2016-ஆம் ஆண்டு வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். நான் கலந்து கொள்ளும் முதற்பெரும் இலக்கிய விழா. ஒளிர்நிழலில் முதல் சில அத்தியாயங்களை அப்போது எழுதியிருந்தேன். இரண்டு நாட்களில் நான் அதிகமாக யாருடனும் பேசவில்லை எனினும் jeyamohan.in தளத்தில் வெளியாகி இருந்த என்னுடைய சில கட்டுரைகளைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் அறிமுகம் செய்து கொண்டனர். விழாவின் முதல் நாள் மாலை ஒரு "இலக்கிய வினாடி வினா" நிகழ்ந்தது. பெரும்பாலும் மிகக் கடினமான வினாக்கள். எனக்கு பதில் தெரிந்தது ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே. அந்த நிகழ்வு முடிந்த பிறகு மனதில் ஒரு சோர்வும் சோர்வுக்கு பின்னர் வரக்கூடிய தீவிரமும் கூடியிருந்தது.
என்னுடைய வாசிப்பு எந்தப் புள்ளியில் நிற்கிறது என்று பரிசோதித்துக் கொள்ள அப்போது எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கு வடிவமளிக்கும் வகையில் அடுத்த சில வாரங்களில் jeyamohan.in-ல் எழுத்தாளர் சு.வேணுகோபால் குறித்த ஒரு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டது. அதன் விதிமுறைகள் சற்று சிக்கலானவை. ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் நீட்சியாக அமைய வேண்டும். இறுதி நாள் கெடுவைத் தாண்டிய பிறகு மிகுந்த தயக்கத்துக்கு பின் ஜெயமோகனுக்கு என்னுடைய கட்டுரையை இரண்டு பகுதிகளாக ஒரு வார இடைவெளியில் அனுப்பினேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தீமையும் மானுடமும் என்ற கட்டுரை அது. அக்கட்டுரையை வாசித்த பல நண்பர்கள் என்னை அக்கட்டுரை எழுதியவனாகவே நினைவில் வைத்திருப்பதை பின்னர் அறிந்தேன்.
விமர்சனக் கட்டுரைகளின் நோக்கம் ஒருவறாக எனக்கு பிடிபடத் தொடங்கியது அதன்பிறகு தான். இலக்கிய விமர்சனத்தின் அதிகபட்ச பயன் ஒரு படைப்பினை வாசிக்கச் செய்வது தான் என்பதைக் கண்டு கொண்டேன். பிடித்த எழுத்தாளர் பிடித்த மாதிரியான எழுத்து என்று வெறும் சிலாகிப்புகளில் நின்று விடும் வாசிப்பனுபவக் குறிப்புகளும் புரியாத மொழியில் பண்ணிப் பண்ணி எழுதப்படும் விமர்சனக் கட்டுரைகளும் இலக்கிய வாசகனுக்கு எவ்வகையிலும் பயன் தராதவை என்று அவ்வகை விமர்சனங்களை தொடர்ந்து வாசிக்கிறவனாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
அவ்வகையில் இக்கட்டுரைகள் விவாதிக்கப்படும் படைப்புகளை நோக்கி வாசகர்களை கொண்டு செல்லும் என்று உறுதியாகத் தெரிகிறது. கடந்த இரண்டரை வருடங்களில் என்னை பாதித்த எல்லாப் படைப்புகளையும் குறித்து எழுதியிருந்தாலும் அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டே இந்த பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கட்டுரைகளை வெளியிட்ட jeyamohan.in, சொல்வனம், பதாகை, வல்லினம் தளங்களுக்கும், நூலின் மென்பிரதியை செம்மை செய்து முகப்புப் படத்தினை வடிவமைத்துத் தந்த நண்பர் ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் நன்றி.
சுரேஷ் பிரதீப்
23.07.2018
தன் வழிச்சேரல் அமேசான் கிண்டில் பதிப்பு வாங்க... bit.ly/ThanVazhichcheralp://
Comments
Post a Comment