Skip to main content

அவரவருக்கு வேண்டிய மகாத்மா | ராமாநுஜம்


சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன்நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி இருக்க முடியாது. கலாசாரத்தில் ஒதுக்கப்பட்ட கறுப்பு நிறத்தைக் கொண்டாடாமல் பெரியாரியம் சாத்தியமில்லை.
இதை வைத்து நாம் சூத்திரங்களை உருவாக்க முடியாது என்றாலும் உள்ளடக்கத்திற்கும், வடிவத்திற்கும் உள்ள இணைவை நாம் போற்ற முடியும். இந்த உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவைக் காந்தி ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றார். உடலின் சாத்தியங்களை இதற்குமுன் வரலாற்றில் காணாத அளவிற்கு விரிவுபடுத்தினார்.
அரசியல் போராட்டம் ஆகட்டும், ஆன்மீகச் சிந்தனையாகட்டும், சமூகச் சீர்திருத்தங்கள் ஆகட்டும், அறிவியல் விஞ்ஞான தொழில்நுட்பச் சிந்தனையாகட்டும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தன் உடலையே காந்தி மையப்படுத்தினார். காந்தி முன்வைத்த உடல் என்பது மதங்கள் போற்றிய வரையறைகளுக்கு வெளியே இருந்தது. அது காலனியம் முன்வைத்த உடலை நிராகரித்தது. இந்தியத் தேசிய எழுச்சி முன்வைத்த ஆண்- மைய உடலை மறுத்தது. காந்தியின் உடல் வரலாற்றிலிருந்தும், கருத்தாக்கத் தளத்திலிருந்தும் தனி மனிதனின் உடலை விடுதலை செய்ய முயற்சித்தது. காந்தி உடலின் சாத்தியங்களை விரிவுபடுத்த முயற்சித்த அதே வேளையில் அதன் எல்லையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
காந்தியின் உடலை நாம் இரண்டு தளங்களில் வைத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
1. சமூக, கலாச்சார அரசியல் தளத்தில் காந்தியின் உடல் (காலனிய எதிர்ப்பும் தேசியக் கட்டமைப்பும்)
2. பிரம்மச்சரிய பரிசோதனைகளில் காந்தியின் உடல்
காந்தியை முழுவதுமாக ஏற்பதும் சாத்தியமில்லை, நிராகரிப்பதும் சாத்தியமில்லை. நேரு, அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களை ஒரு சாரார் முழுமையாக ஏற்பதும் மற்றொரு சாரார் முழுமையாக நிராகரிப்பதும் சாத்தியப்படுகிறது. காந்தியைப் பொறுத்த மட்டில் இது சாத்தியப்படாமலே போகிறது. காந்தியின் அரசியல் அறத்தைப் போற்றியவர்கள் அவருடைய பிரம்மச்சரியப் பரிசோதனையை ஏற்க மறுத்தார்கள். அவருடைய சமூகப் பார்வையை விமர்சித்தவர்கள் அறத்தை மையமாக வைத்த அவருடைய அரசியலைப் போற்றினார்கள். காந்தியின் மத நல்லிணக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய சாதி நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை விமர்சித்தார்கள். மறைந்த எழுத்தாளர் ராஜாராவ் காந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'இஸ்லாமை எதிர்ப்பதற்காக அவர் இஸ்லாமியர்களை ஆதரித்தார்' என்று எழுதியுள்ளார். தோழர் அ.மார்க்ஸ் அண்மையில் எழுதிய புத்தகத்தில், ‘சாதி நிறுவனத்தால் பயன் அடைந்தவர்களுக்கிடையே காந்தி சனாதன எதிர்ப்புப் பற்றி பேச வேண்டியிருந்தது என்றால் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் சனாதனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பேச வேண்டியிருந்தது. அதனால் காந்தியின் மொழி, அம்பேத்கர் மற்றும் பெரியார் பேசிய மொழியிலிருந்து வேறுபட்டுத்தான் இருக்கும்’ என்கிறார். அதே சமயத்தில் வைதீக சனாதனிகளிடமிருந்து காந்தியைப் பிரித்தெடுக்கவும் முயற்சிக்கிறார். பெரியார் பற்றி பல புத்தகங்களைத் தோழர் எஸ். வி. ஆருடன் இணைந்து எழுதிய வ.கீதா அவர்கள் ஆங்கிலத்தில் 'Soul Force' என்று காந்தியின் அறம் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துள்ளார். எப்படிப் பார்த்தாலும் காந்தி சிக்கலான மனிதர்தான். புரிந்துகொள்ள முடியாத மகாத்மாதான். அவரவருக்கு வேண்டிய மகாத்மாவைக் காந்தியிடமிருந்து அவரவர் உருவாக்கிக் கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.
'காந்தியின் உடலரசியல்: பிரம்மச்சரியமும், காலனிய எதிர்ப்பும்' நூலின் முன்னுரை (கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2007)

Comments

Most Popular

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...