Skip to main content

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல.
சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிருக்கிறதென்று தெரிகிறது. அம் மனத்திற்கும் உடம்பிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறதென்றும் தெரிகிறது. மனம் உடம்பைப் பாதிக்கின்றது; உடம்பு மனத்தைப் பாதிக்கின்றது. பயம் ஏற்படும்போது உடல் நடுங்குகிறது; கோபம் வரும்போது முகம் சிவக்கிறது; துக்கமுண்டாகும் போது கண்ணீர் வருகிறது. பயம், கோபம், துக்கம் முதலிய உணர்ச்சிகள் மனத்தில் உண்டாகின்றன. அவற்றால் உடல் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். குடி வெறியனுடைய கண்ணிலே மாட்டிற்கு நான்கு கொம்புகள் இருப்பதாகத் தோன்றுகின்றன. கஞ்சாக் குடித்தவனுக்குப் புது உலகமே தோன்றுகிறது. இரவிலே வயிறு புடைக்கத் தின்றவனுக்குப் பல விதமான கனவுகள் தோன்றுகின்றன. இவைகளெல்லாம் உடல் மனத்தைப் பாதிப்பதற்குச் சான்றுகள். இங்கே ஒரு ஐயம் தோன்றலாம். சூக்குமமான ஒன்று சடப் பொருளை எவ்வாறு பாதிக்க முடியும் என்ற கேள்வி பிறக்கலாம். கோடரி பாய்ந்தால் மரம் வெட்டுப்படுகிறது. ஒரு பருப் பொருள் மற்றொரு பருப் பொருளேப் பாதிக்கின்றது. இதை அறிந்து கொள்வது எளிது. ஆனால் மனம் எப்படி உடம்பைப் பாதிக்கிறது என்பதுதான் விளங்குவதில்லை. மனத்தைப்பற்றி அறிந்துகொள்ள இரு வழிகள் சொல்லப்படுகின்றன. ஒன்று சிந்தனை செய்து பார்த்தல்; மற்றொன்று கவனித்தல். நடத்தையையே பிரதானமாகக்கொண்டு மனத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயலும் ஒரு சாரார் இருக்கின்றனர். அவர்களுக்கு நடத்தைக் கொள்கையர் (Behaviourists) என்று பெயர். அவர்கள் மேலே கூறிய முதல் வழியைத் தவறானதென்று கண்டிக்கிறார்கள். மனந்தான் சிந்தனை செய்ய உதவுகிறது என்று சொல்லுகிறோம். அவ்வாறிருக்க அதைக்கொண்டே அதைப்பற்றி எப்படிச் சிந்திப்பது? மனத்தைப் பற்றி அறிய, மனத்தையே கருவியாகப் பயன்படுத்தும்போது தவறுகள் நேர்கின்றன. யார் எதை மனத்தில் கொண்டு நோக்குகிறார்களோ அதுதான் அவர்களுக்குத் தோன்றுகிறது. தெருவிலே செருப்புத் தைக்கிறவன் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு நாட்டமெல்லாம் செருப்பின் மேலேதான். தெருவிலே செல்லுகிறவர்களுடைய செருப்புப் பழுதுபட்டிருந்தால் அதுதான் அவன் கண்ணில் படுகிறது; அவர்களுடைய முகம் அவனுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. ஒரு ஒவியன் காட்டு வழியிலே செல்லுகிறான். அவனுக்கு எத்தனையோ அழகிய நிற வேற்றுமைகள் தென்படுகின்றன. விலங்குகளை வேட்டையாடுவதற்காக மலைக்காட்டில் புகுந்தவன் கண்ணில் அத்தனை இயற்கை எழிலும் படுவதில்லை; கறையான் புற்றுகளும் புதர்களும் மான் போலவும், மற்ற விலங்குகள் போலவும் தெரிகின்றன.
ஒர் உளவியல் அறிஞர் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். வகுப்பிலுள்ள மாணவர்களில் ஒருவன் திடீரென்று எழுந்து கோபமாக ஏதோ வார்த்தை சொன்னன். சுழல் துப்பாக்கியை எடுத்து ஆசிரியரைப் பயமுறுத்தினான். எல்லாரும் திகைத்துப் போனார்கள். ஆனால் அருகிலிருந்த இரு மாணவர்கள் அவன் மேல் பாய்ந்து துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டு அவனை வெளியேற்றினார்கள். ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அம்மாணவன் மீது வழக்குத் தொடர வேண்டுமென்று உளவியலறிஞர் மற்ற மாணவர்கள் அனைவரையும் தாங்கள் கண்ட சம்பவத்தைப் பற்றித் தனித் தனியாக உள்ளதுள்ளவாறு எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டார். அப்படி அவர்கள் எழுதிக் கொடுத்தவற்றையெல்லாம் ஆராய்ந்தபோது முக்கியமான செய்கைகளைப் பற்றியே மாறுபட்ட குறிப்புகள் காணப்பட்டன. அவர்கள் எழுதினவெல்லாம் ஒரே மாதிரி இருக்கவில்லை. மேலே குறித்த சம்பவம் ஒர் ஆராய்ச்சிக்காகவே நடிக்கப்பட்டது. ஆசிரியருக்கும் மூன்று மாணவர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கு அது வெறும் நடிப்பு என்று தெரியாது. இயல்புக்குத் தக்கவாறு வெவ்வேறு அம்சங்களே மனத்தில் பதிகின்றன என்பதை மெய்ப்பிக்க இந்தச் சோதனையை அவர்கள் செய்தார்கள்.
இவற்றிலிருந்து மனத்தைக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துப் பார்ப்பதென்பது சரியல்லவென்று ஏற்படுகிறது. கையைப்பற்றி அறிய மனம் உதவலாம்; வேறு உறுப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள மனம் உதவலாம்; ஆனால் அது தன்னைப் பற்றியே அறிந்துகொள்ளச் சரியான கருவியாகுமா?
அதனால் இம்முறை சரியானதல்லவென்று நடத்தைக் கொள்கையர் ஒதுக்குகிறார்கள். மனம் எவ்வாறு வெவ்வேறு நிலைகளில் நடந்துகொள்கிறது என்பதைக் கவனித்து அதன் மூலமாக மனத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்று அவர்கள் கருதுகிருர்கள். அதற்காக அவர்கள் மிகப் பல சோதனைகள் செய்திருக்கிறார்கள். ஏதாவது ஒரு நிலைமையை ஏற்படுத்தினால் அந்த நிலைமைக்குத் தக்கவாறு உயிர்ப் பிராணிகளிடத்து ஒரு வகையான செயல் நிகழ்கின்றது என்றும், அந்நிகழ்ச்சிக்கு மனம் என்பதொன்று காரணமாக இருக்கவேண்டியதில்லை என்றும் அவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கூறுகிறார்கள். அவர்கள் செய்த சுவையான சோதனை ஒன்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
உணவைக் கண்டதும் வாயிர் நீர் சுரப்பது சாதாரணமான ஒரு செயல். ஒரு நாயின் முன்னால் உணவை வைக்கும்போதெல்லாம் மணியோசை கேட்கும்படியாகப் பல நாட்கள் தொடர்ந்து செய்தார்கள். உணவைக் கண்டபோதெல்லாம் நாயின் வாயில் நீர் சுரந்து கொண்டிருந்தது. பின்பு ஒருநாள் உணவைக் கொண்டுவராமலேயே மணியோசை மட்டும் கேட்கும்படி செய்தார்கள். அப்பொழுதும் அந்நாயின் வாயில் நீர் சுரக்கலாயிற்று. உணவைக் காணும்பொழுதே மணியோசையைப் பலமுறை அந்நாய் கேட்டிருக்கிறது. அவை இரண்டும் ஒருங்கு தோன்றிய காலத்தில் நிகழ்ந்த வாயில் நீர் சுரக்கும் செயலானது மணியோசையை மட்டும் கேட்டவுடன் உண்டாகத் தொடங்கியது. உணவைக் கண்டதாலும் மணியோசையைக் கேட்டதாலும் ஏற்பட்ட உணர்ச்சிகள் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன. அவற்றின் பயனாக அங்கிருந்து ஒருவகை உணர்ச்சி தோன்றிச் செயல் நரம்பின் வழியாக வாய்க்குச் சென்று நீர் சுரக்கும்படி செய்கின்றது. இவ்வாறு கண் பார்வைக்கும் செவி உணர்விற்கும் வாயில் நீர் சுரப்பதற்கும் இடையே மாறாத ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அதனால் மணியோசை மட்டும் கேட்கிற காலத்திலும் வாயில் நீர் சுரக்கத் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சிக்குக் காரணமாக மனம் என்பதொன்று இருக்க வேண்டியதில்லை என்று நடத்தைக் கொள்கையர் சொல்லுகிறார்கள். எந்திரத்திலே ஏதாவது ஒரு விசைக்கருவியை அழுத்தினால் அதன் பயனாக உடனே ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியுண்டாவதுபோல உயிர்ப் பிராணிகளிடத்தும் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு குறிப்பிட்ட செயல் நிகழ்கின்றது என்பது அவர்கள் வாதம். சாதாரண எந்திரத்தின் தன்மையை எளிதாக அறிந்துகொள்ள முடியும். மனித எந்திரம் அதிகச் சிக்கல்களும் நுண்மையும் வாய்ந்ததாகையால் அதன் தன்மையை அவ்வளவு எளிதாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இதுதான் இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்கிறார்கள் அவர்கள்.
வாழ்க்கையிலே பல விஷயங்களைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். சிந்தித்து முடிவுக்கு வந்த பிறகுதான் எதையும் செய்ய வேண்டும் என்கிறோம். மனம் என்பதொன்றில்லாவிட்டால் எவ்வாறு யோசனை செய்ய முடியும் என்று ஐயம் உண்டாகலாம். அதற்கும் நடத்தைக் கொள்கையர் விடை கூறுகிறார்கள். சொற்களில்லாமல் சிந்திப்பதென்பது இயலாது. நாம் சிந்திக்கிறோமென்றால் சொற்களின் மூலமாகத்தான் செய்கிறோம். பேசும்போது சொற்களை உச்சரிக்கிறோம். எண்ணும்போது சொற்களை உச்சரிப்பதில்லை. இருந்தாலும் சொற்கள் குரல்வளையிலுள்ள பல தசை நார்களின் நுட்பமான அசைவுகளினால் உருவாகின்றன. ஆதலால் எண்ணுவதென்பதெல்லாம் உச்சரிக்கப்படாத பேச்சுத்தான் என்றும் அதற்கு மனம் தேவையில்லே என்றும் நடத்தைக் கொள்கையர் சாதிக்கிறார்கள்.
அவர்கள் கூற்றை ஒப்புக்கொண்டு மனம் என்பதொன்றில்லை என்று முடிவுகட்டிவிடலாமா என்றால் அதிலும் பல ஐயங்கள் தோன்றுகின்றன. அவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...