Skip to main content

மகாத்மா போற்றிய வளையல்கள் | எஸ். வி. ராமகிருஷ்ணன்


ஆகஸ்டு புரட்சியை ஒட்டி காந்திஜி சிறை வைக்கப்பட்ட புனே ஆகாகான் மாளிகை இன்று காந்தி நினைவு இல்லம். அப்போதைய ஆகாகான் இந்த அரண்மணையை இந்திய அரசாங்கத்துக்கு நன்கொடையாக அளித்ததைத் தொடர்ந்து இதை ஒரு தேசிய டிரஸ்ட் நிர்வகிக்கிறது.
1976 என்று நினைவு, நான் முதன் முறையாக இந்த இல்லத்துக்குச் சென்றேன். எனக்கு மாளிகையைச் சுற்றிக்காட்டிய ஊழியருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சில விஷயங்களைப் பற்றி தனக்கு முழு விவரங்கள் தெரியாது என்றார். ஆனால் காந்தியடிகள் காவலில் இருந்த சமயம் அங்கு பணியாற்றிய ஒருவர் தற்சமயம் டிரஸ்ட் ஊழியத்தில் இருக்கிறார்; அவருக்கு எல்லாம் தெரியும் என்றும் கூறி ரகுநாத்தை அழைத்து வந்தார். எனக்குப் புதையல் கிடைத்த மாதிரி இருந்தது. அவர் சுவாரசியமான பல விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில எந்தப் புத்தகத்திலும் வராதவை.
‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் 1942 ஆகஸ்டு பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே ரகசியத் தகவல் கிடைத்தது. எல்லாத் தலைவர்களையும் கூண்டோடு கைது செய்யவும் அதனால் வரக்கூடிய கொந்தளிப்பை அடக்கவும், அதுவரை காணாத பயங்கர அடக்குமுறையை அவிழ்த்துவிடவும், செய்தி இருட்டடிப்பு செய்யவும் வைஸ்ராய் லின்லித்கோ பிரபு தயாராகத் திட்டம் தீட்டி வைத்திருந்தார். இது இப்போது சரித்திரத்துக்குத் தெரிந்த விஷயம். ஆனால் அப்போது ஆகஸ்ட் 8ஆம் தேதியை அடுத்து நிகழ்ந்த செய்தி இருட்டடிப்பினால் பல வாரங்களுக்கு தேசத் தலைவர்கள் எங்கு இருக்கிறார்கள், யார் யார் கைது ஆனார்கள், எவர் தலைமறைவு என்பது மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. அந்த நிலைமையில் காந்திஜியைக் கைது செய்து புனேவுக்குக் கொண்டுவரப் போகிறார்கள் என்று ரகுநாத் யூகித்த விதம் சுவையானது. திடீரென்று பம்பாய் மாகாண சிறைச்சாலைகளின் ஐ. ஜி. (ஒரு ஆங்கிலேயர்) எரவாடா ஜெயிலுக்கு விஜயம் செய்தார். அப்போது ரகுநாத்தையும் கூப்பிட்டு அனுப்பினார்கள். கொஞ்ச நாட்களுக்கு தினசரி நல்ல ஆட்டுப்பால் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் சொன்னார். மகாத்மாவும் இதர தலைவர்களும் கைதாகக்கூடும் என்ற அச்சம் நிலவிய சமயம் அது. ஆட்டுப்பால் என்ற உடனே ரகுநாத்துக்கு மகாத்மாவைப் புனேவுக்குக் கொண்டுவரப் போகிறார்கள் என்ற சந்தேகம் பளிச்சென்று எழுந்தது. ஐ. ஜி. துரையே நேரில் கூப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவு முக்கியமான விஷயமாக இருந்ததால் இது காந்திஜி சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் தோன்றியது. உடனே போய் இரண்டு உயர்ந்த கறவை ஆடுகளை வாங்கிவரும்படி அவருக்கு உத்தரவு போட்டார்கள்.
அன்றே ரகுநாத்தின் மேலதிகாரி அவரிடம், “நீர் சில நாட்களுக்கு வீட்டுக்குப் போகமுடியாதபடி டியூட்டி இருக்கும். வீட்டிலே போய் சொல்லவிட்டு வந்துவிடும்.” என்று ரகுநாத் நினைத்துக்கொண்டார். ஏதோ சில தினங்களுக்குத்தான் என்று ரகுநாத் நினைத்துக்கொண்டார். தனக்கே மாதக்கணக்கானதொரு சிறைவாசமாக அது அமையப் போகிறது என்று அவருக்குத் தெரியாது.
அவரை ஆகாகான் மாளிகைக்கு அனுப்பினார்கள். அங்கு சுற்றிலும் ராணுவ பந்தோபஸ்து பலமாக இருந்தது. யாரையும் அந்தச் சாலையிலேயே அனுமதிப்பதில்லை. அப்பொழுதுகூட காந்திஜியை அங்கே காவலில் வைப்பார்கள் என்று யாருக்கும் தோன்றவில்லை. அலக மகாயுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருந்த சமயம் அது. ஆப்பிரிக்கச் சண்டையில் பல இத்தாலியப் படையினர் சரணடைந்து பிரிட்டிஷ் ராணுவக்காவலில் இந்தியாவில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் யாரோ பெரிய ஜெனரல் ஒருவரைக் கொண்டுவருவதாகவும் போலீஸ் வட்டாரங்களில் வதந்தி கிளம்பிற்று. ரகுநாத்தும் அவ்வாறே நம்பினார். காந்தியடிகள் கைதானால் வழக்கம்போல் எரவாடா சிறையில் வைப்பார்கள் என்று எண்ணினார்.
அடுத்தநாள் காந்திஜி, மகாதேவ தேசாய் (மகாத்மாவின் செயலர்), டாக்டர் கில்டர், ஜெயப்பிரகாஷ் நாராயணின் மனைவி பிரபாவதி தேவி முதலியோர் வந்து இறங்கினர். இவர்கள் ஆகாகான் அரண்மனைக்குக் கொண்டுவரப்பட்டது பரம ரகசியம். பம்பாயிலிருந்து தனிரயிலில் அழைத்துக்கொண்டு வந்து புனே ஸ்டேஷனில் இறங்கினால் கலாட்டா ஆகிவிடும் என்பதற்காக ஏழு, எட்டு மைல் தூரம் முன்னதாகவே இரண்டு சிறிய ஸ்டேஷன்களுக்கு நடுவே அவர்களை இறக்கிக் காரில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். இரண்டாவது குழு வந்து சேர்ந்தது. எல்லா விதமான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தினசரிப் பத்திரிகை தரப்படவில்லை. இது பற்றி காந்திஜி வருத்தப்பட்டார்.
சில நாட்களுக்குப் பின் சிறை அதிகாரிகளிடம் மகாதேவ தேசாய் இந்த விஷயத்தைப் பற்றிப் புகார் செய்துகொண்டிருக்கும்போது திடீரென்று ‘மாரடைக்கிறது’ எற்று சொன்னவர் மருத்துவ உதவி எதுவும் பிரயோஜனப்படாமல் உயிர் நீத்தார். அவருடைய மறைவு மகாத்மாவை மட்டுமல்லாது கஸ்தூரிபாவையும் பெரும் அளவில் பாதித்தது. காந்திஜி தன் தினசரிக கடமைகளை வழக்கமான ஒழுங்குடன் அனுசரித்து வந்தபோதிலும் அவருடைய மனம் வாடியிருந்தது சில காலத்துக்குத் தெரிந்தது.
இதற்குச் சில மாதங்கள் கழித்து உடல்நலம் குன்றிய கஸ்தூரிபாவின் மரணமும் ஆகாகான் மாளிகையிலேயே நிகழ்ந்தது. முற்றும் துறந்த மகாத்மாவுக்குக்கூட உள்ளத்தின் ஆழத்தில் இது துயரத்தைக் கொடுத்தது என்று தோன்றியது. பல நாட்கள் நீண்ட நேரம் கஸ்தூரிபா சமாதி அருகில் மகாத்மா உட்கார்ந்திருப்பார். விடுதலையாகிப் போகுமுன்பாக, கஸ்தூரிபா, தேசாய் சமாதிகளின் முன் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டுச் சென்றார் காந்திஜி.
ஆகாகான் மாளிகைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் மகாதேவ தேசாய், கஸ்தூரிபா ஆகிய இருவரின் சமாதிகளும் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. நான் அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ரகுநாத் ஒரு தகவல் சொன்னார். கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து சிதையைப் பார்க்கச் சென்ற ரகுநாத், எரிந்து சாம்பலாகிவிட்ட சிதையில் கஸ்தூரிபாவின் இரண்டு கண்ணாடி வளையல்கள் மட்டும் முழுதாகவும் நிறம் மாறாமலும் இருப்பதைக் கண்டு ஓடோடி வந்து காந்திஜியிடம் சொன்னார். அதை நம்ப மறுத்த மகாத்மாவிடம் நேரில் வந்து பார்க்குமாறு மன்றாடினார். காந்திஜி போய் பார்க்கையில் அவ்வாறே கிடக்கக் கண்டார்.
கஸ்தூரிபா ஒரு சிறந்த பதிவிரதையாதலால் இப்படி நடந்திருக்கிறது என்று கருதிய காந்திஜி அவற்றை எடுத்துப் பத்திரமாகப் போற்றி வைத்துக்கொண்டார். ஆகாகான் மாளிகையில் மகாத்மா இருக்கும்வரை அவை அவர் வசம் இருந்தன. இப்பொழுது அவை எங்கு இருக்கின்றன என்பது ரகுநாத்துக்குத் தெரியாது. இந்த நிகழ்ச்சியை ரகுநாத் விவரித்தபோது எனக்கு முழு நம்பிக்கை இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ராபர்ட் பெயின் எழுதிய ‘The Life and Death of Mahatma Gandhi’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன்.
காந்திஜி அல்லாது மற்ற சில தேசியத் தலைவர்களையும் ரகுநாத்துக்குத் தெரியும். 1931 — 32இல் காந்தியடிகள் எரவாடா சிறையில் இருக்கும்போது கொஞ்ச காலம் சர்தார் பட்டேலும் அவருடன் இருந்தார். அப்போது மகாதேவ தேசாய் இல்லாததால் பட்டேல்தான் மகாத்மாவுக்குக் காரியதரிசி போன்று எல்லா வேலைகளையும் கவனித்தார். அந்த நாளில் பட்டேல் மகா கோபக்காரர் (கரம் ஆத்மி) என்பது ரகுநாத்தின் அபிப்ராயம். எதற்கும் சீக்கிரம் கோபம் வந்துவிடுமாம். அவர் நினைவு கூர்ந்த ஒரு சம்பவம்:
ஒரு சமயம் காந்திஜிக்கு பாதாம் வேண்டுமென்று பட்டேல் சொல்ல, ரகுநாத் கடைக்குப்போய் வாங்கி வந்த பாதாம் பட்டேலுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஏன் நல்ல சரக்காய் பார்த்து வாங்கிவரவில்லை என்று கேட்டதற்கு, “நாலு கடை பார்த்து நல்லதாகத்தான் கொண்டுவந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார் ரகுநாத். பட்டேலுக்கு ஜிவ்வென்று முகம் சிவந்துவிட்டது. “நீ கொண்டு வந்த பாதாமைக் கழுதைகூட தின்னாது” என்று சத்தம் போட்டார். ரகுநாத்தின் அதிர்ஷ்டம், அதற்குள் அந்தப் பக்கம் வந்த காந்திஜி, விஷயத்தை விசாரித்துவிட்டு “பாதாம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை, இதுவே போதும்” என்று சொல்லிச் சமாதானப்படுத்தினார்.
எரவாடா சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ரகுநாத்துக்குக் கிட்டியது. ஒரு நாள் அவர் பேனா வேண்டுமென்று சொன்னார். ரகுநாத் ஜெயில் கணக்கில் பணம் எடுத்துக்கொண்டுபோய் நான்கு ரூபாய்க்கு (அன்று ரூபாயின் மதிப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) ஒரு பேனா வாங்கிவந்தார். அதில் மை விட்டு எழுதியபோது நேதாஜிக்கு திருப்தி ஏற்படவில்லை. ‘இந்தப் பேனா சரியில்லை; போய் வேறு மாற்றிக் கொண்டுவா’ என்று சொல்லிவிட்டார். கடைக்காரன் திருப்பி எடுத்துக்கொள்ள மறுத்துவிடவே நான்கு ரூபாயைத் தன் கையில் இருந்துதான் போட்டுச் சரிக்கட்ட வேண்டும் என்று ரகுநாத் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தது போஸின் காதுக்கு எட்டிவிட்டது. அவர் உடனே ரகுநாத்தைக் கூப்பிட்டு, “கடையில் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்பதை நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? நீ நஷ்டப்படக் கூடாது. பரவாயில்லை, இந்தப் பேனாவிலேயே எழுதிக்கொள்கிறேன்.” என்று பெருந்தன்மையுடன் சொன்னதை நன்றி உணர்வுடன் நினைவுகூர்ந்தார் ரகுநாத்.
இன்னொரு நாள் சாவகாசமாக வந்தால் இன்னும் பல அனுபவங்களையும் நிகழ்ச்சிகளையும்கூடக் கூறுவதாகச் சொன்னார் ரகுநாத்.
நான் மீண்டும் ஆகாகான் மாளிகைக்குப் போவதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. கடைசியாக நான் அங்கே போனபோது ரகுநாத் சில சொந்த அசௌகரியங்கள் காரணமாக வேலையை விட்டுவிட்டுத் தன் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார் என்று கண்டேன். தேசியப் போராட்டத்தின் தலைவர்களுடன் ருசிகரமான அவருடைய அனுபவங்கள் பலவற்றையும் கேட்கும் சந்தர்ப்பம் கை நழுவிவிட்டது.
(எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய ‘அது அந்தக் காலம்’ நூலிலிருந்து. உயிர்மை பதிப்பகம், 2004)

தொடர்புடைய பதிவு:

மகாத்மா போற்றிய வளையல்கள் | எஸ். வி. ராமகிருஷ்ணன்

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப