Skip to main content

அண்ணய்யனின் மனத்தத்துவம் | ஏ. கே. ராமானுஜன்

அவனுக்கு ஆச்சரியம். மிகுந்த ஆச்சரியம்.
இந்த அமெரிக்க மானிட இயல் அறிஞன், இந்த ஃபர்கூசனைப் பாருங்கள். மனு நீதியைப் படித்திருக்கிறான். இவனுக்கு நம்முடைய சூதகங்களைப் பற்றி எவ்வளவு தெரிந்திருக்கிறது, தான் பிராமணன். தனக்கு இதெல்லாம் தெரியவில்லை.
அமெரிக்காவுக்கு வர வேண்டும் ஆன்ம ஞானத்துக்கு மகாத்மாக்கள் சிறையில் உட்கார்ந்து கம்பிகளுக்கிடையில் சுயசரிதம் எழுதியதைப் போலே. நேரு இங்கிலாந்துக்குப் போய் சொந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொண்டதைப் போலே. தூரத்திலிருந்தால் பச்சை.
நம் உடம்பின் பன்னிரெண்டு திரவங்களிலிருந்து நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன. உடம்பின் அழுக்கு, வீரியம், இரத்தம், மூளையின் நிணநீர், சிறுநீர், மலம், கொழுப்பு, காதுக்குறும்பி, கண்ணீர், கண்ணில் பீளை, தோலின் வியர்வை (மனு 5. 135)
சிகாகோவிலிருந்தாலும் நினைப்பதெல்லாம் கன்னடத்தில்தான். ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பதினொன்று, பதினொன்று. முதல் தடவை எண்ணியபோது பதினொரு மலங்களே கிடைத்தன. திரும்பவும் எண்ணும்போது பன்னிரண்டு, சரியாகப் பன்னிரண்டு. அவனுக்குத் தெரிந்த இந்தப் பன்னிரெண்டில் எச்சில், ஒன்று, இரண்டு சிறு வயதிலேயே சொல்லியிருந்தார்கள். எச்சில் பண்ணக் கூடாது. கக்கூஸுக்குப் போனால் சரியாகக் கழுவ வேண்டும், சிறுநீர் கழித்தால் கழுவ வேண்டும். அவனுடைய அத்தை கக்கூஸுக்குப் போகும்போது ஒரு பிடி மண் கூடவே எடுத்துக்கொண்டு போவார். அவர் இருந்த வரையில் தோட்டத்தில் ஒரு மண் குழி எப்போதும் இருக்கும்.
தென்னாட்டில் வாயில் வைத்து எச்சில் பண்ணி ஊதுகிற நாதஸ்வரம் முதலியவை தொடக்கூடாத பொருள், எச்சில்—தொடக்கூடாதவர்கள் மட்டுமே வாசிக்கக்கூடிய வாத்தியம். வீணை பிராமணர்களுக்கு. முக வீணை கீழ்ச்சாதியினருக்கு.
பானையை விட வெள்ளிப் பாத்திரமும், பருத்தியை விடப் பட்டும் உத்தமம். காரணம் அதற்கு இந்தப் பன்னிரண்டு மலங்களும் அவ்வளவு சுலபமாக ஒட்டுவதில்லை. பட்டு, பட்டுப் புழுவின் உடம்பிலிருந்து வந்த மலம் என்பது உண்மை. ஆனால் அது மனிதர்களுக்கு மடி (உயர்ந்தது) பாருங்கள் எப்படி இருக்கிறது?
இந்த அமெரிக்கர்களுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிகின்றன—எந்தெந்த நூல் நிலையத்துக்கோ போய்ப் பார்த்திருக்கிறார்கள், எந்தெந்த காசிப் பண்டிதர்களையோ பிழிந்தெடுத்து புலமை ரசத்தை இறக்கியிருக்கிறார்கள். எங்ககெங்கேயோ ஓலைச் சுவடிகளையும் கையெழுத்துச் சுவடிகளையும் தூசு தட்டி விஷயங்களாகச் சேகரித்திருக்கிறார்கள். ஆச்சரியம். பரம ஆச்சரியம்.
இந்திய நாட்டைப் பற்றிக் கற்க வேண்டுமானால் பிலடெல்பியா, ஃபர்கலி, சிகாகோ அப்படிப்பட்ட இடங்களுக்கு வர வேண்டும். நமக்கு எங்கே இருக்கிறது இவர்களுடைய அக்கறை? விவேகானந்தரும்கூட சிகாகோவிற்கு வந்தாரல்லவா? அவர் நம்முடைய தர்மத்தைப் பற்றிப் பேசிய முதல் பேச்சு இங்கேதான். சூதகம் உண்டாக்கும் மூன்று செயல்களில் மாதவிலக்கு முதலானது. குழந்தை பெறுவது அதைவிட ஒரு டிகிரி மேலானது. எல்லாவற்றையும் விட பலமான சூதகம் சாவின் சூதகம். சாவின் சாயல் இருந்தால் போதும். என்னென்ன சூதகம் கொண்டுவரும்! எரியும் கட்டையின் புகைபட்டால் போதும். பிராமணன் தலை முழுக வேண்டும். புலையர்களைத் தவிர வேறு யாரும் செத்தவன் உடுத்திய துணியை உடுத்துவதற்கில்லை (மனு 10-39).
மங்கலமானவற்றில் மங்கலமான பசு இறந்தால் அதன் மாமிசத்தைத் தின்பவர்கள் எல்லாரையும் விட இழிந்த ஜாதி, காகமும் பருந்தும்கூட இந்தக் காரணத்துக்காகவே பறவைக் கூட்டத்தில் கீழ் ஜாதி. பல நேரத்தில் சாவுக்கும் தீண்டாமைக்கும் இருக்கும் தீட்டு மிகவும் நுண்மையானது. வங்காளத்தில் வாணிய ஜாதியில் இரண்டு உட்பிரிவுகள், எண்ணெய் விற்பவர்கள், உயர்ந்தவர்கள். ஆனால் செக்கு ஓட்டி, கொட்டை அரைத்து எண்ணெய் எடுப்பவரின் ஜாதி கீழ் ஜாதி. காரணம், அவர்கள் விதையைக் கொல்பவர்கள். சாவோடு தொடர்புடையவர்கள் (ஹட்டன் 1946: 77-78). இதெல்லாம் இவனுக்குத் தெரியவே தெரியாது.
அவன் ஒன்றும் படிக்காதவன் அல்ல. மைசூரில் ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழக நூல் நிலையத்துக்கு நடந்து நடந்து செருப்பைத் தேய்த்திருந்தான். அங்கே தெரிந்த கிளார்க்குகள் ஐந்தாறு பேர், அதிலும் ஷெட்டி அவன் கூடவே எக்னாமிக்ஸ் வகுப்பில் படித்துப் போன வருடம் பெயிலாகி, நூல் நிலைய வேலையில் சேர்ந்திருந்தான். அண்ணய்யன் வரும்போதெல்லாம் ஷெட்டி அவனிடம் நூல் நிலையத்தின் சாவிக் கொத்தையே கொடுத்து வேண்டிய புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவான்.
கனமாக சாவிக்கொத்து கையாண்டு கையாண்டு, கைக்குக் கைமாறி தேய்ந்து மழமழப்பாக மின்னிக் கொண்டிருந்த இரும்புச் சாவிகள். அவற்றின் நடுவில் சிறிதாக இருந்த மஞ்சள் நிறத்துப் பித்தளைச் சாவிகள். பித்தளைப் பூட்டுக்குப் பித்தளைச் சாவிகள். பெண் பூட்டுக்கு ஆண் சாவி, ஆண் பூட்டுக்குப் பெண் சாவி. பெரியதற்குப் பெரியது. சிறியதற்குச் சிறியது. சில மட்டும் பெரிய பூட்டுக்குச் சிறிய சாவிகள், சிறிய பூட்டுக்குப் பெரிய சாவிகள். இப்படி வேறுபாடு. மாற்றம், கலப்பு - இந்தப் புத்தகத்தில் மனு சொல்லியிருந்த திருமணங்களைப் போலே. சில பீரோக்களுக்குப் பூட்டு பெரிதாக இருந்தாலும் பூட்டுப் போட முடிவதில்லை. தொட்டால் விட்டுப் போகும். சில குரங்குப் பிடி. உடைத்துதான் திறக்க வேண்டும். அதற்குப் பின்னால் அவன் கண்ணில் படுகிற ஆனால் கைக்குக் கிடைக்காத புத்தகங்கள். எப்படிப்பட்ட கதைகள், சமூக இயல், நிர்வாணப் படங்கள் இருக்கின்றனவோ அத்தகைய புத்தகங்களில்! மைசூரில் இவன் படித்ததெல்லாம் மேலை நாட்டைப் பற்றி. ஆங்கிலம், கன்னடம் படித்தாலும் அன்னா கரினாவின் மொழிபெயர்ப்பு, மூர்த்தி ராயா ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுதிய புத்தகம். அமெரிக்காவுக்குப் போய் விட்டு வந்தவர்கள் எழுதிய கடல் கடந்த தலபுராணங்கள், அபூர்வமான மேல்நாடு அமெரிக்காவில் நான் – இப்படி.
மலசுத்திக்கு மனு 11 வழிகளைச் சொல்லியிருக்கிறான். பிராமண விதிகள், நெருப்பு, பிரசாதம், மண், அந்தக் கரண சம்யமம், தண்ணீர், சாணத்தை எடுத்து இட்ட நீர், காற்று, கருமா கிகள், சூரியன், காலம்—இவை உடலை உடைய உயிர்களைத் தூய்மைப்படுத்துகின்றன. (மனு 5: 105)
இந்த வெள்ளைக்காரர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது. இவ்வளவு தூரம். பத்தாயிரம் மைல்கள் தண்ணீர், சூரியன், காற்று, நிலம் காலங்களையெல்லாம் தாண்டிவந்து இவன் இந்தக் கெட்ட நாற்றத்தின் சிகாகோவில், அண்ணய்ய சிரெளதிகளின் விதையில் முளைத்த அண்ணய்யன் இங்கே வந்து இதையெல்லாம் படிக்க வேண்டியதாயிற்று. இந்தக் குளிரில் இந்த வெள்ளைப் பனியில். அந்த வெப்பம் அந்த வெயில் அந்தக் கறுத்த ரகசியங்களையெல்லாம் இந்த வெள்ளை ஜனங்கள் எப்படித் தெரிந்துகொண்டுவிட்டார்கள். இந்த மந்திரத்தை இவர்களுக்கு யார் காதில் ஓதினார்கள்? ஜெர்மானிய மாக்ஸ்முல்லர் சமஸ்கிருதம் படித்து மோட்சமுல்ல பட்டனாக நமக்கே வேதத்தைக் கற்பித்தானே!
இந்தியாவில் இவன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என்று படித்ததைப் போல இங்கே இந்த அமெரிக்காவில் இவன் திரும்பத் திரும்ப இந்தியாவைப் பற்றி படித்தான் பேசினான். கிடைத்தவர்களுக்கெல்லாம் காப்பி கொடுத்து அவர்கள் கொடுத்த பீரைக் குடித்து, வெள்ளைக்காரப் பெண்களின் கையைப் பிடித்துத் தனக்குத் தெரியாத கைரேகைகளைப் பற்றிச் சொன்னான்
இங்கே மானிட இயலில் (ஆந்த்ரோபாலஜியில் ஆர்வம். காமாந்தகாரனைப் போல இந்தக் கலவியில் நாட்டம்—வெட்கமில்லை, பயம் இல்லை இதற்கு. இந்திய நாட்டின் மரபுகளைப் பற்றி மானிட இயல் அறிஞர்கள் எழுதிய, கையில் கிடைத்த எல்லாவற்றையும் படித்தான். இரண்டாவது அடுக்கின் மேல் அந்தப் புத்தகம் கந்தல் கந்தலாக இருந்தது. அதன் எண். பி. கே. 321. ஏணி ஏறி பழமையாகிப்போன மரத்தில் அமைத்துக் குழாய்க் கைப்பிடி போட்ட அடுக்கு. இந்த மேல் நாட்டில் இந்தக் கீழை நாடு வந்து சோர்ந்தது. தூரத்துப் பச்சையோ? இன்டர்நேஷனல் ஹவுசில் அறிமுகமான வெள்ளைப் பெண்கள்.
“உங்கள் வீட்டுப் பெண்கள் நெற்றியில் சிவப்புப் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள் அல்லவா, அது ஏன்?” என்று கேட்டபோது அந்த ஆர்வத்துக்குப் பதில் தர வேண்டும் என்றோ மைசூரில் அவனுடைய தகப்பனார் எவ்வளவு சொன்னாலும் கோபித்துக்கொண்டாலும் செய்யாத கீதைப் பாராயணத்தை அமெரிக்காவில் செய்தது! பீர், விஸ்கி, மாட்டு இறைச்சி. கக்கூஸுக்குப் போனால் சுத்தம் செய்ய நீரில்லாமல் காகிதத்தால் துடைத்துக்கொள்ளும் இழிவு. பிளேபாய் பத்திரிகையின் நிர்வாணமான முலை, தொடை, ரூபாய் அகலத் தொப்புள் இவற்றில் சிக்கி விடுவித்துக்கொண்ட விடுதலையில் அவன் பொருளாதாரத்தின் (எக்னாமிக்ஸ்) இடையில் இந்த இரண்டு ஆண்டுகள் இந்து சம்பிரதாயங்களைப் பற்றிப் படித்தான். ஸ்டாடிஸ்டிக்ஸில் எண்களுக்கு இடையில் இராமகிருஷ்ண ஆசிரமத்துப் புத்தகப் பட்டியல். இந்து கலாச்சாரத்தைப் பற்றி அறிய அமெரிக்கா வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தான். எங்கள் சிகாகோ நூல் நிலையத்துக்கு 'பிரஜாவாணி' கூட வருகிறது பாருங்கள். இந்து கலாச்சாரத்தின் கதவுகளுக்குப் போட்ட பூட்டுகள் பலவற்றுக்கு அமெரிக்கச் சாவி கிடைத்தது. சாவிக்கொத்தே கிடைத்திருக்கிறது.
அவன் அன்று அந்தப் புத்தக அலமாரிகளின் நடுவே நடந்துசென்றபோது சட்டென்று ஒரு புதிய புத்தகம். நீல நிறத் துணியில் பைண்ட் செய்த புத்தகம். கைநிறையும் அளவு பெரிய புத்தகம். நீல முதுகின் மேல் பொன் எழுத்துக்களில் Hinduism: Custom and Ritual என்று எழுதியிருந்தது. ஸ்டீபன், ஃபர்கூஸன் எழுதியது. இப்போதுதான் 1968ல் அச்சானது. சுடச்சுடச் சமாசாரம். சீமந்தம், நாமகரணம், முதல் தடவை மொட்டையடித்தல், அன்னப் பிராசனம், உபநயனம், கலியாணத்தில் சப்தபதி, சாந்தி முகூர்த்தத்தில் கொடுக்கும் பால் பழம் பாதாம்.
புது மனைவிக்கு ஏலக்காய் பாதாம் பொருள் தின்னக் கொடுத்து நேராக பாதாம் பாலைக் குடிப்பான் ரசிகன் என்று ஏதோ ஹீணசூர் சாந்தி முகூர்த்தம் ஒன்றில் யாரோ ஒருவன் கீழ்த்தரமான ஜோக் சொல்லியிருந்தான்.
கணவன் மனைவிக்குச் சொல்லுகிற சமஸ்கிருதப் புணர்ச்சி மந்திரம், சஷ்டி அப்த பூர்த்தி, சாந்திகள், பிராயச்சித்தங்கள், தானங்கள், உத்தரக் கிரியைகள் முதலிய சடங்குகள் எல்லாம் விவரமாகத் தனித்தனியாக பட்டியல் போட்டு வெளிப்படையாகவே எழுதியிருந்தார்.
163ஆம் பக்கம் பிராமணர்களின் உத்தரகிரியையின் வர்ணனை படங்களுடன் எவ்வளவு விஷயங்களைச் சொல்லியிருந்தான்! ஃபர்கூஸன் என்கிற இந்த ஆள்? பித்ருமேர சூத்திரம், சபிண்டம், யார் ஏற்றவர்கள் யார் அல்லாதவர்கள். சந்நியாசிக்கும் பல் முளைக்காத குழந்தைக்கும் சூதகமில்லை; பல் முளைக்காத குழந்தை செத்தால் ஒரு நாள் தீட்டு; மொட்டையடித்திருந்தால் மூன்று நாள்; சிராத்தத்துக்கு ஏழு பேர் வேண்டும்; மகன், பேரன் அவன் மகன் சிராத்தம் செய்யக்கூடியவர்கள்; தந்தை, பாட்டனார், கொள்ளுப்பாட்டனார் செய்வித்துக்கொள்கிறவர்கள். மூன்று தலைமுறை மேலே. மூன்று தலைமுறை கீழே; நடுவில்தான். ஏழு பிண்டங்களில் நடுப்பிண்டம். இத்தகைய விவரங்கள் எத்தனையோ. கூடவே எந்த ஜாதியில் யாருக்கு எத்தனை நாள் என்பதற்குப் பட்டியல்கள். அது மட்டுமல்ல, வேறு நாட்டில் சபிண்டம் செத்தால் கேட்பவர்களுக்குச் சூதகமில்லை. செய்தி கேட்டதும் சூதகம் சுற்றிக்கொள்கிறது. அதற்கேற்ற நாள் கணக்கும் குளியல்களும் முடிக்க வேண்டும். இவனுடைய அக்கறையும் ஆர்வமும் வாக்கியத்துக்கு வாக்கியம் மிகுந்துகொண்டே போயிற்று.
புத்தகங்களின் நடுவில் அப்படியே உட்கார்ந்துகொண்டு படித்தான். சிராத்தத்தின் நான்கு பாகங்களையும் புத்தகம் கூறியது. அவனோ யாருடைய சாவையும் பார்த்தவன் அல்ல. மூன்றாவது தெருவில் வண்ணார் பிணத்துக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போனதை இரண்டொரு தடவை பார்த்திருக்கிறான். அவ்வளவுதான். பெரியப்பா செத்தபோது அவன் பம்பாய்க்குப் போயிருந்தான். வீட்டில் தந்தைக்குக் கொஞ்சம் சிறுநீர்க்கோளாறு இருந்தாலும் நாக்கைக் கட்டுப்படுத்தி வைத்தால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்னார் டாக்டர். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பாரிச வாயு அடித்துக் கை விழுந்துவிட்டது. முகத்தின் இடப்பக்கம் தோணியது என்றாலும் செளக்யம் என்று அம்மா இரண்டு வாரங்களுக்கொரு தடவை எழுதிக்கொண்டிருந்த உற்சாகமற்ற கடிதம். அங்கே சனிக்கிழமை சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக்கொள்ளாமல் இருந்துவிடாதே. சூடு ஏறி விடும். சீயக்காய் அனுப்பப்பட்டுமா? என்றெல்லாம் நடுங்குகிற கையெழுத்தில் கடிதங்களில் எழுதிக்கொண்டிருந்தார்.
ஒரு பிராமணனுக்குச்சாவு நெருங்கியதும் அவனைக் கட்டிலிலிருந்து எடுத்து தர்ப்பை பரப்பிய நிலத்தின் மேல் கால் தெற்குப் புறமாக இருக்கும்படி படுக்கவைப்பார்கள். உடம்பு நிலத்துக்கும் ஆகாயத்துக்கும் நடுவில் தடையாக கட்டிலின் மேல் இராமல் பூமியின் மேல் கவலையின்றிக் கிடத்த வேண்டும். தர்ப்பையோ பூமியிலிருந்து ரசத்தை உறிஞ்சிய ரசவாதி. நெருப்புக்கும் விருப்பமானது. தெற்கு யமனுடைய திக்கு, பித்ருக்களின் திசை.
அதன் பிறகு வலது காதில் வேத மந்திரம். வாயில் பஞ்சகவ்யம் மனிதர்கள் செத்த உடல் தீட்டு. உயிரோடு இருக்கும் பசுவின் சாணம் மடி (உயர்ந்தது). பத்து தானங்கள், எள், பசு, பூமி, நெய், பொன், வெள்ளி, உப்பு, துணி, தானியம், சர்க்கரை. சாகிறவன் செத்தவுடனேயே அவனுடைய மக்களில் ஆண்கள் எல்லாம் குளித்து, மூத்த மகன் பூணூலை வலது தோளுக்கு மாற்றி அசுபத்தைக் குறிக்கும் வகையில் போட்டுக்கொள்கிறான். அந்த உடம்புக்கு மடி உடுத்து விபூதி அணிந்து பூமித்தாய்க்குச் சுலோகம் சொல்லுவார்கள்.
இந்தப் பக்கத்தை அடுத்து ஒரு மெல்லிய காகிதத்தில் படம் இருந்தது. மைசூர்ப் பக்கத்தில் இருப்பது போன்ற வீட்டின் முன் பக்கத்து வராந்தா. பின் சுவரில் கம்பி போட்ட ஜன்னல். வராந்தாவின் தரையின் மேல் மடி உடுத்து சிங்காரித்துப் படுக்க வைத்திருந்த சவம்.
செத்தவன் தெய்வம். அவன் தேகம் விஷ்ணு. அவள் ஆனால் அது லட்சுமி. தெய்வத்திற்குச் செய்வது போலவே அதற்கும் பிரதட்சணம், கற்பூரம் காட்டுதல் எல்லாம் நடக்கிறது.
யமனுக்கு இப்போது தீ வளர்த்து அதில் நெய்யை அவிசாகச் சொரிகிறார்கள். சவத்துக்கும் நெருப்புக்கும் தொடர்பு ஏற்படுவது போல ஒரு நூல் இழை. சவத்தின் கால் கட்டை விரல்களைக் கட்டி அதன் மேல் புதிய வெள்ளைத் துணியைப் போட்டு மூடுகிறார்கள்.
இதனுடைய படம் ஒன்றும் அங்கே இருந்தது. அதே மைசூர் வீட்டைப் போன்ற வீடு. அதே கம்பி போட்ட ஜன்னல். ஆனால் இரண்டொரு விபூதி அணிந்த பிராமணர்கள் படத்தில் இருந்தார்கள். எங்கேயோ பார்த்தது போலவும் இருந்தது. இவ்வளவு தொலைவில் மைசூரின் விபூதி அணிந்த பிராமணர்கள் எல்லாம் ஒரே சாம்பல் முகத்தோடு காட்சி தந்தார்கள்.
நான்கு பேர் பிணம் தூக்குபவர்கள். பாடை கட்டி வீட்டுக்கு எதிர்ப்புறமாக பிணத்தின் முகத்தைத் திருப்பிக் கடைசி ஊர்வலம் புறபடுகிறது.
இங்கே மற்றொரு படம். மைசூரிலிருப்பதைப் போலவே தெரு. சந்தேகமில்லை. நாலைந்து வீடு நன்றாகத் தெரிந்தது போலிருந்தது. மூன்று இடங்களில் ஊர்வலம் நின்று பாடையை இறக்குகிறார்கள். அதை வலம் வந்து அசுப தெய்வங்களுக்கு அரிசியை இறைக்கிறார்கள்.
சுடுகாட்டிற்கு வந்த பிறகு தெற்கு முகமாகச் சிதையின் மேல் உடலை இட்டு, கட்டை விரலின் கட்டை அவிழ்த்து மூடியிருந்த வெள்ளைத் துணியை எடுத்து சுடுகாட்டைக் காக்கும் தோட்டிக்கு அதைத் தானம் செய்கிறார்கள். மகனும் உறவினரும் பிணத்தின் வாயில் நீரில் ஊறிய அட்சதையைப் போடுகிறார்கள். பொன் நாணயம் ஒன்றால் அதன் வாயை மூடுகிறார்கள். இடுப்புக்குக் கீழே சிறிய வாழை இலையோ துண்டோ தவிர பிறந்த மேனியாகவே இப்போது இருக்கிறது அது.
பொன் இந்தக் காலத்தில் எங்கே கிடைத்ததோ தெரியவில்லை. பதினான்கு காரட் ஆனாலும் பரவாயில்லையோ? வேதம் ஒப்புக்கொள்ளுமோ?
மூத்த மகன் புதுப்பானையில் நீர் நிரப்பி, அதன் பக்க வாட்டில் ஒரு ஓட்டை போட்டு தோளின் மேலிட்டுக்கொண்டு சிதையைச் சுற்றி பிரதட்சிணம் செய்து நீரை நிலத்தில் சிந்துகிறான். மூன்று தடவை ஆன பிறகு தோளின் பின்னால் அதை வீசி உடைக்கிறான்.
சுடுகாட்டின் படம் ஒன்றும் இருந்தது. அதைப் பார்த்து இவன் மனம் கலங்கியது. எதனாலோ இது முன்பே அறிமுகம் ஆனது போலத் தோன்றியது. நல்ல காமிராவினால் எடுத்த படம். சிதை, உடல், முன்தலையை மழித்து கிராப் வைத்துக்கொண்டிருந்த நடுவயது மனிதன். தோளின் மேல் நீர் சொட்டும் பானை. தொலைவில் மரங்களும் மற்றவர்களும்.
அடே, அந்த நடுவயதுக்காரனின் முகம் தெரிந்த முகம். தாயாதி சுந்தர ராயரின் முகம். ஹுணசூரில் ஸ்டுடியோ வைத்திருந்தார். இது ஏன் இங்கே வந்தது. இந்தப் பாவி இங்கெங்கே வந்தான். அடுத்த பக்கத்தில் இருந்தபடத்தில் சிதை எரிந்துகொண்டிருந்தது. அதன் கீழே அக்னி தேவனுக்குச் சொன்ன மந்திரங்கள்.
“ஏ அக்னியே, இந்த மனிதனின் தேகத்தைச் சுட வேண்டாம். இவன் தோலைச் சுட வேண்டாம். இவனைப் பக்குவம் செய்து பித்ருக்களிடம் சேர்த்து விடு.
ஏ அக்னியே, நீ இந்த எஜமானின் யாகத்தில் பிறந்தாய், இப்போது உன்னிடமிருந்து மறுபடியும் இவன் பிறக்கட்டும்.”
மந்திரத்தைப் பாதியில் நிறுத்தி திரும்பவும் முன் பக்கத்தைத் திருப்பி, தாயாதி சுந்தர ராயரின் முகத்தைப் பார்த்தான். தெரிந்த முகம். கண்ணாடியைக் கழற்றி வைத்திருக்கிறார். பாதி நரைத்த முழு கிராப்புக்குப் பதில் சாஸ்திரத்துக்காக கொஞ்சம் வெளுத்த அரைக் கிராப்பு. புதிதாகச் செய்த சர்வாங்கச் சவரம். மார்பின் மீதிருந்த முடியும் இல்லை. தொப்புளுக்குக் கீழ் அகலக் கரை மடி வேட்டி. இவன் ஏன் இங்கே இந்தப் புத்தகத்தில்?
முன்னுரையைத் திருப்பினான். அதில் இந்தப் ஃபர்கூஸன் என்பவன் போர்டு நிறுவனத்தின் மாணவர்களுக்கான நிதி உதவியுடன் மைசூருக்கு 1966-68ல் போனதாகத் தெரிந்தது. மைசூரில் திரு. சுந்தர ராயரும் அவருடைய குடும்பமும் செய்திகளைச் சேகரிப்பதில் மிகவும் உதவி புரிந்ததாகவும் சொல்லியிருந்தது. அதனாலேயே மைசூர் வீடுகள், முன்னாலிருந்த போட்டோக்களை மறுபடியும் திருப்பிப் பார்த்தான். அந்தக் கம்பி ஜன்னல் வீட்டுக்குப் பக்கத்து வீடுகள் கோபியின் வீடும் சம்பங்கி மரத்து கங்கம்மாவின் காலி வீடும். தங்கள் வீடு இருந்த தெரு. அந்த வராந்தா தன் வீட்டு வராந்தா. அந்தச் சவம் தந்தையின் சவமாக இருக்கலாம். முகம் தெளிவாகத் தெரியவில்லை. பாரிச வாயு தாக்கிய முகம், தெளிவாகப் பார்க்க முடியவில்லை. உடம்பெல்லாம் வெள்ளையாகப் போர்த்தியிருக்கிறது. அந்தப் பிராமணர்களும் தெரிந்தவர்களைப் போலிருந்தார்கள். மறுபடியும் முன்னுரையைப் படித்தான்.
சுந்தர ராயர் மிகவும் உதவி செய்திருந்தார். தன் உறவினர்களுடைய வீட்டுத் திருமணம், உபநயனம், சீமந்தம், உத்தரகிரியை முதலிய எல்லாவற்றுக்கும் அழைத்துக்கொண்டு போய் போட்டோ எடுத்து, எடுப்பதற்கு உதவி செய்து, கேள்வி கேட்டுப் பதில் எழுதிக்கொள்வதற்கும் மந்திரங்களை டேப் ரிக்கார்டரில் பதிவுசெய்துகொள்வதற்கும் உதவி செய்திருந்தார். வீட்டில் சாப்பாடு போட்டார். அவருக்கு இந்த மிலேச்சன் அளவில்லாமல் நன்றி செலுத்தியிருந்தான்.
மறுபடியும் சிதையின் போட்டோவைப் பார்த்தான். எரிந்துகொண்டிருந்தது. அதன் கீழே அக்னிக்குச் சொன்ன மந்திரம். மரமும் செடியும் மைசூர் சுடுகாட்டில் இருந்ததைப் போலவே இருந்தன. கீழே சிறிய எழுத்தில் “நன்றி: சுந்தர ராயர் ஸ்டுடியோ” அவனே எடுத்த படம்.
அவன் தந்தை இறந்து அவன் பங்காளியான சுந்தர ராயன் கர்மாவைச் செய்தான். மகன் வெளிநாட்டில். அவன் தாய் சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும். தூரதேசத்தில் தனியாக இருக்கிறான். தந்தையில்லாத அனாதை. கெட்ட செய்தி. எப்படியோ போன வேலையை முடித்துக்கொண்டு வரட்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இல்லை, இவனே, இந்த சுந்தர ராயனே யோசனை கூறியிருக்க வேண்டும் வழக்கம்போல. அவன் பேச்சென்றால் கிணற்றில் குதிப்பதற்கும் தயார்தான் அம்மா. பாரிச வாயு பிடித்து கை விழுந்துபோய் தந்தை கடிதம் எழுதவில்லை என்று சொல்லியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால்—இவன் வந்த மூன்று மாதங்களில் அம்மாவுக்கு இன்னும் என்ன செய்தார்களோ, தலையை மொட்டை அடித்தார்களோ எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு, ஆசார சீலர்கள். சுந்தர ராயன் மீது நெருப்பைப் போலக் கோபம் வந்தது. நீசன், சண்டாளன் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் சிதையின் படத்தைப் பார்த்தான். கம்பி ஜன்னல், அந்தப் பிணம், சுந்தரராயரின் பாதிக் கிராப்பு, தொப்புள் எல்லாம் பார்த்தான். விளக்கமும் படித்தான்.
முன்னும் பின்னுமாகப் பக்கங்களைத் திருப்பினான். கலவரத்தில் புத்தகம் நிலத்தில் முகம் கீழாக விழுந்தது அந்தப் பக்கங்கள் மடிந்து போயின.
அச்சத்தோடு அதையெடுத்துப் பக்கங்களை நீவிப் புரட்டினான். புரட்டினான். அதுவரை எதுவுமே காதில் விழாத அவனுக்கு அந்த காரிடாரின் கோடியில் அமெரிக்கக் கக்கூஸில் யாரோ ஃபிளஷ் செய்து நீர் வீழ்ந்த சப்தம் ஓவென்று எழுந்து அடங்கியது கேட்டது.
பக்கங்களைப் புரட்டினான். சீமந்தத்தைப் பற்றிய அத்தியாயத்தில் சீதையைப் போலவே வேடம் போட்டுக்கொண்டு தலையில் கீரிடம் வைத்துக்கொண்டு பல சுமங்கலிகளுக்கு நடுவே கொஞ்சம் உம்மணா மூஞ்சியாக உட்கார்ந்திருந்தாள் அவனுடைய தாயாதியின் மகள் தமயந்தி. அவள் வயிறும் ஏழு மாத கர்ப்பத்தோடு காணப்பட்டது. இந்த சுந்தரராயன், அமெரிக்கன் வந்திருக்கிறான், இதே சமயத்தில் போட்டோ எடுத்துக்கொள்ளட்டும் என்று காத்திருந்து மகளுக்குச் சீமந்தம் செய்திருக்க வேண்டும். உத்தரகிரியை எல்லாம் காட்டலாம் என்று காத்திருக்க வேண்டும். பெரியப்பாவின் வீட்டிலேயே வசதியாக அது கிடைத்தது. காட்டிவிட்டான். எவ்வளவு பணம் கொடுத்தானோ அந்த ஃபர்கூஸன் என்கிற ஆள்?
அந்த சுமங்கலிப் பெண்களின் இடையில் தாயின் முகத்தைத் தேடினான். கிடைக்கவில்லை. செண்பக மரத்துக் கங்கம்மாவும் அதற்கடுத்த வீட்டு லச்சம்மாவும் இருந்தார்கள்.
அதே முகங்கள், அதே தட்டை மூக்குகள், தோடுகள், மூக்குத்திகள், காசு அகலத்தில் குங்குமங்கள்.
அவசரம் அவசரமாக வகரம் விகரம் ஆகிய எழுத்து வரிசைகளைக் கடந்து வேதம், வேஷம் இவற்றைத் தாண்டி வைகாநசம், வைதீகம் எழுத்துக்களின் வரிசையில் வைதவ்யம் கிடைத்தது. அதைப் பற்றி ஒரு முழு அத்தியாயமே இருந்தது. இருக்காதோ பின்னே? அதில் இருநூற்றி முப்பத்தி மூன்றாம் பக்கத்துக்கு எதிரில் ஓர் அழகான போட்டோ.
இந்து விதவை. சில சைவ சம்பிரதாயங்களின் படி தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் போலவே தலைப்பு, நன்றி. சுந்தரராயர் ஸ்டுடியோ ஹுணசூர். அம்மாவின் படமா? தெரிந்த முகமானாலும் அறிமுகம் இல்லை. மொட்டையடித்த தலை. மேலே இழுத்து விட்ட முக்காடு. அது கறுப்பு வெளுப்புப் படமானாலும் இவனுக்குத் தெரியும். அது சிவப்புப் புடவை, அழுக்குப் புடவை. சுந்தரராயர் பசிபிக் கடலுக்கு அப்பால் பத்தாயிரம் மைல் தூரத்திலிருந்த ஹுணசூரின் செலுவாம்பா அக்ரஹாரத்தின் பின் தெருவிலிருந்த வீட்டில் குடியிருந்த காரணத்தினால் அன்று உயிர் பிழைத்தார்.
*
கன்னடத்திலிருந்து தமிழில், டாக்டர் டி. பி. சித்தலிங்கையா
நன்றி: கன்னடச் சிறுகதைகள், நேஷனல் புக் டிரஸ்ட்.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...

('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.) அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959 ஆம் ஆண்டு சென்னையில் கூடியது . ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார் . நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன் . அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன் , அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன் . ( இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன் ) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன் . அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர் , “ எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம் ! அந்த நாட்கள் மறைந்துவிட்டன . இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன் . இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் ” என்றதும் அவருட