சந்நியாசம் ஏற்காமல் ஆதி சங்கரன் அத்வைதம் பேசியிருக்க முடியாது. துறவறம் ஏற்காமல் புத்தன் சாத்தியமில்லை. நிர்வாணத்தைக் கொண்டாடாமல் மகாவீரர் அகிம்சையை முன்நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை விட்டெறியாமல் காந்தி மகாத்மாவாகியிருக்க முடியாது. மேற்கத்திய உடையை அணியாமல் அம்பேத்கர் ஜாதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி இருக்க முடியாது. கலாசாரத்தில் ஒதுக்கப்பட்ட கறுப்பு நிறத்தைக் கொண்டாடாமல் பெரியாரியம் சாத்தியமில்லை. இதை வைத்து நாம் சூத்திரங்களை உருவாக்க முடியாது என்றாலும் உள்ளடக்கத்திற்கும் , வடிவத்திற்கும் உள்ள இணைவை நாம் போற்ற முடியும். இந்த உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவைக் காந்தி ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் சென்றார். உடலின் சாத்தியங்களை இதற்குமுன் வரலாற்றில் காணாத அளவிற்கு விரிவுபடுத்தினார். அரசியல் போராட்டம் ஆகட்டும் , ஆன்மீகச் சிந்தனையாகட்டும் , சமூகச் சீர்திருத்தங்கள் ஆகட்டும் , அறிவியல் விஞ்ஞான தொழில்நுட்பச் சிந்தனையாகட்டும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தன் உடலையே காந்தி மையப்படுத்தினார். காந்தி முன்வைத்த உடல் என்பது மதங்கள் போற்றிய வரையறைகளுக்கு வெளியே இருந...