Skip to main content

உரைநடையில் கலேவலா - சிறப்புரை: இந்திரா பார்த்தசாரதி


பின்லாந்தின் தேசீய காவியம் 'கலேவலா'. இந்நாட்டில் தொன்று தொட்டு வழங்கிய வாய்மொழிக் கதைகளைத் தொகுத்து ஓர் அமர காவியமாக்கியவர் எலியாஸ் லொண்ரொத் (1802 - 1884).

அமெரிக்கக் கவிஞர் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லொ (1807 - 1882) இவ்வற்புத இலக்கியப் படைப்பினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நவீன மொழிகளின் பேராசிரியராக இருந்த அவர், பல தடவைகள் ஐரோப்பாவுக்கு விஜயம் செய்திருக்கிறார். இதனால்தான் 'கலேவலா'வைப்போல், பாரம்பரியக் கதைகளை நிகழ்காலத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்று, அவர் 'ஹியவத்தா'வை ஆக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். சிவப்பு இந்தியர்களின் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு, 'ஹியவத்தா' என்ற நூல். வைனாமொயினனைப்போல், 'ஹியவத்தா', அமெரிக்காவில் ஐரோப்பியர் வருகைக்கு முந்தியிருந்த ஒரு காலகட்டத்தின் கலாச்சாரப் பிரதிநிதி. லாங்ஃபெல்லொ எழுதிய இந்நூலின் கட்டமைப்பும், யாப்பு அமைதியும் 'கலேவலா'வை ஒத்து இருக்கின்றன.

ஆங்கிலோ - சாக்ஸானிய மொழியில், ஆங்கில கதாபாத்திரப் பெயர்களுடன், ஸ்கன்டிநேவியக் கதை பேயொவுல்ஃப் (Beowulf) இங்கிலாந்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. இதுவும் கிறித்துவ சகாப்பதத்துக்கு முந்தி வழங்கிய அதீதக் கற்பனைகளுடன் கூடிய வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு. பேயொவுல்ஃப் வைனாமொயினனைப் போன்ற ஒரு கதாபாத்திரம். சிந்தனையில் கண்ணியமும், செயலில் உறுதியுமுடைய வீரன்.

உலகில் வழங்கும் ஆதிகாலக் கதைகள் அனைத்துக்குமிடையே ஓர் அடிப்படை ஒற்றுமை காணப்படுகிறது. 'மனித இனத்தின் ஆழ்மனத் தொகுப்பின் வெளியீடே தொன்மம்' (Myths represent the collective unconscious of the human race) என்று அமெரிக்க உளவியல் அறிஞர் யூங் கூறியிருப்பதை நினைவு கூர வேண்டும்.

பேராசிரியர் அஸ்கோ பார்பொலா, தமது முன்னுரையில், இக்காவியத்தில் காணும் கதைக்கும், திருமாலின் அவதாரக் கதைக்குமிடையே உள்ள இயைவை எடுத்துக் காட்டியுள்ளார். அதுதான் வாமனன் திருவிக்கிரமனாக ஆவதுபோல், செந்தூர மரத்தை வெட்டக் குறள் வடிவச் செப்பு மனிதன் விசுவரூபம் எடுக்கும் கதை.

ஈரடியால் மூவுலகத்தையும் திருமால் அளந்ததே, மனிதனுக்கு வாழ்வதற்கு இருப்பிடம் தருவதற்காகத்தான் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வராகவதாரம், கிடைத்த இவ்விடத்தை அகல உழுவது பற்றிய செய்தி. அடிப்படையில் இவை எல்லாமே வளம் தரும் வேளாண்மைப்பற்றிய மரபுக் கதைகள் (Fertility cult stories). 'கலேவலா'விலும் இத்தகைய பல கதைகள் பயின்று வருவதைக் காணமுடிகிறது.

உலகெங்கும் விரவியுள்ள பல இனத்துக் கலாச்சாரங்களில் சிருஷ்டிப்பற்றிய கதைகளில், ஓர் அடிப்படை ஒற்றுமை நூலிழையாக இசைந்தோடுவதைக் காண்கின்றோம். ஆக்கமும் அழிவும் மாறிமாறிச் சகடக்கால்போல் வருவதுதான் இயற்கையின் நியதி. அநேகமாக எல்லாக் கதைகளிலும், அழிவின் அடையாளமாகப் பிரளயம் குறிப்பிடப்படுகிறது. சிருஷ்டி கடலை ஒட்டி அமைவதுதான் பாரம்பரியப் பிரக்ஞை.

வைனாமொயினனின் பிறப்பும் கடலோடு சம்பந்தப்படுத்தித்தான் கூறப்படுகிறது. வாயுமகளுக்குக் கடல் பரப்பில், முப்பது கோடை, முப்பது குளிர்ப் பருவங்கள் கழிந்த பிறகு அவன் தோன்றுகிறான். எதற்காக? கதிரவனைக் கண்டு களிப்படைய! குளிர்ந்த நிலவைக் கண்டு குதூகலிக்க! பிறப்பும் பிறப்பதற்கான அாத்தமும் அற்புதமாகச் சொல்லப்படுகிறது.

வையினாமொயினன் இசைப் பேரறிஞன் என்று குறிப்பிடப்படுவதே, பிரபஞ்சத்தில் காணும் இசை ஒழுங்கை (Rhythm)ச் சொல்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது. இந்த ஒழுங்குதான் இயற்கை விதிகள் மீறப்படாமலிருப்பதற்கான ஆதார ஸ்ருதி.

ஒரேயொரு மிலாறு மரத்தை வெட்டாமல் இருந்ததற்குக் காரணமாக வைனாமொயினன் கூறுகிறான்: 'குயிலே, நீ வந்து கூவ உனக்கு ஒரு மரம் தேவை. இதற்காகத்தான் இந்த மரத்தை வெட்டாமல் விட்டேன். இப்பொழுது கூவு குயிலே . . . கூவு! வெண்பொன் நெஞ்சே, வனப்பாய்ப் பாடு! ஈயத்து நெஞ்சே, இனிதாய்ப் பாடு . . . !' இது ஒரு பழைய பர்ஸியக் கவிதையை நினைவூட்டுகின்றது. 'எனக்கு ஒரு ரொட்டித் துண்டும், ரோஜாப் பூவும் தேவை. ரொட்டி, வாழ்வதற்கு. ரோஜா, வாழ்வதற்கான அர்த்தத்தைத் தருவதற்கு . . . !'

தமிழிலக்கியத்தில் நெய்தல் நிலக் கடவுள் வருணன். அவன் மழையைத் தருகின்றான். இக்கருத்தை ஒட்டிய பல பாடல்கள் 'கலேவலா'வில் வருகின்றன. பிரிவு நிகழ்வதற்கான களமும் நெய்தல்தான். இக்காவியத்தில், தாயிடமிருந்தும், நண்பனிடமிருந்தும், காதலியிடமிருந்தும், பலவிதமான பிரிவுகள் சித்தரிக்கப்படுகின்றன.

நம் புராணங்களில் வருவது போல், சூரிய சந்திரர்களை அசுரர்கள் ஒளித்து வைப்பதும் (இதை இக்காவியத்தில் வடபுலத்து முதியவள் செய்கிறாள்), அவற்றை மீட்பதும் போன்ற பல செய்திகள் வருகின்றன.

வடக்கு, தெற்கு என்ற பூகோளப் பிரிவுகள், பூர்வ கதைகள் எல்லாவற்றிலுமே ஒருவகையான பிணக்கத்தைக் குறிக்க வந்ததுபோல் தோன்றுகிறது. பண்டைய தமிழிலக்கியங்களில், தென்புலத்தரசர்கள் வடதிசை சென்று வெற்றிக் கொள்வதையே அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்தார்கள் போல் தோன்றுகிறது. இக்காவியத்திலும், வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான போராட்டம் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இதுபற்றி விரிவான ஆய்வு தேவை.

'கலேவலா' ஓர் அற்புதமான காவியம். பின்னிஷ் மொழியிலிருந்து இதைத் தமிழில் தருவது என்பது ஒரு மாபெரும் சவால். திரு. சிவலிங்கம் அவர்கள் இத் தலைசிறந்த பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவருடைய முதல் ஆக்கம், செய்யுள் வடிவில். யாப்பமைதியுடன், பொருள் பங்கம் ஏற்படாமல் அவர் இதை ஏற்கனவே செய்திருந்தாலும், எல்லாரும் படிப்பதற்கேற்ப, உரைநடையில் இப்பொழுது இக் காவியத்தை நமக்கு அளித்திருக்கிறார்.

தமிழில் படிக்கும்போதே, எனக்கு இக் காவியத்துக்குப் பல அர்த்தப் பரிமாணங்கள் தோன்றுகின்றன என்றால், இதுவே மொழிபெயர்ப்பாளரின் வெற்றி.

திரு.சிவலிங்கம் தொடர்ந்து இப்பணிகளைச் செய்ய வேண்டுமென்பது என் விருப்பம்.

இந்திரா பார்த்தசாரதி
# 3, "Ashwarooda",
248 A, T.T.K. Road
Chennai - 600 018
Tamilnadu, India

'உரைநடையில் கலேவலா' அமேசான் கிண்டில் பதிப்பு வாங்க... amzn.to/2mSHmw0

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...