Skip to main content

சகுண - நிர்குண பக்தி | வினோபா பாவே

Photo Courtesy: Gautam Bajaj / Vinoba Darshan
இராமனும் கிருஷ்ணனும் ஒருவனே. பரதனும் இலட்சுமணனும் போல்தான் உத்தவனும் அர்ஜுனனும். கிருஷ்ணன் இருக்குமிடத்தில் உத்தவன் இருக்கவே செய்கிறான். உத்தவனால் கிருஷ்ணனை விட்டு ஒரு கணமும் பிரிந்திருக்க முடிவதில்லை. அவன் எப்பொழுதும் கிருஷ்ணன் பணிவிடையிலேயே மூழ்கியிருப்பவன். கிருஷ்ணன் இல்லாத பொழுது அவனுக்கு உலகமே இரசமற்றதாய் சாரமில்லாததாய்த் தோன்றும். அர்ஜுனனும் கிருஷ்ணனுக்குத் தோழன். ஆனால் அவன் தொலைவில் அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். அர்ஜுனன் கிருஷ்ணனுடைய காரியத்தைச் செய்பவனே. ஆனால் கிருஷ்ணன் துவாரகையிலிருக்க, அஸ்தினாபுரத்திலிருந்து வந்தான். இருவரின் சம்பந்தம் இத்தகையது. கிருஷ்ணனுக்குத் தன் உடலைத் துறத்தல் அவசியமென்று தோன்றிய பொழுது அவன் உத்தவனிடம். இதோ, நான் போகிறேன்என்றான். அதற்கு உத்தவன், “என்னை உடன் அழைத்துப் போகமாட்டீரா? நாம் இருவரும் சேர்ந்தே போவோமேஎன்றான். ஆனால், கிருஷ்ணன் எனக்கு அது பிடித்தமில்லை. சூரியன் தன் ஒளியைத் தீயினிடம் வைத்துவிட்டுப் போவது போல் நான் என் ஒளியை உன்னிடம் விட்டுப்போகின்றேன்என்றான். இவ்வாறு பகவான் இறுதிக் கால ஏற்பாட்டைச் செய்து உத்தவனுக்கு ஞானத்தை அளித்து அனுப்பினார்.
பிறகு யாத்திரையில் உத்தவனுக்கு மைத்திரேய ரிஷியின் மூலம் பகவான் தம் ஊருக்கு (வைகுண்டத்திற்கு)ப் போய்விட்டாரென்று தெரியவருகிறது. ஆனால் அதனால் அவன் மனம் சிறிதும் வருந்தவில்லை. விசேஷமானது ஏதோ நடந்ததாகவே அவனுக்குத் தோன்றவில்லை. குரு இறந்துவிட்டாரென்று சீடன் அழுதான். இருவரும் கற்ற வித்தை பாழாயிற்றுஎன்று சொல்லுவதுண்டே, அந்நிலையில் உத்தவன் இல்லை. பிரிவு நேர்ந்ததாகவே அவன் நினைக்கவில்லை. அவன் தன் ஆயுள் முழுவதும் சகுண உபாசனை செய்தவன். ஆண்டவன் அருகிலேயே இருந்துவந்தவன். ஆனால் இப்பொழுது அவனுக்கு நிர்குணத்தில் இன்பம் தோன்றத் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவன் நிர்க்குணத்தின் வழியைக் கடக்கவேண்டியதாயிற்று. சகுணம் முதலில், ஆனால் அதை அடுத்தாற்போல் நிர்குணத்தின் படி றியே ஆக வேண்டும். இல்லையேல் பூரணத்துவம் ஏற்படாது.
அர்ஜுனன் நிலையோ இதற்கு நேர்மாறானது. கிருஷ்ணன் அவனை என்ன செய்யச் சொல்லியிருந்தான்? தனக்குப் பிறகு எல்லாப் பெண்டிரையும் பாதுகாக்கும் பொறுப்பை அவன் அர்ஜுனனிடம் ஒப்புவித்திருந்தான். அர்ஜுனன் அஸ்தினாபுரத்தினின்று வந்து துவாரகையிலிருந்து ஸ்ரீ கிருஷ்ணனது ஸ்திரீகளை அழைத்துக்கொண்டு போனான். வழியில் ஹிபொருக்கருகே பஞ்சாபிலிருந்து வந்த திருடர்கள் அவனை வழிப்பறி செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் அவன் ஒருவனே ஆண்மகன் என்று சொல்லப்பட்டவன், தலைசிறந்த வீரனென்று புகழ் பெற்றவன், தோல்வி என்பதையே அறியாதிருந்தது காரணமாய் விஜயன் (வெற்றி வீரன்) என்று பிரசித்தி பெற்றிருந்தவன், சிவனையே நேருக்கு நேராய் நின்று எதிர்த்துப் பணியச் செய்தவன். அதே அர்ஜுனன் ஆஜ்மீருக்கருகில் ஓட்டமாய் ஓடித் தப்பினான், கிருஷ்ணன் போய்விட்டதனால் அவன் மனம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. உயிரே போய்விட்டது போலும் உயிரும் ஆதரவுமற்ற வெற்றுடலைப் போலும் அவன் ஆகிவிட்டான். அதாவது இடையறாது கர்மம் புரிந்துகொண்டு கிருஷ்ணனிடமிருந்து விலகியே இருந்த நிர்குண உபாசகனான அர்ஜுனனுக்கு இறுதியில் இந்தப் பிரிவு தாளமுடியாததாகிவிட்டது. அவனுடைய நிர்குணம் இறுதியில் பிரிவின் மூலம் பீறிட்டுக்கொண்டு வெளிவந்தது. அவனது காமம் அனைத்துமே முடிந்துவிட்டது போல் ஆயிற்று. அவனுடைய நிர்குணத்திற்கு இறுதியில் சகுணத்தின் அனுபவம் ஏற்பட்டது. சகுணம் . நிர்குணத்திற்குப் போகவும் நிர்குணம் சகுணத்திற்கு வரவேண்டியிருக்கிறது என்பது கருத்து. இவ்வாறு இரண்டுமே ஒன்று மற்றதினால் நிறைவுறுகின்றன.
ஆகையால் சகுண உபாசகன், நிர்குண உபாசகன் ஆகிய இருவரிடையில் உள்ள வேற்றுமை என்னவெனச் சொல்ல முயலும் பொழுது அதைச் சொல்லுவது சிரமமாகிவிடுகிறது. சகுணமும் நிர்குணமும் இறுதியில் ஒன்றாகிவிடுகின்றன. பக்தியின் அருவி முதலில் சகுணத்திலிருந்து தோன்றிய போதிலும் இறுதியில் நிர்குணம் வரை ஓடுகிறது. பழைய காலத்தில் நடந்த விஷயம் ஒன்று. நான் வைக்கம் சத்தியாக்ரஹம் பார்க்கப் போயிருந்தேன். மலையாளத்தின் எல்லையில் சங்கராச்சாரியர் பிறந்த ஊர் இருக்கிறது. பூகோளம் பற்றிய இவ்விஷயம் என் நினைவிலிருந்தது. நான் போய்க்கொண்டிருந்த மார்க்கத்தின் பக்கத்திலேயே எங்கோ சங்கராச்சாரியரது 'காலடி' கிராமம் இருக்குமென்று எனக்குத் தோன்றியதால் உடன் வந்த மலையாளியைக் கேட்டேன். அவர், “இங்கிருந்து 10, 12 மைல் தொலைவு இருக்கும். நீங்கள் அங்கே போக வேண்டுமா?” என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நான் சத்தியாக்ரஹம் பார்க்கப் போய்க்கொண்டிருந்ததால் எனக்கு வேறெங்கும் போவது உசிதமென்று தோன்றவில்லை. அவ்வாறு செய்தது சரியே என்று எனக்கு இப்பொழுதும் தோன்றுகிறது. ஆனால் இரவில் நான் தூங்கத் தொடங்கிய பொழுது அக்காலடி கிராமமும் சங்கராச்சாரியரது உருவும் மீண்டும் மீண்டும் என்னெதிரில் வந்து சுழன்றுகொண்டிருந்ததால் தூக்கம் கலைந்துபோயிற்று. அந்த அனுபவம் எனக்கு இன்றும் அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. அந்த ஞானச் சிறப்பும், அவரது அத்தெய்வீக அத்வைத நிஷ்டையும், எதிரில் வியாபித்துள்ள சம்சாரம் அனைத்தும் பொய் என்று முடிவுகட்டும் அசாதாரணமான ஒளி பொருந்திய வைராக்கியமும், அவருடைய கம்பீரமான மொழியும் அவரிடமிருந்து நான் பெற்றுள்ள அளவிலடங்காத உதவியும் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. இரவில் இப்பாவனைகளெல்லாம் எதிரில் வந்து நின்றன. அப்பொழுது இந்த நிர்குணத்தில் சகுணம் எப்படி நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நேருக்கு நேராய்ச் சந்தித்திருந்தாலும் அவ்வளவு நேசம் இருந்திராது. நிர்குணத்திலும் சகுணம் பூரணமாய் நிரம்பியே இருக்கிறது. நான் பெரும்பாலும் நண்பர்களுக்கு க்ஷேமங்களை விசாரித்துக் கடிதம் எழுதுவதில்லை. ஆனால் எந்த நண்பருக்கும் கடிதம் எழுதாவிட்டாலும் உள்ளுக்குள் அவர் நினைவு எப்பொழுதும் இருந்துகொண்டேதானிருக்கும். கடிதம் எழுதாதிருப்பினும் அவர் நினைவு உள்ளே பூரணமாய் நிரம்பியிருக்கும். நிர்குணத்தில் இவ்வாறு சகுணம் மறைந்து நிற்கிறது. சகுணம், நிர்குணம் ஆகிய இரண்டும் ஒன்றே. விக்கிரகத்தை எதிரில் வைத்துக்கொண்டு பூஜை செய்தல், வெளிப்படையாய்ச் சேவை செய்தல், உள்ளுக்குள் இடையறாது உலகின் நன்மையைக் கோரியவாறே புறத்தே தெரியும்படி எதையும் செய்யாதிருத்தல் ஆகிய இவ்விரண்டிற்குமுள்ள மதிப்பும் சிறப்பும் ஒன்றே.
(கீதைப் பேருரைகளிலிருந்து. ‘சகுண - நிர்குண பக்தி: இரண்டும் ஒன்றே - சொந்த அனுபவம்’ என்ற தலைப்பில் ‘ஆத்ம ஜோதி’ இதழில் வெளியானது.)

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...