தங்கினார் என்று இராமாயணக் கதை விளம்புகிறது. அகத்தியர் காலத்தில் சோழநாட்டை அரசாண்டவன் காந்தன் என்னும் அரசன் என்பதும் மேலே விளக்கப்பட்டது. ஸ்ரீராமர் காலத்தில் இலங்கையை யாண்டவன் ராவணன் என்பதும் வெளிப்படை. அந்த ராவணன் பாண்டியனுக்கு அஞ்சி அவனுடன் சமாதானம் செய்துகொண்டான் என்பதிலிருந்து ராமாயண காலத்தில் பாண்டியன் பராக்கிரமசாலியாக விளங்கினான் என்பது வெள்ளிடைமலை போல் விளங்காநிற்கும். இவ்வித ஏதுக் களால் தென்னாட்டுச் சரித்திர காலம், வடநாட்டுச் சரித்திர காலத்திற்குப் பிற்பட்டதல்ல வென்பது விளங்குகிறதன்றோ?

இனி, வால்மீகி மகரிஷி "பாண்டியனுடைய கபாடத்தையும் காண்பீர்கள்" என்று சொல்லியிருப்பதையும் ஆராய்வோம். முதற் சங்கம் கடல் கொண்ட குமரி நாட்டில் இருந்த மதுரை நகரில் இருந்தது என்றும் பிற்காலத்தில் அக்குமரி நாட்டின் ஒரு பாகம் (மேற்படி மதுரை நகரம் உட்பட) கடலில் மூழ்கிய பின்னர், கபாடபுரம் என்னுமிடத்தில் பாண்டியன் இடைச் சங்கத்தை ஸ்தாபித்தான் என்றும் அதன்பின் நெடுங்காலம் சென்ற பிறகு அக்கபாடபுரமும் அதைச் சேர்ந்த நாடும் மீண்டும் கடலில் மூழ்கிப் போயிற்றென்றும் அதன் பின்னர் இப்பொழுதுள்ள மதுரை நகரத்தில் பாண்டியன் கடைச் சங்கத்தை ஸ்தாபித்தான் என்றும் அக்கடைச் சங்கம் கி. பி. முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டு வரையில் நிலை பெற்றிருந்ததென்றும் கர்ணபரம்பரையாகவும் தக்க ஆதாரங்களோடும் சொல்லப்படுகிறது (ஆதாரங்களை யெல்லாம் இங்கு எழுதினால் மிகவும் விரியும்). எனவே இடைச் சங்கம் கபாடபுரத்தில் இருந்தது என்பதிலிருந்தும் வால்மீகி மகரிஷி "பாண்டியனுடைய கபாடத்தைக் காண்பீர்கள்" என்று எழுதியிருப்பதிலிருந்தும் இராமாயண காலம் இடைச் சங்க காலத்தில் நடை பெற்றதாக ஏற்படுகிறது. பல பெரியோர் களும் இதே அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதும் நோக்கற் பாலது. எனவே, தமிழ்நாட்டுச் சரித்திர ஆரம்ப காலம் இராமாயண காலத்திற்கும் முற்பட்டதென்பது விளங்குகிறது. இவற்றையெல்லாம் ஆராயாமல் சரித்திரமெழுதுவோர் கி. பி. முதல் நூற்றாண்டில் (கடைச்சங்க காலத்தில்) நடைபெற்ற சிலப்பதிகாரக் கதையைத் தமிழ்நாட்டின் ஆதி சரித்திரமாகக் குறிப்பிடுவது நகைப்பிற் கிடமாகிறதன்றோ ?

லஷ்மி, மலர் 2, இதழ் 8, மார்ச் 1925

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...