Skip to main content

என்னைப் பாதித்த சில நூல்கள் | க. நா. சுப்ரமண்யம்

பாதித்த என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது பற்றி நேற்று சிறிது விவாதம் நடந்தது. பிடித்த, ரஸித்த, பிடிக்காத, வெறுத்த, மனசைச் சிறிது தொட்ட, வாழ்க்கைப் போக்கையே மாற்றிய, அதிகமாக மாற்றாத என்றெல்லாம் அர்த்தம் சொல்லப்பட்டது. பாதிப்பு என்பதை Influence என்கிற ஆங்கில வார்த்தையின் மொழிபெயர்ப்பாக, ஓர் இலக்கிய விமர்சனக் குறியீடாக ஏற்றுக்கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. பாதிப்பு என்றால் கையைக் காலை உடைத்திருக்க வேண்டும் என்றோ, கண்களைக் குருடாக்கியிருக்க வேண்டும் என்றோ, உள்ளத்தைத் திரித்திருக்க வேண்டும் என்றோ அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. தவிரவும் இன்றைய அதிக பாதிப்பு நாளை தேய்ந்து மங்கிவிடலாம்; அதனால் இன்று பாதிப்பு இல்லாது போய்விட்டது என்று ஏற்படாது.

நேற்று கட்டுரை படித்த என் மதிப்புக்குரிய நண்பர் ஆர். ஷண்முகசுந்தரம் தன்னை ஒரு நூலும் பாதித்ததில்லை என்று கூறினார். பாதிப்பு என்கிற வார்த்தைக்கு இலக்கிய விமர்சனக் குறியீடாக அல்லாமல், வேறு அர்த்தம் பண்ணிக்கொண்டதனால், அவர் அப்படிக் கூறினார் என்று எனக்குத் தோன்றுகிறது. எந்த நிமிஷமுமே நமது வாழ்வும் எழுத்தும் நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தினாலும் பாதிக்கப்பட்டுத்தான் வருகிறது.

ஒரு நூலைப் படிக்கும்போது நம் மனதில் எழுகிற சிந்தனைகள் எல்லாம் நம்மைப் பாதிக்கின்றன. நூல் முழுவதுமே ஓரளவுக்காவது worthwhile – ‘நல்ல நூல் என்று சொல்லக்கூடியதானால் அது நிச்சயமாக நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். நல்ல என்கிற வார்த்தையை நான் quotation mark-கில் போட்டிருக்கிறேன். நல்ல என்பதற்குத் தரமான என்கிற அர்த்தம் தராமல் இலக்கிய விமர்சனக் குறியீடாக அதை உபயோகிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தில் அப்படிச் செய்தேன். நல்ல’ - அதாவது கெடுதல் செய்கிற சக்தி வாய்ந்த நூல்களாக பலவற்றைப் பற்றி பின்னர் சொல்லுவேன்.

பாதிப்பு - influence என்றால் plagiarism என்று அர்த்தம் பண்ணிக்கொள்வதும் தவறு. தாகூரில், சிறப்பாக ஆங்கிலக் கீதாஞ்சலியில், Robert Browning என்பவருடைய பாதிப்பு இருக்கிறது என்று சொல்வது குறித்து நேற்று ஒருவர் குறைபட்டுக்கொண்டார். அது குறைபட்டுக்கொள்ளும்படியான விஷயம் அல்ல. ஏனென்றால், பாதிப்பு - Influence என்பது, Plagiarism - திருட்டு ஆகாது. அதே அர்த்தத்தில் Hardy என்கிற ஆங்கில நாவலாசிரியரின் பாதிப்பு - influence, ஷண்முகசுந்தரத்தின் நாவல்களில் காணப்படுகிறது என்று சொல்வது குறையாகச் சொல்வது ஆகாது.

அப்படி இலக்கியபூர்வமாகப் பார்க்கும்போது, பிறரால் பாதிக்கப்படாத இலக்கியாசிரியர்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். பல நூலாசிரியர்களுடைய Influence இல்லாத ஒரு நூலும், நாவலோ, கட்டுரைத் தொகுதியோ, கவிதைத் தொகுதியோ உலகத்தில் கிடையாது. எந்த சமயத்தில் Influence என்பது மறைந்து Plagiarism ஆகிறது என்பது இலக்கியாசிரியரின் தெரிந்த திருட்டுத்தனத்தைப் பொறுத்தது ஆகும். Plagiarism என்பது திருட்டுத்தனம்; அநியாயமானது. பாதிப்பு என்பது Influence; நியாயமானது.

இவ்வளவும் பொதுவாகச் சொன்னேன். இவ்வளவும் தமிழில் இலக்கிய விமர்சனம் இன்றுள்ள நிலையில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. ஓரளவு இலக்கிய விமர்சனப் பரிச்சயம் ஏற்பட்டுவிட்டால் இம்மாதிரி Elementary Observations - அரிச்சுவடிப் பாடங்களுக்கு அவசியம் இராது. அந்த அளவுக்கேனும், குறிப்பிட்ட ஒருசிலருக்கேனும் இலக்கிய விமர்சனப் பார்வையை உண்டாக்கித்தர இந்த மாதிரிக் கூட்டங்கள் உபயோகப்படும் என்கிற நிச்சயம் எனக்கிருக்கிறது.

இன்னொன்றும் இங்கு சொல்லுகிறேன். இந்தக் கூட்டம் நடத்துபவர்கள் விவாதங்கள் என்பன கண்டு ஒதுங்க வேண்டியதில்லை. இலக்கிய விமர்சனத்தில் அடிப்படைகள் விவாதங்களினால் ஆழம் பெறுகின்றன; அகலம் பெறுகின்றன; ஸ்திரம் பெறுகின்றன. விவாதத்தில் - எந்த விவாதத்திலுமே விஷயத்துக்குப் புறம்பான சில விஷயங்கள் அடிபடத்தான் படும். விவாதம் விஷயத்தை விட்டு நகருவதனால் சில நன்மைகளும் உண்டு. அகராதியை ஒரு வார்த்தைக்கு அர்த்தம் பார்க்கப் புரட்டும்போது வேறு சில வார்த்தைகளும் கண்ணில் படும் என்பது போல.

இதுவரை பொதுவாக ஆயிற்று. இனி விஷயத்துக்கு வருவோம். என்னைப் பாதித்த நூல்கள் என்பது விஷயம்.

சற்றுமுன் நான் சொன்னேன், படிக்கிற எல்லா நூல்களுமே படிப்பவனை ஓரளவு பாதிக்கின்றன என்று. நான் நூல்களைச் சற்று அதிகமாகவே, அதாவது அதிகமான நூல்களைப் படிப்பவன். என் வாழ்நாளில் பெரும் பகுதியை நான் படிப்பதிலேயே செலவிடுகிறேன். பெரும் பகுதியை என்று சொல்வதைத் தெரிந்தே சொல்கிறேன். நான் தூங்குவதையும்விட அதிகமான பகுதி படிப்பதிலேயே செலவிடுகிறேன் என்பது உண்மையாகும். எனக்கு ஐந்தாறு மணிநேரத் தூக்கம் போதும் என்ற ஒரு பழக்கம் என்னுடைய பதினைந்தாவது வயதில் S.S.L.C. பாஸ் பண்ணியபோதே ஏற்படுத்திக்கொண்டுவிட்டேன். ஆனால் படிப்பது என்பது சாதாரணமாக சராசரிக் கணக்கில் ஒருநாளில் எட்டு மணிநேரமாவது நடக்கிறது. இது குறைந்த பட்சம்.

மற்றவர்களைப் போல அல்லாமல் நான் மூல நூல்களைப் படிப்பதில், மறுபடியும் மறுபடியும் படிப்பதில் ஆனந்தம் கொள்பவன். ஷேக்ஸ்பியரின் The Tempest, Macbeth, Measure for Measure மூன்று நாடகங்களையும், Sonnets தொகுதியையும் குறைந்தபட்சம் ஐம்பது, அறுபது தடவைகளாவது படித்திருப்பேன். Selma Lagarlof என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையின் Gosta Berling Saga என்கிற நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் இருபது தடவையாவது படித்திருப்பேன். Tolstoy-யின் War and Peace என்கிற நாவலை, பெரிதாக இருக்கிறதே, படிக்க முடியவில்லையேஎன்று கவலைப்படுகிறவர்கள் இருக்கலாம்.

ஆனால், நான் ஒருதடவையல்ல, இரண்டு தடவையல்ல, மூன்று தடவைகள் அக்ஷரம் விடாமல் படித்திருக்கிறேன். இப்படியே பல நூல்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு போகமுடியும் என்னால். Joseph and His Brothers என்கிற Thomas Mann நாவல், Tolstoy-யின் War and Peace அளவுக்குச் சற்றும் குறையாதது. அதையும் மூன்று தரம் படித்திருக்கிறேன். ஒருதரம் மூலத்தில் - ஜெர்மன் மொழியில் படித்திருக்கிறேன் - இரண்டாவது தடவையும் புஸ்தகம் கிடைத்தால் படித்துவிடுவேன் என்றுதான் எண்ணுகிறேன்.

சரி. ஆனால், எதற்காக இரண்டாம் தரம், மூன்றாம் தரம் படிக்கவேண்டும் என்கிற கேள்வி எழலாம். முதல் தடவை படிப்பதால் ஏற்படுகிற நிறைவு கூடுகிறது, இலக்கியத் தமான நூல்களால் என்பது எனது ரஸனை அனுபவம். எனது என்று சொன்னேன்; உங்கள் ரஸனை அனுபவம் அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இரண்டாந் தடவை படிக்க முடியாத ஒரு நூல் இலக்கியத் தரமான நூல் அல்ல என்பது எனது அடிப்படையான அபிப்ராயங்களில் ஒன்று; இரண்டாந் தடவை படிக்கும்போது ஒரு நூலில் பல அம்சங்கள் கண்ணில் படவேண்டும், கருத்தில் உறைக்க வேண்டும் - அப்படிப் புதுசாக எதுவும் உறைக்காவிட்டால் அது தரமான நூல் அல்ல என்பதும் என் இலக்கிய அபிப்ராயங்களில் ஒன்றாகும்.

இலக்கியப் பிரக்ஞை என்பது எனக்குச் சற்று சீக்கிரமாகவே ஏற்பட்டது என்பதற்கு மூல காரணமாக என் தகப்பனாரைச் சொல்ல வேண்டும். அவர் இலக்கியப் பிரக்ஞையுள்ளவர். எனக்குப் படிக்கச் சொல்லித் தந்தார்.

நாலாவது பாரம் படிக்கும்போதே நான் Henry Fielding-னுடைய Tom Jones என்கிற நாவலை அவரிடம் உரத்துப் படித்துக் காண்பித்தேன். Tom Jones என்பவன் (அல்லது வேறு யாராவதோ, பெயர் ஞாபகமில்லை) Madame Quickly என்கிற ஒரு ஸ்திரீயின் படுக்கையில் தான் இருந்ததை உணருவதாக ஒரு அத்தியாயம் இருக்கிறது. Tom Jones-ஸில். பதின்மூன்று வயதான எனக்கு அதன் அந்தரங்கங்கள் - sex புகைப்புலம் புரிந்திருக்க நியாயமில்லைதான். இருந்தும் நாவலைப் புரிந்துகொள்ளும்படியாகப் பண்ணிவிட்டார் என் தகப்பனார்.

அதேபோல, அதே வருஷம் Victor Hugo-வின் Les Miserables, Thackeray Vanity Fair, Dickens David Copperfield எல்லாவற்றையும் என் தகப்பனாரிடமே உரக்கப் படித்துக் காட்டும் பழக்கம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. இரவு சாப்பிட்டுவிட்டு, எட்டு எட்டரை மணிக்கு வாசிக்க உட்கார்ந்தால் இரண்டு மணி வரையில் உரக்கப் படிப்பது, வேகமாகப் படிப்பது என்று வழக்கப்படுத்திக்கொண்டேன். இது சற்றேறக்குறைய மூன்று ஆண்டுகள் நடந்தது.

S.S.L.C. முடிப்பதற்கள் ஆங்கில நாவல் இலக்கியத்தில் சாதாரணமாக வழக்கத்தில் உள்ளது எல்லாவற்றையும் படித்து முடித்தாகிவிட்டது. S.S.L.C . ரீட்சை எழுதிவிட்டு கல்கத்தாவுக்குக் கோடை விடுமுறைக்குப் போனபோது Imperial Library-யில் (இப்போது அதற்கு National Library என்று பெயர்) ஐரோப்பிய நாவலும், ஆங்கிலத்தில் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படாத (ஏற்றுக்கொள்ளப் படாத என்றால் நம்மூர் கல்வி இலாகாவினால் ஏற்றுக்கொள்ளப்படாத) நாவலாசிரியர்களையும் படிக்கத் தொடங்கினேன்.

ஒரு நாலைந்து வருஷத்திய கோடை விடுமுறையை இதற்காக கல்கத்தாவில் என் சித்தப்பா வீட்டில் செலவிடுவது என்றும் வழக்கப்படுத்திக்கொண்டேன். S.S.L.C. முடியுமட்டும் நாவல்கள் மட்டுமே படித்துவந்த நான் இந்த விடுமுறை நாட்களில் Complete Works என்று R. L. Stevenson, Jonathan Swift, அவ்வளவாகப் பலரும் அறியாத Thomas Nashe முதலியவர்களையும் படித்துக்கொண்டேன் - நானாகவே. இந்தக் காலத்தில் எனக்குக் கவிதை, நாடகம், தத்துவம், சரித்திரம் என்கிற இலக்கியத் துறை நூல்களும் மனத்துக்குகந்தவையாக இருந்தன.

நான் கோவைக் கல்லூரியில் என் Intermediate வகுப்பு இரண்டு வருஷம் படித்தேன். 1927 - 1929. அங்கே  கல்லூரி லைப்ரரியில் கிடைத்த நூல்கள், Thackeray, Dickens, Trolloper Jane Austen, Lord Lytton என்று வரிசையாகப் படித்துக்கொண்டிருந்த சமயம் அந்தக் கல்லூரி Principal தனக்குகந்த நூல்களான Edgar Wallace, E. Philips Oppenheim, James Storer Clouston போன்ற Trash என்று சொல்கிற நூல்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக வரவழைத்துவிட்டார். அவ்வளவையும் தினத்துக்கு மூன்று நான்கு புத்தகங்களாகப் படித்துவிட்டேன். இந்த Trash நூல்களை College Libraryக்கு வரவழைத்ததற்காக, அந்த Principal சுதந்திரமான தலைமைப் பதவிக்கு (Independent Charge) லாயக்கில்லை என்று அவரை Demote பண்ணிவிட்டார்கள். ஆனால் நான் படித்த மட்டும் லாபம்.

Intermediate படித்துக்கொண்டிருக்கும்போதே நான் எழுதவும் தொடங்கிவிட்டேன். அதுவரையில் கையிலகப்பட்டதையெல்லாம் படிப்பது என்று வைத்துக்கொண்டிருந்த நான் சில நூல்களைப் பற்றிக் கேள்விப்பட்டும் தேடிப் பிடித்தும் படிக்கத் தொடங்கினேன். இப்படிப் படித்த நூல்களில் பெரும்பாலானவை ஐரோப்பிய இலக்கிய நூல்களாகும். Dante என்கிற மகாகவியின் காவியத்தைப் படிப்பதற்காக இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டேன்; Cervantes எழுதிய Don Quixote என்கிற நாவலைப் படிப்பதற்காக நான் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டேன்.

B. A. வகுப்பை அண்ணாமலை சர்வகலாசாலையில் படித்தேன். அங்கு இலக்கியம், தத்துவம், சரித்திரம், மனோதத்துவம் என்கிற நாலு பிரிவுகளிலும் நல்ல நூல்கள் பல இருந்தன. அவற்றில் பலவற்றையும் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அந்தச் சமயம் வரையில் நான் சம்ஸ்கிருத மாணவன். நான் அண்ணாமலை சர்வகலாசாலைக்குப் போய்ச் சேர்ந்ததற்கே காரணம் சம்ஸ்கிருத இலக்கணம்தான். அண்ணாமலையில் அப்போது இரண்டாவது மொழி தேவையில்லை - சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டுமே படிக்காமல் பி. ஏ. பட்டம் வாங்கிவிடலாம். Chemistry என் Subject.

ஆனால், ஒருநாள் தற்செயலாக கா. சுப்பிரமணிய பிள்ளையின் பேச்சு ஒன்றைக் கேட்ட காரணமாக நான் கா. சு. பிள்ளையும் ஸ்வாமி விபுலாநந்தாவும் சோமசுந்தர பாரதியும் நடத்திய தமிழ் வகுப்புகளில் போய் உட்கார்ந்துகொண்டு பாடங் கேட்பேன். பரிக்ஷை எழுதவே அவசியம் கிடையாது; பாடம் எனக்காக மட்டுமே கேட்டுக்கொண்டதுதான். இதற்குள் இரண்டொரு கட்டுரைகள், கதைகள்  என்னுடையது வெளிநாடுகளிலும் பிரசுரமாகிவிடவே காலேஜ் லெக்சரர்கள் அதிகமாக என்னை கட்டாயப்படுத்தி வகுப்புக்கு வரச்சொல்லமாட்டார்கள். Chemistry Class-க்குப் போவேன்; மற்றபடி ஆங்கில வகுப்புகளுக்கெல்லாம் போகமாட்டேன். ஆனால், அதற்காக Lecturers Absent மார்க் பண்ணமாட்டார்கள்.

அதுவரையில் படித்த அளவில் பாதிப்பு என்று சொல்கிற அளவுக்கு எந்த நூலிலும் எனக்குப் பிரக்ஞை ஏற்பட்டதில்லை. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த நூல் என்று Laurence Sterne என்பவர் எழுதிய Tristram Shandy என்கிற நாவலைச் சொல்வேன். நாவல்தான் – ஆனால், சம்பவங்களே இல்லாத நாவல். ஒரு ஸ்திரீக்கு இடுப்பு வலி எடுத்து குழந்தை பிறப்பதற்கு முன் நாவல் முடிந்துவிடுகிறது. நாவலில் விவாதத்திற்கான விஷயம் ஒரு ஸ்திரீ மருத்துவச்சியை அழைப்பதா அல்லது ஆண் மருத்துவனை அழைப்பதா என்பதுதான். Sterne-னின் கலைத்திறம் மிகவும் உன்னதமானது என்று சொல்ல வேண்டும். சுவாரசியமான கதை அல்ல – ஆனால், எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. இன்றும் என்னால் இந்த நாவலை ரஸித்து அனுபவித்துப் படிக்க முடிகிறது. என் ரஸனையின் அஸ்திவாரத்தில் ஒரு அம்சமாக அமைந்துவிட்ட நாவல் இது என்று சொல்வேன்.

இதேபோல் இன்னொரு புஸ்தகமும் என் உள்ளத்தைக் கவர்ந்தது. அது Rudyard Kipling எழுதிய Kim என்கிற நாவலாகும். அதை முதன் முதலாக நான் இண்டர்மீடியட் இரண்டாவது வருஷம் படித்துக்கொண்டிருக்கும்போது படித்தேன். அதே ஆண்டு நான் சில காலம் லாகூரில் தங்க நேர்ந்தது - விடுமுறை நாட்களில். இந்தியாவின் பின்னணியை ஆங்கிலத்திலும் சரி, இந்திய மொழிகள் எதிலும் சரி, Kim நாவலில் காண்கிற அளவிற்கு எந்தக் கதாசிரியனும் கொண்டுவரவில்லை இன்னமும் என்றுதான் நான் எண்ணுகிறேன். Kim என்கிற நாவலில் கல்கத்தாவிலிருந்து டெல்லி செல்கிற Grand Trunk Road-ல் ஒரு பகுதி வருகிறது. ஷஹரான்பூர் பக்கம் என்று எண்ணுகிறேன். அந்தப் பக்கத்தில் நடந்து பார்க்க வேண்டும் என்று நடந்து பார்த்திருக்கிறேன். Kim-க்குப் பிறகு Kipling எழுதிய எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்கிற நினைப்பு ஏற்பட்டு அநேகமாக Kipling எழுதியதெல்லாவற்றையும் படித்திருக்கிறேன்.

ஆங்கிலத்தில் Kipling-ஐ விடச் சிறந்த சிறுகதாசிரியர் கிடையாது என்றுதான் இன்னமும் என் நினைப்பு. Irish, Americans excepted. இந்தியப் பகைப்புலத்தைச் சித்தரிக்க Kipling கையாண்ட உத்தி சாதுர்யத்தை நான் வியந்த அளவு இந்தியாவைப் பற்றி எழுதிய எந்த ஆசிரியரையும் நான் வியந்ததில்லை. Kipling தென்னிந்தியா பற்றி அதிகம் எழுதாதது எனக்கு மிகவும் பெரிய குறையாகவே இருந்தது என்றும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தாது வருஷத்துப் பஞ்சம் பற்றிய கதை ஒன்று மட்டும் எழுதியுள்ளார்.

பி. ஏ. வகுப்பில் எனக்கு ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இரண்டு பாடம் - Hamlet, Much Ado About Nothing இரண்டும். Much Ado எனக்குச் சொல்லிக் கொடுத்தவருக்கு ஆங்கில இலக்கியம் தெரியாது - ஈடுபாடும் கிடையாது. Hamlet சொல்லிக் கொடுத்தவர் ஒரு மகாராஷ்டிரக்காரர்; Khadya என்று பெயர். அவருக்கு ஆங்கில உச்சரிப்பே வராது. காஜுவலி, யூஜுவலி என்பார். ஆனால், அவர் ஓர் ஈடுபாட்டுடன் வகுப்பில் மூன்று தடவை Hamlet நாடகத்தை ஆரம்ப முதல் முடிவு வரை எங்களுடன் படித்தார். எதுவும் சொல்லித்தரவில்லை. அதனாலேயே நான் ஷேக்ஸ்பியரை ரஸிக்கக் கற்றுக்கொண்டேன்.

அதேபோல், மற்ற மாணவர்கள் எல்லாம் ஷேக்ஸ்பியர் பற்றி Bradley எழுதியதைப் படித்துவிட்டுப் பரீட்சை எழுதினார்கள். நான் படிக்காமலே எழுதவேண்டும் என்று - தீர்மானித்துவிட்டு எழுதினேன். இன்று வரை Bradley படித்தது இல்லை நான். மூல நூல்களைப் படிப்பதில் நான் காண்கிற இன்பம் என்னால் விமர்சன நூல்களில் காண முடிவதில்லை. அதனாலேயேதான் நான் விமர்சனத்தை ஓரளவுக்கு மேல் செல்லப்பா செய்வது போலச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறேன். நாவல்களில் வார்த்தை விடாது என்னால் படிக்க முடிகிறது; விமர்சன நூல்களில் அப்படிப் படிக்க முடிவதில்லை என்று சொல்லிக்கொண்டு, என்னை மிகவும் பாதித்த முதல் விமர்சகன் என்று ஒருவரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

அவர் பெயர் Ezra Pound. நான் பி. ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம். அவர் பெயரையோ, T. S. Eliot பெயரையோ எந்த College Lecturer-ரும் சொல்லமாட்டார்கள். நானாகக் கண்டுகொண்ட ஆசிரியர்தான் Ezra Pound. அவர் ஆங்கில அமெரிக்கப் படிப்பு பற்றியும் நூல்கள் பற்றியும் சொன்ன பல விஷயங்கள் எனக்கு மிகவும் உகந்தவையாக இருந்தன. பிற்காலத்தில் நான் விமர்சனம் எழுதத் தொடங்குகிறபோது என்னையும் அறியாமலே (அதாவது ஆரம்ப காலத்தில்) என் விமர்சன இலக்கிய அபிப்ராயங்கள் எவ்வளவு தூரம் Ezra Pound என்பவரால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று உணரத் தொடங்கினேன்.

மேலெழுந்தவாரியாகச் சொன்னால், பண்டிதர், பேராசிரியர்கள் பற்றியும், முறையாகப் படித்து ரஸனையற்றுப் போனவர்கள் பற்றியும் நான் சொல்லுகிற பல விஷயங்களுக்கு Ezra Pound தான் பொறுப்பு என்று உணருகிறேன். பின்னர் நான் சந்தித்த டி. கே. சி. இதற்கு ஆதரவு தந்தார். நான் களம் மாற்றிச் சொல்கிறேன் - அவ்வளவுதான். Ezra Pound-டைப் படித்த பிறகுதான் T. S. Eliot, James Joyce, Wyndham Lewis என்கிற மூன்று ஆசிரியர்களையும் படிக்க ஆரம்பித்தேன். கருத்துக்களில் Ezra Pound-ம் உத்திகளில் James Joyce-ம் என்னை மிகவும் பாதித்திருப்பவர்கள். பின்னர், இந்தக் கோஷ்டியில் சேர்ந்தவராக W. B. Yeats-ஸையும் படித்துக்கொண்டேன், Joyce-ன் உத்திகள் எனக்கு உப்பாக இருந்ததற்கு இன்னொரு காரணம், அவனுடைய பாணி ஓரளவுக்கு Lawrence Sterne-னுடையது என்பதாகவும் இருக்கலாம்.

நான் தமிழில் சிறுகதைகள் எழுதத் தொடங்குகிறபோது Joyce-சினுடைய Dubliners கதைகளை முன்மாதிரியாகக் கொண்டு நகராத, Emotionless கதைகளைத்தான் எழுத முயன்றேன். எனக்கு Stream of Consciousness என்கிற கயிற்றரவு உத்தி அவ்வளவாக தமிழுக்கு ஏற்ற விஷயமாகப் படவில்லை; அதற்கு ஒரு வசன, வார்த்தை வளம் வேண்டும், தமிழில் அது இன்னும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறேன். புதுமைப்பித்தன் கயிற்றரவு, நினைவுப் பாதை முதலிய சிறுகதைகளிலும், லா. ச. ராமாமிருதம் கொட்டுமேளம், பாற்கடல் போன்ற கதைகளிலும் கையாளுகிற அளவுக்கு மேல் Stream of Consciousness உத்தி தமிழில் கையாள முடியாது என்றே நான் நினைக்கிறேன். சாதாரணமாக இந்த உத்திதான் Joyce-ன் சிறப்பு என்று சொல்லுவார்கள்.

B. A. வகுப்பில் எனக்கு ஏதோ ஒரு பரிசு வந்தது. அதற்கு என் பேராசிரியர் Khadya, “என்னென்ன புஸ்தகங்கள் வேண்டும்?” என்று கேட்டார். நான் சற்றும் தயங்காமல், “Thus Spoke Zarathustrax - Nietsche எழுதிய ஒன்று, Walt Whitman-னின் Leaves of Grass இரண்டு என்றும் சொன்னேன். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்து நூல்கள். நீட்ஷே சர்வாதிகாரவாதி. இன்று அவர்தான் ஹிட்லருக்கு மூல காரணம் என்று சொல்பவர்கள் உண்டு. Whitman ஜனநாயகவாதி. இருவரிடமும் எனக்கு ஈடுபாடிருந்தது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.

நீட்ஷேயின் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவை. Beyond Good and Evil, Anti Christ, Thus Spoke Zarathustra போன்ற நூல்கள் ஐரோப்பிய சிந்தனையின் போக்கைக் கணிசமான அளவில் பாதித்தவை. ஜெர்மன் வசனத்தில் நீட்ஷேயின் போக்கு மிகவும் புரட்சிகரமானது. மிகவும் காவியமயமான சிந்தனைகளைக் காவிய நயமேயற்ற வார்த்தைகளில் சொல்லிவிடுகிற சாமர்த்தியம் நீட்ஷேயிடம் உண்டு. இதைக் கற்றுக்கொள்ள நான் வெகுவாகப் பாடுபட்டேன் என்றால் அது மிகையாகாது. கருத்திலும் நீட்ஷே, மிகவும் பிற்போக்கானது என்று கருதப்பட்ட மனுஸ்மிருதி சிந்தனைகளை ஆதரித்தார் - விஞ்ஞான ரீதியில். கிறிஸ்தவ நரகம், ஸ்வர்க்கம் பற்றிய சிந்தனைகளையும் தலைகீழாகப் புரட்டியவர் அவர்.

தைரியமாகச் சிந்திக்க அறிந்துகொள்வதற்கு நீட்ஷேயை ஒவ்வொருவரும் படிக்கவேண்டியது அவசியம். அவர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல விஷயம். சிந்தனைத் தெளிவு, தீவிரம், அழுத்தம், அதைச் சொல்வதில் ஓர் உத்தி இவ்வளவும் நீட்ஷேயினால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். சமுதாய வாழ்விலே நாம் ஏற்றுக்கொள்கிற பல அடிப்படையான விஷயங்களை ஒன்றுமில்லை என்று ஆக்கியவர் நீட்ஷே.

அதே அளவில் நாம் நல்லது என்று நம்பியிருப்பதெல்லாம் நல்லதல்ல, கெட்டது என்று நம்பியிருப்பதெல்லாம் கெட்டது அல்ல என்கிற சிந்தனையை ஐரோப்பாவிலே முதல் முதலாகத் தொடங்கித் தந்து, நல்லது தீயதைக் கடக்கும் ஒரு நியதியை உற்பத்தி செய்து தந்தவர் டாக்டர் ஸிக்மண்ட் ஃபிராய்டு. அவர் சிந்தனைகள் காரணமாக குடும்ப உறவுகள் தளர்ந்தன. மனித வாழ்வின் அடிப்படை தனிப்பட்ட உணர்வு Sex தான் என்று சொல்லி, கலை இலக்கியம் எல்லாவற்றிலும் புது நோக்குகளைச் சாத்தியமாக்கியவர் Freud. அவருடைய நூல்களிலே The Interpretations of Dreams என்கிற நூல் என்னை மிகவும் பாதித்த நூல். நாவல் எதையும்விடச் சுவாரசியமான நூல் என்று இதை நான் சொல்லுவேன். இதை நான் 1931ல் பி.ஏ. கடைசி வருஷம் படித்துக்கொண்டிருக்கும்போது படித்தேன் என்று எண்ணுகிறேன்.

இதைத் தவிர சற்றேறக்குறைய அதே சமயத்தில் நான் படித்த Jack London-னின் Martin Eden என்கிற நாவலும் என்னை வெகுவாகப் பாதித்தது. இலக்கிய கர்த்தாவாக வாழ விரும்பிய ஒருவன் எப்படிப்பட்ட சோதனைகளுக்குள்ளாவான் என்று Martin Eden-ல் Jack London விவரிக்கிறார். இதை நான் இலக்கிய கர்த்தாக்களுக்கு மிகவும் அவசியமானதோர் நூலாக நினைக்கிறேன்.

இதற்கு முன் எனக்கு என்று, இந்தப் படிப்பெல்லாம் காரணமாக ஒரு தனித்தன்மை ஏற்பட்டுவிடவே, அதற்குப் பின் படித்த நூல்களில் பலவும் என்னை இந்த அளவுக்கு - Jack London-ன் Martin Eden, James Joyce-ன் Dubliners, Ezra Pound-ன் விமர்சனங்கள், Freud-ன் Psychoanalysis, Kipling-ன் Kim போல - பாதிக்கவில்லை என்றுதான் சொல்வேன்.

படிப்பது முடிவில்லாத ஒரு காரியம். முடிவில்லாமல் செய்துகொண்டிருக்கிற இந்தக் காரியம் முடிவில்லாத பாதிப்புக்களை நாம் அறிந்தும் அறியாமலும் நமக்குள் விளைவிக்கிறது. இலக்கியாசிரியன் ஒருவனுக்குத் தெரியா அளவில் பாதிப்புகள் இருக்கலாம். இருக்கவேண்டும் - இராமல் இராது. Thomas Mann, Romain Rolland, Anatole France, Selma Lagarlof, Vemer Von Heivenstan, Knut Hamsun, Franz Kafka, William Saroyan, Maxim Gorki, Dostoevsky, Lady Muraaki இவர்களெல்லாம் நான் பின்னர் கண்டுகொண் நாவல், கதாசிரியர்கள்.

கவிகளில் டாண்டேயையும் ஆங்கிலக் கவிகளையும் தவிர மற்றவர்களைப் பின்னர்தான் கண்டுகொண்டேன் - Paul Valery Rainer, Maria Rilke, Lorca என்று பலரை. இதேபோல நாடகாசிரியர்களாக Benevente, Ibsen, Pirandello இவர்களைக் கல்லூரி விட்ட பிறகுதான் கண்டுகொண்டேன். இவர்களுடைய பாதிப்பையெல்லாம் தெரிந்துகொள்ளும் சக்தி என் தனித்தன்மைக்கு அதற்குள் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம். நான் படித்த முதல் தமிழ்ச் சிறுகதை பி. எஸ். ராமையாவின் வார்ப்படம் என்பதாகும். அதிலே ஒரு உருவமும், கருத்தும் அமைந்திருக்கிறது என்றும் அதுமாதிரி தமிழ்க் கதைகள் என்னால் எழுத முடியும் என்றும் உணர்ந்து, தமிழில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன்.

புதுமைப்பித்தனின் கதைகளில் சிற்பியின் நரகத்தையும் மௌனியின் கதைகளில் காதல் சாலை என்பதையும் நான் முதன்முதலில் படித்தேன். பிச்சமூர்த்தியின் வானம்பாடி என்கிற கதையையும், ‘தாய் என்கிற கதையையும் படித்தபோது இந்த மாதிரி கதைகள் நான் எழுதக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அதேபோல பெ. கோ. சுந்தரராஜனின் கதை சௌந்தரியமே சத்தியம் என்பதைப் படித்தபோது அது என்னைப் பாதித்தது - இப்படி எழுதக்கூடாது என்கிற அளவில். தியாக பூமி என்கிற நாவல் - கல்கியினுடையது - வெளிவந்தபோது இதுமாதிரி நாவல் எதுவும் எழுதிவிடக்கூடாது - கடவுள் காப்பாற்றுவாராக என்று தீர்மானித்துக்கொண்டேன்.

அதற்குப் பிறகு நாற்பதுகளில் காப்பாற்றுவதற்குக் கடவுளைக் கூப்பிடவேண்டிய சந்தர்ப்பங்கள் பலப்பல எழுந்துவிட்டன. அவற்றை இங்கு விவரிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். தியாக பூமி முதல் அலை ஓசை வரையில் கல்கி எழுத்து என்னைப் பாதிக்கிற எழுத்தாகவே இருந்தது என்று மட்டும் சொல்லுகிறேன். கல்கியின் எழுத்துக்கள் நல்ல நூல்கள்; கெடுதி செய்யும் சக்தி வாய்ந்த நூல்கள் என்று ஆரம்பத்தில் சொன்னேனே, அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

பொதுவாக, இன்றைய மனித குலத்தின் சிந்தனைகளைப் பெருமளவில் பாதித்திருப்பவை என்று மார்க்ஸின் கருத்துக்களைச் சொல்லவேண்டும். Man does not live by bread alone என்கிற பைபிள் மற்றும் ஆரம்ப சமய நூல்கள் பலவற்றின் கருத்தை மறுத்து, மனிதன் ரொட்டியினால்தான் வாழ்கிறான் என்று அப்பட்டமாகச் சொல்லி நிலைநிறுத்த முயன்றவர் Marx என்று ஒரு Oversimplification சொல்வார்கள். அந்த எளிய வழியில் சொல்லலாம். புத்தர் காலத்திலும், ஏசு காலத்திலும்கூட அப்படித்தான் மனித வாழ்வு இருந்திருக்க வேண்டும்; அதைப் பற்றிய வரையில் கண்ணை மூடி வாழ மனிதன் பழக வேண்டும். அப்போதுதான் அவன் வாழ்க்கைக்கு அர்த்தம் கூடும் என்று புத்தர், ஏசு போன்றவர்கள் கருதினார்கள்.

வாழ்க்கைக்கு அர்த்தம் கூட வேண்டாம்; சௌகரியங்கள் கூடினால் போதும் என்கிற அடிப்படை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது நியாயம் என்றே சொல்லவேண்டும். இதை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையை ஃபிராய்டும், நீட்ஷேயும் அவரவர் அளவில் அமைத்துத் தந்தார்கள். இது உலகம் பூராவையும் பாதித்த ஒரு கருத்துப் புரட்சியாகும். அரசியல் ரீதியாக, மார்க்ஸை ஆதாரமாகக் கொண்டு ருஷ்யாவில் புரட்சி ஏற்பட்டதும், ஸ்டாலின் என்கிற ஓர் இரும்பு மனிதன் அந்தப் புரட்சி ஒடுங்கிவிடாமல் நிலைக்கச் செய்ததும் சரித்திரப்பூர்வமாக நம்மையெல்லாம் பாதித்துள்ள விஷயங்கள்.

ஆனால், அந்த ஸ்டாலின் பெயரைச் சொல்லாமலே ருஷ்ய சரித்திரம் இன்று எழுதப்படுவதையும் காண்கிறோம். இதுவும் ஒருவிதத்தில் கருத்துப் புரட்சிதான். இன்று இந்தியாவில் பழைய மரபின் சில அம்சங்கள் வேரூன்றுவதற்கும், சில அம்சங்கள் நம் வாழ்வை வளமாக்குவதற்கும் வழிகாட்டிய மகாத்மா காந்தியை மறந்துவிட்டு இந்திய சரித்திரம் சில நாளில் சாத்தியமானால்கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் எழுத்துக்களும் கருத்துக்களும் நம்மையெல்லாம் சாதகமாகவோ பாதகமாகவோ பாதித்திருக்கின்றன. நம்மில் ஒருவராலும் இதைத் தப்ப முடியாது.

அதே அளவுக்குத் தமிழர்களிடையே இரண்டு பாதிப்புக்கள் சொல்லவேண்டும் - ஒன்று பாரதியார்; இது நம்மை மேலே செல்லத் தூண்டும் ஒரு பாதிப்பு. இரண்டாவது தூயதமிழ்வாதிகள்; என்னளவில் இது பின்னேறத் தூண்டும் ஒரு பாதிப்பு என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த இரண்டு எதிர்மறையான பாதிப்புகளும் தவிர்க்க முடியாதனவாக இன்று நம்மால் உணர முடிகிறது. இதே அளவுக்கு இல்லாவிட்டாலும், சற்று குறைவான அளவில் என் எழுத்தை - ஏன், உங்கள் எழுத்தையும்தான் - பாதித்திருப்பது சமீப காலத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் வளர்ச்சியாகும். பத்திரிகைகளில் வந்தாலொழியப் படிக்கமாட்டோம் என்று சொல்கிற வாசகர்கள் - தமிழ் வாசகர்கள் - இலக்கிய வளத்துக்கு எப்படிக் குந்தகம் விளைவிக்கிறார்கள், இன்னும் அதிகமாக விளைவிப்பார்கள் என்று பல இடங்களில் நான் சொல்லியிருக்கிறேன். இங்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

எந்த எழுத்தாளனுக்குமே ஒரு தனித்துவம் ஏற்படுகிற வரையில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்; கண்டு சொல்ல முடியும். தனித்துவம் கண்டுவிட்ட ஆசிரியனைப் பாதித்திருக்கும் நூல்கள் பல, சம்பவங்கள் பல, திருப்பங்கள் பல. அவன் மனதை விட்டே, நினைவை விட்டே நழுவி விடலாம். பின்னோக்கித் திரும்பிப் பார்க்க வசதி ஏற்படும்போது சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன - சொன்னேன். நாளை நினைத்துப் பார்த்தால் வேறு சில நினைவுக்கு வரலாம்தான். வரக்கூடாது என்று சொல்ல என்னாலும் இயலாது - உங்களாலும் இயலாது. ஆனால், உலகத்தில் உள்ள எதுவும் எதனாலும் பாதிக்கப்படாதிருக்க முடியாது. அதனால்தான் மனிதன் ஜடமல்ல என்று எண்ணுகிறோம். பாதிப்புகளினால்தான் கலை, இலக்கியம் முதலியன சாத்தியமாகி வளருகின்றன.

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல