Skip to main content

பிரேத மனிதன் - முன்னுரை | புதுமைப்பித்தன்

இதென்ன, பிரேதத்தைக் கூட்டித் தைத்து உயிர் தருவதாவது என்று பலர் நினைக்கலாம். மனிதனுடைய மூலவம்சம் பற்றியும், ஜீவ பரிணாம நியதியைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்திய சார்லஸ் டார்வின், ஹக்ஸ்லி முதலிய பண்டிதர்கள், வருங்காலத்தில் சாத்தியம் என நினைத்த ஒரு கருத்தை, அதாவது சிருஷ்டி ரகசியம் நம் வசம் கிடைத்துவிடும் என்பதை ஒட்டியே இந்தக் கதை ஜோடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலீஷ் பாஷையில் இந்தக் கருத்தையொட்டிப் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. எச். ஜி. வெல்ஸ் எழுதிய ஐலண்ட் ஆப் டெரர் (பீதித் தீவு) என்ற நாவலிலும் ஒரு பண்டிதர் மிருகங்களை ரண சிகிச்சை மூலம் மனிதனாக்க முயலுவதாகக் கதை ஒன்று உண்டு.

இங்கிலீஷ் பாஷையிலே நன்மை தீமை என்ற இரண்டு சக்திகளை மோதவிட்டு அதன் விளைவுகளைப் பார்க்கும் கதைகள் பல உண்டு. டாக்டர் பாஸ்டஸ், டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட், ஐலண்ட் ஆப் டெரர், இன்விஸிபிள் மான் (சூட்சும சரீரி) முதலிய நாவல்களைப் போலத்தான் பிராங்கன்ஸ்டீன் என்ற இந்தப் பிரேத மனிதனும். பிராங்கன்ஸ்டீன் சிருஷ்டித்த பிரேத மனிதன் அவனைக் கேட்கும் கேள்விகள், மனிதன் தெய்வத்தைப் பார்த்துப் போடும் கேள்விகளாகவே கொள்ள வேண்டும்.

இதை எழுதியவர் மேரி ஷெல்லி. இங்கிலீஷ் பாஷையில் பிரபல கவியான ஷெல்லியின் மனைவி. பிறந்தது 1797. ஷெல்லி இவளை இரண்டாவது தாரமாகக் கலியாணம் செய்துகொண்டார். கலியாணமாகுமுன்பே இவள் பல கதைகள் எழுதியதுண்டு. இவளது தந்தையும் பிரபலஸ்தர். அவர் பெயர் கூட்வின். அந்தக் காலத்திலே இலக்கிய மறுமலர்ச்சிக்குத் துணை செய்த 'கூட்வின் சர்க்கிள்' என்ற இலக்கிய சங்கம் ஒன்று உண்டு. மேரி ஷெல்லியின் கற்பனை பூரண வடிவம் பெற்றது கலியாணத்துக்குப் பிறகுதானாம்.

இந்த பயங்கரமானதொரு கற்பனை ஒரு பெண்ணுக்கு எப்படித் தோற்றியது?

மேரி ஷெல்லியே இதை விவரிக்கிறார்.

1812 வேனிலில் நாங்கள் ஸ்விட்ஸர்லாந்தில் குடியேறினோம். எங்கள் அருகே லார்ட் பைரன் குடியிருந்தார். (லார்ட் பைரன் ஆங்கிலக் கவி.) அவர் அப்போது ‘சைல்ட் ஹேரால்ட்’ என்ற காவியத்தை எழுதிவந்தார். ஜெனிவாவில் அப்போது மழையும் தூரலுமாகயிருந்துகொண்டிருந்தது. பிரெஞ்சு பாஷையில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெர்மன் பேய்க் கதை ஒன்றைப் படித்துப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தோம். இதைப் படிக்கும்போது நாங்கள் அதே மாதிரி பேய்க்கதை ஆளுக்கொன்று எழுதுவது என்று தீர்மானித்தோம். ஷெல்லி எழுதியது, 'மாஜெப்பா' என்ற காவியத்தின் கடைசியில் பதிப்பிக்கப்பட்டது. என் பங்குக்கு, நானோ தினம் தினம் 'கதை எதுவும் தோன்றவில்லை' என்று சொல்லிவந்தேன். அவர் எழுதியதைப் போலவே பயங்கரமான சிருஷ்டி ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

பைரனும் ஷெல்லியும் பேசிக்கொண்டிருக்கும்போதெல்லாம் அருகில் உட்கார்ந்து நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அவர்கள் இருவரும் டாக்டர் டார்வின் பரிசோதனைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த டாக்டர் ஸேமியாவை ஒரு கண்ணாடிப்பெட்டியில் போட்டு அடைத்து ஏதோ ஒரு முறையால் அது உயிர் பெற்றுப் புழுவாக நெளியும் வரை வைத்திருந்தார் என்று சொல்லிக்கொள்ளுவார்கள். நான் இதை வைத்துக்கொண்டுதான் பிரேதத்துக்கு உயிர் கொடுக்க முடியும் என்று கற்பனை செய்தேன்.

அன்று தூங்க முயன்ற பொழுது என்னால் தூங்க முடியவில்லை. பேய்க் கனவுகள் பல அல்லல்படுத்தின. யாரோ ஒருவர் ஒரு பிரம்மாண்டமான மனித பிண்டத்தை யந்திரத்தின் மீது ஏற்றி உயிர் கொடுக்கும் மாதிரி கண்டேன். எவ்வளவு பயங்கரமானது! சிருஷ்டித்த கடவுளையே கேலி செய்ததாக அல்லவா இருக்கும்? அந்தப் பேய்ச் சடலம் எழுந்து நிற்கிறது. பிரேதக் களையோடு விழிக்கிறது...

நான் பயந்துகொண்டு விழித்தேன். இதுதான் என் கதை போலும்!

மறுநாள், “எனக்குக் கதை வந்துவிட்டது” என்றேன்.

‘நவம்பர் மாதத்தில் பயங்கரமானதொரு நள்ளிரவில்...’ என்று கதையை ஆரம்பித்தேன். நான் அதைச் சிறுகதையாகவே எழுத நினைத்தேன். ஷெல்லியின் யோசனை பிரகாரம் உருவெடுத்ததுதான் இந்த நாவல்.”

இந்த நாவலைப் பற்றி எழுதிய முன்னுரையில் சார்லஸ் டார்வின், இன்னும் சில ஜெர்மன் சித்தாந்திகள் ஆகியோரின் கருத்தே இக்கதைக்குக் கரு என்கிறார் ஸ்ரீமதி ஷெல்லி. இலியாது, ஷேக்ஸ்பியரின் நடுவேனிற் கனவு, மில்டனுடைய சுவர்க்க நீக்கம் ஆகியவற்றின் போக்கில் அமைந்தது இக்கதை என்று அவர் கூறுகிறார். இந்தக் கதை ஜெனிவாவில் வைத்து எழுதப்பட்டது.

என்னுடைய தமிழ் நகல் அப்பட்டமான மொழிபெயர்ப்பல்ல. கதையின் போக்கை மட்டும் அனுசரித்துக்கொண்டு கோவை தகர்ந்துவிடாமல் எழுதப்பட்டது.

நம் நாட்டில் உள்ள நல்லரவான் கதை, யமனைத் தேடி சுரகுருவுக்காகத் தூதுபோன கதை முதலியனவும் இம்மாதிரி வார்ப்பை அனுசரித்தவையேயாகும். கதையின் பெயர் விசேடங்கள் சிலரை மிரட்டலாம். ஆனால் கதைச்சத்து நம் பாவனைக்குப் பொருந்தியதேயாகும். "பேயணையை முறித்திட்டு, பிணமெத்தை ஐந்தடுக்கி நிலாத் திகழும் பஞ்ச சயனத்தின்” மேல் அமர்ந்த காளியைவிடவா இது கோரமானது?

புதுமைப்பித்தன்

15-12-43

பிரேத மனிதன் - கிண்டில் மின்னூலை வாங்க

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...