Skip to main content

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி


ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர்.

சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர்.

புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெளிநாட்டவர் இங்கு வந்து வாணிகஞ் செய்தனர். இந்தத் துறைமுகப் பட்டினத்தைப் பற்றித் தமிழ் நூல்களில் யாதொரு குறிப்பும் இதுவரை காணப்படவில்லை. பிற்காலத்தில் இப்பட்டினம் மண்மூடி மறைந்து போயிற்று. அண்மைக் காலத்தில் இவ்விடத்தை அகழ்ந்து பார்த்தபோது, மட்பாண்டங்களும், பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்களும், யவன நாட்டு நாணயங்களும், யவனருடைய மட்பாண்டங்களும், ஏனைய பொருள்களும் ஏராளமாகக் கிடைத்தன.

சங்க காலத்திலும் அதற்குப் பின்னும் முத்துகளுக்குப் பேர்போன கொற்கைப் பட்டினமும் மண்ணில் மறைந்து விட்டது. இவ்வாறு அழிந்துபோன பல நகரங்களும் பட்டினங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந் தெடுக் கப்படாத, பூமியில் புதையுண்டிருக்கிற ஊர்கள் இன்னும் பல, உள. அவற்றுள் ஒன்று உறையூர்.

பண்டைக் காலத்திலே புகழ் பெற்று விளங்கிய உறையூர், பிற்காலத்திலே எவ்வாறு அழிந்துவிட்டது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில், உறையூரைப் பற்றிச் சங்க நூல்களிலும் பிற நூல்களிலும் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம்.

சோழர்களின் உள்நாட்டுத் தலைநகரமாக இருந்தது உறையூர். உறையூரை, உறந்தை என்று சங்க நூல்கள் - கூறுகின்றன. இது காவிரியாற்றின் தென்கரையில் இருந்தது. உறையூருக்குக் கிழக்கே நெடும்பெருங் குன்றம் ஒன்று இருந்தது . என்று அகநானூறு 4ஆம் பாட்டுக் கூறுகின்றது:

கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள்

அந்த நெடும்பெருங் குன்றம், இப்போது திருச்சிராப் பள்ளி மலை என்று வழங்கப்படுகிறது. பிடவூர் என்னும் ஊர், உறையூருக்குக் கிழக்கே இருந்ததாகப் புறநானூறு (395) கூறுகிறது.

உறையூரைக் கோழி என்றும், கோழியூர் என்றும் கூறுவர். "கோழியோனே கோப்பெருஞ் சோழன்” என்பது புறம் 212ஆம் பாட்டு. ''உறையூரென்னும் படை வீட்டிடத்திருந்தான் கோப்பெருஞ் சோழன்" என்பது இதன் பழைய உரை. ''வஞ்சியும் கோழியும் போல'' என்பது, பரிபாடல் திரட்டு, 7 ஆம் செய்யுள் அடி. கோழி என்னும் சொல்லின் வேறு பெயர்களாகிய வாரணம், குக்குடம் என்னும் பெயர்களும் உறையூருக்கு உண்டு.

உறையூருக்குக் கோழியூர் என்று பெயர் வந்த காரணத்தைச் சிலப்பதிகாரம் கூறுகிறது:

முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்செவி வாரணம் புக்கனர் புரிந்தென்

(சிலப்., நாடுகாண் காதை)

''முறம்போலும் செவியையுடைய யானையைச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறையையுடைய கோழி என்னும் நகரின் கண்ணே விருப்பத்தொடு (கெளந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும்) புக்கா ரென்க" என்பது அடியார்க்கு நல்லார் உரை. இதனால், உறையூரில் கோழி யொன்று யானையுடன் போரிட்டு வெற்றிகொண்டதனால் அவ்வூருக்குக் கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதென்று தெரிகிறது.

வைகறை யாமத்து வாரணங் கழிந்து என்று சிலப்பதிகாரம், காடுகாண் காதையில் வருகிறது. இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், "கோழியூரை வைகறை யாமத்தே கழிந்து. வாரணம் - கோழியூர்" என்று எழுதி யிருப்பது காண்க. நீலகேசி என்னும் சமண சமய மூதாட்டியார், உறையூரிலிருந்து சமதண்டம் என்னும் ஊருக்குச் சென்றதாக நீலகேசி என்னும் நூல் கூறுகிறது. அவ்வாறு கூறும்போது, உறையூரைக் குக்குடமாநகர் (அசீவகவாதச் சருக்கம், 8) என்று கூறுகிறது.

உறையூரின் நீதிமன்றம் நேர்மைக்கும் முறைமைக்கும் பேர்பெற்றது என்று சங்க நூல்கள் கூறுகின்றன:

அறங்கெழு நல்லவை யுறந்தை
மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து
அறநின்று நிலையிற் றாகலின், அதனால்
முறைமை நின் புகழும் அன்றே .........

(புறம் 39)

"மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக் களத்து அறம் நின்று நிலை பெற்றதாதலால், முறைமை செய்தல் நினக்குப் புகழும் அல்லவே” என்பது இதன் பழைய உரை.

நீயே, அறந்துஞ் சுறந்தைப் பொருநனை

(புறம் 58)

நீ அறந் தங்கும் உறையூரின்கண் அரசன் என்பது இதன் பழைய உரை.

மறந்கெழு சோழர் உறந்தை யவையத்து
அறங்கெட அறியா தாங்கு.......

(நற்றிணை 400)

இவையும் உறையூரின் நீதிமன்றத்தின் சிறப்பைக் கூறுகின்றன.

உறையூர் பண்டைக் காலத்தில் புகழ்பெற்றிருந்தது என்பதை, "செல்லா நல்லிசை உறந்தை'' (புறம் 395) என்றும், ''கெடலரு நல்லிசை உறந்தை ” (அகம் 369) என்றும் வருவதனால் அறியலாம்.

பண்டைக் காலத்து நகரங்களைப் போலவே, உறையூரும் மதிலரண் வாய்ந்திருந்தது என்பதை, "நொச்சிவேலித் தித்தன் உறந்தை'' (அகம் 122) என்றும், "உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுக்கி” (சிலம்பு நாடுகாண் காதை) என்றும் வருவதனால் அறியலாம். நொச்சி என்பது மதில். இதனால், உறையூரைச் சூழ்ந்து கோட்டை மதில் அமைந்திருந்த செய்தியை அறிய லாம். சோழன் நலங்கிள்ளி உறையூரின்மேல் படையெடுத்துச் சென்று, அவ்வூர்க் கோட்டை மதிலைச் சூழ்ந்து முற்றுகை யிட்டான் என்றும், கோட்டைக்குள்ளிருந்த நெடுங்கிள்ளி வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். என்றும் (புறம்45) கூறப்படுவது இதனை வலியுறுத்துகின்றது.

உறையூரில், பங்குனி உத்திரத் திருவிழா பேர்போனது. என்னை ? "மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர் பங்குனி யுத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்” என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுவது காண்க.

உறையூரில் ஏணிச்சேரி என்னும் ஒரு தெரு இருந்தது (சேரி = தெரு). இந்த உறையூர் ஏணிச் சேரியில் முடமோசியார் என்னும் புலவர் வாழ்ந்திருந்தார். இவர் அல்லாமல் இன்னும் சில புலவர்களும் இவ்வூரில் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர்ச் சல்லியங் குமரனார், உறையூர்ச் சிறுகந்தனார், உறையூர்ப் பல்காயனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உறையூர் முதுகந்தனார் முதலியோர். இவர்கள் இயற்றிய செய்யுள்கள் சங்க நூல்களில் காணப்படுகின்றன.

உறையூர் அரசனுடைய மாளிகை பெரிய கட்டடம். ''பிறங்குநிலை மாடத்து உறந்தையோன்” (புறம் 69) என்பது காண்க.

உறையூரை ஆண்ட சோழ அரசர்களைப் பற்றியும், ஏனைய வரலாறுகளைப் பற்றியும் ஈண்டு எழுதவேண்டு வதில்லை. சைவ நாயன்மார்களில் ஒருவராகிய புகழ்ச் சோழ நாயனாரும், ஆழ்வார்களில் ஒருவராகிய திருப்பாணாழ்வாரும் உறையூரில் இருந்தவர்கள்.

உறையூர் எப்படி அழிந்தது?

இவ்வாறு சங்க காலத்திலும் பிற்காலத்திலும் சிறப்புற் றிருந்த உறையூர் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மண்காற்றடித்து மண்ணால் மூடுண்டு அழிந்துபோயிற்று என்பதைப் பிற்காலத்துத் தமிழ் இலக்கியங்களாலும், அவற்றின் உரையினாலும் அறியக் கிடக்கிறது. இதனை ஆராய்வோம். உறையூர் அழிந்த செய்தி தக்கயாகப் பரணி உரையிலிருந்து தெரியவருகிறது. சமணர்கள் தமது மந்திரவலிமையினாலோ, தவவலிமையினாலோ கல்மழையும் மண் மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என்பது அவ்வுரைச் செய்தி:

மலைகொண் டெழுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்து சிலாவருடஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற்
கிவரிற் பிறர்யாவர் நிசாசரரே

என்பது ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி 70 ஆம் தாழிசை இதற்குப் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்:

''உறையூரில் கல்வருஷமும் மண்வருஷமும் (வருஷம் - மழை பெய்வித்து, அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்). அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளியாயிற்று."

இதனால் நாம் தெரிந்து கொண்டது என்ன? 'உறையூர் மண்மூடி மறைந்துவிட்டது; இவ்வூர் மண்மூடிப் புதையுண்ட தற்குக் காரணமாக இருந்தவர் சமணர்' என்பதை இவ்வுரைப் பகுதியால் அறிகிறோம்.

தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக்கூத்தருக்கும், அதன் உரையாசிரியருக்கும் (இவர் பெயர் முதலியவை தெரியவில்லை) பிற்பட்ட காலத்தாய செவ்வந்திப் புராணம் என்னும் நூலும், உறையூர் மண்ணில் புதையுண்டு மறைந்த செய்தியைக் கூறுகிறது. ஆனால், அதை அழித்தவர் சமணர் என்று கூறவில்லை. சிவபெருமான் சோழ அரசன்மேல் சீற்றங் கொண்டு அவ்வூரை அழித்தார் என்று இந்தப் புராணம் கூறுகிறது. இப்புராணத்தை இயற்றியவர் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இருந்தவராகிய சைவ எல்லப்ப நாவலர். செவ்வந்திப் புராணத்துக்குத் திருச்சிராப்பள்ளிப் புராணம் என்னும் பெயரும் உண்டு. இப்புராணத்திலே, உரையூரழிந்த சருக்கம் என்னும் சருக்கத்திலே, பராந்தகன் என்னும் சோழ அரசன் மீது சிவபெருமான் கோபங் கொண்டு, அவனது நகரமாகிய உறையூரை அழித்தார் என்னும் செய்தி கூறப்படு கிறது:

மாமுகிற்கணம் இடத்ததிர்ந்து
எழுந்து மண் மழையைத்
தீமுகங்களாய் இறைத்தன
புனலையும் சிதறி.

சண்டமாருதஞ் சுழன்றுறை
யூரெலாஞ் சலியா
வெண்டிசாமுகந் திரிந்திட
ஒன்றிலொன் றெடுத்துக்
கொண்டு கீழ்விழ வெறிந்தன
பலபல குவையாய்
மண்டிரண்டன மலைபெருங்
குழவிகண் மான.

மாடமாளிகை மறைந்தன
மறைந்தன மணித்தேர்
ஆடரங்கெலாம் புதைந்தன
புதைந்தன அகங்கள்
கூடகோபுரம் கரந்தன
கரந்தன குளங்கள்
மேடுபட்டன காவுடன்
ஆவண வீதி

இவ்வாறு 'உறையூர் மண்மூடி மறைந்துவிட்டது. அது மறைவதற்குக் காரணம் சமணரா, சிவபெருமானார் என்னும் ஆராய்ச்சி வேண்டுவதில்லை. பழைய உறையூர் மண்ணுக்குள் மறைந்து கிடக்கிறது என்பதை இலக்கியச் சான்று கொண்டு அறிகிறோம்.

இந்த ஊரை அகழ்ந்து பார்த்தால், அங்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு தமிழர் நாகரிகம், பண்டைய சரித்திரம், சமயம் முதலிய பல செய்திகளை அறியலாம். பழைய கட்டடங்களைப் பாதுகாப்பதற்கும், மறைந்துபோன இடங்களை அகழ்ந்து எடுப்பதற்கும் என்றே இந்திய அரசாங்கத்தார் ஆர்க்கியாலஜி இலாகா (Archaeological Dept.) என்னும் ஓர் இலாகாவை அமைத்திருக்கிறார்கள். இதன் கிளை இலாகா சென்னை மாகாணத்திலும் இருக்கிறது. இந்த இலாகா உறையூர் போன்ற மறைந்த இடங்களைத் தோண்டிப் பார்க்க முயற்சி செய்யவில்லை. வடநாடுகளில் வேலை செய்வதைவிட மிகக் குறைந்த அளவில்தான் இந்த இலாகா தென்னிந்தியாவில் வேலை செய்கிறது. அதிலும் தமிழ் நாட்டைப் பற்றி இந்த இலாகா சிறிதும் கருத்துச் செலுத்தவில்லை. தனிப்பட்ட முறையில் டூப்ரேயில் என்னும் பெயருள்ள பிரெஞ்சு நாட்டவர் தமிழ் நாட்டில் செய்த அளவு வேலைகூட இந்த இலாகா செய்யவில்லை என்றால், இதன் போக்கை என்னென்று - சொல்வது! இந்த இலாகா கண்டுபிடிக்காமல் விட்டிருந்த சுமார் பன்னிரண்டு குகைக்கோயில்களையும் சாசனங்களையும் டூப்ரேயில் துரை அவர்கள் கண்டுபிடித்துக் காட்டினார். தமிழ் நாட்டுக் கோயில்களில் மறைந்து கிடந்த ஓவியங்களில் பலவற்றைக் கண்டுபிடித்துத் தெரிவித்தவரும் அவரே. அவருக்கு நமது நன்றி. அப்பெரியார் காலமாய்விட்டதற்காக வருந்துகிறோம்.

உறையூர், மதுரை, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, பழையாறை, கும்பகோணம், நாகப்பட்டினம் முதலிய மிகப் பழைய இடங்கள் இன்றுவரை அகழ்ந்து பார்க்கப்படவில்லை. இவற்றையெல்லாம் ஆர்க்கியாலஜி இலாகா செய்யாமலே இருக்கிறது. செல்வர்களும், தனிப்பட்ட சங்கங்களும் அரசாங்கத்தார் உத்தரவு பெற்று அகழ்ந்து பார்க்கலாம். இத்தகைய செயல்களில் கருத்தைச் செலுத்த வேண்டும்; கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். ஆர்க்கியாலஜி இலாகாவை அடிக்கடி தூண்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

(இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆர்க்கியாலஜி இலாகா உறையூரில் ஓரிடத்தை அகழ்ந்து பார்த்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது; ஆனால், அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. சரியான இடங்களைத் தக்கபடி ஆராய்ந்து பார்த்தால், உறையூரின் பழங்காலப் பொருள்கள் பல கிடைக்கும் என்பதில் ஐயமில்லை .)

-

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 22, பரல் 11, 1948

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.